இலங்கை

யாழ்.மாவட்டத்தில் 159 வேட்பு மனுக்களில் 35 நிராகரிப்பு ;124 வேட்பு மனுக்கள் ஏற்பு

உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 159 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 124 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார் .

வேட்பு மனுத் தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்களை ஏற்பது தொடர்பான பரிசீலனைக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கட்சிகளினால் 136 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களால் 23 வேட்புமனுக்களும் என 159 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அரசியல் கட்சிகளின் 22 வேட்புமனுக்களும் சுயேட்சை குழுக்களின் 13 வேட்பு மனுக்கள் என 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளின் 114 வேட்புமனுக்களும் சுயேட்சை குழுக்களின் 10 வேட்புமனுக்களும் என 124 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

யாழ் மாநகர சபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும் இரண்டு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் இரண்டு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், இரண்டு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனுவும், சுயேட்சைக் குழுவொன்றின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்திகட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், சுயேட்சைக் குழுவொன்றின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில் இரண்டு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,தேசிய மக்கள் சக்தி ஆகிய மூன்று கட்சிகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *