முச்சந்தி
கூர்ஸ்க்கில் அகலக் கால் வைத்து தோல்வியில் பின்வாங்கும் உக்ரைன்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(இரண்டாம் உலகப் போரில் சோவியத் படைகள், நாஜி ஜேர்மனியின் படைகளை தீர்க்கமாக தோற்கடித்த போரே கூர்ஸ்க் (Kursk) போராகும். இதே களத்தில் தற்போது நேட்டோ ஆதிக்க விஸ்தரிப்பை எதிர்த்து நிற்கும் ரஷ்யா, உக்ரைன் படைகளை சரணடைய வைத்துள்ளது)
கூர்ஸ்க் போர் நடவடிக்கையிலிருந்து உக்ரைன் பெற்ற ஆரம்பகால வெற்றிகள் அனைத்தையும் தற்போது இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனிய வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டாலோ அல்லது கடுமையான துப்பாக்கிச் சூட்டின் கீழ் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ அது பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

கூர்ஸ்க்கில் பின்வாங்கும் உக்ரைன்:
கடந்த சில வாரங்களாக கூர்ஸ்கில் ஏற்பட்ட தோல்வி, தொடர்ச்சியான பலத்த அடிகளுக்குப் பிறகு ஜெலென்ஸ்கி அரசின் மீதான போர் நிறுத்த அழுத்தத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
கள நிலவரப்படி ரஷ்யாவின் கூர்ஸ்க் போர்க்கள பகுதியில் உக்ரேனியப் படைகள் கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளன. அங்கு அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றி ஏழு மாதங்களுக்கும் மேலாக கடுமையான சண்டையில் அதை ஓரளவு தக்க வைத்துக் கொண்டனர்.
கூர்ஸ்க் பிராந்தியம் (Kursk) உக்ரைனின் சுமி பகுதியை எல்லையாகக் கொண்ட மேற்கு ரஷ்யாவின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, உக்ரைன் துருப்புக்கள் ரஷ்ய எல்லையைத் தாண்டிச் சென்று 1,376 சதுர கிமீ (530 சதுர மைல்) பரப்பளவு கொண்ட ஒரு பகுதியைக் கைப்பற்றியது.
இதுவே உக்ரேனிய போரின் மிகப்பெரிய ஆச்சரியமிக்க அதிரடியாக ஒன்றாக உருவெடுத்தது. அதன் பிறகு சுமார் 100 நகரங்கள் மற்றும் கிராமங்களை உள்ளடக்கிய பிராந்தியத்தை உக்ரைன் கைப்பற்றியது.
தற்போது ரஷ்யப் படைகள் அந்த நிலத்தின் பெரும்பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளன. மாஸ்கோ ஆதரவு போர் வலைப்பதிவர்கள் உக்ரேனிய துருப்புக்கள் சுற்றி வளைக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகக் கூறுவதை உக்ரைனிய உயர்மட்டத் தளபதிகள் மறுத்துள்ளனர்.
உக்ரைனுக்கு கூர்ஸ்க்கின் முக்கியம்:
ரஷ்யா உக்ரைனில் கைப்பற்றிய நான்கு பிராந்தியங்களை விடுவிக்க பேரம் பேசும் அளவுக்கு கூர்ஸ்க் இருந்தது.
இந்த நடவடிக்கை 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து உக்ரைனுக்கு அதன் மிகப்பெரிய வெற்றியை வழங்கியது எனலாம்.
அத்துடன் ரஷ்யாவை எதிர்கொள்ளும் ஒரு பெரிய மன உறுதியை உக்ரைனுக்கு அளித்தது. ரஷ்யாவின் பாரிய படையெடுப்பைத் தடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் அதன் சொந்த படையெடுப்பின் மூலம் அதன் எதிரியை திகைக்க வைத்தது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நீதியை மீட்டெடுப்பதுடன், இப்போரை சாதாரண ரஷ்யர்களிடம் கொண்டு வருவது எனவும் நம்பிக்கை தெரிவித்தார். கூர்ஸ்க் கைப்பற்றல்
நடவடிக்கை கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் முன்னேற்றங்களை மெதுவாக்கும் என்றும் உக்ரைன் நம்பியது.
கூர்ஸ்க்கின் பாதுகாப்பிற்கு ரஷ்யா துருப்புக்களை திசைதிருப்ப கட்டாயப்படுத்தியது. ஆனால் இது நடக்கவில்லை என்றாலும், கிழக்கில் ரஷ்யாவின் வெற்றிகள் மட்டுப்படுத்தப்பட்டன.
இறுதியாக, ஜெலென்ஸ்கி கூர்ஸ்க்கை ஒரு பேரம் பேசும் பொருளாகக் கருதினார். கடந்த மாதம் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் உக்ரேனிய பிரதேசத்திற்கு வர்த்தகம் செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.
கடந்த பெப்ரவரி 28 அன்று டிரம்புடனான அவரது பேரழிவுகரமான வெள்ளை மாளிகை சந்திப்பு நடைபெற்றது. தற்போது சாத்தியமான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அவரது கையை பலவீனப்படுத்தும் வகையில் கூர்ஸ்க் தோல்வி அமையவுள்ளது.
உக்ரைனின் ஊடுருவல் :
கடந்த வருடம் ஆகஸ்ட் 6, 2024 அன்று, உக்ரைனின் ஆயுதப் படைகள் ரஷ்யாவின் கூர்ஸ்க் பகுதியில் ஊடுருவி, ரஷ்ய ஆயுதப் படைகள் மற்றும் ரஷ்ய எல்லைக் காவல்படையினருடன் மோதின. ரஷ்யாவின் கூற்றுப்படி, டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் ஆதரவுடன் முதல் நாளில் குறைந்தது 1,000 உக்ரைனிய துருப்புக்கள் எல்லையைக் கடந்தன என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு கூர்ஸ்க் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. மேலும் ரஷ்ய படைகள் அந்தப் பகுதிக்கு விரைந்த போதும் உடனடியாக உக்ரைனிய படையினரை வெளியேற்ற முடியவில்லை.
ஆகஸ்ட் 10 அன்று, கூர்ஸ்க், பெல்கோரோட் மற்றும் பிரையன்ஸ்க் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ரஷ்ய அதிகாரிகள் தொடங்கினர்.
ஆயினும் முதல் வார இறுதியில், உக்ரைன் இராணுவம் 1,000 கிமீ (390 சதுர மைல்) ரஷ்ய பிரதேசத்தைக் கைப்பற்றியதாகக் கூறியது. அதே நேரத்தில் உக்ரைன் படைகள் சில குடியிருப்புகளைக் கைப்பற்றியதாக ரஷ்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் ஆகஸ்ட் 15 அன்று உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கு ஒரு இராணுவ நிர்வாகத்தை நிறுவியது. அக்டோபர் தொடக்கத்தில் உக்ரைனின் முன்னேற்றம் நின்றுவிட்டது. ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் பாதியில், ரஷ்யாவின் தாக்குதலின் போது உக்ரைன் ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தில் பாதியை ரஷ்யப் படைகள் மீட்டெடுத்தன.
அண்மையில் மார்ச் 11, 2025 அன்று, ரஷ்ய மற்றும் வட கொரியப் படைகளின் எதிர் தாக்குதலின் விளைவாக பெரும்பாலான உக்ரைனியப் படைகள் கூர்ஸ்க் நகரில் இருந்து பின்வாங்கி வெளியேறி வருகின்றன.
2ம் உலகப் போரில் கூர்ஸ்க் போர்க்களம்:
இரண்டாம் உலகப் போரில் சோவியத் படைகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் கூட்டு சேர்ந்து, நாஜி ஜேர்மனியின் படைகளை தீர்க்கமாக தோற்கடித்த போரே கூர்ஸ்க் (Kursk) போராகும்.
கூர்ஸ்க் டாங்கி போர் (Battle of Kursk) என்பது 1943 கோடையில் தென்மேற்கு ரஷ்யாவில் நாஜி ஜெர்மனி யுடன்- சோவியத் யூனியனின் படைகளுக்கு இடையேயான இரண்டாம் உலகப் போரின் கிழக்கு முன்னணிப் போராகும்.
இதன் இறுதி விளைவாக சோவியத்க்கு வெற்றி கிடைத்தது. கூர்ஸ்க் போர் என்பது போர் வரலாற்றில் மிகப்பெரிய (Battle of Tanks) டாங்கிப் போராகும். இப்போருக்கு முன்னர் நடந்த ஸ்டாலின்கிராட் போருடன், ஐரோப்பியப் போரின் அரங்கில் குறிப்பிடப்பட்ட இரண்டு திருப்புமுனைகள் ஏற்பட்டன.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்க்களமே தற்போது ரஷ்யாவும் உக்ரைனும் முட்டி மோதுகின்றன. தாயும் சேயுமாக வாழ்ந்த இரு அயல் நாடுகள் மேற்குலகின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளன.
நேட்டோவின் ஆதிக்க ஆக்கிரமிப்பை முறியடிக்க ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் இந்த போரில் உக்ரைன் பலிக்கடாவானது அநாவசியமானதே. தேவையற்ற போரை எதிர்கொள்ள உக்ரைன் திராணியற்று தவிக்கிறது.
![]()