திரு.ஈ.வே.இராமசாமி நாயக்கரின் பொருளாதார அறிவு; திருக்குறளும் அவற்றில் சிலதின் கருத்துக்களும் … திரு.வே.பிரபாகரன் தளபதியா அரசியல்வாதியா?… (பகுதி 2)

ஏலையா க.முருகதாசன்
தமிழர்களும் இன்னும் சில இனக் குழுக்களும் மூளைச்சலவை செய்யப்பட்டு இசைவாக்கம் பெற்றவர்களாக காணப்படுகிறார்கள்.
இலங்கை இனப்பிரச்சினையைத் தனக்குச் சாதகமாகவும் தனது பிராந்திய நலன் நோக்கியும் முக்கியமாக இந்தியா கையாளத் தொடங்கியமைக்கு இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை சம்பந்தமாக கதைத்த போதெல்லாம்,இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளை எவ்வாறு கையாள வேண்டுமென்பதை அவர்களின் இராஜதந்திர கணிப்பும் உரையாடல் ஊடாக அதைத் தீர்க்கமாக அணுகியிருப்பார்கள்.
தீர்வுகளை சனநாயக முறைமைக்குள் நின்று இலங்கையரசுடன் பேசித் தீர்த்துக் கொள்வது மிக எளிதானது,இலகுவானது என்ற நம்பிக்கையை ஒவ்வொருமுறையும் இந்திய இராஜதந்திரிகள் இலங்கைத் தமிழரசியல்வாதிகளுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
இந்தியாவுக்குச் சென்று பொறுப்பான அரசியல்வாதிகளைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் அனுதூபத்தடன் கூர்ந்து கவனித்து தலையாட்டி ஏற்றுக் கொள்வது போல நடந்து கொண்ட இந்திய இராஜதந்திரிகள்,தமது உறுதிமொழிகள் மூலமும் உடல்மொழிகள் மூலமும் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழ் அரசியல்வசாதிகளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக தம்மை காட்டிக் கொண்டார்கள்.
இங்கே ஒரு விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் பிரதமராக இருந்த போது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவரின் சொல்லாடல் கீழ்வருவது போன்றது.
இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையைச் சுட்டிநின்று அவர்,அவர்களின் பிரச்சினையைத் தீர்க்கத்தான் வேண்டும்,நாம் செய்வோம்,எமக்கு அதில் அக்கறை உண்டு,இலங்கை அரசுடன் பேசுவோம்,அவர்களின் உரிமையை யோசிக்கத்தான் வேண்டும் இவ்வாறு கழுவின மீனிலை நழுவின மீனாக எப்பொழுதும் அவர் பதில் இருக்கும்.
இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியாவுக்குப் போய் சில வேளைகளில் இந்திய பிரதமரைச் சந்திப்பார்கள் நம்பிக்கையுடன் சிரித்துக் கொண்டு வந்து பத்திரிகையாளர்களை அழைத்து தமது இந்தியப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது என அறிக்கை விடுவார்கள்.
சில நாட்கள் செல்ல திரும்பவும் தமிழ் அரசியல்வாதிகள் ஊடகங்களை அழைத்து தமிழகம் போகிறோம் எனப் போவார்கள்,முகமலர்ச்சியோடு திரும்பி வருவார்கள்.
தாம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை வசதியாக மறந்து,தமிழர் பிரச்சினை இலங்கை அரசின் சம்மதத்துடன்தான் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதை கொஞ்சமும்கூட யோசிக்காது,தமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் எதையுமே விளங்கிக் கொள்ளமாட்டார்கள் என்பதாக தம்மைவிட்டால் அவர்களுக்கு நாதியே இல்லையென்பது போல நினைத்தவர்களின் அரசியல் பலவீனத்தில்தான் இளைஞர்களை அரசியலில் ஈடுபட வைத்தது இந்தியா.
பொதுவாக எல்லோருமே நினைப்பார்கள் தமிழர்களின் அறவழி உரிமைப் போரில் சலிப்படைந்துதான் ஆயுதவழிப் போருக்கு இளைஞர்கள் முயன்றார்கள் என்று.
இது இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையாகும்.ஆயுதவழிப் போரொன்றை இளைஞர்கள் மூலமாக தமிழர்கள் தொடுத்தால் இலங்கை அரசு கதிகலங்கி தமிழர்களின் உரிமைகளை அள்ளிக் கொடுத்துவிடும் எனத் தமிழர்களை படிப்படியாக நம்ப வைத்து அதை உறுதிப்படுத்த போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்கள்.
சிறு தாக்குதலாகத் தொடங்கிய அயுதவழிப் போர் பெருநெருப்பாக எரிய வைத்தது இந்தியா.இந்தியா எரியும் நெருப்பில் எமது ஆதரவு உங்களுக்கு என்ற எண்ணையை ஊற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவர் சிலரின் எச்சரிக்கை அறிவுரைகள் அம்பலம் ஏறவில்லை.அதைக் கிஞ்சித்தும் நம்பவில்லை.
துரோகிகள் என்ற பட்டத்தை அவர்கள் மீது திணித்தார்கள்.போரினை வழி நடத்திய திரு.வே.பிரபாகரனை ஈடுஇணையற்ற போரியலான்,அறிஞன் என இந்தியாவிலிருந்தும்,இலங்கையிலிருந்தும்,புலம்பெயர் நாடுகளிலிருந்தும் சொல்ல வைத்தனர்.
எம்மைச் சுற்றிச் சிலந்திவலையைவிட மிக மோசமான இசைவாக்க வலையமைப்பு அமைக்கப்படுகின்றது என்பதை அறியாத தமிழர்களின் பலவீனங்கள் அறியப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை முருகனுக்கே நிகரானவர் என்ற மாயை உலகுக்குள் தமிழர்களைத் தள்ளிவிட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அயுதப் போராட்டம் வலிந்து தமிழர்களை இணைத்த போராட்டமாகிய போதிலும் அது இயல்பாக உருவானதாக நம்ப வைக்கப்பட்டது.
திரு.வே.பிரபாகரன் ஒரு மகாவீரன் என்பதிலோ ஒரு திறமைமிகு இராணுவத்தளபதி என்பதிலோ எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் அவரிடம் இராஜதந்திர அரசியல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தோம்.
ஆனால் தமிழ் மக்களைப் புளகாங்கிதம் கொள்ளச் செய்தும்,மாவீரர்களின் தியாகத்தைச்
சொல்லிச் சொல்லியும் கண்ணீருக்கு மத்தியிலும் ஆவேசத்துக்கு மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பகடைக்காயாக பயன்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைப்பதற்கு தமிழ் மக்களைக் காவு கொடுத்ததுடன் தமிழர்களின் பொருளாதாரத்தை தரைமட்டாக்கிய இந்தியா திரு.வே.பிரபாகரன் அவர்களை அளவுக்கு மீறி அவர் ஒரு அரசியல் ஞானியும் என்பது போல தமிழக அறிஞர்களால் போற்றிப் புகழ வைக்கப்பட்டார்.
தொடங்கியு ஆயுதப் போராட்டம் காலப் போக்கில் நிறுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கி அதன் பெரும் வேகத்தில் தன்பாட்டுக்கு இழுத்துச் செல்லத் தொடங்கியது.
தமது இனம் முற்றுமுழுதாக சிதைக்கப்படுகிறது என்பதை யோசிக்கக்கூட சேரமில்லாதவாறு அதன் சூறூவளிச் சுழற்சிக்குள் தமிழினம் அகப்பட்டது.
திரு.வே.பிரபாகரன் ஒரு திறன்மிகு இராணுவத் தளபதி மட்டுமே என்பதை தமிழினத்தால் நின்று நிதானித்து தவறு என்ன என்பதைச் சிந்திக்க முடியவில்லை.
அவர் சிறந்த இராணுவத்தளபதி என்பதையும்,அவர் இன்னும் அரசியலாளராக உருப்பெறவில்லை என்பதை அறிந்த பல அரசியல் அறிஞர்கள் அங்கொருவருக்கும் இங்கொருவருக்குமாக தமது கருத்தக்களைக் கூறிய போது அத்தகையவர்கள் தமிழினத்தின் விடுதலைக்கெதிரானவர்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒற்றர்கள் அல்லது சேர்ந்து இயங்குபவர்கள் என ஒரு தவறான கணிப்பீட்டின் பிரகாரம் அத்தகையவர்களைக் கண்காணிக்கவும் செய்தனர்.
தமிழீழ வீடுதலைப் போராட்டத்திற்கு இரையாக அளவுக்கு மீறிய உயிர்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்,பெண்கள் விதவையாகிக் கொண்டிருக்கிறார்கள்,போராளிகளைத் தவிர்ந்து பொதுமக்கள் கணக்கின்றி மரணமடைகிறார்கள் தமிழர்களின் சொத்துக்கள் மூர்க்கத்தனமாக அழிக்கப்படுகின்றன எனவே ஏதோ ஒரு வழியில் ஏதோ ஒரு சாட்டைச் சொல்லியாவது இந்தப் போரை நிறுத்து வேண்டும் என்று சொல்லியும்,போரின் சூழல்காற்றுக்குள் அகப்பட்டு மீளமுடியாத நிலைக்கு தமிழர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.
வீதியில் போகும் ஒருவரை இராணுவம் நிறுத்தி விசாரித்த போதும் அவனை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்து அனுப்பிய போதெல்லாம் ஒரு சராசரி மனிதனின் நிலை கிலேசம் நிறைந்ததாகவே இருந்து.
தாங்கள் அழைத்து வந்தவன் தங்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக போராளிகளால் அனுப்பட்டவனாக இருப்பானோ என்று இராணுவமும்,இராணுவ முகாமிற்கு போய் வந்தவனாகையால் அவர்கள் அடித்து மிரட்டி பயமுறுத்தி தம்மைப் பற்றிக் கேட்டிருந்தால் அவன் தனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லியிருப்பகானோ என்ற சந்தேகத்தின் வளர்ச்சி சொல்லியிருப்பான் என்ற முடிவக்கு போராளிக் குழுக்களை வரவைத்திருக்கும்.
ஆயுதப் போராட்ட காலத்தில் பொதுமக்கள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்தார்கள்.
இலங்கைத் தமிழர்களில் கணிசமான தொகையினர் மத்தியில் இப்போராட்டம் மீதான பற்றுதி இருந்ததே தவிர உலக நாடுகளில் போராளிக் குழுக்கள் பயங்கரவாத அமைப்புத்தான் என்பது உறுதியாக இருந்தது.
ஒரு விடயத்தை நாம் உணர்ந்து கொள்ளத் தவறுகிறோம் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மக்களின் இயல்பான விருப்புடன்தான் நடத்தப்பட்டது என்பதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது.
சந்தேகங்கள்,கேள்விகள் என்பவை பற்றி சிந்திக்காமலும், தியாகங்கள்,கண்ணீர்;கள் போன்றவற்றாலும் ஏதோ நடக்கட்டும் என்று அதன் போக்கில் மக்கள் போகத் தொடங்கினர்.
இந்தவிடயத்தில் அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் வாய்மூடி மௌனியாக இருக்கும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர்.
உலக நாடுகளில் நாம் வாழும் சமகாலத்தில் பல தலைவர்கள் தமது நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் போராடியிருக்கின்றனர்.அவர்களை அந்த மக்கள் கடவுளுக்கு நிகரானவர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
தமிழ்ச் சமூகத்திடம் உணர்ச்சிவசப்பட்டு புளகாங்கிதம் கொண்டு இசைவாக்கம் பெற்று சொற்களைச் சொரிந்துவிடும் போக்கிருக்கின்றது.
தமிழ் மன்னர்களை புகழ்ந்துரைத்த புலவர்களில் எவராவது மன்னா நீ இந்தத் தவறைச் செய்தவன் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லை.
இன்றைய நவீன உலகில் மாபெரும் கட்டிடங்களைக் கட்டும் போதும் பிராமாண்ட அணைக்கட்டுகளைக் கட்டும்போதும்கூட அதில் ஈடுபடும் தொழிலாளர்கள் தமது உடலுக்கும் உயிருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுதான் தமது பணியைச் செய்கின்றனர்.
அக்கட்டுமானங்களைச் செய்கின்ற கட்டுமான நிறுவனங்களும் அதற்கான பாதுகாப்பினை உறுதி செய்கின்றன.அப்பணியில் ஏதாவது விபத்தோ அல்லது பணியாளர்கள் விபத்தின் மூலம் உயிரிழந்தாலோ உடனடியாகவோ ஊடகங்கள் அத்தவறுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிடும்.
ஆனால் மன்னர்காலத்தில் பல தவறுகள் மன்னர்களின் ஆட்சியதிகாரத்தினால் வெளியுலகுக்கு தெரியப்படுத்தாமல் அவை யாவும் மூடிமறைக்கப்பட்டும்,அடக்குமறைக்குட்பட்டவையாகவும் இருந்தன.
அந்நிலைமை மக்களாட்சி காலத்திலும் சில நாடுகளில் தொடரவே செய்தன.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அப்போராட்டம் தோல்வியடையப் போகின்றது என்பதை அறிந்த போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் மிகச் சிறந்த இராணுவத் தளபதியுமான திரு.வே.பிரபாரன் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற முயற்சிக்கவில்லை. அது கௌரவக்குறைச்சல்,இழிவானது என நினைத்து பல இலட்சம் மக்களின் உயிர் அவரின் அலட்சியத்தால் போவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார்.
போரை நிறுத்துங்கள் என பல அறிஞர்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை.அவரின் விடாப்பிடியான போக்கு ஈழத்தமிழனத்தை பல முனைகளிலும் சின்னாபின்னமாக்கியதுதான் இந்தப் போரினால் தமிழ் மக்களுக்கு கிடைத்த பலனாகும்.

அதன் பிரதிபலிப்பு இன்றுவரையம் ஈழத்தமிழர்களைப் பாதித்தவண்ணமேயிருக்கின்றது.
ஒரு இராணுவத் தளபதியை இராணுவத்தளபதியாகப் பார்க்க வேண்டிய மக்களை அவர் அனைத்திலும் விற்பன்னர்,தீர்க்கதரிசி என்று புகழாரம் சூட்டி மக்களை அங்குமிங்கும் அசையவிடாது.சோணம் கட்டிய குதிரைகளாக மாற்றியதே இந்த அவலத்துக்குக் காரணம்.
இதுவரை காலமும் எவருமே சொல்லாத பொன்மொழிகளை,உதாரணங்களை எடுத்துக் காட்டுகளை சொல்லிய அறிஞர்கள் எவரையுமே தமிழினம் சந்திக்கவில்லை என்பது போல ஒரு சிறந்த இராணுவத்தளபதியான திரு.வே.பிரபாகரனை ஐனநாயக அறிஞனாக மிகையாக சமூகத்துக்கு விதந்துரைத்த தவறை அறிஞர் பெருமக்களும், பயந்தும்,நிர்ப்பந்த நிலையிலும் பெரும் தவறைச் செய்தது மட்டுமல்ல,அவருக்கு மேல் எந்த அறிவாளியும் இல்லை என்ற மாயை உருவாக்கப்பட்டது என்பது மட்டுமல்ல விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற தவறான பகுப்பாய்வும் தமிழர் சமூகத்தில் பரவியது.
எவராக இருந்தாலும் தவறு என்று கண்டால் தவறைத் தவறென்று சொல்லும் நடுநிலை நோக்கத் திறாணியற்ற நிலையும் பயம் காட்டலும் உருவாக்கப்பட்டது.
ஒரு விடுதலைப் போர் என்பது,எவவரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்று நினைக்கின்ற இனம் தன்னிலையைச் சரியாக உணர வேண்டும்.
தன்னினத்தின் மக்கள் தொகை மீதான பார்வை மிக முக்கியமானது.பல்லினம் வாழுகின்ற ஒரு நாட்டில் ஒரு இனம் அந்நாட்டின் ஆட்சியாளர்களிடமிருந்து பிரிந்து போக முடிவெடுத்து போர் தொடுக்குமாயின் தம்மினத்தைச் சேர்ந்த எந்தவொரு தனிமனிதனும் தன்னிலம் இல்லாத மண்ணில்பெரும்பான்iயினத்தின் மண்ணிலோ அன்றி,அரச தினைக்களங்களிலோ, பெரும்பான்மையினம் வாழும் நிலப்பரப்பில் தொழிற்துறைகளை,வணிக வளாகங்களை,இன்னும் பல தொழில்துறைகளை வைத்திருக்கவே கூடாது.
தன்னினம் எவருமே இல்லாத துடைத்துவிட்ட இடம் போல இருக்க வேண்டும்.
ஆனால் இலங்கையில் தமிழர்கள் தென்னிலங்கையின் கொழும்பிலும் அதையொட்டிய நகரங்களிலும் சிங்களவர்களுடன் சில இடங்களில் மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்திலும் இன்னும் சில இடங்களில் நாலுக்கு ஒன்று என்ற விகிதத்திலும் முழுச் சிங்களப் பகுதி என்ற இடத்தில் நூற்றுக்கு ஐவர் என்ற விகிதத்திலும் வாழ்ந்து வந்தனர்,இன்னும் வாழ்கின்றனர்.
தமிழீழ தனிநாட்டுப் போராட்டம் சர்வநாடுகளைத் தொட்ட போது,அவர்கள் தமது கவனத்திற்கும் ஆய்வுக்குமென முழு இலங்கையின் சனத்தொகையை,அவர்களில் சிங்களவர்கள் எவ்வளவு,தமிழர்கள் எவ்வளவு ,முஸ்லீம்கள் எவ்வளவு பிற இனத்தவர்கள் எவ்வளவு என்பதை மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் பணிகளில் இருக்கிறார்கள்.பணிகளில் எத்தரத்தில் இருக்கிறார்கள்,இலங்கையின் வரலாற்றில் தமிழர்களின் பங்கு எத்தகையது என எல்லாவற்றையும் இலங்கை சுதந்திரம் அடைய முன்பு தமிழர்களின் பணிப்பரவல் எவ்வாறு இருந்தது,பினர் அவர்கள் வாழ்வு எத்தரத்தில் இருந்தது என்றும் இருக்கின்றது என்பதையும் ஆயந்தறிந்து வைத்துத்தான் ஐக்கிய நாடுகள் சபை போன்ற பொது மன்றுகளில் அவர்கள் தமிழர்களுக்கான தீர்வுப் பதில்களை வழங்குகிறார்கள்.
இந்த மன்றுக்குப் போய் அமர்வுகளில் பங்குபற்றுகிற அறிஞர்களும் இதை ஒரு பருவகால வேலை போல செய்து வருகிறார்கள்.இது அவர்களுக்கு பொழுதுபோக்கு உல்லாசப் பயணமாகும்.
ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் சனத்தொகையைவிட,திணைக்களம் தொட்டு தொழில்துறை வணிகம் போன்றவற்றில் தமிழர்கள் வகிக்கும் அளவு கூடுதலாக இருந்ததை அதை நோக்கிச் சிந்திக்காமல் போரொன்றைத் தொடக்கி குட்டிச்சுவரானது தமிழர்களே.
தமிழர்களில் எவராது தமது சனத்தொகையோடு,இலங்கையின் இயங்கியல் கட்டமைப்புத் தரவுகளோடு விகித நிலையை ஒப்பிட்டுப் பார்த்தார்களா என்றால் அது கிடையவே கிடையாது.
மண்ணுக்காக போராடுகிறோம் என்று போராடி மண்ணையும்,தமிழர்களின் பல இலட்சம் உயிர்களையும் 9000க்கு மேற்பட்ட விதவைப் பெண்களையும்,பொருளாதாரத்தையும் இழந்ததுதான் தமிழர்களுக்குக் கிடைத்த பலாபலன்.
ஆயுதப் போரின் போது தவறுகளைச் சுட்டிக்காட்டிய தமிழ் அறிஞர்களையும், கல்விமான்களையும் அடக்கி அவர்களுக்கு துரோகி என்ற பட்டம் சூட்டியவர்களும் தமிழர்கள்தான்.துரொகி என்ற பட்டத்தை வீரமுஇபாத அறிஞர் பெருமக்கள் வாயடைத்து வாழ்ந்தார்கள்.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எதையும் ஏற்றுக் கொள்ளாதே உனக்குள் பகுந்தறிந்து முடிவெடு என்று சொன்ன கிரேக்க தத்தவஞானி சாக்கிரட்டீஸின் அறிவுரையை கொள்கைப் பிரகடனமாக ஏற்றுக் கொண்ட தமிழர்களின் தலைமைகள் தாங்கள் போகும் பாதை சரிதானா என்பதை எடைபோடத் தவறிவிட்டனர்.
எதையுமே நடுநிலையாக சிந்திக்கும் மக்களை உருவாக்காதுவி;ட்டால் அந்த மக்களை மந்தைக்கூட்டமாகவே மதிக்கிறார்கள் என்பதே முடிபு.
(தொடரும்)
![]()