கட்டுரைகள்

இலங்கையிலே அதிகரிக்கும் வன்முறை ஆச்சரியமளிக்கின்றதா?… நியூசிலாந்து சிற்சபேசன் 

21ம் நூற்றாண்டு, வேகமான மாற்றங்களை வெளிப்படுத்துகின்ற காலகட்டமாகவே விரிகின்றது. தொழில்நுட்பத்தின் அபாரவளர்ச்சி, நுகர்வுக் கலாச்சாரத்தின் மிதமிஞ்சிய பரவல், சோஷல் மீடியாவின் ஊடுருவல் என்ற வரிசையிலே வன்முறையின் எழுச்சியும் சேர்ந்து கொண்டிருக்கின்றது.

ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட மக்கள் திரட்சிக்கோ உளவியல் பாதிப்பு, காயம், நிரந்தரபாதிப்பு அல்லது மரணத்தை ஏற்படுத்தும்படியான செயற்பாடே வன்முறை என பெருவெட்டில் வகுக்கப்படுகின்றது.

அச்சுறுத்துவதைக்கூட வன்முறை என்று சொல்லலாம்.

அரசியல், மதம், இனம், சாதி, குடும்பம், பாலினம் போன்றவையே வன்முறையின் நாற்றுமேடை எனலாம். வன்முறைக்கு நேரெதிரானது அகிம்சையாகும்.

இந்து, பௌத்த, ஜைனசமயங்களின் மையக்கோட்பாடு அகிம்சை எனலாம்.

அகிம்சை என்பதனை “காயப்படுத்தாமை” என்றும் வரையறுக்கலாம்.

தமிழ்மறை தந்த வள்ளுவரின் வியாக்கியானம் விசாலமானது மட்டுமல்ல, எளிமையானதும்கூட.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்” என்பது வள்ளுவரின் சித்தாந்தமாகும்.

‘காயப்படுத்தாமை‘ என்பது சொல், செயல், எண்ணம் என்பவற்றை உள்ளடக்கியதே என்பது காந்தியின் தத்துவமாகும்.

ஆனால், “அகிம்சை” கிலோ என்ன விலை போகிறது? என்று கேட்கும் நிலையிலேயே 21ம் நூற்றாண்டு வீறுகொள்கின்றது.

இலங்கை வன்முறை- தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை | Central warned TN for  SL protest“ஒப்பாரும் மிக்காருமற்ற” தேசமாகவே, அமெரிக்கா, தன்னை வியந்துகொள்கின்றது. சனநாயகத்தின் காவலராகப் “பாவலா“ பண்ணுகின்றது. எங்கெல்லாம் சட்டம் மற்றும் ஒழுங்கு தளம்புகின்றதோ, அங்கெல்லாம் “வகுப்பெடுக்கத்” தொடங்கிவிடுகின்றது. அத்தகையவொரு தேசத்தின் சனாதிபதி, அண்மையிலே வெள்ளைமாளிகையில், உக்ரேன் சனாதிபதியை சந்தித்தபோது வெளிப்படுத்திய தொனி பாரதூரமானதாகும். கடுமையான விசனத்தை ஏற்படுத்தியதாகும். அதிலே, எளியாரை வலியார் வருத்துவது துல்லியமாகத் தெரிந்தது. அஃது, உலகெங்கிலுமே எழுச்சியடைகின்ற வன்முறைக் கலாசாரத்தைப் பிரதிபலித்தது.

பாராளுமன்றம் அல்லது சட்டவாக்கல் சபைகளிலே ஏற்படுகின்ற வன்முறைகளை, பல்வேறு நாடுகளிலும், சர்வசாதாரணமானதாகக் காணமுடிகின்றது.

வன்முறைக் கும்பல் (கெங் கலாச்சாரம்) என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகின்றது. அதனைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதனால், சட்டம் மற்றும் ஒழுங்கு பெருமளவிலேனும் பேணப்படுகின்றது.

ஆனால், அவ்வாறு காத்திரமாகச் செயற்படத் “திரணியற்ற”வர்களையே இலங்கை மக்கள் ஆட்சியில் அமர்த்துகின்றனர். “ரட்ட அனுரட்ட” போன்ற கோஷங்களிலே ஏற்பட்ட குதூகலம்கூட, கானல்நீரெனக், கலைகின்றது.

வழக்கு விசாரணைக்காக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குற்றவாளி, 2025 பெப்ரவரியில் நீதிமன்றிலேயே, கொல்லப்பட்டிருக்கின்றார். அதுவே, சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவதிலான, அரசொன்றின், ஆற்றலுக்குச் சாட்சியாகின்றது.

2025ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 19 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் சொல்கின்றது.

2024ம் ஆண்டிலே, 103 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின. அதிலே 63 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகின்றது.

சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவதே பொலிஸ்துறையின் உயிர்மூச்சு என்று சொல்லலாம். ஆனால், அதற்கு நேரெதிரான செயற்பாட்டையே இலங்கை பொலிஸ் முன்னெடுக்கின்றது. வன்முறைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றது.

இதற்கான சான்றுகளை எங்கும் – எப்போதும் – எதிலும் காணலாம்.இலங்கை வன்முறை: ஜனாதிபதி கோட்டாபய கட்சி எம்.பிக்கள் இருவர் கைது - BBC News  தமிழ்

2023 டிசம்பர் 31ம் திகதி, மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகம பகுதியில், இரண்டு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடைபெற்றது.

அதனுடைய நதிமூலம் – ரிஷிமூலத்தை தேடும்போது, வேலியே பயிரைமேயும் கதை துல்லியமாக விரிவதைக் காணலாம்.

வெள்ளைவான் ஒன்றிலே குழுவொன்று வெலிகம பகுதிக்கு வருகிறது. அங்கு ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்கின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பான தகவல் வெலிகம பொலிசுக்கு கிடைக்கின்றது. அதனால் சம்பவ இடத்திற்கு பொலிஸ் விரைகின்றது.

அங்கு, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வெள்ளைவான் குழுவினரைக் கட்டுப்படுத்த, உள்ளூர் பொலிஸ் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்கின்றது. அதன்போது, வெள்ளைவானிலிருந்த ஒருநபர் கொல்லப்படுகின்றார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளோ, கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாகியது.

இடதுகை கொடுப்பது, வலதுகைக்கு தெரியக்கூடாது என்பதை இலங்கை பொலிஸ் பிழையாக விளங்கிக் கொண்டுவிட்டதோ தெரியவில்லை.

பொலிஸ் திணைக்களத்தின் வலதுகையும், இடதுகையுமே பெரும்பாலான நேரங்களில் சண்டையிட்டுக்கொள்கின்றன. ஒன்றையொன்று தேடி அலைகின்றன.

வெலிகம சம்பவத்திலும் அதுவே நடைபெற்றது.

ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்திய வெள்ளைவான் தரப்பினர் வேறு யாருமல்ல. கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் அதிகாரிகளேயாகும்.

ஒருதரப்பு பொலிஸ் அதிகாரிகளையே, வெள்ளைவான் குற்றவாளிகள் என, மறுதரப்பு பொலிஸ் கருதவேண்டிய அளவிலேயே இலங்கைப் பொலிஸாரின் லட்சணம் கொடிகட்டிப் பறக்கின்றது.

சம்பவ இடத்திற்கு, கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை, அனுப்பியமை சட்டத்திற்கு புறம்பானதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனைச் சந்தேகநபராக பெயரிடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவு வெளியாகியபோது, தேசபந்து தென்னக்கோன், தலைமறைவாகியமை மற்றுமொரு விநோதமாகும்.

பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் தலைவரையே தேடவேண்டிய, வேடிக்கையான சூழலிலேயே இலங்கை பொலிஸ் உள்ளது.

சின்னஞ் சிறுவர்கள், கள்ளன் – பொலிஸ் விளையாட்டிலே கூட இந்தளவுக்கு “ஏமிலாந்தியாக” இருக்கமாட்டார்களே என்ற நினைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை

இத்தகையதொரு பின்னணியிலேயே, இலங்கையிலே அதிகரிக்கும் வன்முறை ஆச்சரியமளிக்கவில்லை.

Loading

One Comment

  1. இது போன்ற செய்திகள் இப்போதெல்லாம் வியப்பே அளிப்பதில்லை அய்யா. ஏனெனில், ஆட்சியாளர்களுக்குத் தன்னலம் மட்டுமே தலையாய நோக்கம் ஆகிவிட்டது! மக்களாட்சி என்பது வெறும் கண்துடைப்பாகி, அரசாங்கங்களே வன்முறையை வளர்க்கின்றன. அந்த வகையில், இந்தியாவும் இலங்கைக்குச் சளைத்த நாடல்ல என்றே தோன்றுகிறது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *