பலதும் பத்தும்

இரயில் பாதையின் அருகே அமைக்கப்பட்டிருக்கும் இந்த பெட்டி என்னவென்று தெரியுமா..?

இந்தியன் ரயில்வே தான் உலகின் நான்காவது மிகப்பெரிய நெட்வோர்க் ஆகும். இந்தியாவில் தினமும் சுமார் 4 கோடி பேர் ரயிலில் மட்டும் பயணம் செய்கிறார்கள்.

நாம் ரயிலில் பயணிக்கும் போது ரயில் பாதையின் அருகே சில இடங்களில் அலுமினிய நிறப் பெட்டியை பார்த்திருப்போம். இந்த பெட்டி எதற்காக வைக்கப்பட்டுள்ளது, அது என்ன வேலையை செய்கிறது என்று இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.

ரயில் பாதையில் அமைந்துள்ள இந்த அலுமினிய நிற பெட்டியில் ஆக்சில் கவுண்டர் (Axle Counter) எனப்படும் அமைப்பு உள்ளது. இது ரயில் பாதையில் ஒவ்வொரு 3 அல்லது 5 கி.மீ-க்கும் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். ஆக்சில் கவுண்டர் ஆனது ஒரு ரயில் பாதையில் உள்ள 2 புள்ளிகளுக்கு இடையில் ரயில் கடந்து செல்வதை கண்டறியும் ஒரு சாதனமாகும்.

பொதுவாக அனைத்து ரயில் பாதைகளும் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அந்த பிரிவின் ஒவ்வொரு முனையிலும் ஒரு ஆக்சில் கவுண்டர் சென்சார் நிறுவப்பட்டிருக்கும். இந்த ஆக்சில் கவுண்டர்களை கடந்து செல்லும் ரயில் பெட்டிகள் சென்சார் மூலம் கணக்கிடப்பட்டு, இந்த தகவல்கள் அனைத்தும் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

அதாவது ரயில் நிலையத்திலிருந்து ஒரு ரயில் 10 பெட்டியுடன் கிளம்பும்போது தொடர்ந்து 10 பெட்டிகளுடன் செல்கிறதா அல்லது இடையில் ஏதாவது பெட்டி கழன்று விடுகிறதா என்பதை ஆக்சில் கவுண்டர் கண்காணிக்கிறது.
ரயில் பாதையில் பொருத்தப்பட்ட ஆக்ஸில் கவுண்டரை ரயில் கடந்து செல்லும்போது, ரயில் சக்கரங்கள் கவுண்டரை அழுத்துகின்றன.

கவுண்டர் எத்தனை முறை அழுத்தப்படுகிறது என்பது கணக்கிடப்படுகிறது. இவ்வாறு ஆக்ஸில் கவுண்டர் எத்தனை ரயில் சக்கரங்கள் வந்தது என்ற எண்ணிக்கையை இந்த பெட்டிக்கு அனுப்பி விடும். அனுப்பிய எண்ணிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் இடையில் ஏதோ பெட்டி கழன்றுள்ளது என உடனடியாக இந்த ஆக்ஸில் கவுண்டர் அருகில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்.

அந்த தகவலை வைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பின் வரும் ரயிலுக்கு ரெட் சிக்னல் கொடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது. இதனால் ரயில் பாதையில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் செல்வது தடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் தானாக செயல்படுமாறு தானியங்கி முறையில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவேளை ரயில் விபத்துக்கள் நடந்தாலும் அது குறித்து விசாரணை நடத்த இந்த தகவல்கள் உதவும். அதேபோல், ரயில் லெவல் கிராசிங்கிற்கு செல்லும் முன் இது போன்ற சிக்னல் அனுப்பப்பட்டு ரயில்வே கேட் போடுவதற்கும் உதவியாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *