முச்சந்தி
ஜெலென்ஸ்கி சர்வாதிகாரி: அமைதியை விரும்பும் ஒரு மனிதரல்ல! டிரம்புடன் வெடித்த வார்த்தை போர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி காலடி எடுத்து வைத்த போது மரியாதையை நிமித்தமான சந்திப்பு மிகவும் மோசமாக முடிவுறும் என அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.
நேட்டோ தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவு:
சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய இந்த டிரம்ப் – ஜெலன்ஸ்கி விவகார வீடியோ வைரலாக பரவிய நிலையில், இது குறித்து பலரும் அதிர்ச்சியுடன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மோசமாக நிறைவுற்ற டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பு குறித்து உலகத் தலைவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பதிலளித்து வருகின்றனர்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவளிப்பதை வலியுறுத்தினார். ரஷ்யா ஆக்கிரமிப்பாளர், உக்ரைன் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனுக்கு உதவவும், ரஷ்யாவை தடை செய்யவும் முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார் பிரான்ஸ் பிரதமர்.
இந்த சம்பவத்தை தீவிரமானதும், வருத்தமளிக்கிறதும்” என்று நார்வே பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோர் கூறினார். ஜெலென்ஸ்கி மூன்றாம் உலகப் போரில் சூதாடுகிறார் என்ற டிரம்பின் குற்றச்சாட்டு மிகவும் நியாயமற்றது. சுதந்திரத்திற்கான போராட்டத்தில் உக்ரைனுடன் நார்வே நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கனிம ஒப்பந்தம் காற்றில் ?
இந்த தகராறு வெடிக்க முன்னர், ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க ஆதரவை உறுதிப்படுத்தவும், இந்த சந்திப்பு மூலமாக ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தைப் பெறவும், ஜெலன்ஸ்கி நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆனால் சந்திப்பு குழப்பத்தில் மூழ்கியது மட்டுமின்றி காரசார விவாதமாக மாறியது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று கூட டிரம்ப் சொன்ன பின்னரே
டிரம்ப் ஜெலென்ஸ்கியுடன் இந்த சந்திப்பை நடத்தினார்.
சூடு பிடித்த விவாதங்களை தொடர்ந்து உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறச் சொல்லியும், கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
ஜெலென்ஸ்கி “மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறார்” என்று டிரம்ப் குற்றம் சாட்டியதுடன், ரஷ்யாவுடனான போரில் நீடிக்க உக்ரைனிடம் தகுதிகள் இல்லை என்றும் தெரிவித்தார். இத்தகைய உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் பொதுவாக கேமராக்கள் முன் சண்டையிடுவதில்லை. ஆனால் இம்முறை உக்ரைன் அதிபரின் சந்திப்பு குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆரம்பத்தில் சுமூகமாக தொடங்கிய பேச்சு, ஒரு கட்டத்தில் கடுமையாக மாறியதன் விளைவாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப் படவில்லை. கூட்டு அறிக்கை எதுவும் கூட வெளியிடப்படவில்லை. விவாதத்திற்கு பின்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பரபரப்பான ஓவல் அலுவலகம் :
எப்போதும் பரபரப்பான ஓவல் அலுவலக உயர்மட்ட சந்திப்பில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது உக்ரைன் அதிபர் அவமரியாதை செய்ததாக ஜேடி வான்ஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஒரு சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியது.
இதன் போது பதட்டங்கள் அதிகரித்த போது, டிரம்ப் தனது குரலை உயர்த்தி, உக்ரேனிய தலைவரை நோக்கி, “நீங்கள் மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள்” என்று காட்டமாக பேசினார்.
சமீபத்தில் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கூறியதை
மீண்டும் சரி எனக் கூறியதுடன், அமைதியை உறுதி செய்ய இருதரப்புடனும் தான் பாரபட்சமின்றி நடந்து கொள்வதாகக் கூறினார்.
மேலும் புட்டினை எதிர்கொள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கொண்ட அணுகுமுறையே பாரிய மோதலுக்கு வழிவகுத்தது என்று வாதிட்டு, டிரம்பின் நிலைப்பாட்டை வான்ஸ் எதிரொலித்தார்.
சூடான விவாதம்:
புட்டினின் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறிய வரலாற்றை சுட்டிக்காட்டி ஜெலென்ஸ்கி விளக்கம் செய்தார். “ஜே.டி., நீங்கள் என்ன வகையான ராஜதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டதும் விவாதம் சூடானது.
“உங்கள் நாட்டின் அழிவை முடிவுக்குக் கொண்டுவரப் போகும் ராஜதந்திரத்தைப் பற்றி நான் பேசுகிறேன்” என்று வான்ஸ் அதிரடியாக பதிலடி கொடுத்தார்.
பின்னர் அவர் ஜெலென்ஸ்கியை கடிந்துகொண்டு,”அமெரிக்க ஊடகங்கள் முன் இதை எதிர்த்து வழக்குத் தொடர ஓவல் அலுவலகத்திற்குள் நீங்கள் வருவது அவமரியாதை என்று நான் நினைக்கிறேன்” என்றும் கூறினார்.
“போரின் போது, அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன, நீங்கள் உட்பட. ஆனால் உங்களிடம் ஒரு நல்ல சூழல் உள்ளது, இப்போது அதை நீங்கள் உணரவில்லை, ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் உணருவீர்கள்.” என்றார் ஜெலன்ஸ்கி.
உடனே டிரம்ப் குறுக்கிட்டு,”நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று நீங்கள் சொல்லாதீர்கள். நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம் என்றார்.
உடனே, “நான் உங்களுக்குச் சொல்லவில்லை…” என்று ஜெலென்ஸ்கி தொடங்க, டிரம்ப் மீண்டும் இடைமறித்து,”நீங்கள் அதை ஆணையிடும் நிலையில் இல்லை. நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்பதை ஆணையிடும் நிலையில் நீங்கள் இல்லை.” என்றார் மிகக் கோபமாக.
இதனைத் தொடர்ந்து டிரம்ப் கடுமையான குரலில், “நீங்கள் நல்ல நிலையில் இல்லை. உங்களிடம் இப்போது சாதகமான சூழல் இல்லை. எங்களுடன், நீங்கள் அதை பெறத் தொடங்குங்கள்” என்றும் கூறினார்.
டிரம்பின் கடுமையான வார்த்தையினால் விரக்தியடைந்ததாகத் தோன்றிய ஜெலென்ஸ்கி,”நான் சீட்டாட்டம் விளையாடவில்லை, நான் மிகவும் தீவிரமாக இருக்கிறேன், திரு. ஜனாதிபதி,” என்று அவரும் பதிலடி கொடுத்தார்.
டிரம்ப், சற்றும் தளராமல், “நீங்கள் சீட்டாட்டம் ஆடுகிறீர்கள். நீங்கள் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள், நீங்கள் செய்வது அமெரிக்க நாட்டிற்கு மிகவும் அவமரியாதைக்குரியது” என்று பதிலளித்தார்.
நன்றி சொல்லாத உக்ரைன் ?
அமெரிக்காவிற்கு ஜெலென்ஸ்கியின் நன்றியுணர்வை வான்ஸ் சவால் செய்ததால், அனல் பறக்கும் விவாதம் தொடர்ந்து மோசமடைந்தது. “நீங்கள் ஒரு முறையாவது ‘நன்றி’ சொன்னீர்களா?” என்று ஜேடி வான்ஸ் கேட்டார்.
பல முறை தனது நன்றியைத் தெரிவித்ததாக ஜெலென்ஸ்கி வலியுறுத்தும்போது, வான்ஸ் மேலும் அழுத்தினார்: “இல்லை, இந்த முழு சந்திப்பிலும், நீங்கள் ‘நன்றி’ சொன்னீர்களா?” என்றார். இறுதியாக நன்றி அமெரிக்கா என தெரிவித்த உக்ரைன் அதிபர் முகம் கோபமடைந்தது.
விவாதத்தின் இடையே டிரம்ப் திடீரென ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பை முடித்துக்கொண்டார். மேலும் அவர்களின் திட்டமிடப்பட்ட கூட்டு ஊடக உரையும் ரத்து செய்யப்பட்டது.
ஜெலென்ஸ்கியின் ஐந்தாவது வெள்ளை மாளிகை வருகையாகும். அத்துடன் ஜனாதிபதி டிரம்பின் கீழ் அவரது முதல் வருகையாகும். ஓவல் அலுவலக சந்திப்பிற்கு பிறகு உக்ரைன் தூதுக்குழு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், ஜெலென்ஸ்கி அமைதியை விரும்பும் ஒரு மனிதராகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
![]()