இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் -03 … சங்கர சுப்பிரமணியன்

ஒரு சுவரில் எந்த அளவு வேகத்தில் பந்தை வீசுகிறோமோ அதே அளவு வேகத்துடன் பந்து திரும்பி வரும் என்பது உண்மை. நாம் செய்யும் செயல் நம்மிடம் திரும்பும். அரளிச்
செடியை நட்டால் அரளிதான் காய்க்கும். முந்திரி செடியை நட்டால் முந்திரிதான் காய்க்கும். அதனால் செயலுக்குத்தக்க பலனே கிடைக்கும்.
கடவுளை கும்பிட்டால் அரளிச் செடியில் முந்திரியோ அல்லது கும்பிடாது போனால் முந்திரிச் செடியில் அரளியோ காய்க்காது. அதேபோல் தீவினை ஆற்றவிட்டு கடவுளைக் கும்பிட்டால் நல்வினையோ அல்லது நல்வினை செய்து கடவுளைக் கும்பிடாவிடில் தீவினையோ வந்து சேராது. இதை எவரும் எவருக்கும் சொல்லித் தரவில்லை.
இப்போது என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்துக்கு காரணத்தை சொல்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு
வந்தவுடன் இங்குள்ள வழிபடுமிடங்களைப் பார்த்தேன். பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே தென்பட்டார்கள். அவர்கள் வருவதும்கூட தம் வயது ஒத்தவர்களை அங்கே காணலாம் மற்றும் அளாவலாம் என்பதற்காகவே இருந்தது.
சிறுவர்களையோ வாலிபவயது உடையவர்களையே அங்கே அதிகமாக பார்க்க முடிவதில்லை.
பெரும்பாலும் அவர்கள் கூடுமிடங்கள் வேறாகவே இருக்கும். விழாக்காலங்கள் மற்றும் திருமணங்களில் அவர்களது பங்கேற்பு இருக்கும். ஒரு ஊருக்கு ஒரு வழபடுமிடத்துக்கு மேல் இல்லை.
பெரிய ஊராக இருந்தால் இரண்டு இருக்குமோ என்னவோ? நம்ம ஊரில் ஊருக்கு பத்து கோயில்கள். அது தவிர அரசமரத்தடியிலும் ஆற்றங்கரைகளிலும் கோவில்கள். நடை பாதைகளிலும் நாற்சந்தியிலும் கோவில்கள் என்று எண்ணற்ற கோவில்கள். எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றேதான் என்றபடி எந்தனை
கோவில்கள் இருந்தாலும் ஏழ்மையில் இருப்போர் இங்கேதான்.
இத்தனை கோவில்கள் இருக்கும் நாட்டில் ஏன் பெரும்பாலான மக்களை கடவுள் ஏன் அப்படி வைத்திருக்கிறார் என்று எண்ணினேன். அதற்கு அடுத்தாற்போல் இறைவனுக்காக மாதாமாதம் எத்தனை பண்டிகைகள் விழாக்கள் நடக்கின்றன. கடவுள் மனமகிழ்ந்து எதையும் செய்யவில்லையே? அப்போது ஒன்று எனக்கு புரிந்தது.
அதிகப் படியான வழிபடும் தளங்கள் இருப்பதற்கும் இடைவிடாது வழிபடுவதற்கும்
வளமான வாழ்வுக்கும் சற்றும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று புரியவந்தது. கடின உழைப்பின்றி கடவுளை வணங்குவதால் முன்னேற முடியாது என்பதும் புரிந்தது. அதைத்தான் வள்ளுவன் முயற்சி திருவினையாக்கும் என்கிறான்.
அடுத்ததாக விழாக்கள் பண்டிகைகள் என்றவுடன் ஒன்று நினைவில் வருகிறது. இங்குள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஆண்டுக்கு ஒன்றிரண்டு பண்டிகைகளே வருகின்றன. அந்த பண்டிகைகளும் வழிபடுமிடங்களில் நான்கு சுவர்களுக்குள் எந்தவித பெரிய ஆரவாரமுமின்றியே நடைபெறுகின்றன. பொதுவெளியில் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப் படுவதில்லை.

அப்படி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பண்டிகைகள் நடபெறுவதாகத் தோன்றவில்லை. நடைபெற்றால் தெரியப் படுத்துங்கள். தெரிந்து கொள்கிறேன். அவர்கள் விரும்பினால் பெரும்பான்மையாக அவர்கள் இருப்பதால் அவர்களின் மதம் சார்ந்த பண்டிகைகளை வீதிவரை கொண்டுவந்து பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம். வீதிகளை குப்பைக் காடாகவும் ஆக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.
இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். நான் பார்த்தவரையில் அரசு அலுவலகங்களில் தொழிற்சாலைகளிலும் எங்குமே கடவுள் படங்கள் இல்லை. பெரிய பெரிய வியாபாரம் நடக்கும் இடங்களில் கடவுள் படங்கள் இல்லை.
கடவுள் படங்கள் இல்லாததால் தொழிற்சாலைகளில் தொழில் நடைபெறுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதா? கடவுள் படங்கள் இல்லையே அதனால் தொழிற்சாலைகள் எல்லாம் இழப்பில் நடந்நு கொண்டிருக்கின்றனவா? அப்படியில்லையே?
வியாபாரம் பண்ணக்கூடிய இடங்களிலும் கடவுள் படங்கள் இல்லையே? எந்த உணவகத்திலாவது கல்லாவில் ஒருவர் இருந்து கொண்டு அவரின் பின்புறத்தில் கடவுளர் அணிவகுத்து நிற்கின்றார்களா? எந்த பெரிய வணிகவளாகத்திலாவது கடவுளுக்கென்று ஒரு இடம் இருக்கிறதா?
இங்கு வீடுகட்டிக் கொடுக்கும் நிறுவனங்கள் அவர்கள் கட்டிக் கொடுக்கும் வீடுகளின் மாதிரிகளை மக்களின் பார்வைக்காக கட்டி வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்த்து நாம் நமக்கு பிடித்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்ளலாம். இப்படம் கட்டி வைத்திருக்கப் பட்டிருக்கும் இடங்களில் உள்ள அலுவலகங்கள் எவற்றிலும் கடவுள் படங்கள் கிடையாது.
அதற்காக இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் அல்லது அந்த அலுவலகங்களில்

பணிபுரிவோருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று பொருளல்ல. குறிப்பாக கட்டி விடப்பட்டிருக்கும் எந்த மாதிரி வீடுகளிலும் பூஜை அறை என்று ஒன்று கிடையாது. சமையலறை, வரவேற்பறை, குளியலறை, கழிப்பறை, துணிதுவைக்க இடம் என்று பல அறைகள் இருக்கும்.
பல படுக்கையறைகள், பொழுதுபோக்குக்கு படம்பார்க்க, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை வைக்க என்பவற்றிற்கு எல்லாம் தனித்தனி அறைகள் கண்டிப்பாய் இருக்கும். ஆனால் பூஜை அறை என்று மட்டும் இருக்காது. ஆனால் நம்மவர்கள் விடுவார்களா? நீ யாருடா பூஜை அறையை வைக்காமல் விடுவது? நாங்கள் வைப்போம் என்று வீடு கட்டியதும் அதில் ஒரு அறையை பூஜையறை ஆக்கிவிடுவார்கள்?
அந்த அறையை கோவில் மாதிரியே ஜாம் ஜாம் என்று மாற்றி விடுவார்கள். அப்பாட ரொம்ப நேரத்துக்குப்பின் இரட்டைக்கிளவியா என்கிறீர்களா? சில நேரங்களில் அப்படித்தாட் தூண்டில்போட்டு வெகு நேரமானாலும் ஒரு மீன் கூட அகப்படாது. அப்படியே கிடைத்தாலும் ஒன்றுக்கும் உதவாத இந்த ஜாம் ஜாம் போலத்தான் கிடைக்கும்.
என்ன செய்வது? இந்த ஜாம் ஜாம் தமிழும் அல்ல. ரொட்டியில் தடவும் ஜாம் என்று வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். ஆனால் இரட்டைக்கிளவியில் பங்கேற்று பழக்கத்திலும் வந்து விட்டதல்லவா? இல்லையா? அட போங்க. சபாபதி மகள் திருமணத்தை ஜாம் ஜாம் என்று மூக்கில் விரலை வைக்கும்படி நடத்திட்டார் அல்லவா? இந்த வழக்கை கேட்டதில்லையா? இப்ப என்ன சொல்வீங்க.
(தொடரும்…)
![]()