உணவுப் பொதியினுள் குண்டு கொண்டு வந்து பாராளுமன்றை தாக்கிய ஜே .வி.பி.

ஜே .வி.பி.பாராளுமன்றத்திற்குள் உணவு பொதியில் குண்டு கொண்டு வந்து தாக்குதல் நடத்தியதால்தான் பாராளுமன்றத்துக்குள் உணவு கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. தற்போது பாராளுமன்ற உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாம் வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கைவிடுத்த அவர் மேலும் பேசுகையில்,
பாராளுமன்றத்தின் உணவு பற்றி தற்போது பேசப்படுகிறது ஒருகாலத்தில் பாராளுமன்ற சேவையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள் வீடுகளில் இருந்து உணவு கொண்டு வருவார்கள். அவ்வாறான நிலையில் பாராளுமன்றத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஜே .வி.பி.யின் அஜித் குமார என்பவர் உணவு பொதியில் வைத்து தான் குண்டை பாராளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்.
அப்போதைய ஜனாதிபதியை கொலை செய்வதற்காக ஜே .வி.பி.அஜித் குமார என்பவரையே தெரிவு செய்தது. அஜித் குமார உணவு பொதியில் குண்டு கொண்டு வந்தார்.இந்த சம்பவத்தின் பின்னர் தான் பாராளுமன்றத்துக்குள் உணவு கொண்டு வருவதற்கு உறுப்பினர்களுக்கும், சேவையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது பாராளுமன்றத்தில் உணவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உணவின் கட்டணத்தை அதிகரித்து விட்டதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தவறான நிலைப்பாட்டை அரசாங்கம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எமக்கு பாராளுமன்ற உணவு வேண்டாம். வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அனுமதி தாருங்கள் என்றார்.
![]()