மாற்றத்தின் ஆரம்பமாகலாம் என்னும் நப்பாசை பொய்க்கிறதா?… நியூசிலாந்து சிற்சபேசன்

இலங்கையர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்ற ஒரு அபிப்பிராயம் உண்டு. அத்தகைய உணர்ச்சிப்பெருக்கை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காணமுடிகின்றது.
ஆனால், பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரையான நீண்ட நெடிய நிலப்பரப்பில், ஒரே சந்தர்ப்பத்தில், பரந்துபட்ட உணர்சிக் கொந்தளிப்பு அண்மைக்காலத்திலேயே ஏற்பட்டது.
2024ம் ஆண்டு தேர்தல்களிலே, ஒட்டுமொத்த தேசமும் உணர்ச்சி வசப்பட்டது.
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை எட்மன் ஹிலரி தொட்டபோது உலகமே பரவசப்பட்டது. நெயில் ஆர்ம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்பதித்தபோது உலகமே தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்தது.
அதேபோன்று, சனாதிபதித் தேர்தலிலே அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றபோது இலங்கையர் பரவசப்பட்டனர். வாராதுவந்த மாமணியாகக் கொண்டாடினர். அந்தப் பரவசநிலையிலிருந்தே, பாராளுமன்றத் தேர்தலிலேயும் வாக்களித்தனர். அதனால், எதிர்பாராத அபாரமான வெற்றியைத் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினர்.
இரவுபடுத்துவிட்டு, மறுநாள் விடிந்தபோது திடீர் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என நம்பினர். நாம் இலங்கையர் என உரத்துக் கூச்சலிட்டார்கள். நம்பிக்கை பொங்கிப் பிரவாகித்தது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் ஆதரவு பெரிதும் கொண்டாடப்பட்டது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்தது நம்பிக்கை அல்ல. நப்பாசை என்பதைச் சொல்லுவதற்கான திராணியுடைய குரல் தமிழ் மக்களிடம் இருக்கவில்லை.
அதனால், “எடுப்பார் கைப்பிள்ளை” போன்றநிலை ஏற்பட்டது.
தமிழ் மக்கள் வாக்களித்த பாங்கை, ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கு வியாக்கியானம் செய்துகொண்டனர்.
நம்பிக்கைகளை வளர்த்தெடுக்க அச்சாரம் தேவை என்பதை இக்கட்டுரையாளர், அன்றைய காலகட்டத்திலே, வலியுறுத்தியிருந்தமை சுட்டிக்காட்டக்கூடியதாகும்.
சனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலே வாக்களித்த மக்களின் மனங்களில், தரித்திரப்பட்ட பழைய அரசியல்வாதிகளுக்கு எதிரான உணர்வே துருத்திக்கொண்டு காணப்பட்டது. அதனுடைய மறுபக்கத்தில் “ரட்ட அனுரட்ட” போன்ற கோஷங்கள் நம்பிக்கைகளை விதைத்தன. உணர்ச்சிகளைத் தூண்டின.
வார்த்தைஜாலங்களில் மக்கள் மயங்கினர். அள்ளுப்பட்டு வாக்களித்தனர்.
திசைகாட்டிக்கு கிடைத்த ஆதரவை தேசிய மக்கள் சக்தி கொண்டாடியது. ஒன்றிணைந்த தேசத்தின் குரலாக தம்மைச் சிலாகித்துக்கொண்டது.
ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரையில் காத்திருந்த ஜேவிபி, தேர்தல் வெற்றிகளைப் பக்குவமாகப் பௌத்திரப்படுத்திக்கொண்டது. அதன்பின்னர், சுயரூபம் மெலிதாக தெரிய ஆரம்பித்தது.
ஜேவிபியின் பொதுச்செயலாளர், வெளிவிவகார அமைச்சர் போன்றோர் உதிர்த்த ஞானமொழிகள் நப்பாசையை நறுக்க ஆரம்பித்தன.
காட்டிலே வாசித்த நரியொன்று, வழி தவறி, ஊருக்குள் புகுந்துவிட்ட கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஊருக்குள்ளே வந்த நரியை, நாய்கள் துரத்தினவாம். நாய்களிடமிருந்து தப்பியோடிய நரி, தவறுதலாக, நீலச்சாயத் தொட்டிக்குள் விழுந்துவிட்டதாம்
அதனால் நரியின் உடல் நீல நிறமாகி விட்டது. அதன்பின்னர் நாய்களின் கண்ணில் படாமல் காட்டுக்குள் ஓடியது.
நீல நிறத்தில் ஓடிய விலங்கை கண்டு மற்றையவை பீதியடைந்தன. அதனை நீலநரி புரிந்து கொண்டது.
பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்தி பிழைக்க தீர்மானித்தது. ஓடி ஒளிந்த விலங்குகளை கூவி அழைத்தது.
நானே, உங்களின் மீட்பர் என்றது. ஏற்கனவே, காட்டின் ராஜா யார் என்பதில் போட்டியிருந்தது.
அந்தகையை சூழலிலே, சம்பந்தமில்லாத விலங்கொன்று ராஜாவாகியதில் எல்லோரும் திருப்தியடைந்தனர். ஒருநாள் மழை லேசாக பொழிய ஆரம்பித்தது. நீல சாயம் கரைந்தது. நரியின் வேஷம் கலைந்தது.
அதேபோன்று வேஷம் கரையும் நேரம், இலங்கையிலும், தொடங்கிவிட்டதோ என்னும் நினைப்பை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
இனப்பிரச்சினை தீர்வு, பொருளாதாரப் பிரச்சினை தீர்வு போன்ற பெரிய விடயங்களிலே ஒரேநாள் தீர்வை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், ஒருவருடைய பொருளை பிறிதொருவர் திருடி வைத்திருக்கும்போது, அங்கே திருட்டு என்பதை அறிந்துகொள்வது சிக்கலான விடயமல்லவே.
தனியார் காணியிலே, தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளமை ஊரறிந்த இரகசியமாகும்.
சாதாரண பாஷையில் சொல்வதெனில், காணி திருடப்பட்டிருக்கின்றது. அதனை சீர்செய்வது அரசினுடைய கடமையாகும்.
அரசகட்டமைப்பு கடமையிலிருந்து தவறியது. திருட்டுக்கு உடந்தையாகியது.
ஆக, நிறுவனமயப்பட திருட்டை யார் திருத்தவேண்டும். சர்வவல்லமை பொருந்திய என்று சொல்லப்படுகின்ற, நிறைவேற்று அதிகார சனாதிபதியே தீர்வு ஏற்படுத்தவேண்டும். அதுவும்கூட, உடனே செய்யவேண்டும்.
ஒரு பெளத்த துறவி குறிப்பிட்டதுபோல், சனாதிபதி நினைத்தால் தையிட்டி விவகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரலாம். வல்வெட்டித்துறையில் வக்கணையாகப் பேசமுடிகின்றது.
யாழ் இந்துவின் பெருமையை மேடைபோட்டு முழங்கமுடிகின்றது.
ஆனால், தையிட்டியில் நடந்த வெளிப்படையான திருட்டைச் சீர்செய்யமுடியவில்லை.
காரணம்; பெளத்த சிங்களப் பேரினவாதம் பெற்றெடுத்த பிள்ளைகளே இன்றைய ஆட்சியாளர்களுமாகும்.
திருகோணமலையில் பஸ் நிலையத்தில் நிறுவப்பட்ட புத்தர் சிலைகளுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய கட்டளை நிறைவேற்றப்படவில்லை.
கிழக்கில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றக் கட்டளை நிறைவேற்றப்படவில்லை.
நீதிமன்றக் கட்டளையை மீறி, முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வாறாக நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்படுகின்றமையே வரலாறாகும்.
சிங்கள பௌத்த மயமாக்கலும், நிலஆக்கிரமிப்பும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.
ஆக, இலங்கைத்தீவின் நிறுவனமயப்பட்ட கட்டமைப்பு தமிழ் மக்களை சரிநிகர் சமானமாக ஏற்றுக்கொள்ளும் என்பது யதார்த்தத்தில் சாத்தியமில்லை.
இத்தகையதொரு சூழலிலே, அனுரகுமார திசாநாயக்க மாற்றத்தின் ஆரம்பமாகலாம் என்னும் நப்பாசையும் பொய்த்துப்போகின்றமை கண்கூடாகத் தெரிகின்றது.
![]()
Thanks Sabes
This is our History whatever we do honestly sincerely will protect us others all will destroy us and others
wimple as that
With Best Regards
Too early to judge
Poolo.