ஐ.நா. மனித உரிமை சபை; ஆள் கடத்தல், கள்ளப் பணத்தில் ஈடுபடுவோரை காப்பாற்றுவதில்லை!; ச.வி.கிருபாகரன்

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானின் காலத்தில் மறுசீரமைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, ஐ.நா மனித உரிமை சபையாக – (ஐ.நா.ம.உ.ச.) 2006ல் நிறுவப்பட்டது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. ஆணைக்குழு அரசியல் மயமாக்கப்டிருந்தமை என்பது பொதுவான கருத்து.
ஜெனிவா ஐ.நா.ம.உ.ச. நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஐ.நா. மனித உரிமை ஆணை குழு, செயற்திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளையில், அதனது உதவி அமைப்பாக செயற்பட்ட ஐ.நா.மனித உரிமை உப-ஆணைக்குழு, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஆலோசனை குழு என்ற பெயர் கொண்ட அமைப்பாக, ஐ.நா.ம.உ.ச.க்கு ஆலோசனைகளை வழங்குகிறது.
ஐ.நா.ம.உ.ச.யின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்காணிப்பு பலவிதப்பட்டது. ஐ.நா. கோட்பாடுகளையும், உடன்பாடுகளையும் ஏற்ற நாடுகளை, உடன்படிக்கை சபைகள் (Treaty bodies) மூலம் கண்காணிக்கப்படுகிறது.
ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் மனித உரிமை நிலைப்பாடுகளை, ஐ.நா.ம.உ.ச. தனது செயற்குழுக்கள் (Working Group), விசேட பதிவாளர் (Special Rapporteur), நாட்டுக்கான பதிவாளர் (Country Rapporteurs), விசேட பிரதிநிதிகள் (Special Representatives) அத்துடன் சுதந்திரமான நிபுணர்கள் (Independent Experts) மூலமாக கண்காணிப்பது வழக்கம். இவர்கள் யாவரும் தமது அவதானங்களையும் கண்டறிந்தவற்றையும் ஐ.நா.ம.உ.ச.க்கு சமர்ப்பிப்பார்கள். இதில் விசேட பிரதிநிதிகளும், சுதந்திரமான நிபுணர்களும் ஐ. நா செயலாளரினால் நியமிக்கப்பட்டவர்கள்.
ஐ.நா.வின் கூற்றுப்படி – மனித ஆட் கடத்தல் குற்றம், மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது – செயல், வழிமுறைகள், நோக்கம். உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டல், உணர்ச்சி ரீதியான கையாளுதல் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை அகற்றுதல் ஆகியவை, கடத்தல்காரர்களால் தங்கள் பாதிக்கப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரின் சொந்த நாட்டில், இடம் பெயர்வின் போது அல்லது ஒரு வெளிநாட்டு நாட்டில் நடைபெறலாம்.
ஐ.நா. வரையறுத்துள்ள, “பலெர்மோ நெறிமுறையில்” (Palermo Protocol), மனித ஆட் கடத்தலை ‘சுரண்டல் நோக்கத்திற்காக, மற்றொரு நபரின் மீது கட்டுப்பாட்டைக் கொண்ட ஒருவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துதல், வற்புறுத்தல் அல்லது ஏமாற்றுதல் மூலம் ஆட்களை ஆட்சேர்ப்பு செய்தல், கொண்டு செல்வது, இடமாற்றம் செய்தல், தங்க வைத்தல் அல்லது பெறுதல் ஆகிய முறையில் காணப்படுகிறது.
இந்த பரந்த வகை, பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் பல்வேறு வகையான நிதி பரிமாற்றங்களை உள்ளடக்கியது. அவற்றுள் – குற்றவியல் தோற்றம் கொண்ட நிதிகள், குற்றத்தின் வருமானம் (எடுத்துக்காட்டாக வரி ஏய்ப்பு, பணமோசடி, மோசடி மற்றும் ஊழல்); லஞ்சம், பயங்கரவாத நிதியுதவி அல்லது…..போன்ற குற்றவியல் இலக்கு கொண்ட நிதிகள் என ஐ.நா. உட்பட உலக நாடுகளின் சட்டங்களில் வரையறைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் ஆட்கடத்தல்
மனித ஆட் கடத்தல் பாதிக்கப்பட்டவர்களில் 9% பேர், போலியான அல்லது போலியான பாஸ்போர்ட்கள் மற்றும் அடையாள அட்டைகள், காகித தலைப்புக்களை (Letter pad)ஐ பயன்படுத்தி, கொண்டு செல்லப்படுகிறார்கள். சட்டவிரோதமாக பணம் ஈட்டப்படுவது தெளிவாகத் தெரிந்தால், இலாபம் மீண்டும் குற்றச் செயல்களில் முதலீடு செய்யப்படலாம் அல்லது பறிமுதல் செய்யப்பட்டு சொத்துக்களை வெள்ளையாக்கி முதலீடு செய்யப்படலாம்.
சட்டவிரோத குடியேற்றத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், மனித ஆட் கடத்தலும் உள்ளது, இதில் குற்றத்திற்குரிய நபரை மற்றவர்களுடன் சேர்த்து நகர்த்துதல், பணம் செலுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சுரண்டுதல் ஆகியவை அடங்கும். மனித ஆட் கடத்தலுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 14 ஆண்டுகள் ஆகும். அத்துடன் பெரிய அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இவ் அடிப்படையில், உலக நாடுகளில், விசேடமாக ஜனநாயக நாடுகளான மேற்கு நாடுகளில் – ஆட்கடத்தல், இதனால் பெற்றுக் கொள்ளப்படும் நிதிகள் பற்றி இவ் நாடுகளின் – காவல்துறையினர், புலனாய்வு துறையினர், ஐக்கிய நாடுகளின் சட்ட திட்டங்களிற்கு அமைய பயணிப்பதை நாம் என்றும், ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்கிறோம். உலகம் வாழ் மக்கள் யாராகிலும் ஆட்கடத்தல், கறுப்பு பணம் போன்ற கிறீமினால் குற்றங்களில் ஈடுபடாது திகழ்வார்களேயானால். ஐ.நா. மனித உரிமை சபையும், ஜனநாயகத்தில் பின்னி பிணைந்த ஐ.நா. அங்கத்துவ நாடுகள், நிரபரதிகளிற்காக (For the innocent) குரல் கொடுத்து, குற்றமற்றவர்களை காப்பாற்ற முன்வரு வருவார்கள் என்பதே உலக நியதி.
ஊதரணத்திற்கு, ஒரு காலகட்டத்தில், ஜெனிவாவிலிருந்த சிறிலங்காவின் தூதுவர்கள், என்னை ஐ.நா.விலிருந்து வெளியேற்றும் நோக்குடன், என்மீது பல புகார்களை ஐ.நா.விற்கு முறையிட்டார்கள். இதனால் ஐ.நா.வில் பல விசாரணைகளை நான் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
அத்துடன் சிறிலங்காவின் அரச ஊடகங்கள் ஊதுகுழுல்கள், என்னையும் எனது துணைவியார் பற்றியும், தமது எண்ணப்படி மிகைபடுத்திய பல தகவல்களை வெளியிட்டதுடன், சில சந்தர்பங்களில், ஆங்கில ஊடகங்களில் முதற்பக்கத்தில் விசமத்தனமான தலையங்க செய்திகளைகூட வெளியிட்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில், நான் சர்வதேச காவற்துறையினரான ‘இன்ரபூலினால்’ தேடப்படுவதாக கூட செய்திகள் வெளியாகியிருந்தது. இதன் மூலம், எமது ஐ. நா. செயற்பாடுகளையும், முக்கிய புள்ளிகளுடனான தொடர்புகளையும் துண்டிக்கலமென சிறிலங்கா எண்ணியது. ஆனால் ஐ. நா. மனித உரிமை சபையின் பிரதிநிதிகளினால், இவ் குற்றச்சாட்டுகள் யாவும் பொய்யானதுவென நிருபிக்கப்பட்டு, ஐ. நா. அறிக்கைகளும் வெளியிடப்பட்டது என்பது சரித்திரம்.
58 வது கூட்ட தொடர்
ஐ.நா.ம.உ.ச.யின் 58வது கூட்ட தொடர், எதிர்வரும் திங்கட்கிழைமை 24ம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் 04 திகதி வரை நடைபெறவுள்ளது.
ஐ.நா.ம.உ.ச.யின் 2025 ஆம் ஆண்டிற்கான, அதாவது, 19வது சுழற்சியின் தலைவராக, சுவிஸ்லாந்து நாட்டின் ஐ.நா. ஜெனிவா தூதுவர், திரு. ஜூர்க் லாபர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி தெரிவு செய்யப்பட்டார். ஜூர்க் லாபர் அவர்கள், 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை, நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின், அதாவது ஐ.சி.சியின் தலைவரது, அமைச்சரவைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
ஐ.நா.ம.உ.சபையில் சிறீலங்காவின் நிலை பற்றி பேசும் போது, பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு அங்கு நடைபெறுபவை எவையும் திருப்தி கொடுப்பதாக காணவில்லை. காரணம் ஒரு மாபெரும் அவலம் எமது இனத்திற்கு நடந்து முடிந்த பின்னரும், ஜ.நா. இன்னும் சரியான முறையில் தமிழ் மக்களின் அவலங்களுக்கும், ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், நத்தை வேகத்தில் செல்வதே காரணம்.
ஆனால் ஐ.நா.ம.உ.ச.யில் முயற்சி செய்யாத விடத்தில், வேறு ஐ.நா விற்கான சபைகளில்,
சிறிலங்கவின் விடயம் கவனத்திற்கு எடுக்கப்படுமா என்பது, தொடர்ந்து கேள்விக் குறியகவே இருந்து வருகிறது.
சிறிலங்கா விடயத்தில் சுதந்திரமான சர்வதேச விசாரைண என்ற விடயத்துடன் பாதிக்கப்பட்டுள் மக்ளிற்கான நீதி தேடுவது மிக நீண்ட காலமாக சர்வதேச ரீதியாக முக்கியமாகிறது. ஆனால் வடக்கு கிழக்கு மக்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வை, இன அழிப்பின் சர்வதேச நீதியுடன் இணைந்து முன் வைப்பதை, சில சர்வதேச நாடுகளும், சில முக்கிய புள்ளிகளும் தவறாக பார்ப்பதை நாம் காணுகிறோம்.
ஆகையால் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை பற்றி பேசுவதை, ஐ. நா. பொதுச் சபை, பாதுகாப்புச் சபை ஆகிய இரு அமைப்புக்களுமே உகந்த இடம். சுயநிர்ணய உரிமையில் அக்கறை கொண்டவர்கள், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை சபையை தவிர்த்து, நியூயோககிற்கு சென்று தமது பரப்புரை செய்வதே விரும்பதக்கது.
முக்கியம் வாய்ந்த 60 வது கூட்ட தொடர்
இன்றைய நிலையில் – ஐ.நா.ம.உ.சபையினால் 2024 அக்டோபர் 9 ஆம் தேதி சிறிலங்கா குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட A/HRC/RES/57/1 தீர்மானத்திற்கு அமைய, நடைபெறவுள்ள 58வது, ஐம்பத்தி எட்டாவது கூட்ட தொடரில், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரினால் ஓர் ‘வாய்மூல’ அறிக்கையையும்; 60வது கூட்ட தொடரில், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு ஐ..நா.மனித உரிமை ஆணையாளரை கோரியுள்ளது. இவ் அறிக்கையை அடுத்து, உரையாடல் விவாதம் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது. ஆகையால் 60வது ஐ.ம.உ.சபை கூட்ட தொடர், பாதிக்கப்பட்ட தமிழர்களை பொறுத்த வரையில் மிக முக்கியம் வாய்ந்த கூட்ட தொடர்.
இவ் அடிப்படையில் – 59வது கூட்ட தொடர், எதிர்வரும் யூன் மாதம் 16ம் திகதி ஆரம்பமாகி, யூலை 11ம் திகதி திகதி வரை நடைபெறவுள்ளது. இவ் கூட்டத் தொடரில் சிறிலங்கா பற்றிய எந்தவித உத்தியோகபூர்வ விடயங்களும் நடைபெறாது.
ஆனால், மிக முக்கியம் வாய்ந்த 60வது கூட்ட தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ளது. சுருக்கமாக கூறுவதனால், அவ்வேளையில் சிறிலங்கா மீதான தீர்மானத்தை ஐ.நா.ம.உ.ச.யில் தொடர்ந்து என்ன செய்வது? வேறு ஓர் தீர்மானத்தை புதிய விடயங்களை இணைத்து கொண்டு வருவதா? அல்லது இந்த தீர்மானத்தையே நீடிப்பதா? அல்லது சிறிலங்கா மீதான தீாமானத்திற்கு இத்துடன் ‘முழுக்கு போடுவதா’ போன்ற விடயங்கள் நடைபெறும்.
ஆகையால், உலக தமிழர்கள் இவ் விடயத்தில் வருமுன் காப்போனாக செயற்திட்டங்களை இப்பொழுதே திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சரித்திர தவறாக அமையும்!
ஐ.நா.ம.உ.ச.யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அவ்வேளைகளில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் புள்ளி விபரங்கள் பின்வருமாறு :
2009 2012 2013 2014 2015 2017 2019 2021 2022 2024
22* 15 13 12 (வாக்களிப்பு இல்லை) 11 07 (வாக்களிப்புஇல்லை)
*2009ம் ஆண்டு தீர்மானம் என்பது, 2009ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி, இந்தியாவின் துணையுடன், சிறிலங்காவிற்கு சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிலங்காவில் நடந்து முடிந்த முள்ளீவாய்காலிற்கு விசாரணை நடத்தப்படும் என்ற பொய் வாக்குறுதிகளை கொடுத்து, இவ் தீர்மானத்தை 22 நாடுகளின் உதவியுடன் நிறைவேற்றியிருந்தார்கள். ஆனால் மிகுதி 25 நாடுகள் சிறிலங்கவை எதிர்த்து வாக்களித்தும், நாடுநிலையும் வகிதத்தார்கள் என்பதே உண்மை.
எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை சபையின் 60வது கூட்டத் தொடரில், சிறிலங்கா மீதான சர்வதேச சுதந்திர விசாரணக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், உலக தமிழர்கள் யாவரும், ஐ.நா. மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு காலம் கடத்தாது, இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும். இவை பற்றி எனது கடந்த கட்டுரைகளில் விளங்கப்படுத்தியுள்ளேன்.
அங்கத்துவ நாடுகள்
ஐ.நா.ம..சபையின் 2025ம் ஆண்டு முதல் பிராந்திய ரீதியான அங்கத்துவ நாடுகள் பின்வருமாறு :
ஆபிரிக்க நாடுகள் (13) – அல்ஜீரியா, பெனின், புருண்டி, கோட்டி ஐவோயர், கொங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, காம்பியா, கானா, கென்யா, மலாவி, மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, சூடான்.
ஆசிய-பசிபிக் நாடுகள் (13) – வங்காளதேசம், சீனா, சைப்ரஸ், இந்தோனேசியா, ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மாலத்தீவு, மார்ஷல் தீவு, கத்தார், (வட) கொரியா குடியரசு (தென் கொரியா) , தாய்லாந்து, வியட்நாம் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் (8) – பொலிவிய, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டொமினிகன் குடியரசு, மெக்சிகோ.
மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள் (7) – பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் (6) – அல்பேனியா, பல்கேரியா, செசியா, ஜார்ஜியா, வட மாசிடோனியா, ருமேனியா.
ஐ.நா.ம..ச.யில் அங்கத்துவம் வகிக்கும் நாடு விரும்பினால், மீண்டும் ஒரு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை மட்டுமே அங்கத்துவம் வகிக்க முடியும். இதற்கு அவர்கள் ஐ.நா.பொதுச் சபையின் தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி கொள்ள வேண்டும்.
கீழே கூறப்படும் நாடுகளான – அல்ஜீரியா, மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, சூடான், வங்காளதேசம், கிர்கிஸ்தான், மாலத்தீவு, வியட்நாம்,சிலி, கோஸ்டாரிகா, பெல்ஜியம், ஜெர்மனி, ஜார்ஜியா, ருமேனியா ஆகிய நாடுகளின் அங்கத்துவம், 2025ம் ஆண்டில் முடிவு பெறுவதனால், இவ் நாடுகள் சிலவேளைகளில் மீண்டும் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்படலாம் அல்லது அவர்களது வெற்றிடத்தை, அவர்களது பிராந்தியத்தில் உள்ள வேறு நாடுகள் உறுப்புரிமை பெறலாம் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் வழமை.
சர்வதேச ரீதியான பரப்புரை
கடந்த மூன்று தாசப்தங்களுக்கு மேலாக சிறிலங்கா விடயத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டவன் என்ற முறையிலும், மனுக்கள், அறிக்கைகளை வெளியிட்டதுடன், பல முக்கிய புள்ளிகள், நிபுணர்கள், ராஜதந்திரிகளை சந்தித்து உரையாடியவன் என்ற முறையில் கூறுகிறேன் – 60வது கூட்டத் தொடரில் ஒரு கண்டனப் பிரேரணை சிறிலங்கா மீது மேற்கொள்ளப்பட வேண்டுமானால், நாம் முதலில் சரித்திரம், அரசியல், சிறிலங்காவின்
கபடமான ராஜதந்திரங்களை, சர்வதேச ரீதியாக பரப்புரை செய்ய வேண்டும்.
இல்லையேல் மாறி மாறி வரும் – புதிய அரசாங்கம், புதிய ஜனதிபதிகளிற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனும் சர்வதேசத்தின் படலாமும் நியாயப்படுத்தலும் தொடரும்.
தமிழர்களை பொறுத்த வரையில், இலங்கைதீவை ‘இராமர் ஆண்டலென்னா, இராவணன் ஆண்டலென்னா?” என்பது தான் யாதார்த்தம். இலங்கைதீவிவை, சேனநாயக்கள் ஆண்டலென்ன; ஜே.ஆர். / பிரேமதாசா ஆண்டலென்ன; பண்டராநயக்கா / சந்திரிக்க ஆண்டலென்ன; மகிந்த / கோத்தபாய ஆண்டலென்ன; ரணில் / சிறிசேன ஆண்டலென்ன; அனுரா திசநாயக்கா ஆண்டலென்ன, தமிழர்களின் அரசியல் தீர்விற்கும், தமிழ் மக்களின் அவலங்களுக்கும் ஒரே ஒரு பதில் தான்!
ஆனால் சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம் போன்றவை, அன்றிலிருந்து இன்றுவரை, சில ‘வைக்கல்பட்டடை தமிழர்களின்’ உதவியுடன், வடக்கு கிழக்கில் சிறப்பாக முன்னேறியுள்ளது, முன்னேறுகிறது, முன்னேறும்.
இன்றுவரை பதவிக்கு வந்துள்ள புதிய ஜனதிபதியும், புதிய அரசாங்கமும். வடக்கு கிழக்கை தாயாகமாக கொண்ட தமிழர்களது, ஏழு தசாப்தங்களா நிலவும் அரசியல் தீர்வு பற்றி மௌனம் சாதிப்பதை, இவர்களிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் உணர வேண்டும். (முடிவு)
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
![]()