ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அரசு இணங்க மறுத்தால் புதிய தீர்மானம் வரும்; சுமந்திரனிடம் பிரிட்டன் தூதர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்தில் எந்தெந்த விடயங்களுக்கு புதிய ஆட்சியாளர்கள் இணங்குவார்கள் என்பது தொடர்பில் பிரித்தானியா இலங்கை அரசுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறது என தெரிவித்திருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அண்ட்ரூ பட்ரிக், ஒருவேளை, அவர்கள் (இலங்கை அரசு) ஒரு இணக்கத்துக்கு வராவிட்டால் புதியதொரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்திருந்தார்.இந்த சந்திப்பின் போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், வரவு – செலவுத் திட்ட யோசனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடியிருந்தோம். குறிப்பாக அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத்திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு சில நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.அதுவும் யாழ்.நூலகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை ஒரு அடையாளமாக நாங்கள் வரவேற்கின்றோம் என்று தூதுவரிடம் எடுத்துக்கூறினோம்.
ஆனால், பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது தமிழ் மக்களை பொறுத்தவரை ஏமாற்றத்துக்குரியது.காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதேபோல்,மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக இருந்தால் அதற்கு நிதி அத்தியாவசியமாகும்.ஆனால் இதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே இந்த வரவு செலவு திட்டத்தை பார்த்தால் இப்போதைக்கு மக்களுடைய காணிகள் எதுவும் விடுவிக்கப்படாது என்பதும் தெளிவாகிறது என்பதையும் தூதுவரிடம் எடுத்துக் கூறியிருந்தோம்.
அதேபோல்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், அடுத்தகட்டம் எவ்வாறு நகரப்போகிறது என்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் தூதுவரிடம் நான் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு பதிலளித்த தூதுவர், அது தொடர்பில் பிரித்தானியா இலங்கை அரசுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் (இலங்கை அரசு) குறித்த தீர்மானத்தில் எந்தெந்த விடயங்களுக்கு இணங்குவார்கள் என்பது தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். அவ்வாறு ஒரு இணக்கத்துக்கு ஆட்சியாளர்கள் வருவார்களேயானால் 2015 இல் கொண்டுவந்ததை போன்று ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இலங்கை அரசாங்கம் ஒரு இணக்கத்துக்கு வராவிட்டால் புதியதொரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றவேண்டியிருக்கும் என்றும் அதற்கான முயற்சிகளையும் பிரித்தானியா செய்துவருவதாகவும் தூதுவர் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.
![]()