கட்டுரைகள்

தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ள சவால்களை வெற்றி கொள்ளல் சாத்தியமா?… சின்னத்தம்பி குருபரன்

கடந்த 100 வருடங்களுக்கு மேலாக முதலாளித்துவ மேல்தட்டு வர்க்கத்தினரின் கைப்பிடிக்குள் அகப்பட்டுக் கிடந்த நாட்டின் ஆட்சி அரசியல் அதிகாரம் சோசலிச இடதுசாரிகளின் கைக்கு மாறியிருப்பது முதலாளித்துவ சித்தாந்தத்தை நேசிக்கின்ற சகலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றன. இதேபோலவே இந்தியா அமெரிக்க உட்பட சோசலிச இடதுசாரிச் சித்தாந்தத்தை வெறுக்கின்ற நாடுகளுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ‘எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல்’ இலங்கைக்கான சீனத் தூதுவரின் செயற்பாடுகளும் அமைந்து கொண்டிருக்கிறது.

நீதி, நிர்வாகத்தையும் சட்டத்தையும் கேள்விக் குறியாக்கி இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் செய்து பொது நிதியையும் சொத்துக்களையும் கொள்ளையடித்து ஏப்பம் விட்டவர்களுக்குத் தேசிய மக்கள் சக்தி அரசு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகின்றது. ‘பழம் தின்று கொட்டை போட்ட’ அரசியல்வாதிகள் அரசின் உறுத்தல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எத்தகையவர்களோடும் கூட்டுச் சேர்வார்கள் என்பதிலும் ஐயமில்லை. அதனையே இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

முதலாளித்துவ ஏகாதிபத்திய, நபகாலணித்துவ பூர்சுவா அரசியல் சித்தாந்தாந்தம் உலகில் இடதுசாரி சோசலிச சித்தாந்தத்தை அங்கீகரிப்பதில்லை. உலகின் பல பாகங்களில் அதனைச் சீர்குலைத்து வீழ்த்துவதற்கான முயற்சிகள் யுத்தங்கள், போராட்டங்கள் ஆகியன நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பொதுத் தேர்தலின் மூலம் மக்கள் இடதுசாரிகளிடம் கையளித்திருக்கும் அரசை வீழ்த்துவதற்கான பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஏட்டிக்குப் போட்யொகப் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. சர்வதேச, பூகோள அரசியல், பிராந்திய பாதுகாப்பு, நவகாலணித்துவம் ஆகியவற்றை இலங்கைக்கூடாக உறுதிபடுத்திக் கொள்வதற்காகத் தத்தமது நாடுகளின் இராச தந்திரிகள் ஊடாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மேற்குறித்த மூன்று நாடுகளின் இராச தந்திரிகள் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு வந்து இராசதந்திர சந்திப்புக்களை ஏற்படுத்துவதில் இருந்து ஓரளவு ஊகிக்க முடிகின்றது.

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரினதும் உயர்ஸ்தானிகரினதும் சந்திப்புக்கள் ரனில் விக்கிரமசிங்காவினயும் சஜித் பிரேமதாசவினையும் ஒன்றிணைய வைப்பதற்கான சந்திப்புக்களாகவே அமைந்திருந்தன. தேசிய மக்கள் சக்தியின் வெற்றி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரணதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச, ரனில் விக்கிரமசிங்க ஆகியேரை நிலைகுலைய வைத்திருக்கின்றது. அவர்கள் எல்லோரும் ஆட்சியை வீழ்த்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நீண்டகாலம் நீடித்தால் அது தமது கட்சிகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி விடுமோ என்ற அச்சமும் பலருக்கு இருக்கிறது. அதனால் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கய மக்கள் சக்தியினதும் மூத்த உறுப்பினர்களில் பலர் ரனில், சஜித் இருவரையும் இணைப்பதில் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றனர். அத்தோடு ஆட்சி நீடித்தால் ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட பலர் சட்டத்தினால் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன. அதனால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபடலாம் என்ற ஊகமும் பலரிடம் உள்ளன.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் அரசுத் தலைவர் முதல் சாதாரண அலுவலர் வரை மூலை முடுக்கெல்லாம் மலிந்து கிடந்தன. அரசின் நிர்வாக இயந்திரத்துக்குள் முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், அரச நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனம்பெற்ற அதிகாரிகளில் பலர் இப்போதும் பதவிகளில் இருக்கின்றனர். நிறைவேற்றுத் தரத்திலுள்ள உயர் அதிகாரிகள் தொடக்கம் சாதாரண ஊழியர் வரை இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் செய்து பழக்கப்பட்வர்கள். இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகமற்ற தூய்மையான ஆட்சி அதிகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய அரசின் திட்டத்தை எங்கும் எதிலும் ஊழல் செய்த பெருச்சாளிகள் அத்திட்டத்தை முன்னெடுக்க உதவுவார்களா?.

நாட்டின் அபவிருத்திக்காகச் சர்வதேச நிதி நிறுவனங்கள், வெளி நாடுகள் வழங்கிய உதவிகள், கடன்கள், நன்கொடைகள் ஆகியவற்றினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவு செய்யப்படாது, நிதியைப் பங்குபோட்டு ஏப்பம்விட்ட அதிகாரிகளில் பெரும்பாலானோர் இப்போதும் அரச இயந்திர முறைமைக்குள் இருக்கின்றனர்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி அப்போதைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரத்தியேகச் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்களில் பலர் பங்கு போட்ட பின்னர் 70 வீதத்துக்கு உட்பட்ட நிதியே திட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

விலை மனுக் கோரல், கொந்துராத்து வேலைகளை வழங்கல் என்பவற்றிலும் அவற்றுக்கான கொடுப்பனவுப் பற்றுச் சீட்டுக்கள், ஆணைப் பத்திரங்கள் தயாரித்தல், திணைக்களத் தலைவரினால் கொடுப்பனவுக்கான அனுமதி வழங்கல், தாமதமின்றி வழங்கல், பொருள் கொள்வனவு என்பவற்றுக்காகப் பங்குகள் பெறப்பட்டன. பல தினைக்களத் தலைவர்கள் கொடுப்பனவுக்கான கோவையில் ஒப்பமிடுவதற்குத் தமக்குப் பங்கில்லாத பட்சத்தில் கொடுப்பனவை நிறுத்தி வைத்த சந்தர்ப்பங்களுமுண்டு.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சிச் சபைகளுக்குப் பெருமளவு நிதி வந்து சேர்ந்துவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்நிதி முடிவடையும்வரை குசிதான்.
பல அலுவலகங்களில் இலஞ்சம் கொடுக்காமல் எத்தகைய வேலையும் செய்ய முடியாத நிலையும் இருந்தது. இ்டமாற்றங்கள், பதவி உயர்வுகள், க்யமனங்கள், சம்பள நிலுவை வழங்கல், இடருதவிக் கடன் வழங்கல் என்பவற்றுக்கெல்லாம் பல அரச நிறுவனங்களில் இலஞ்சம் பெறப்பட்டிருக்கின்றன. இத்தகையவர்களில் பெரும்பாலானோர் முறைமைக்குள் இன்றும் பணியாற்றுகின்றனர்.

தாமுண்டு தம்வேலையுண்டு என நாடும் நாட்டு மக்களதும் நலன்கருதி அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற பல அதிகாரிகளும் இருக்கின்றார்கள். கல்வி கற்றுப் பட்டம் பதவிகள், வெளிநாட்டில் பயிற்சிகள், சுற்றுப் பயணங்கள் எல்லமே மக்களின் வரிப்பணத்தில் நிகழ்ந்தவை. இத்தனை வாய்ப்பு வசதிகள், வரப்பிரசாதங்களைப் பெறுவதற்கு அவர்கள்தான் முயற்சி செய்தார்கள். இவற்றைப் பலர் இலஞ்சம் கொடுத்தும், மோசடி செய்தும் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்களும் பல உள்ளன.

அரசு எந்த ஒரு நியமனத்தையும் இவர்கள் முயற்சி செய்யாமல் தாமாகவே அவர்கள் வீட்டுக்குச் சென்று வழங்கியதில்லை. அவர்களே பணம் செலுத்தி விண்ணப்பித்தார்கள். பாட்டிப் பரீட்சை எழுதினார்கள். நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டார்கள். அதில் சித்தியடைந்து நியமனம் பெற்ற பின்னர் பல அதிகாரிகளுக்குக் கொம்பு முளைத்துபோல் நடந்து கொண்டார்கள்.

அவர்களில் பலர் இன்றும் பணியாற்றுகின்றனர். பல அதிகாரிகள் ஆரேக்கியமான ஆளிடைத் தொடர்பு, தொடர்பாடல் திறன் முகாமைத்துவத் திறன், பணியை நிறைவேற்றுவதற்குச் சிறந்த அணி உருவாக்கம், நம்பிக்கை உருவாக்கம், திட்டமிடல, தீர்மானமெடுத்தல் திறன் இல்லாமல் தமது மேலதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அவர்களின் கைப்பிடிகளையும் கைன்குள் வைத்துக்கொண்டு பல அதிகாரிகள் தமக்குக் கீழுள்ள பணியாளர்கள் பலரை அடிமைகளாக நடத்தி இருக்கின்றனர். தற்பொழுதும் ஒரு சிலர் அவ்வாறே நடந்து கொண்டிருக்கின்றனர். இதனை சுதந்திரமாக விசாரணை செய்வதற்கு ஒருவராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தினையும், நீதி, நிர்வாகம், தாபனக் கோவை, நிதிப்பிரமாணங்கள், சுற்று நிருபங்கள் யாவையும் ஏற்றுக் கொண்டு அரசுக்கும் மக்களுக்கும் சேவை செய்வேன் எனச் சத்தியப்பிரமாணம் செய்து கொணடு மக்களுக்கும் அரசுக்கும் நியாயமாகப் பணியாற்றாமல் தமது சுயநலத்துக்காகப் பணியாற்றும் அதிகாரிகள் பேருக்காகப் பதவியில் இருந்துதான் என்ன பயன். இத்தகைய அதிகாரிகளை மக்கள் 2022 அரகலய போல் போராட்டம் செய்து உரியபடி பதவி இறக்கி வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய அதிகாரிகள் திருந்தாமல் தொடர்ந்தும் பதவியில் இருப்பது அரசுக்குச் சவாலாகத்தான் இருக்கப் போகின்றது.
கடந்த 76 வருடங்களாக பச்சைக் கட்சியும் நீலக் கட்சியுமே நாட்டை ஆட்சி செய்தன. இடையில் காட்சியும் கோலங்களும் மாறியதுபோல் மொட்டுக் கட்சி (சிவப்பு) நான்கு வருடங்கள் (2020 – 2024) ஆட்சி செய்து நாட்டில் அரசியல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின.

அதுவும் அடிப்படையில் நீலக் கட்சியில் இருந்து பிரிந்துவந்த கட்சிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கடசிகளின் ஊழல், மொசடி, இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்குப் பங்காளிகளாக இருந்து பழக்கப்பட்ட அதிகாரிகள் தற்போதைய அரசின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக மாறுவார்களா என்பதும் கேள்விக் குறியே. ‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பது பொல் அவர்களாகத் திருந்த வேண்டும். அல்லது திருத்த வெண்டும். திருத்தப்படாவிட்டால் தமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது ‘வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிய’ விக்கிரமாதித்தன் கதைபோல் ஏறி வசதியாக அமர்ந்து விட்டதைத் தொடங்கி விடுவார்கள்.

நாட்டின் ஆட்சி அதிகாரம் ஊழல், மோசடி, இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம் அற்றவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. சட்டவாக்கத்துறை சிறப்பாக உள்ளது. அதேபோல் அமுலாக்கத் துறைகளான நீதித் துறையும் நிர்வாகத் துறையும் மாறும்போதுதான் முழுமையான Clean Sri Lankaவை உருவாக்க முடியும். இது ஒரு நீண்ட பயணமாக இருக்கப் போகின்றது.

பருவகால மாற்றங்களின்போதும் அனர்தங்களின்போதும் அனர்த்த முகாதைதுவத் திணைக்களம், வானிலை அவதானிப்புத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கட்டட நிர்மானிப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அரசின் கட்டளை. அதைத்தான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபமும் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் இத்திணைக்களங்கள் நான்கும் அவ்வாறு இயங்குவதில்லை.
வளிமண்டலத் திணைக்களம் வானிலையை அவதானித்துத் ‘தாழமுக்கம் நிலவுவதனால் காற்றுச் சுழற்சி வேகம் அதிகரழத்து அடுத்த சில நாட்களுக்கு இத்தனை மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கனமழை பெய்யலாம்’ எனக் எதிர்வு கூறினால் அதனைக் கருத்தில் கொண்டு நீர்பாசனப் பொறியியலாளர் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.

இத்தனை மிலிலிமீற்றர் கனமழை பெய்தால் நீரேந்து பிரதேசத்தில் எத்தனை கன அடி நீர்மட்டம் உயரும். காட்டு வெள்ளம் வருவதனால எத்தனை கன அஎ நிர்மட்டம் உயரலாம் என்பதைக் கடந்த காலத் தரவுகள் தகவல்களை அடிப்படையாக் கொண்டு, கணிப்பிட்டு ஒரு ஆபத்து (Risk) ஏற்படுவதற்து முன்பாக எத்தனை வான் கதவுகளை எவ்வளவு திறந்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து, அந்த அளவில் வான் கதவுகளைத் திறப்பதற்குத் தயாராக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு திறப்பதை விடுத்து ஒரே நெரத்தில் குளத்தின் பல வான் கதவுகளை ஒரு அடி உயரத்திற்கு மேலும் திறந்து விட்டதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணஙகளில் பல்லாயிரக் கணக்கான ஊக்கர் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டன். இந்தச் சேதங்கள் யாவும் அரசையும் விவசாயிகளையும் மக்களையும் பாதித்தன. இந்தச் சேத்துக்காக நட்டஈட்டினைஅரசு விவசாயிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இது முன்னைய ஆட்சிக் காலங்களில் பழகிய பழக்கம் விட்டுவி அவர்களால் முடியவில்லை.

துறைமுகத்தில் இருந்து கொள்கலங்களைத் தாமதமின்றி விடுவிப்பதற்காகச் சம்பந்தப்பட்டவர்களோடு ஜனாதிபதி, துறைசார்ந்த அமைச்சர்கள் எத்தனை தடவை பேசியும் தீர்வுகாண முடியவில்லை. அதேபோல் அரிசி ஆலை உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகள் எல்லோருடனும் பல தடவை பேசியும் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை நீக்குகதற்கும் விலை குறைப்புக்கும் தீர்வுகாண முடியவில்லை. இவ்வாறுதான் நாட்டில் பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 09-02-2025 அன்று நாடு பூராகவும் ஏற்பட்ட மின்சாரத்தடை, அதனைத் தொடர்ந்து புத்தளம் நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் அதிசக்திவாய்ந்த மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் சமகாலத்தில் பழுதடைந்தமையினால் நான்கு நாட்கள் மின்வெட்டுக்களும் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக முறையான விசாரணை செய்யப்பட்டுக் குற்றம் நிருபிக்கப்பட்டால் தயவு தாட்சண்யமின்றித் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் தீருந்துவார்கள். இவைகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் எத்தகைய இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதென்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் ஆண்டு அனுபவித்த முதலாளித்துவ வலதுசாரி அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகப் பல முன்னெடுப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நபர்கள், கட்சிகள் கூட்டுச் சேர்வதும், அதற்கான சந்திப்புக்களை முன்னெடுப்பதும் அறிக்கை விடுவதுமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல சந்திப்புக்கள் தோல்விகளிலும் முடிவடைந்திருக்கின்றன. ஆனாலும் இந்த மேல்தட்டு அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கப்போவதுமில்லை என்பதைப் பரிந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசு காய்களை நகர்த்த வேண்டும். இந்த வலதுசாரிகள்போல் ஆட்சியாளர்களும் கொக்கரித்துக் கொண்டிருந்தால் பல விடயங்கள் அவர்களுக்குச் சாதகமானதாக மாறிவிடும்.

இப்பொது நாடாளுமன்றம் கூச்சல்கள், கொக்கரிப்புக்கள் குறைந்து சிறிது அமைதியாக இருக்கிறது. இந்த அமைதி நீடிக்க வேண்டும். மிகக் கவனமாகத் திட்டமிட்டுச் சவால்களை முறியடிக்கும் வகையில் அவற்றை வெற்றி கொண்டு நோக்கத்தை அடைவதற்காக ஆட்சியை முன்கொண்டு நகர்த்துதல் வேண்டும். குற்றம் கண்டு குறை கூறும் ஒரு வர்க்கம் இருப்பது வழமையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *