உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்பென கோதாவை விரைவில் கைது செய்யத் திட்டம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் புலனாய்வு அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாகவும், கோதாபய ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டு வருவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் இராணுவ புலனாய்வு பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டங்கள் அரசாங்கத்திடம் உள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் உண்மையிலேயே இந்த தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த அரசாங்கத்திற்குள் இருப்பதால் பிரதான சூத்திரதாரியாக எவரையாவது காட்டி உண்மையான பொறுப்பாளியை காப்பாற்றுவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இலங்கை புலனாய்வு அதிகாரிகளே நடத்தினர் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று இமாம் குழு கூறியுள்ளது. நாங்கள் இது தொடர்பான தகவல்களை வெளியிட்ட பின்னர் தமது பொய்கள் சிக்கிக் கொண்டதால், புதிய பொய்களை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டது. மீண்டும் பொய்யை உருவாக்க முடியாமையினால் ‘சனல் 4’ பொய்களை அடிப்படையாகக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இலங்கை புலனாய்வு அதிகாரிகளே நடத்தியுள்ளனர். கோதாபய ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டு வருவதற்காக இதனை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்போதைய இராணுவ புலனாய்வு பிரதானியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவையும் கைது செய்யும் திட்டம் அரசாங்கத்திற்குள் உள்ளது. அதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புலனாய்வு துறையினரே நடத்தியுள்ளனர் என்ற மாயையை மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அசாத் மெளலானா என்பவரே ‘சனல் 4’ ஊடகத்தில் பொய்களை கூறியுள்ளார். அவர்கள் தஞ்சம் கோரி சுவிற்ஸர்லாந்து சென்றுள்ளார். இப்போது அவர் வேறு பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளார். அவரின் இரண்டாவது மனைவி, அவர் தன்னை ஏமாற்றியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இவ்வாறான நிலைமையில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்ய வேண்டுமாயின் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள முடியாது. அவர் இங்கே வந்தால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டியுள்ளது. வெளிநாட்டு பயணத் தடை இருப்பதாலேயே அவர் இங்கு வந்தால் கைதாவார். இதனால் அவரின் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கச் செய்வதற்காக முயற்சிக்கப்பட்டுள்ளது. அப்போதே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாது பொலிஸாரின் முன்னால் நிறுத்தி வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முடியுமென்று நினைக்கின்றனர்.
எவ்வாறாயினும் அசாத் மௌலானவுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அசாத் மௌலானவுக்கு எதிராக காசோலை மோசடி, தெஹிவளையில் வீடொன்று கொள்வனவு செய்யப்பட்டமைக்கான நிதி தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. இதனால் அவர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் அவரிடம் இது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி அவர் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா? உள்ளூராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயத்தை திரையிட அரசாங்கம் தயாராகின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக பேச்சாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆகியோர் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.
![]()