‘ அது ஒரு நிலாக்காலம் ‘ புதினத்தை வரவாக்கிய மகாலிங்கம் பத்மநாபன் விடைபெற்றார்!..,. முருகபூபதி.

அஞ்சலிக்குறிப்பு :![]()
‘ அது ஒரு நிலாக்காலம் ‘ புதினத்தை வரவாக்கிய
மகாலிங்கம் பத்மநாபன் விடைபெற்றார் !
முருகபூபதி.![]()
“ அதென்ன , ஒவ்வொரு டிசம்பர் மாதமும் எமக்கு நன்கு தெரிந்தவர்கள் விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்களே..? “ என்று சிட்னியிலிருக்கும் ஒரு எழுத்தாளர் நண்பரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், டிசம்பர் மாதம்தான் யேசுகிறீஸ்து பிறந்தார். அவ்வாறு பிறந்தவர், இக்காலப்பகுதியில் அமரத்துவமானவர்களை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார் போலும் ! “ என்றார்.
“ வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால், இந்தப்பூமியில் இடம் ஏது? “ என்று கவியரசு கண்ணதாசனும் எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவ்வாறு எழுதியவரும், அதனைப்பாடியவரும், இசையமைத்தவரும் , அபிநயத்தோடு நடித்த – நடிகர் திலகமும்தான் போய்விட்டார்கள்.
இதனை வாசிப்பவர்கள், நான் ஏதோ சுடலை ஞானம் பேசுவதாக கருதக்கூடும்.
எனக்குத் தெரிந்த பலருக்கு டிசம்பர் மாதம் பிறந்த தினம் வருவதுபோன்று, மேலும் சிலர் இந்த டிசம்பர் மாதம் அடுத்தடுத்து விடைபெறுகின்றபோது மேற்சொன்ன வரிகளை நினைத்துப்பார்க்கின்றேன்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, இலங்கை சென்றபோது நான் சந்தித்த சில கலை, இலக்கிய ஆளுமைகளையும் இந்த 2024 ஆம் ஆண்டு இழந்துவிட்டேன்.
இந்த 2024 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியிலும் அடுத்தடுத்து சிலர் விடைபெற்றுவிட்டனர்.
அந்த வரிசையில் கடந்த ஆண்டு கிளிநொச்சியில் எழுத்தாளர் சிவராசா கருணாகரன் எனக்காக ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டு நீண்ட நேரம் என்னுடன் உரையாடிய இலக்கியவாதியும், கல்விமானும் ஓய்வுபெற்ற அதிபருமான எழுத்தாளர் மகாலிங்கம் பத்மநாதன் அவர்களும் கடந்த 27 ஆம் திகதி மறைந்துவிட்டார்.![]()
மகாலிங்கம் – பொன்னம்மா தம்பதியருக்கு 1948 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் பத்மநாபன் அவர்கள், தனது 76 ஆவது வயதில் விடைபெற்றுவிட்டார்.
அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் வதியும் இலக்கிய சகோதரி திருமதி தாமரைச்செல்வியின் சகோதரியின் கணவர்தான் பத்மநாபன்.
தாமரைச்செல்வியை தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவிட்டு, இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.
ஆசிரியராக, அதிபராகவும் இயங்கியவாறு, கலை, இலக்கியத்துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தவரை நாம் தற்போது இழந்திருக்கின்றோம்.
அவர் சாரணர் இயக்கத்திலும், ROTARACT CLUB இலும் ஈடுபாடு கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர் என்பதையும் அறிகின்றோம்.
அவரது இரத்த உறவு குடும்பத்தினர் சிலரும் கலை, இலக்கிய ஊடகத்துறையில் ஈடுபாடு மிக்கவர்கள்.
மகாலிங்கம் பத்மநாதன் அவர்கள் எழுதி குமரபுரம், பரந்தன். சுப்ரம் பிரசுராலயத்தினால் வெளியிடப்பட்ட அந்த அழகிய நிலாக்காலம் நாவல் குறித்து, ஏற்கனவே எனது படித்தோம் சொல்கின்றோம் தொடரில் எழுதியிருக்கின்றேன்.
இறுதியாக அவரை நான் சந்தித்தவேளையில், தனது பரிச்சியம் இல்லாமலேயே, தனது நூல் பற்றி நான் எழுதியதை நெகிழ்ச்சியோடு பாராட்டி, நன்றி தெரிவித்தார்.
அவரைச்சந்தித்து ஒரு வருடம் நிறைவாகியிருக்கும் இத்தருணத்தில் அவர் பற்றிய நினைவுகளை இந்த அஞ்சலிக்குறிப்புகளின் ஊடாக நனவிடை தோய்கின்றேன்.
அவரது அது ஒரு நிலாக்காலம் நாவல் குறித்த எனது வாசிப்பு அனுபவத்தை இங்கே மீண்டும் பதிவேற்றுகின்றேன்.
ருஷ்ய இலக்கிய மேதைகள் மாக்ஸிம் கோர்க்கி எழுதிய மூன்று தலைமுறைகள், ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி எழுதிய கரமசோவ் சகோதரர்கள் முதலான நாவல்களை படித்திருப்பீர்கள். மேற்கு ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் கதையை பேசிய புதினங்கள் அவை.
எமது தாயகத்தில் வன்னி பெருநிலப்பரப்பு, விவசாயத்திலும் அரசியலிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காடாக
இருந்த அந்தப் பிரதேசத்தை வளம்கொழிக்கும் மண்ணாக மாற்றியவர்களின் கதையை அறிய விரும்புகிறீர்களா…?![]()
440 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப் படிக்கும்போது, எம்மை அறியாமலேயே நாம் அந்த அழகிய நிலாக்காலத்தில் பயணிக்கின்றோம். வாசகர்களை கைப்பிடித்து உடன் அழைத்துச்செல்லும் தன்மையில் மகாலிங்கம் பத்மநாபன் எழுதியிருக்கிறார்.
கடந்து செல்லும் கதைக்குப் பொருத்தமான ஓவியங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. நூலின் இறுதிப்பக்கங்களில் சில ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதனால், இந்தப்புதினம் வெறும் கற்பனை அல்ல என்ற தீர்மானத்துடன் வாசிக்கலாம்.
கனரக வாகனங்கள் ஓடும் அகலமான விரைவு வீதிகளில் நாம் பயணிக்கும்போது, அவை ஒரு காலத்தில் யாரோ முகம் தெரியாத – பெயர் தெரியாத மூதாதையர்களினால் செப்பனிடப்பட்ட ஒற்றையடிப் பாதைதான் என்பதை நம்மில் எத்தனைபேர் நினைத்துப் பார்க்கின்றோம்.
வெய்யில் மழை குளிர் கோடை பார்க்காமல் இரவு பகலாக அம்முன்னோர்கள் செப்பனிட்ட பதைகளில்தான் நாம் இன்று உல்லாசமாக பயணிக்கின்றோம்.
அது ஒரு அழகிய நிலாக்காலம் புதினத்தை படித்தபோது காடு மண்டிக்கிடந்த வன்னி பெருநிலப்பரப்பினை பசுமை பூக்கும் மண்ணாக மாற்றி, உழவுத் தொழிலின் மூலம் மக்களின் பசியை போக்கிய அம்மக்களின் கடும் உழைப்பு தெரியவருகிறது.
அவர்கள் காலத்தில் மின்சாரம் இல்லை. சீரான வீதிகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பாடசாலைகளே இல்லை. இவ்வாறு இல்லை எனத் தொடர்ந்தவற்றை இல்லாமல் ஆக்கிய பெருந்தகைகள் பற்றிய கதைதான் இந்தப்புதினம். மூன்று தலைமுறைகளின் வாழ்வுக்கோலங்களை இந்தப் புதினம் பேசுகிறது.![]()
தம்பையர் – விசாலாட்சி – ஆறுமுகத்தார் – கணபதி – மீனாட்சி என கதையின் முக்கிய மாந்தர்களின் அன்றாட வாழ்வுடன், வன்னிமண், எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை சித்திரிக்கிறார் மகாலிங்கம் பத்மநாபன்.
கனவுகள் சுமந்த காலங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளரும் வன்னியாச்சி என பேசப்படுபவருமான தாமரைச்செல்வி இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்லப்படும் அரிய பதிவு என்ற தலைப்பில் இந்நூலின் வரலாற்றுப்பின்புலத்தை பதிவுசெய்துள்ளார்.
நூலாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் ஆசிரியராகவும் திகழ்ந்தமையினால், ஒவ்வொரு அங்கத்தின் தொடக்கத்திலும் உள்நாட்டு மற்றும் உலக நாடுகளின் வரலாற்றுச்செய்திகளையும் பதிவுசெய்துள்ளார்.
முதலாவது அங்கம் இவ்வாறு தொடங்குகிறது:
“ ஒரு பிரதேசத்தை அல்லது ஒரு புதிய நாட்டை கண்டுபிடித்து முதலில் குடியேறி அபிவிருத்தி செய்து வாழ்பவர்கள் பயனியர் (Pioneer) என்று அழைக்கப்பட்டனர்.
“ Pioneer is a person who among the first to explore or settle a new country or area “ பயனியர்கள் நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்பவர்களாகவே இருந்தனர். “
வன்னியின் மூன்று கிராமங்களின் கதையை பேசும் இந்தப்புதினம், அங்கு வாழ்ந்த ஜீவராசிகள் பற்றியும் பேசுகிறது. மக்களுக்கும் அவற்றுக்குமிடையே வளரும் உறவும் – முரண்பாடும் – பகையும் கூட வாழ்க்கைக்கான போராட்டத்தின் அம்சங்கள்தான் என்பதை நூலாசிரியர் சொல்லாமல் சொல்கிறார்.
1900 ஆம் ஆண்டில் தொடங்கும் வன்னிமாந்தரின் கதை, 1982 ஆம் ஆண்டு வரையில் நீடிக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அங்கு நேர்ந்த அரசியல் – பொருளாதார – சமூக மாற்றங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் உணவு நாகரீகத்தையும், சிறு தெய்வ வழிபாடு தொடக்கம், ஆலயம் அமைத்து உற்சவம் நடத்தும் காலம் வரையில் மக்களின் மத நம்பிக்கைகள் பற்றியும் பேசுகின்றது.![]()
அத்துடன் அம்மக்களின் அன்றைய காதல், திருமணம், மறுமணம் பற்றியும் சொல்கின்றது.
போர்த்துக்கீஸர், ஒல்லாந்தர் , பிரித்தானியரின் வருகை அவர்களையடுத்து இலங்கை அரசியல்வாதிகளின் பிரவேசம் பற்றியெல்லாம் கதையோடு கதையாக செய்திகள் நகர்ந்து
கொண்டிருப்பதனால், வரலற்றுப்புதினம் ஒன்றை வாசிக்கும் அனுபவமும் ஏற்படுகிறது.
“ இப்படைப்புக்குள் பயணிக்கின்ற பொழுது ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் இத்தொடருக்குள் ஒன்றிப் போகின்றோம். எமது பழைய நினைவுகளை மீட்டு இக்கிராமத்துடன், கிராம மக்களுடன் உறவாடி நாமும் அவர்களின் பண்புகளைச் சுவைத்தோம் என்று பேருவகை கொள்ள வைக்கிறது. “ – என்று நூலாசிரியர் மகாலிங்கம் பத்மநாபனின் சமகால ஆசிரியரும் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் வானொலி ஊடகவியலாளருமான எட்வேர்ட் மரியதாஸ் சொல்லியிருக்கும் கூற்று மிகவும்
பொருத்தமானது.
இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது அமரர் மகாலிங்கம் பத்மநாபனின் நினைவுகளும், அவர் எமக்கு விட்டுச்சென்றுள்ள அது ஒரு நிலாக்காலம் புதினமுமும்தான்.
—-0— letchumananm@gmail.com
![]()
எனக்கு மகாலிங்கம் பத்மநாபனுடன் பரிச்சயமில்லை. எனினும் எம் இலக்கியத்தோப்பில் ஒரு விருட்சம் என்றவகையில் அவரது சாய்வு வருத்தந்தருகிறது. அஞ்சலிக்கிறேன்.
காலம் கரைக்கின்றவர்கள் வரிசையில் எனக்குப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் ஒரு காலகட்டத்தின் வாழ்க்கை முறையை பதிவு செய்து விட்டுப் போன ஒரு இலக்கிய கர்த்தாவை நாம் இழந்திருக்கின்றோம். அது பாரிய இழப்பாகவே நான் கருதுகிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்