இலக்கியச்சோலை
வன்னி மண் சுமந்த மேனியர்: மகாலிங்கம் பத்மநாபன் மறைவு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

மகாலிங்கம் பத்மநாபன் எழுதி, 2022 ஆவணி மாதம் வெளிவந்த அது ஒரு அழகிய நிலாக்காலம் நாவல் வன்னி மண்ணின் உயிர்ப்பான வரலாற்றை விவரிக்கும் படைப்பாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியப் பெருந்தகை மகாலிங்கம் பத்மநாபன் தான் நேசித்த மண்ணில் 27/12/24 அன்று விழி மூடினார்.
மண்வாசனை வீசும் அது ஒரு அழகிய நிலாக்காலம் புதினத்தை எழுதிய பத்மநாபன் மகாலிங்கம் 1948.11.24 இல் தென்மராட்சி மீசாலையில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை பரந்தன் அ.த.க. பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ்.கொட்டடி நமசிவாய வித்தியாசாலை மற்றும் இராமகிருஸ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்திலும் பயின்றார்.
மீசாலையில் பிறந்த இவர் பெரியபரந்தன் எனும் ஊரினை. வசிப்பிடமாகவும் கொண்டவர்.
1972 ல் மன்னார் இலகடிப்பிட்டி றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக பணி புரிந்தார். 1978ல் வசாவிளானிலுள்ள பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் பயின்று 1982ல் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் கடமை புரிந்தார்.
இதன் பின்னர் 1982ல் கிளி.மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், சாரணர் இயக்க பொறுப்பாசிரியராகவும் பணி புரிந்தார்.
இவர் கிளிநொச்சி தமிழ்சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகவும் உள்ளார். நாட்டுக்கூத்துப் போன்றவற்றை மாணவர்களுக்கு பயிற்றுவித்து மேடையேற்றி வந்தார்.
மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய “அது ஒரு அழகிய நிலாக்காலம்” வன்னியின் மூன்று கிராமங்களின் கதை தொகுப்பு நூலாக 2022இல் வெளியாகியது.
வணக்கம் இலண்டனில் தொடர்கதையாக வெளிவந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத் தொடர், நூலாக தொகுக்கப்பட்டு சுப்ரம் பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அது ஒரு அழகிய நிலாக்காலம் நூலைப் படிக்கப்போகும் ஒவ்வொருவரும் இக்கிராம மக்களின் வரலாற்றிலும், அவர்களின் வாழ்வியலிலும் எவற்றையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவாரோ அவற்றையெல்லாம் இந்நூலாசிரியர் மிகைப்படுத்தாமல் பதிவு செய்துள்ளார் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, மூத்த பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
இக்கிராமங்களில் இருந்து பிற்காலத்தில் வெளிக்கிளம்பியவர் களில் சிலர் இன்று தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கல்வி, பொருளாதாரம், அரசியல், எழுத்தியல், சமூகப்பணி என்ப வற்றால் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் தமது மூதாதையினர் எங்கிருந்து? எப்போது? எவ்வாறு? ஏன்? இக்கிராமங்களுக்கு வந்து குடியேறினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கும், அவர்களின் எதிர்காலச் சந்ததிக்கும் இந் நூல் சிறந்த பெட்டகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று மூத்த பேராசிரியர் புஸ்பரட்ணம் இந்நூலில் தெரிவித்துள்ளார்.
வன்னி மண்ணின் வரலாற்றை சுமந்த மேனியராக வாழ்ந்த பெருந்தகை மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார்.
![]()