“வினோதன் என்கிற இயற்கை காதலன்”… சிறுகதை – 98 … அண்டனூர் சுரா

கில்லியா, தில்லியா? இமைகள் சுருங்க உற்றுப் பார்த்தார் ஜெயந்திசண்முகம். கில்லி என்றே எழுதப்பட்டிருந்தது. புதுதில்லி என்பதற்கு தில்லி என்று எழுதியிருந்தால் போனால்போகிறதென்று ஒரு மதிப்பெண் கொடுக்கலாம். இவன் கில்லி என்றல்லவா எழுதியிருக்கிறான். தில்லிக்கும் கில்லிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. கில்லிக்கும் பக்கத்தில் சிவப்பு மையால் தவறு என்று குறியிடுவதைத் தவிர அவருக்கு வேறுவழி தெரியவில்லை.
ஜெயந்தி சண்முகம் சுந்தம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர். சராசரி உயரத்தை மிஞ்சிய சற்றே உயரம். நிரம்பித் ததும்பும் ஊருணி முகம். அவர் பாடம் நடத்த தொடங்கினால் மாணவர்கள் கண்கொத்திப் பாம்பாக கவனிப்பார்கள். சிரிக்க, கெலிக்க பாடம் நடத்துவார். கற்பித்தல் என்பது அவரைப் பொறுத்தவரைக்கும் தெய்வீகம். கற்பித்தலில் காட்டும் அதே ஆர்வத்தைத் தேர்வு நடத்துவதிலும் காட்டுவார். கற்பித்தலை விடவும் அலாதியான சுகம் தேர்வுத் தாளைத் திருத்துவதில் இருக்கிறது என்று நம்புகிறவர். அவரது இத்தனை ஆண்டுகால ஆசிரியர் அனுபவத்தில் இதை அவர் புரிந்து வைத்திருக்கிறார்.
மாணவர்கள் கேள்விக்கான பதில்களை என்பதில் தொடங்கி எனப்படும் என்பதில் முடிக்கிறவர்கள். எல்லா கேள்விகளுக்கான பதில்களையும் இதற்குள்ளாகவே அவர்கள் அடைப்பார்கள். சண்முகம் மாணவர்களிடம் எதிர்ப்பார்ப்பது இதுவல்ல. மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டதை அவர்களது சொந்த நடையில் அவர்களுக்கே உரித்தான மொழியில் எழுதவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறவர். இப்படியாக யாரேனும் ஒருத்தன் எழுதியிருக்க மாட்டானா, பரீட்சைத் தாளை விரித்து வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாகத் தேடுவார். அப்படியாகத் தேடுகையில்தான் ஒரு கேள்விக்கான பதில் புதுதில்லி என்பது தில்லியாகச் சுருங்கி கைகால் ஒடிந்து முத்து முத்தான எழுத்தால் கில்லி என்று எழுதப்பட்டிருந்தது.
“இது யாருடைய பேப்பராக இருக்கும்?” தேர்வு எண்ணை புரட்டிப் பார்த்து கணித்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. “ஆம், இது வினோதனுடையது.”
வினோதன் அரும்பு மீசை முளைத்து பள்ளி வயதை மீறியவனாக தோற்றமளிப்பவன். என்ஸைம்களின் அதீத சுரப்பால் வளர்ந்து முதுகு வளைந்துபோன பத்தாம் வகுப்பு மாணவன். அந்த வகுப்பில் தாட்டியான உடல்வாகு கொண்டவன். படிப்பில் அவன் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை என்றாலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுவது, அதற்குக் கூண்டு அமைப்பது, தண்ணீர்ப் பாய்ச்சுவது, புது ரகக் கன்றுகளை உருவாக்குவது,..இப்படியான வேலைகளில் கவனம் செலுத்துகிறவன். அவன் பள்ளிக்கு வருவது பெற்றோர்களின் வார்த்தைக் கொப்பளிப்புக்கு பயந்துதான். கடைசி பெஞ்சில் அமர்ந்துகொள்வான். ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகையில் ஆசிரியரைப் பார்ப்பான். அவனைப் பார்க்கையில் கீழே குனிந்துகொள்வான். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்தில் அவனைச் சுற்றிலும் மாணவர்கள் குழுமிக்கொள்வார்கள். எதாவது ஒரு திரைப்படத்தின் கதையை எடுத்துவைத்துக்கொண்டு அதைச் சொல்லி அத்தனை பேரையும் அவனது பக்கமாக இழுப்பான். எந்நேரமும் அவனது வாய் எதையேனும் அளந்துகொண்டிருக்கும். எந்த நடிகனுக்கென்றும் அவன் தீவிர ரசிகனில்லை. ஆயினும் ஒரு படம் திரையரங்குக்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஓடினால் அந்த நடிகரின் முடி, உடை அலங்காரங்கள் அவனிடம் ஒட்டிக்கொள்ளும்.
அவனது கழுத்தில் விதைக்கயிறு தொங்கிக்கிடக்கும். கறுப்புக் கயிற்றில் புளியங்கொட்டை, புங்கை, கொடுக்காப்புளி விதை, இப்படி ஏதேனும் விதைகளைக் கோர்த்து அதை மாலையாக கழுத்தில் மாட்டிக்கொள்வான். கயிற்றில் குஞ்சம்போல அந்த நேரத்து பிரபல நடிகரின் டாலரை தொங்கிக்கிடக்கும்.
பூச்சிப்பிடித்த கீரையைப் போல அவ்வளவாக கண்டுக்கொள்ளாமலிருந்த வினோதன் ஜெயந்திசண்முகத்திற்கு பரிச்சயமானது இப்படிதான். வேறொரு பள்ளியிலிருந்து மாறுதலாகி அந்த பள்ளியில் பணி சேர்ந்த அன்று ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்தார். திரையரங்குகளில் நிகழும் விளம்பர நேரத்திற்கு பிறகான நிசப்தம் அந்த வகுப்பறையில் நிழவியது. புதிய ஆசிரியரின் வருகையால் வகுப்பறையில் குதூகலம் தாண்டவமாடியது. ஆசிரியர் தன்னை அறிமுகம் செய்துகொண்டவுடன் மாணவர்களை எழுப்பி அவர்களது பெயரையும் எதிர்கால லட்சியங்களையும் சொல்லச் சொல்லிக் கேட்டார். ஒவ்வொரு மாணவனாக எழுந்து ஒப்புக்கு ஒரு லட்சியத்தை சொல்லிவிட்டு உடைத்த தேங்காயைப் போல வெணீரென சிரித்தபடி அமர்ந்தார்கள். வினோதன் சொன்னான்,“நான் மெண்டல் ஆகணும் சார்.”
மாணவர்கள் கடலலையைப் போல எழுந்து, கெலித்து, குதித்தார்கள். அவர்களை அமைதிப்படுத்த ஜெயந்தி சண்முகத்திற்கு குச்சியை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. குச்சியால் மேஜையில் இரண்டொரு தட்டுத் தட்டி குண்டூசி விழும் சத்தம் கேட்கும்படியான அமைதிக்கு கொண்டுவந்தார். அதன்பிறகு வினோதனை அனைவரும் அழைப்பது மென்டல் என்றுதான்.
பின்னொரு நாள் அவர் ஒவ்வொரு மாணவனையும் எழுப்பி ஒரு விஞ்ஞானியின் பெயரைச் சொல்லி அவரது கண்டுபிடிப்பைக் கேட்டார். மாணவர்களின் மொத்த தலையும் ஒடிந்து தொங்கின. வேறுவழியில்லாமல் அவரே சொன்னார், “நானொரு விஞ்ஞானியின் பெயரைச் சொல்கிறேன். அவரது கண்டுபிடிப்பை நீங்கள் சொல்லுங்கள்..” என்றவுடன் ஒடிந்த தலைகள் நிமிர்ந்தன.
“அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்?”
இப்பெயரை அவர் சொன்னதும் பாதிக்கும்மேல் மாணவர்கள் கையை உயர்த்தினார்கள். சில மாணவர்கள் கையை உயர்த்துவதைப் போல தலையைச் சொறிந்துக்கொண்டார்கள். அதில் உயர்ந்த கை வினோதனுடையது.
“வினோதன் நீ சொல்லு. அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் என்ன கண்டுபிடிச்சார் ?”
அவன் மெல்ல எழுந்து, “பெல்“ என்றான்.
வகுப்பறை உக்கிரமாக சிரித்தது. கைக்கொட்டல், நையாண்டி, மேளதாளம். சண்முகம் வினோதனை ஒரு வேடிக்கை மாணவனாகப் பார்த்தார்.
“வினோதன் நீ சொல்லுவதைப் பார்த்தால் நியுலாண்ட் கண்டுபிடித்தது புதிய நிலம். மார்க்கோனி கண்டுப்பிடித்தது கோணிப்பை அப்படித்தானே?”
என்ன பதில் சொல்லவேண்டுமென்று அப்போதைக்கு அவனுக்குத் தெரியவில்லை. எதற்கும் பொத்தம்பொதுவாக ‘இல்லை’ என்று சொல்லிவைத்தான்.
இப்படித்தான் காலாண்டு அறிவியல் தேர்வுத் தாளைத் திருத்தும்பொழுது அவரது சிவப்பு மை ஓரிடத்தில் எதேச்சையாக நின்றது. முப்பதாவது கேள்விக்குச் சூர்யாமின்கலம் என்று எழுதியிருந்தான். சூரியமின்கலம் என்பதைத்தான் அவன் அப்படியாக எழுதியிருந்தான். ‘யா’வை ஒட்டியுள்ள துணையெழுத்தை ஒரு சுழி சுழித்துவிட்டு ஒரு மதிப்பெண் கொடுத்தார். பரீட்சைத் தாளை முழுமையாகத் திருத்தி நூலைப் பிடித்து தூக்கி முப்பது மதிப்பெண்கள் தேறும் என்று ஊகித்தார். முப்பத்தைந்து மதிப்பெண்கள் வந்திருந்தன. பள்ளி திறந்ததும் தேர்வுத் தாளைக் கொடுக்கையில் வினோதனைக் கவனித்தார். அவனது கழுத்தில் நடிகர் சூர்யாவின் டாலர் தொங்கிக்கிடந்தது.
இப்பொழுது அவன் தில்லி என்பதைக் கில்லி என்று எழுதியிருக்கிறான். தில்லி என்பதைத்தான் கில்லி என்று எழுதிவிட்டானா, இல்லை எழுதவேண்டுமென்றே கில்லி என்று எழுதியிருக்கிறானா என்று யோசித்தார். தேர்வுத் தாளைக் கொடுக்கையில் கழுத்தில் தொங்கும் டாலரை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தார்.
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கையில் வினோதனை அவர் அழைத்துவரச் சொன்னார். அவன் எங்கிருந்தோ வேருடன் பிடிங்கி வந்திருந்த பட்டாணி செடியில் அவனைக் கரைத்துக்கொண்டிருந்தான்.
“டேய் மென்டல், உன்னை சார் அழைக்குறாங்க” சக மாணவர்கள் அழைத்ததும் அவன் திடுக்கிட்டு அவர் முன்பு வந்து நின்றான்.
ஜெயந்தி சண்முகம் அவனது கழுத்தைப் பார்த்தார். கில்லி திரைப்பட விஜய் டாலர் தொங்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் டாலரைக் கவனிக்கிறார் என்பதைச் சட்டென கணித்த அவன் கயிற்றை ‘வெடுக்’கென்று அறுத்து சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டான்.
இப்படித்தான், வினோதன் தேர்வு எழுதுகையில் எதாவது ஒரு திரைப்படம், ஒரு நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதை அவன் தவிர்ப்பதில்லை.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடந்துமுடிந்தது. மறுநாள் மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வை நடத்தினார் ஜெயந்தி சண்முகம். ஒவ்வொருவராக எழுந்து, தான் எதிர் பார்க்கும் மதிப்பெண்களையும் அடுத்து எந்தப் பள்ளியில் படிக்கப் போகிறோம் என்பதையும் வணக்கத்துடன் தொடங்கி நன்றியுடன் முடித்தார்கள். வினோதன் எழுந்தான். “எனக்கு எப்படியும் நானூத்து ஐம்பது மார்க் வரும்” என்றான். அவன் சொன்ன மதிப்பெண் கேட்டு ஒன்றிரண்டு பேர் சிரித்தார்கள். “சார், உங்கப் பாடத்திலே தொண்ணூறு மார்க் வரும் சார்..”
என்றான். வகுப்பில் சரிபாதி வகுப்பு சிரித்தது. “இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்” என்றான். வகுப்பறை மொத்தமும் துள்ளிச் சிரித்தது.
சண்முகம் அவனை அப்பாவித்தனமாக பார்த்தார். உரையை முடித்துக்கொள்கிறேன் என்பதைத்தான் அவன் தவறுதலாக வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்றிருந்தான். அவன் அப்படியாகச் சொன்னதும் அவருக்கு கொஞ்சம் நெருடலைக் கொடுத்தது. சண்முகம் மாணவர்களுக்குக் கைகொடுத்து வழியனுப்பி வைத்தார். அவரது கண்கள் வினோதன் தூரத்தில் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தன.
பள்ளி தேர்வு முடிவு எதிர்பார்த்தப்படி வந்திருந்தது. வினோதன் தேர்ச்சிப்பெற்று பள்ளிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தான். பள்ளியில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரிசையில் அவனுக்கு முதலிடம் கிடைத்திருந்தது.
தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பள்ளி வந்து டீசி வாங்குவதும், ஆசிரியர்களுக்கு மிட்டாய் கொடுப்பதும், வணக்கம் வைப்பதுமாக இருந்தார்கள். ஆசிரியர் சண்முகத்தின் கண்கள் வினோதனைத் தேடின. “எங்கடா வினோதன்?”
ஒருவன் சொன்னான், “அண்ணா நர்சரி பண்ணையிலே வேலை பார்க்கிறான் சார்.”
“என்ன வேலை பார்க்கிறான்?”
“மரக்கன்னுக்கு பாக்கெட் போடுறான் சார்.”
“அவனை அழைச்சிக்கிட்டு வாடா” என்று சொன்னதும் கையில் வைத்திருந்த சான்றிதழ்களை அவரிடமே கொடுத்துவிட்டு மூன்று பேர் நர்சரி பண்ணை நோக்கி ஓட்டமெடுத்தவர்கள், போன வேகத்தில் திரும்பிவந்தார்கள்.
“ எங்கேடா அவன்?”
“உங்கப் பாடத்திலே அவனால சொன்ன மதிப்பெண் எடுக்க முடியலையாம் சார். அதனாலே உங்களப் பார்க்க வெட்கப்பட்டு வரமுடியாதுனு சொல்றான் சார்.”
ஜெயந்தி சண்முகம் மாணவனிடம் ஒரு சைக்கிள் வாங்கிக்கொண்டு நர்சரி பண்ணை நோக்கிச் சென்றார். அவர் பின்னே மாணவர்கள் ஓடினார்கள். பண்ணைக்குச் சென்று அவனிடம் பேசி அழைத்துவந்து பக்கத்து ஊரிலிருந்த மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்த்து விட்டார். அங்கேயும் அவன் சக மாணவர்களால் மென்டல் என்றே அழைக்கப்பட்டான்.
அந்த வருடம் பள்ளியில் ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த வருடம் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்குப் பலத்த கைத்தட்டலுடன் பரிசு வழங்கினார்கள். அடுத்து மேடைக்கு வினோதன் அழைக்கப்பட்டான், “வினோதன் என்கிற மெண்டலை மேடைக்கு அழைக்கிறோம்.” ஆசிரியர் ஜெயந்தி சண்முகம் இப்படியாக அழைத்ததும் முன்னாள் மாணவர்கள் எகத்தாளமும் துள்ளலுமாகக் குதித்தார்கள். அவனை மென்டல் என்று ஆசிரியர் சண்முகம் ஒரு நாளும் அழைத்ததில்லை. அவரே அப்படியாக அழைத்ததும் அத்தனை பேரும் கைக்கொட்டி கெலித்தார்கள்.

வினோதனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை ஏன் மேடைக்கு அழைக்கிறார். அவன் தயங்கி, பதுங்கி மேடைக்கு வந்தான். அவனது கையில் ஒரு மரக்கன்று இருந்தது.
சண்முகம் அவனை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பேசினார். “மாணவர்களே, நம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் வினோதன் தேசிய தாவரவியல் துறையினரால் பாராட்டுப் பெற்றிருக்கிறான். இளம் விஞ்ஞானி எனும் பட்டம் பெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறான். இவன் கண்டுபிடித்த ஒரு ஒட்டு வேம்பு பாலைவனத்தில் வளரக்கூடிய தகவமைப்பு பெற்றிருக்கிறது. காற்றிலிருந்து மிகக்குறைந்த ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு செழிப்பாக வளரக்கூடிய வேம்பு அது. இவனது கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் நம் நாட்டைப் பசுமை இந்தியாவாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
நான் இப்பள்ளிக்கு மாறுதலாகி வந்தபொழுது அவனிடம் உனது லட்சியம் என்னவென்று கேட்டேன். அவன் மெண்டலாகணும் என்றான். அவன் சொன்னதை மற்ற மாணவர்கள் மென்டலாக நினைத்து கேலி செய்தார்கள். வினோதன் அதை கேலியாக சொல்லவில்லை. லட்சியமாகவே சொல்லியிருந்தான்…”
வினோதன் தலைகுனிந்து அடக்கமாக நின்றான். சண்முகம் மேலும் தொடர்ந்தார். “வினோதன் கழுத்தில் எப்போதும் ஒரு டாலர் தொங்கிக்கிடக்கும். அந்த டாலர் ஒரு நடிகனாகவோ அல்லது ஒரு கிரிக்கெட் பிளேயராகவோ இருக்கும். இனி அவனுடைய கழுத்தில் எப்போதும் ஒரே டாலர்தான் தொங்கும். அந்த டாலர் மெண்டல். பட்டாணியில் கலப்பினத்தை உண்டாக்கிய தாவரவியல் விஞ்ஞானி கிரிகோர் ஜோகன் மெண்டல்…”
அந்த டாலரை பள்ளி ஆசிரியர்கள் கூடி அவனுக்கு அணிவித்தார்கள். பரட்டைத் தலை, கூனிப்போன முதுகு இவற்றுடன் அவன் மேடையை விட்டு கீழே இறங்குகையில் மாணவப் பட்டாளம் அவனைச் சூழ்ந்துநின்று மொய்த்தார்கள்.
இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வினோதன் ஒரு நாள் ஒட்டு ரக மரக்கன்றுடன் ஜெயந்திசண்முகம் வீட்டிற்கு வந்திருந்தான். அவனைக் கண்ட சண்முகம், “வாப்பா மெண்டல், கிரிகோர் ஜோகன் மெண்டல்…” என்று அலங்காரப் புன்னகையுடன் அழைத்தார்.
“சார், இது நான் கண்டுபிடித்த ஒட்டுரக மாங்கன்று. கொய்யா போல காய்க்கும்…” என்று சொல்லி அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட சண்முகம் அவனைக் கட்டி அணைத்தார்.
“சார், பள்ளி ஆண்டு விழாவிலே என்னை நீங்க அந்தளவிற்கு கௌரவப்படுத்திருக்க வேண்டியதில்லை சார். அதுவும் விஞ்ஞானி மெண்டல் முகம் பதித்த இந்த டாலரை எனக்கு நீங்க மாட்டிவிட்டிருக்க வேண்டியதில்லை…” என்றவன் மேலும் சொல்ல முடியாமல் சொற்களை விழுங்கினான்.
“ஏன், என்னாச்சுப்பா?” தயக்கத்துடன் கேட்டார் ஜெயந்தி சண்முகம்.
கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரை லாவகமாக மறைத்துக்கொண்டு சொன்னான். “அதற்குப் பிறகு யாரும் என்னோட பேசுறதில்லை. கேலியாக மென்டல்னு கூப்பிடுறதும் இல்லை.”
ஜெயந்திசண்முகம் அவனையே பார்த்து நின்றார். பிறகு தன்னை அவர் மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்டார். “வினோதன், என்னிடம் நீ தொடக்கத்தில் சொன்னது மென்டலா ? மெண்டலா?”
“மெண்டல்தான் சார், கிரிகோர் ஜோகன் மெண்டல்” என்று சொல்லிவிட்டு பற்களுக்குள் மறைந்திருந்த சிரிப்பை மீட்டுவந்து உதடுகளில் புன்னகைத்தான். அவனது அந்த ரம்மிய சிரிப்பு ஜெயந்தி சண்முகத்திற்குக் கிடைத்த தேசிய விருதாக இருந்தது.
![]()