“திருவள்ளுவர்சந்தி” ….. ஏலையா க.முருகதாசன்.

2019 ஆண்டு மூன்று நண்பர்களால் கதைக்கப்பட்ட ஒரு எண்ணம் ஒருங்கிணைந்த திரட்சியாக ஜேர்மனி டோட்முண்ட் நகர நிர்வாகத்தின் ஆதரவுடனும்,தமிழர்களின் பங்களிப்புடனும் எழுத்தாளரும் டோட்முண்ட் நகரத்தில் இயங்கிவருகின்ற தமிழ் அரங்கத்தின் பொறுப்பாளருமான திரு.வி.சபேசன்,; துணைவியார் திருமதி.கலைநிதி சபேசனின் முன்னெடுப்பில் டோட்முண்ட் நகரில் பொது இடமொன்றில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட வேண்டுமென்ற நற்சிந்தனை கடந்த 07.12.24 அன்று ஈடேறியது.
கடந்த 07.12.24 அனறு அதிகாலையிலேயே திருவள்ளுவர்; சிலை திரைநீக்கத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சில நிறுவியிருந்த இடத்தில் தோரணங்கள் கட்டுதல் என சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கின.
ஜேர்மனி டோட்முண்ட் நகரில் தமிழர்களின் பல அங்காடிகள்,உணவு விடுதிகள் உள்ள பிரதான வீதியான றைனிச வீதி அனன் வீதிச் சந்தியிலேயே பீடமமைத்து திருவள்ளுவர் சிலை முதல் நாளே போக்குவரத்தின் சிரமங்களை கவனத்தில் எடுத்து அங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சிலையைச் செய்தவர் கதரீன என்ற பெண் சிற்பியாவார்.காலை பதினொரு மணியளவில் பறையொலி முழங்க மேற்கு டோட்முண்ட் நகரத் தலைவர் அஸ்ரிறிட் கிறேமர் அவர்களும்,மாநில நாடாளுமன்ற உறுப்பினர் வோல்கான் பாறன் அவர்களும்,மாநில நாடாளுமன்ற உறுப்பினர் றல்வ் ஸ்ரோஷ் அவர்களும்,மேற்கு டோட்முண்ட் நகரப் பிரதித் தலைவர் ஒலாவ் மயர் அவர்களும்,சிலையைச் செய்த சிற்பி கதரீனா அவர்களும் திருவள்ளுவர் சிலையைத் திரைநீக்கம் செய்து வைத்தனர்.
![]()
அதனைத் தொடர்ந்து திரு.வி.சபேசன் அவர்களும்,திருமதி.கலைநிதி சபேசன் அவர்களும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.கதரீனா அவர்களும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிந்து மகிழ்ந்தார்.
திருவள்ளுவர் சிலையைத் திரைநீக்கம் செய்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களை பறையொலி சகிதம் தமிழ் அரங்கம் மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே வரவேற்பு நடனத்தின் மூலம் வரவேற்க்கப்பட்டு,திருவள்ளுவர் சிலையை பொது இடமொன்றில் நிறுவுவதற்கு முழு ஒத்துழைப்பையும் தந்தமைக்காக உரை மூலம் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.
திருவள்ளுவர் சிலை நிறுவும் செயல்பாட்டுக்கு இதனை முன்னெடுத்த நாளிலிருந்தே முழு ஒத்துழைப்பையும் வழங்கிய தமிழ்க் கலாசாலைப் பொறுப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் ஜேர்மன் மொழியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அடுத்து தமிழ் மரபுக் கட்டளையின் ஜேர்மனியப் பொறுப்பாளரும்,ஐடி துறையின் அதிகாரியுமான கலாநிதி சுபாஷினி அவர்கள் ஜேர்மன் மொழியில்
விபரித்த திருவள்ளுவர் பற்றிய விவரணக் காணொளி திரையிடப்பட்டுப் பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நடனஙக்ளும் சிறுவர்,சிறுமிகளின் திருக்குறள் சார்ந்த பேச்சுக்களும்,சங்கீதமும் இடம்பெற்றன.
திருவள்ளுவர் சிலை நிறுவினதை மகிழ்ந்து கலை இலக்கிய ஆளுமைகள் பலர் பாராட்டியும் வாழ்த்தியும் உரை நிகழ்த்தினர்.
![]()
திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு அதற்கான வழிமுறைகளை சரியாக அணுகிக் கடுமையாக உழைத்து அதனை நிறைவேற்றிய திரு.திருமதி.சபேசன் கலைநிதி தம்பதிகளை பலரும் வெகுவாகப் பாராட்டியதுடன்அவர்ளுக்கு பொன்னாடை போர்த்தியும் பாராட்டுப்பா வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
ஐரோப்பாவிலேயே ஒரு முக்கிய வீதிச் சந்தியில் தமிழர்களுடைய தத்துவஞானியான திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது என்பது முழு உலகத்தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.ஐரோப்பியப் புலத்தில் பொது இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இது புலம்பெயர் ஜேர்மனியத் தமிழர்களின் நற்பண்புகளை ஜேர்மனிய மக்களுக்கு இனங்காட்டி தம்மினத்தை மேன்மைப்படுத்தியமைக்கு கிடைத்த நன்சான்று என்று சொல்லலாம்.
தமிழர்கள் உலகின் எந்தப் பகுதிகளுக்குச் சென்றாலும்,அவர்களின் மேன்மைமிகு பண்பியல் விழுமியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் அங்கெல்லாம் தமது தமிழ் அடையாளங்களை ஊன்றிப் பதிக்க முடியும் என்பதை இச்செயல் நிலைநிறுத்தியுள்ளது.
அதே வேளை 2019 ஆண்டளவில் கலாநிதி சுபாஷினி அவர்களின் முன்னெடுப்பில் ஜேர்மனி லிண்டன்பேர்க் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் இரு சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டன என்பதையும் பதிவு செய்கிறோம்.
![]()