”பறையொலி”…. சிறுகதை – 97… அண்டனூர் சுரா

அய்யாக்கண்ணு மரணம் ஊருக்குப் பெரும் இழப்புதான். இவரது இழப்பை யாரால் ஈடுகட்ட முடியும்? அவர் விட்டுச்செல்லும் தொழிலை யார் முன்னெடுப்பார்? அதுவும் இந்தக் காலத்தில்! மேலத் தெரு மக்கள் காதுகடியாய் பேசிக்கொண்டார்கள்.
கீழத்தெரு இளைஞர்களைப் பகைத்துக்கொண்டு வாழ்ந்த மனுசன். அவர் பறையைத் தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு கிளம்புகையில் யாரேனும் அவரை வழிமறித்தால், “எவன்டா அவன், பீத்தப் பயல்களா…” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கிளம்பியவர் அய்யாக்கண்ணு.
ஒரு காலத்தில் கீழத்தெரு வீடுகளின் எரவாணத்தில் ரெட்டைக்குச்சிகள் செருகி அதில் பறை தொங்கிக்கிடக்கும். ஒவ்வொரு குடியும் யாரேனும் ஒரு குடியானவர்கள் குடிக்குத் தொண்டுழியம் பார்த்துத் திரியும். எவ்வளவு காலத்திற்கு கமுக்கட்டுக்குத் துண்டும், காலுக்குச் செப்பலில்லாமல் திரிவதாம். கீழத்தெரு இளைஞர்கள் ஒருநாள் குந்தி பேசி முடிவெடுத்தார்கள். “இனியாரும் கையிலே பறை எடுக்கக்கூடாது. அவங்கவங்க அப்பன்களெ அவனவன் கண்டிச்சிகணும். வீட்டுல தொங்குற பறைய எடுத்து நெருப்புலப் போட்டு பொசுக்கணும். பாத்திரம் ஏந்தி குடியானத் தெருவுல கஞ்சி வாங்கிக் குடிக்கிறத இத்தோட நிறுத்திக்கணும்.”
“ஆமாம்ப்பா, இனி யாரும் ஊரில பறைக்கொட்டக் கூடாது. யாரையும் பறைக்கொட்ட அனுமதிக்கவும் கூடாது. எட்டுப்பட்டி ஊருக்கும் நாம பறை கொட்டுறதுனாலேதான் நம்மள யாரும் மதிக்க மாட்டேங்குறாங்க. இனி யாராவது கையில பறைய எடுக்கட்டும், அவன்க பல்லப் பேக்குறேன்…” சிற்றரசு கைலியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு குதிக்க, கீழத்தெரு இளைஞர்கள் கூடி சபதமும் சத்தியமும் செய்தார்கள், “கையில பறை எடுக்கமாட்டோம், பறை கொட்ட மாட்டோம்…” என்று.
தெரு மொத்தமும் சத்தியம் செய்கையில் சத்தியத்தை மீறி கையில் பறையை எடுத்தவர் அய்யாக்கண்ணு. “போங்கடா நீங்களும் உங்க சத்தியமும். பறைக் கொட்டுறது என் தொழில்டா. இந்தப் பறைய நான் மட்டும் கொட்டல. என் பாட்டனோட பாட்டனோட பாட்டன் காலத்திலேருந்து கொட்டிக்கிட்டு வர்றோம். இந்தப் பறைதான் எனக்கான அடையாளம். இந்தப் பறை என்னோட உரிமைடா. நீங்க வேணுனா பறை கொட்டாம இருங்க. என்னால கொட்டாம இருக்க முடியாது. எனக்குத் தெரிஞ்சது பறை கொட்டு மட்டும்தான். அதை நான் கொட்டவேன். நான் கொட்டுறத யாராவது தடுக்க நினைச்சீங்க, நடக்குறதே வேற…”
இதை அவர் சொல்லிவிட்டு பறையை ஒரு பக்கத் தோளில் மாட்டிக்கொண்டு இரண்டு குச்சிகளையும் காது மடல்களில் செருகிக்கொண்டு கிளம்புகையில் தெரு இளைஞர்கள் அத்தனை பேரும் அய்யாக்கண்ணுவை அடிக்காத குறையாக பார்த்து நின்றார்கள்.
சற்றுநேரத்தில் ஊருக்குள் பறைக்கொட்டும் சத்தம் கேட்டது. கொட்டியது அய்யாக்கண்ணுதான்.
மேலத்தெரு மச்சுவீட்டுக் கிழவி செத்துப்போயிருந்தாள். பெரியவீட்டு இழவு. அய்யாக்கண்ணு கொட்டும் பறையை அந்த வீடு நம்பியிருக்கவில்லை. அந்த துக்கத்தை அமர்க்களப்படுத்த புதுக்கோட்டையிலிருந்து கரகமும் மேளச்செட்டும் வந்திருந்தன. அய்யாக்கண்ணு கொட்டுவது ஊர் ஒப்புக்கு. தன்னோட இருப்பைக் காட்டுவதற்கு.
அய்யாக்கண்ணு கொட்டிய ஒத்தப் பறை நானும் இருக்கிறேன் என்று சொல்வதைப் போல ஒலித்துக்கொண்டிருந்தது.
‘தண தண தண தண்ண்ண தண்ண்ண தண’
ஊர் இளைஞர்கள் கைலியைத் தூக்கிக்கட்டிக்கொண்டு சீறினார்கள். “வாங்கடா இழவு வீட்டுக்கே போயிட்டு அய்யாக்கண்ணுக்கு ரெண்டு வச்சி பறையைப் பறிச்சி உடைச்சிட்டு வருவோம்.”
அவர்கள் பெரும் மரத்தை வேரோடு பிடிங்கி எறிந்துவிடுவதைப் போலதான் கிளம்பினார்கள். இளங்கன்றுகளுக்கு பயமேது? கீழத்தெரு பெரியவரான வெள்ளையன் கட்டுச்செட்டாக சென்ற இளைஞர்களை வழிமறித்து அம்சடக்கினார். “அடேய், அய்யாக்கண்ணு பறைக் கொட்டுறத உங்களாள தடுத்திட முடியுமாக்கும். அவருக்குப் பொழப்பே பறைக் கொட்டுறதுதான். அதைத் தடுக்குறான்களாம். போங்கடா போங்க. ஊர் வம்ப விலைக் கொடுத்து வாங்காம வேலையப் பாருங்க. எதுக்கும் ஒரு ஆயுளு இருக்கு. அந்த ஆயுளு முடிஞ்சதும் தானா நின்னிரும்.…”
வெள்ளையன் சொன்னதும் ஊர் இளைஞர்கள் பெரிய மனிதர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு திரும்பினார்கள். அதன்பிறகு ஊரில் யார்வீட்டில் இழவு என்றாலும் பறை கொட்டுறது அய்யாக்கண்ணுதான். அப்பேர்ப்பட்ட அய்யாக்கண்ணு இறந்துவிட்டார். அவருக்குப் பறை கொட்ட ஆளில்லை.
“ஊருக்கே பறையடிச்சார் அய்யாக்கண்ணு. அந்த மனுசனுக்கு பறையடிக்க ஆளு இல்லையேப்பா…” துக்கம் விசாரிக்க வந்தவர்கள் சொல்லி பொருமினார்கள்.
“அவருக்காக நான் கொட்டுறேன்டா…” சின்னத்துரை கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு கிளம்பினான். அவனை மொத்த இளைஞர்களும் தடுத்து நிறுத்தினார்கள்.
“பறை கொட்டலைன்னா அவரோட கட்டை வேகாது பாரு. பறை கொட்டுறானாம், பறை. இன்னைக்கு இந்த மனுசனுக்காக கையில பறையை எடுத்தா, என்னாகுமுனு தெரியும்ல?”
“என்னடா ஆகும்?”
“என்ன ஆகுமா! ஊர்ல யார்வீட்டுல இழவு விழுந்தாலும் நீதான் எல்லாருக்கும் பறை கொட்டணும். கொட்டுறீயா?”
கையில் பறையெடுக்கச் சென்ற சின்னத்துரை தயங்கி தேங்கி நின்றுபோனான்.
பறை கொட்டாமல் அய்யாக்கண்ணுவின் துக்கம் நிகழ்வு கழிந்துகொண்டிருந்தது. ஊர் இளைஞர்கள் அவரை எரியூட்ட புளியமரம், கருவை மரங்களின் கிளைகளை வெட்டி அடுக்கி வண்டியில் ஏற்றினார்கள். துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அய்யாக்கண்ணு உடலைக் கட்டிப்பிடித்து அழுது, பறை கொட்டில்லாமல் காட்டுக்குப் போறாரே என்று அதற்கும் சேர்த்து ஒப்பாரி வைத்து தேம்பினார்கள்.
அய்யாக்கண்ணு உடலை எடுத்து தூக்கி குளிப்பாட்டி தேரில் ஏற்றும் நேரம் வந்திருந்தது. அப்பொழுதுதான் அந்த பறையொலி கேட்டது. பந்தலுக்கும் வெளியே. எட்டிப்பார்க்கும் தூரத்தில்!

“எவன்டா அவன் பறை கொட்டுறது?”
“யாரா இருந்தாலென்ன, பறை கொட்டுறவன அடிச்சு துவைங்கடா. பறையைப் பிடிங்கி நொறுக்குங்கடா…” இளைஞர்கள் திமிறி எழுந்து ஓடினார்கள்.
தலையில் பெரிய முண்டாசு. வெள்ளையும் சொள்ளையுமான வேட்டி. அவர் ஊராட்சி மன்றத் தலைவர். பறையை இடது தோளில் மாட்டிக்கொண்டு அதை விலாவிற்கும் சற்றுமேலே தூக்கிவைத்துக்கொண்டு பறை கொட்டிக்கொண்டிருந்தார் .
அவரது கொட்டலில் இசையும் சுதியும் கைகூடவில்லையே தவிர பறை இரட்டைக் குச்சிகளின் அடியை மெத்தன வாங்கி அதன்போக்கில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவரது கொட்டலில் வெண்தறித்த மீசை துடிக்க, பறை ‘கண்ண், கண்ண்..’ என்று ஒலித்துக்கொண்டிருந்தது.
கீழத்தெரு இளைஞர்கள் தலைவரிடம் மன்றாடினார்கள். கெஞ்சி அந்தப் பறையைப் பிடிங்கினார்கள். தலைவர் அதை விடுவதாக இல்லை. அவரது கைகளிலிருந்த குச்சிகள் பறையை விடாது கொட்டிக்கொண்டிருந்தன. “அய்யா, என்னங்க நீங்க. ஊர்த் தலைவர் நீங்க. நீங்கப்போய் இந்தப் பறைய கொட்டலாமா?”
ஊராட்சி மன்றத் தலைவர் மீசை துடிக்கச் சொன்னார். “பறை கொட்டுறது இழிவானதுனு எவன்டா சொன்னது. பறை ஒரு சாதிக்காரங்க மட்டும் கொட்டுற வாத்தியமில்லைடா. தமிழனா பொறந்த ஒவ்வொருத்தனும் பறை இசைக்கத் தெரிஞ்சிக்கணும். தாலாட்டு, கும்மி, ஒப்பாரி மட்டும் நம்மளோட கலை இல்லே. பறை வாசிக்கிறதும் நம்ம கலைதான்…” என்றவர் அய்யாக்கண்ணு பறையை எப்படியாக வாசிப்பாரோ அப்படியா அவர் கால்களை அப்படியும் இப்படியுமாக எடுத்துவைத்து தலையைக் குலுக்கி பறையைக் கொட்டினார்.
ஊர்த்தெரு சேர்ந்து அய்யாக்கண்ணுவைத் தேரில் ஏற்றினார்கள். தலைவர் கொட்டும் பறையொலி முன்னே செல்ல ஆட்டம், பாட்டத்துடன் தேர் குலுங்கி ஆடியபடி பின்னே சென்றது.
![]()
it was very super