பாரதி என்கிற அமுதானவனை எனக்குப் பிடிக்கும்!…. சுபா சிகதரன். ( குவின்ஸ்லாந்து )

“எனக்கு மழை பிடிக்கும்.”
“எனக்குந்தான். மழை அவ்வளவு விருப்பம்! மனசு ஒரு மாதிரி இருக்கிறதக் கூட மழை அப்பிடியே தடவிக் குடுக்கும், இல்லையா?.”
“உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?”
‘இட்லி!’
“ஓ… எனக்கு அதிகமா பிடிச்சதே அதுதான். எத்தினை முறையும் தொடர்ந்து அலுக்காமல் இட்லி சாப்பிடுவன்” பிடித்ததைப் பிடித்ததாகச் சொல்பவர்களோடு ஏதோவொரு இணக்கம் உருவாகி விடுகிறது.![]()
‘அட, நீயும் அதேதானா?’ என்கிற ஒரு குட்டிச் சந்தோஷ வியப்பு ஏற்பட்டு விடுகிறது. எனக்கு பாரதியைப் பிடிக்கும். பிடிக்கும் என்றால், அவ்வளவு பிடிக்கும்! எந்த விமரிசனமும் இல்லாமல் பிடிக்கும். எழுத்தாளர் முருகபூபதியுடன்
மெல்பேர்னில் அறிமுகமாகி, அவர் அழைப்பையேற்று அவர் வீடு தேடி நீண்ட பயணம் மேற்கொண்டு சென்றபோது வரவேற்பறையில் முதலில் கண்ணில் தட்டுப்பட்டது பாரதிதான். பேசத் தொடங்கியது முதலில் அவனைப் பற்றித்தான். ‘மெல்பேர்ன் வாசகர் வட்டத்தில்’ என்னை அவர் அறிமுகப்படுத்திக் கதைக்க வைத்தது அவரின் ‘இலங்கையில் பாரதி’ நூலைப் பற்றிய
கலந்துரையாடலில்தான். உறவுப் பிணைப்பு போன்றதான ஒரு உரிமையுடன் விவாதிக்கும் நெருக்கத்தை இவருடன் ஏற்படுத்திக் கொள்வதற்குப் பாரதி மீதான பற்றும் ஒரு காரணம்.
பேராசிரியர் அ. ராமசாமி அவர்களுடன் முகநூலில் அறிமுகமாகி, எனது பாரதி பற்றிய ஒரு பதிவை வாசித்த பின்னர், ‘பாரதியின் விசிறிக்கு வணக்கம்’ எனக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். நான் பதிலாக, ‘அவனின் புரவலருக்கு வணக்கம்’ என அனுப்பினேன். ஒரு தமிழ் பேராசிரியர், அறிஞர், இலக்கிய ஆளுமை என்னுடன் தொடர்பு கொண்ட மகிழ்வான அதிர்ச்சி தாண்டி, பாரதியின் பிரியர் என்பதை அவரின் பதிவுகள் மூலம் கண்டுகொண்டது இன்னும் ஈடுபாட்டையும், இந்த வாத்தியாருடன் தயக்கமின்றி உரையாடலாம் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்திற்று. மெல்பேர்னில் வசிக்கிற தம்பியொருவன் பாரதிப் பைத்தியம். தனக்கு அவனின் முழுப் பாடல்களும் மனப்பாடம் என்பான். எப்போது அவன் வீடு சென்றாலும் எம்மிருவரின் பேச்சும் சுற்றிவந்து பாரதியில் முடியும். அவன் மனைவி எம்மைத் திசைதிருப்பி வேறு பேச்சுக்கு மீட்க வேண்டியிருக்கும்.
“ஆனா அக்கா, குடும்ப வாழ்க்கைக்கு அவன் சரிவர மாட்டான். செல்லம்மா எவ்வளவு பாவம். எங்கட அம்மாக்கு இதால பாரதி பிடிக்காது” என்பான்.![]()
இது உண்மைதான். இருவரும், இருவராலும் அவதிப்பட்டவர்கள் எனலாம். அன்றைய வாழ்க்கை நடைமுறையின் அழுத்தம் இது. மற்றவர்களுடைய பிறந்த நாட்கள் எனக்கு ஒருபோதும் ஞாபகத்தில் இருந்ததில்லை. என் சொந்த நிகழ்வுகள் பற்றிய திகதிகள் கூட நினைவில் இல்லை. ஆனால் பாரதி, பிறந்த _ மறைந்த நாட்கள் எப்படியோ ஞாபகம் வந்துவிடுகிறது. முருகபூபதி அவர்கள் பாரதியின் மிக வயதாகிப் போன நண்பர் ஒருவர் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் பேசியதாகக் கூறியுள்ளார். பாரதி பற்றி அந்த அன்பர், “அவன் ஒரு கிறுக்கன்’ “ என வர்ணித்ததாகச் சொல்லிச் சிரிப்பார்.
“அதுதானே எங்களைப் போல இருக்கிறவைக்கு அவனைப் பிடிக்குது.
ஆனா, இப்ப அவன் இருந்திருந்தா உங்களோடயும் கொழுவுப் பட்டிருப்பான்” என்றேன்.
“நான் தானே எல்லாரையும் சமாளிச்சுக்கொண்டு போகிற ஆள். தெரியுந்தானே” என்றார்.
“என்னை, ‘நீ ஒரு டைப்பான ஆள்’ எண்டு சொல்லுற மாதிரி அவனையும் சொல்லியிருப்பீங்கள்” என்றேன். பாரதியை ஏன் அப்படியே, அவ்வளவு உணர்வு பூர்வமாகப் பிடிக்கிறது?
“அவனை ஆருக்குத்தானம்மா பிடிக்காது?” என்பார் எழுத்தாளர் முருகபூபதி. இல்லை, பிடிக்காதவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். இப்போது அவன் இருந்திருப்பின் , அல்லது அவன் போன்றவரைப் பிடிக்காமல் இருக்கக்கூடியதாக நிறையப் பேர் இருக்கிறார்கள். சத்தியம் பிடித்தால் அவனைப் பிடிக்கும். அதில் உருவான கவிதைகளின் ஞானம் பிடிக்கும். அதிலும் அவனைப் போல சமாளிக்கத் தெரியாத, அவ்வப்போது உண்மையைப் புரிந்து கொண்ட பிற்பாடு முன்னுக்குப் பின் முரணாக நடக்கிற, வெட்கமேயில்லாது இதயத்தின் உணர்வு வழி செல்கிற கிறுக்குத் தனத்தைப் புரிந்து கொண்டால் பிடிக்கும். ஒருமுறை பாரதியின் மகள், “ ஊருக்குப் பெண் விடுதலை பற்றிப் போதித்துவிட்டு, வீட்டில் செல்லம்மாவுடன் அப்படி இருக்காதது பற்றிக் கடிந்து கேட்டபோது, உடனேயே புரிந்துகொண்டு மகளின் கால் பற்றி மன்னிப்புக் கேட்ட கதையை எழுத்தாளர் முருகபூபதி உணர்ச்சிவசப்பட்டுக் கூறுவார். பாரதி பற்றிய எனது கடந்த பதிவில் நான் குறிப்பிட்டபடி ‘நவீனத் தமிழ் இலக்கியத்தில் இன்று வரையும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய படைப்பாளி’ எனப் பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் குறிப்பிட்ட விடயமும் இந்த நாட்டத்திற்குக் காரணம் எனலாம். எதுவும் காரணமாக இருந்துவிட்டுப் போகட்டும். கிறுக்கன் என்பதால் இவனைப் பிடிக்கிறது என்பதே தலையாய காரணம்.![]()
மழையை எப்போதுமே பிடிக்கிறது. வெள்ளமும் புயலுமாக அலைக்கழிக்கும் போது அலுத்துப் போய் விட்டாலும் திரும்பவும் மழைக்கு மனம் ஏங்குகிறது. மழை வெறுத்துப் போவதில்லை. மார்கழித் தொடக்கத்தின் மாரி மழைக் காலத்தின் இடி, மின்னல், புயலுடன் இவன் பிறந்திருப்பான் போலும். அதுதான் அவ்வாறு ஆகி இருக்கிறான். அடுத்த சிந்தனையற்ற அந்த நேரத்துப் பொழிதல்! பாரதியை எவ்வளவு பிடிக்கும்? கவிஞர் சேலம் ராஜாவின், ‘தாழ்ந்து பொழியும் வெயிலோன் சொல்லாத மயில் பற்றிய குறிப்புகள்’ என்கிற கவிதைத் தொகுப்பு நூலில் இருக்கும் ‘நீயில்லாத பொழுதுகள்’ என்பதில் வருகிற இந்தக் கவிதையைச் சொல்லத் தோன்றுகிறது: ~~~~~ என்னை எவ்வளவு பிடிக்கும் உனக்கு? என் கண் பார்வையில் படர்ந்திருக்கும் இந்த வானம் அளவு, அதில் கலந்திருக்கும் காற்றின் அளவு. சரி நீ சொல்லு?! அம்மாவை கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொள்ள ஒரு குழந்தை தன் கைகளை விரிக்கும் அல்லவா அவ்வளவு. பார் உன் காதலுக்கு முன் இந்த வானமே சிறிதாகிவிட்டது அமுதச்சி. ~~~~~ பாரதி என்கிற அமுதானவன் பிறந்து ஆங்கிலத்திகதியின்படி ( டிசம்பர் 11 ) நூற்றி நாற்பத்தியிரண்டு வருடங்கள் )
—0—
![]()