கதைகள்

”களஞ்சிய மேடு”… கதை – 5 … குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர்… மீனாசுந்தர்

நம்ப முடியவில்லை என்றாலும் இதை நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் உண்மை அது தான். உண்மையென்றாலும் யாரோ சொல்லக் கேட்டதில்லை. நேருக்கு நேராய்ப் பார்க்கும் உண்மை. அதில் சந்தேகத்திற்குத் துளி இடமேது? பசுவின் மடியைத் தானே கழுவிப் பீய்ச்சும் பாலில் கலப்படமென்றால் எப்படி?

இவ்வளவு கொடூரமாய் ஊர் வறண்டு பாழ்பட்டுக் கிடக்குமெனக் கதிரேசன் எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை. தென்னகத்தில் வறட்சி, மக்கள் அவதி, நத்தைகளையும், ஆமைகளையும் திண்ணும் அவலம் என்று செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும், படித்ததோடு சரி. இதோ நேரில் பார்க்கையில் நெஞ்சில் கனம் ஏறி வதைத்தது. நண்டுகளோ, நத்தைகளோ. ஆமைகளோ, அல்லிக் கிழங்குகளோ…, அடக் கொடுமையே.. இந்தக் கொடிய நிலையைப் பார்த்தால் இனி எதற்கும் வழியிருக்காது போலிருக்கே! கதிரேசனுக்குப் பெருமூச்சொன்று வெப்பம் கக்கி வெளிக் கிளம்பியோட அதில் அவரே பொசுங்கிப் போனவராய் இருண்ட முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

களஞ்சியமேடு என்னும் இந்தப் பசுமை பூமி வானம் பார்த்த பூமியாகிக் கிடந்தது. மூன்று வருடங்களாய்த் துளி மழையில்லை, மக்கள் குடிநீருக்கே அவதியுறும் நிலைமை. அடிக்கும் வெயிலுக்கும், காற்றுக்கும் மண் புரண்டு புழுதி கிளம்பி பேயாட்டம் போட்டது. 1876-78 களில் தமிழகத்தைப் பரிதவிக்கவிட்ட தாது வருடப் பஞ்சத்தைக் கேள்விப் பட்டிருக்கிறோம். இலட்சக்கணக்கில் மக்கள் பசியால் துவண்டு, மாண்ட கதை இன்னும் வரலாற்றில் மாறாத வடுவாகி நிற்கிறது. இப்போது இதற்கு என்ன பெயர் வைப்பது? அது தாது வருடப் பஞ்சமெனில், இதற்குச் சூது வருடப் பஞ்சமென்று வைப்பதா? ஆனால் யார் செய்த சூது இது? மனிதரா? தெய்வமா? இயற்கையா? சொல்லத் தெரியவில்லை.

ஊரைவிட்டுப் போகும் போது, கதிரேசனுக்கு பத்து, பன்னிரெண்டு வயதிருக்கலாம். குடும்பப் பிரச்சினையொன்றில் அப்பா ஆத்திரத்தில் எடுத்த முடிவு தற்கொலையில் முடிந்தது. பிரச்சனைகளுக்கிடையே வாழ்ந்தாலும் அவர் மீது உயிரையே வைத்திருந்த அம்மா அந்தத் துக்கம் தாளாமல் அடுத்த ஒரே வாரத்திற்குள் அரளிக் கொட்டையின் நஞ்சருந்தி பலியாக, கதிரேசன் ஆளரவமற்ற அனாதைப் போலப் பரிதவித்து நின்றான்.

கொஞ்ச நாட்கள் சித்தப்பா வீட்டிலிருந்து காலம் தள்ளினான். அங்கேயும் வசதி வாய்ப்பென்று சொல்ல எதுவுமில்லை. வாயிற்கும் வயிற்றுக்கும் போராடும் பற்றாக்குறை வாழ்க்கை தான். சித்தப்பாவிற்கிருந்த நான்கு பிள்ளைகளோடு ஐந்தாவது பிள்ளையாய் இவனும் சேர்ந்தால் என்ன செய்வது? சித்தப்பா, சித்தியோடுச் சேர்த்தால் மொத்தம் ஏழு நபர்கள். இரண்டு பேரின் சொற்ப வருமானத்தில் ஏழு உயிர்கள் வாழத்தகவில்லை. எல்லாவற்றிலும் யானைப்பசிக்குச் சோளப்பொறி கதை தான்.

சித்தப்பா கூட அனுசரணை செய்து கொண்டார். சித்தி அவ்வப்போது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு எரிந்து எரிந்து விழுந்தாள். அவள் சினக்கும் சமயங்களில் இவனுக்கும் அடி விழும்.

இவனால் சித்தப்பாவிற்கும், சித்திக்கும் தொடர்ந்து சண்டை, சச்சரவுகள் வெடித்தன. அடிக்கவும் முடியாமல், அணைக்கவும் முடியாமல் தவித்தார் சித்தப்பா. ஒருபுறம் அண்ணன் மகன் அனாதையாய் நிற்கும் பரிவு. மறுபுறம் குரல் வளையை நெறிக்கும் குடும்பச் சூழல், மேலும் மனைவியின் குறுகிய புத்தி.

பக்கத்துத் தெருவிலிருக்கும் சுப்பராயன் வீட்டிற்கு வெளியூரிலிருந்து வந்திருந்த விருந்தாளி ஒருவர், நகரத்திலிருக்கும் தன் நண்பரின் பட்டாணிக் கடைக்கு நல்ல பையனொருவன் தேவையெனவும், மூன்றுவேளை உணவு. இருப்பிடம், கட்டுப்படியாகும் அளவிற்கு கூலி வாங்கித் தருவதாகக் கூற, கலங்கிய விழிகளோடு பேருந்து ஏற்றி விட்டார் சித்தப்பா. ஏற்றிவிடும் போது துக்கத்தில் திணறி அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் நெஞ்சுக்குழியை அறுத்து இம்சிக்கின்றன.

“எப்பா… கதிரேசா… நல்ல இடம்ண்டா கண்ணு.. நல்ல பேரு எடுத்து பொழச்சுக்க. ஒன்ஞ் சித்தி ஒரு சூனியக்காரியா இருக்காப்பா… அவள சொல்லியும் குத்தமில்ல. நானும் வாழ வகையில்லாம வக்கத்துக் கெடக்கென். பசியோ, பட்டினியோ சமாளிச்சுக்க. ஒன்னய வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்புள்ள நானே வெரட்டி விடுறேன்யா. செத்தாலும் இந்தக் கேவலங்கெட்ட நாயிப்பய மொகத்துல வந்து முளிக்காதய்யா” என்றவர், அண்ணே. என்னயும் ஒங்கிட்ட கூப்டுக்கண்ணே. ஒம்புள்ள எம்புள்ளன்னு பிரிச்சி பாக்கறவன் நானில்லண்ணே. என்னய ஒம்புள்ள மாரி வளத்ததுக்கு பரிகாரம் செய்ய முடியாத பாவியாயிட்டேன்ணே!” என்று கதிரேசனின் அப்பாவிடமும் கதறி, குரல் உடைந்து தோளில் கிடந்த துண்டையெடுத்து வாயைப் பொத்திக் கோவினார்.

கதிரேசன் அன்று போனது தான், பட்டாணிக் கடை வேலைக்குப் போனவர் தனது உழைப்பாலும் கருத்தாலும் கண்ணியத்தாலும் படிப்படியாக முன்னேறி இன்று நகரத்திலுள்ள பட்டு சாம்ராஜ்யத்திற்கு முதலாளியாகி விட்டார்.

நகரில் அவரது துணிக்கடைக்கு நல்ல மவுசு இருக்கிறது. மனைவி, மக்கள், வசதி, வாய்ப்பு என எல்லாமும் பார்த்தாகி விட்டது. எதற்கு ஆலாய்ப் பறந்தாரோ அவை கைக்கூடிய பிறகு நிம்மதியைத் தேடி ஆலாய் பறக்கத் தொடங்கி விட்டார்.

சித்தப்பா சொன்ன சொல்லிற்காக ரோசத்தோடு இந்த ஊர் மண்ணை அதன்பிறகு ஒருமுறை கூட மிதிக்கவில்லை. மனதில் மண்டிக் கிடந்த வெறுப்பிலும், வேதனையிலும் பெயருக்குக் கூட ஒரு கடிதமோ.., எங்கே வாழ்கிறார் என்றோ.., நல்லதோ, கெட்டதோ எதையும் தெரிந்து கொள்ள இருவரும் முயலவில்லை. இத்தனை வருடத்திற்கு பிறகு, அதுவும், தள்ளாமை நெருங்குகின்ற இந்த வயதில் என்னவோ பிறந்த ஊரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை துளிர்த்துவிட்டது கதிரேசனுக்கு.

என்ன தான் நகரம், வசதி, வாய்ப்பென்று வாழ்ந்தாலும் கிராமத்தில் தவழுமந்த சிலுசிலு காற்றும், வயல்வெளிகளும், நெளிந்தோடும் நதியும், துள்ளிக் குதிக்கும் ஆட்டுக்குட்டிகளும், ஓடைகளும், வாய்க்காலும், மீன்களும், பறவைகளும். கதை பேசும் வெள்ளந்தி மனிதர்களும், கோலி விளையாடும் பிள்ளைகளும்… எத்தனை துயரங்கள் வந்தாலும் அதுவல்லவோ வாழ்க்கையென்ற எண்ணம் தோன்றிவிட்டது கதிரேசனுக்கு.

இந்தக் காட்சிகள் எள்ளளவும் அவரில் மறைவில்லை. எங்குச் சுற்றினாலும் கடைசியில் ஆதியைத் தேடி வருவது தானே மனித வாழ்க்கை. உலக இயல்பு. கதிரேசனும் அவரின் ஆதியைத் தேடி வந்து விட்டார். ஒரு சாதாரண நடுத்தர மனிதரைப் போல எந்தப் பகட்டுமின்றி எந்தத் துணையுமின்றி தன்னந்தனியே அவரது பாதங்கள் களஞ்சியமேட்டில் பதிந்து நடந்தன.
பேருந்து நிறுத்தத்திலிருக்கும் அழகிய கடைத்தெரு ஒரு நகரமாய் ஜொலிக்குமே., எப்போதும் ஜனத்திரள் குழுமித் திணறுமே., பத்துப் பதினைந்து கடைகளுக்கு மேல் இருந்ததே., எல்லா பல சரக்குகளும் கிடைத்தனவே..,… இப்போது எல்லாமும் எங்கே போயின? இப்படி விதவைக் கோலம் பூண்டு நிற்பது எனது ஆதி நிலமா? பெயருக்கு மட்டும் இரண்டு கீற்றுக் கொட்டகைகள் மிச்சமிருந்தன. ஒன்றில் டீ, வடையும், இன்னொன்றில் பெட்டிக்கடை சாமான்களும் வைத்திருந்தார்கள். உள்ளிருக்கும் மனிதர் எரும் தெரிந்த முகமாயில்லை. எதுவும் பேசத் தோணவுமில்லை.

பிறந்த தெருவை நோக்கி நடந்தார். அது அவருக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது. தெரு முழுவதுமாய்ச் சின்னாபின்னமாகிக் கிடந்தது. ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்த வீடுகள் காணாமல் போயிருந்தன. ஏழெட்டு கீற்றுக் குடிசைகள் ஒழுங்கற்றும், நாகரிகமற்றும் அலங்கோலமாய் மிச்சமிருந்தன. தெருவில் ஆடையணியாமல் மூக்கொழுகிய ஏழெட்டுப் பிள்ளைகள் மண் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவரைப் பார்த்ததும் அவர்கள் பயந்து மிரண்டு ஓடினார்கள்.

சித்தப்பா வீடும், இவர் பிறந்த வீடும் பக்கம் பக்கம். இரண்டுமே இடிந்து மண் சுவர்கள் விழுந்து நொறுங்கிக் கிடந்தன. கதிரேசனுக்குக் கண்கள் குளமாகி விட்டன. ஓரளவு நிலைமையை யூகித்துக்கொண்டார். வேலையற்று உணவுக்கே அல்லாடும் பிழைப்பை எத்தனை நாட்களுக்குத் தான் வாழ முடியும்? கண்களை உடைத்துக் கொண்டு இரண்டு சொட்டு நீர்த்துளிகள் கீழே விழுந்தன. நெடுநேரம் அங்கு நிற்க முடியாமல், மனமெங்கும் ஓலக் குரல்கள் கேட்க நகர்ந்து வந்து விட்டார்.

இந்நேரம் அந்தத்தெரு பழையபடி வீடுகளும் மனிதர்களும் நிறைந்து, எல்லாருமங்கு வனப்புடன் வாழ்ந்து., வயல்வெளியெங்கும் உழவும், தொழிலும் செவ்வனே செழித்து, கடைத்தெரு பழையபடி ஜொலித்தால்., நான் இப்படித் தனியனாகவா நின்றிருப்பேன்? ஊரே தூக்கிக் கொண்டாடியிருக்குமே., உறவினர்கள் ஆனந்தத்தில் அழுவார்களே., வயதான கிழவிகள் கன்னம் கிள்ளி கொஞ்சுவார்களே.., எல்லாச் சுகத்தையும் அனுபவிக்க வழியற்றுக் காற்றில் கரைந்த கற்புரமாய் கைநழுவிப் போய் விட்டனவே.
……………………….
கதிரேசனுக்குள் ஒரு வேட்கை, வேகம், வெறி மனதிற்குள் குடிகொண்டு விட்டது. பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். செழிப்பும் கொளிப்பும் மிக்க மண்ணாய் இது மறுபடியும் மாற வேண்டும். கொஞ்சதூரம் யோசனையிலேயே நடந்தவரின் கண்ணில் தூரத்தில் அது பட்டது. வேகவேகமாய் நடந்தார். அடியை எட்டி எட்டிப் போட்டார். உள்ளே பதட்டமும், குதூகலமும் ஒரு சேரக் குதித்தன. நெருங்கியதும் வயதை மீறி பரபரவென ஓடினார்.

ஒரு மா நிலம் வேலியடைத்துப் பச்சைப் பசேலெனப் பயிரிடப்பட்டிருந்தது. கண்களுக்குள் பட்டாம்பூச்சியும், நெஞ்சுக்குள் ஆனந்தமும் ஒரே நேரத்தில் சிறகடித்தன. பூத்திருக்கும் செடிகளையும், படர்ந்திருக்கும் கொடிகளையும் காய்த்திருக்கும் காய்கறிகளையும் மடியில் அள்ளி வைத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது கதிரேசனுக்கு. அருகிலிருந்த குடிசைக்குள் வானொலியில் கரகரவெனச் சப்தத்துடன் “ஆட்டுக்கார அலமேலு” கதைச் சித்திரம் ஒடிக் கொண்டிருந்தது. கதிரேசன் குடிசையை நெருங்கியதும்,
“யாரது?”
கட்டைக் குரலுடன் குடிசையிலிருந்து வெளி வந்தார் ஒருவர். சற்றும் நேரம் கண்களை இடுக்கிக் கூர்ந்து கதிரேசனைக் கவனித்தார்.
“வேதாச்சலம் மாமா… நான் கதிரேசன்!”
“புரியலையேய்யா!…”
புரிய வைக்கத் திணறினார். பின் சுதாரித்து அவர் அப்பாவின் பெயரைச் சொன்னார். சிறிது சிறிதாக தனது நினைவை மீட்டிக் கொண்டு வந்தவர், யாரெனப் புரிப்பட்ட அந்த வினாடியே வாரியிழுத்துக் கட்டிக் கொண்டார்.

“யே.. ராசா… நம்ம கதிரேசனா…? எப்படிய்யா இருக்கே? என்னய்யா எத்தன வருசம் ஆகுது? ஒரேடியா தலமுழுகிட்டுப் போயிட்டியே..” என்று கனிந்து கசிந்தவர், பிறகு அவரது வாழ்க்கை, குடும்பம், பிள்ளைகள் குறித்து குசலம் விசாரித்து மகிழ்ந்தார்.

குடிசைக்குள் சென்று ஊர்க் கதைகளெல்லாம் பேசி முடித்தார்கள். சித்தப்பா இறந்தது., சித்தி இறந்தது., அவர்கள் பிள்ளைகள், அந்தத் தெருவிலிருந்தோர் வேலை தேடி வெளியூர் சென்றது., தான் மட்டும் ஊரை விட்டுப் போக பிடிக்காமல் இந்த வயலில் ஒரு கிணறு வெட்டி, அவ்வப்போது ஊறும் நீரை வைத்துக் காய்கறி பயிரிட்டுப் பிழைப்பதென அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். பேச்சோடுப் பேச்சாக ஆழ்குழாய் கிணறு, போர்வெல் போட்டால் விவசாயம் செய்யுமளவிற்கு தண்ணீர் கிடைக்குமென சொல்லிக் கொண்டி்ருந்தார். பிறகு வாயிற்கும் வயிற்றிற்குமான இக்கட்டு வாழ்வில் அந்தளவிற்குச் செய்ய யாருக்குய்யா வசதி இருக்கிறதென அலுத்துக் கொள்ள, கதிரேசன் மனதிற்குள் பளிச்சென மின்னலடித்தது.
“ஆழ்குழாய் கிணறா? போர்வெல்லா? என்ன செலவாகி விடப் போகிறது? நான் செய்கிறேன்.. தண்ணீர் கிடைக்குமா? சொல்லுங்க மாமா?”
திருப்பிக் கேட்டார்.
“கிடைக்கும்ய்யா. அதை வச்சி எப்படி நிர்வாகம் பண்ணனுமோ அப்படிப் பண்ணினா நிச்சயம் கொறஞ்ச தண்ணில பெரிய வெவசாயம் பண்ணலாம். என்ங்கிட்ட அந்த ஐடியாவெல்லாம் நெறய இருக்குய்யா. நிய்யி நல்லாருப்பே… அந்தத் தண்ணிய மட்டும் கண்டுபிடிச்சி மேல கொண்டு வந்து கொடுய்யா… இந்த ஊரயே பழையபடி சோலையாக்கிக் காட்டுறேன்.”
“நிச்சயம் செய்றேன் மாமா…”
……………..
ஆழ்குழபாய் கிணற்றுப் பணிகள் தொடங்கி விட்டிருந்தன. பூமியைத் துளைத்துக் கொண்டு போனார்கள். அறுநூறு அடிக்கும் மேலாக தண்ணீர் தட்டுப் படுவதாகச் சொன்னார்கள். கடகடவென வேலைகள் முடிந்தன.

ஆழத்திலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு வெளியில் வந்து குபுக்கென விழுந்து முகத்தில் தெரித்த போது கதிரேசன், வேதாச்சலம் மாமா, சுற்றியிருந்தோர் என அனைவருக்கும் ஆனந்தத்தில் கண்கள் குளமாகிவிட்டன. தண்ணீரை வேடிக்கைப் பார்க்க நிறைய பேர் வந்தார்கள். தெருவில் மிச்சமிருந்தோர் செய்தி கேள்விப்பட்டு, கதிரேசனை வந்து பார்த்து ஆனந்தம் கொண்டு அழுதார்கள். நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டது. உள்ளூர் ஆட்களுக்கு வேலை கிடைத்தது. நீர் பாய்ச்சி, நிலத்தை வெட்டி மண்ணைப் புரட்டினார்கள்.

ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் நெல் சாகுபடி செய்வதாகவும், மீதமுள்ள இடங்களில் அதிகம் நீர் தேவைப்படாத பயிரினங்கள் செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டு அதற்கேற்ப வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. பெரும்பாலும் காய்கறிகள், பருத்தி, எள், உளுந்து, சோளம், தட்டைப்பயிறு போன்ற புஞ்சைத் தானியங்கள் பயிரிடப்பட்டன. அதற்கேற்ப தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்.

நீர் மேலாண்மையில் புதிய தொழில் நுட்பம் கையாளப்பட்டது. பெரியகுளம் ஒன்று வெட்டப்பட்டது. கிணற்றிலிருந்து நீர் இறைத்து குளத்தில் சேமிக்கப்பட்டது. பின் அதிலிருந்து நீரை பாத்திகளில் நனையும்படி மட்டும் ஓட விட்டு முழுவதும் ஓடி திரும்பவும் நீர் குளத்திற்கே வந்து சேருமாறு செய்யப்பட்டது. நீர்த் தேவையை முடிந்த மட்டும் குறைக்கும் நுட்பமிது. சில காலத்திற்குள்ளாகவே வறண்டு கிடந்த நிலம் பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கத் தொடங்கிற்று. நெல், காய்கறி, கனிகள், எள், பருத்தியென அனைத்தும் விளைச்சலில் அருமையான மகசூலைத் தந்தன.

காய்கறிகள் வாங்க பெரிய நகரங்களிலிருந்தெல்லாம் வண்டிகளில் களஞ்சியமேட்டிற்கு வந்திறங்கினார்கள். விற்பனை பெருகிற்று. வேலை வாய்ப்பும் பெருகிற்று. கடைத்தெரு பழையபடி களைகட்டத் தொடங்கிற்று. மீதமிருந்த காய்கறிகள் வெட்டிக் காய வைக்கப்பட்டு வற்றலாக்கப்பட்டன. அவை சிறு பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்பட்டன. எதுவும் வீணாய் போனது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் எல்லாவற்றையும் பயன்படுத்தக் கற்றார்கள்.
செய்தித்தாள்கள் சாதனை நாயகர் சுதிரேசன் எனக் கொண்டாடின. கதிரேசனின் நேர்காணல் வராத பத்திரிக்கை, தொலைக்காட்சிகளே இல்லை எனலாம். பேட்டியில் வேதாச்சலம் மாமாவே அனைத்திற்கும் மூல காரணம் எனப் புகழ்ந்து தள்ளினார் கதிரேசன். வறண்ட பூமியில் இந்தக் கேவல வாழ்க்கையை இனியும் வாழ்வதாவென வெறுப்புற்று பிறந்தகத்தை விட்டு வெளியேறியிருந்த வண்டுகள், வெட்டுக்கிளிகள், எலிகள், பாம்புகள், புழுக்கள், பூச்சிகள், ஏன்? மனிதர்களும் கூடக் களஞ்சியமேடு நோக்கி வரத் தொடங்கியிருந்தனர்.

Loading

2 Comments

  1. இயற்கையை நேசித்தால் இயற்கையும் நம்மை அழைக்கும்.

    ஒரு மனிதன் நினைத்தால், மனது வைத்தால் ,வறண்ட பூமியையும் வசந்தம் ஆக்கலாம்.

    களஞ்சியமேட்டை கவித்துவமாக்கிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *