கட்டுரைகள்

அழிக்கப்பட்ட சுயாதீன மாணவர் ஒன்றியமும்… ஜேவிபி படுகொலை செய்த தயா பத்திரனவும்!… நவீனன்.

(பல்கலைக்கழக மாணவ தலைமைகளை கைப்பற்றுவதில் 1985களின் பிற்பகுதியில் ஜேவிபி மும்முரமாக இருந்தது. தங்களை எதிர்த்தவர்களை வகை தொகையின்றி ஜேவிபி அழித்தது வரலாறாகும்.
 
தற்போது தென் இலங்கையில் மாற்றத்தை மையமாகக் கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வரலாற்றின் இருண்ட அத்தியாங்களில் இருந்து பல பக்கங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மைகள் ஒருபோதும் உறங்கப் போவதில்லை)
இரண்டாவது ஜனதா விமுக்தி பெரமுனாவின் 1987-89 கிளர்ச்சிக் காலத்தில் ஜேவிபி நாடு பூராக முழு பல்கலைக்கழக அமைப்பை கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தது. தங்களை எதிர்த்தவர்களை வகை தொகையின்றி ஜேவிபி அழித்தது வரலாறாகும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் தனது கல்விக் காலத்தின் போது தயா பத்திரன சுயாதீன மாணவர் ஒன்றியத்திற்கு முன்னோடியாக இருந்தார். அது மாத்திரமன்றி ஈழப்போராட்டத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தெளிவு படுத்திய ஓர் முற்போக்குவாதியாகவும் விளங்கினார்.
ஈரோசின் மாணவர் அமைப்பான GUYS உடன் இணைந்து மாணவர் எழுச்சிக்காகவும் குரல் கொடுத்து வந்தவர். அத்துடன் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து சுயநிர்ணய கோரிக்கைக்கும் ஆதரவாக குரல் கொடுத்தவரே தயா பத்திரன.
சுயாதீன மாணவர் ஒன்றிய பல்கலைக்கழக கூட்டமைப்பு:
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் கூட்டமைப்பான “சுயாதீன மாணவர் ஒன்றியம்” (ISU) என்பது இலங்கை முழுவதும் உள்ள மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பாகும்.
ஏறக்குறைய எழுபது மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கையில் உள்ள அனைத்து உயர் கல்வி நிலையங்களில் தீவிரமாக செயற்பட்டது. அத்துடன் ISU என்பது இலங்கையில் உள்ள முழு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தலைமைத்துவம் அளிக்கப்படும் அமைப்பாகவும் விளங்கியது.
1985களில் இலங்கையின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகவும், அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் உட்பட 15 உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் நடவடிக்கை குழுக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தியது.
தயா பத்திரன படுகொலை ஏன்?
தயா பத்திரன 1985-1986 காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுயாதீன மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தார். ஜனதா விமுக்தி பெரமுன சார்பு செயற்பாட்டாளர்களாலும், ஜேவிபி பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தயா பத்திரன கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு எதிப்புகளை முகம் கொண்டார்.
தயா பத்திரன இடதுசாரியாக இருந்தாலும், இலங்கையில் மாணவர் சங்கங்களின் மீது கிட்டத்தட்ட முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட்-லெனினிச அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா வனமுறையை அவர் கடுமையாக எதிர்த்தார்.
எனவே அவரும் அவர் தலைமையிலான சுயாதீன மாணவர் ஒன்றியமும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் 1987-1989 ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் மிகவும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது.
தயா பத்திரனவின் படுகொலை 1986 டிசம்பர் 15 இல் இடம்பெற்றது. இந்த படுகொலை 1987-1989 ஜனதா விமுக்தி பெரமுனா கிளர்ச்சியின் ஒரு முக்கிய சம்பவமாக விளங்கியது.
ஏழ்மையான இடதுசாரி மாணவர்:
அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பை மாணவர்களின் பொது அரசியல் முகமாக ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைமையால் ஒதுக்கப்பட்டதால், ஜேவிபி முழு பல்கலைக்கழக அமைப்பையும் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தது.
கலாநிதி தயான் ஜயதிலகா எழுதிய Sri Lanka: The Travails of Unfinished War, Protracted Crisis (1995) என்ற புத்தகத்தில், தயா பத்திரன மிகவும் ஏழ்மையான மாணவர், தீவிர இடதுசாரி என்று விவரித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் அன்று, அவர் சோமசிறி என்ற சக மாணவருடன் பிலியந்தலை, போல்கொட ஏரிக்கு அப்பால் தனிமையான இடத்திற்கு கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் மாணவர் மற்றும் இடதுசாரி ஆர்வலர்கள் பற்றிய தகவல்களைக் கோரி அவரையும் சோமசிறியையும் சித்திரவதை செய்தனர்.
இதனை யாத்ரீகர்கள் குழு ஒன்று குறுக்கிட்டு அன்று பௌர்ணமி தினமாக இருந்ததால் சோமசிறியின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால் அந்த இடத்தில் பத்திரனவின் தொண்டை அறுக்கப்பட்டு, இறுதியில் அவர் 1986 டிசம்பர் 15 இல் படுகொலை செய்யப்பட்டார்.
இதுவே 1987-89 ஜனதா விமுக்தி பெரமுனா கிளர்ச்சியின் முதல் இலக்கு வைக்கப்பட்ட கொலையாக கருதப்படுகிறது. ஜனதா விமுக்தி பெரமுனவின் கிளர்ச்சியின் போது
60,000 பேர் இறந்தனர்.
ஜனதா விமுக்தி பெரமுனா அதன் முந்தைய காலங்களில் இடதுசாரி அரசியலில் இருந்து வந்த தயா பத்திரன மற்றும் விஜய குமாரதுங்க போன்ற தீவிர பிரமுகர்களைக் கொன்று வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
தோல்வியடைந்த கிளர்ச்சியின் ஆறு வருடங்களின் பின்னர் 1996 இல், பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தயா பத்திரன கொலையில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் கூட்டமைப்பான ‘சுயாதீன மாணவர் ஒன்றியம்’ என்பது இலங்கை முழுவதும் உள்ள மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பாகும்.
இலங்கையில் உள்ள மிகப்பெரிய மாணவர் அமைப்பாகவும், உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் குழுக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தியது.
1985களில் ISU ஆனது இலங்கை முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களின் முக்கிய
நடவடிக்கைக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல மாணவர் சங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பில் களனி பல்கலைக்கழகம்,பேராதனை பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், ருஹுணு பல்கலைக்கழகம்,இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்,தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம்,பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் உறுப்பினர்களாக இருந்தனர்.
சுயாதீன மாணவர் ஒன்றிய வரலாறு:
சுயாதீன மாணவர் ஒன்றியம் 1969 ஜூன் 18 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. முதலாவது பொதுக்கூட்டம் பேராதனைப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு துணைவேந்தர் பேராசிரியர் இ.ஓ.ஈ.பெரேரா நிதியளித்து உரையாற்றினார்.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மல்கம் விஜேசிங்க ISU இன் முதலாவது ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அவர் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முற்போக்கு மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்தார்.
1976 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ரோகண வீரசூரிய பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.
வீரசூரியவின் படுகொலையுடன், ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) க்கு விசுவாசமான மாணவர் குழுக்கள், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் வசம் இருந்த ஐஎஸ்யின் கட்டுப்பாட்டைப் பெற முயன்றது.
ஆனாலும் ஜே.வி.பி சோசலிச மாணவர் ஒன்றியத்தின் ISU மீதான கட்டுப்பாட்டை முழுமையாக கைப்பற்ற 1976 முதல் 2012 வரை முயன்றது.
ஜே.வி.பி சோசலிச மாணவர் சங்கத்தின் பத்து உறுப்பினர்களும், முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் புரட்சிகர மாணவர் சங்கத்தின் சுமார் 35 உறுப்பினர்களும் பல்கலைக்கழகங்களில் முழு நேர அரசியலில் ஈடுபட்டனர்.
1977இல் இடதுசாரி வெகுஜன இயக்கத்தின் உருவாக்கத்துடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மாணவர் சாந்த பண்டார, ISU சீர்திருத்தங்களுக்குப் பிறகு அதன் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீண்ட காலமாக ஜேவிபி நாடு பூராக முழு பல்கலைக்கழக அமைப்பையும் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தது. தங்களை எதிர்த்தவர்களை வகை தொகையின்றி ஜேவிபி அழித்தது வரலாறாகும். ஆயினும் மாணவர் எழுச்சிக்காகவும் குரல் கொடுத்து வந்ததுடன், தமிழ் மக்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கும் ஆதரவாக குரல் கொடுத்த தயா பத்திரன படுகொலையானது சுயாதீன மாணவர் சமுதாயத்தை சிதைத்து என்றே கருதலாம்.
தென் இலங்கையில் மாற்றத்தை மையமாகக் கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வரலாற்றின் இருண்ட அத்தியாங்களில் இருந்து பல பக்கங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மைகள் ஒருபோதும் உறங்கப் போவதில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *