மாகாணசபை முறையை இல்லாமலாக்குவதற்கு இந்தியாவின் அனுமதியின்றி ’13ஐ’ நீக்க முடியாது
இந்தியாவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவர்களின் ஒப்புதலின்றி நீக்குவதென்பது இலங்கை அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடாக அமையுமெனவும் முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு பாராதூரமான விளைவை ஏற்படுத்துமெனவும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறை இல்லாமலாக்கப்படுமெனவும் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் ஜே.வி.பி. இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இந்தியாவின் அனுசரணையை பெறாமல் இவ்வாறான கருத்தை வெளிப்படுத்துவது கவலையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ரில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்தானது, அச்சட்டம் தொடர்பில் அவரின் தெளிவின்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் போரிட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில், 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக மாகாணசபை முறை இந்தியாவின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டது. 13 ஆவது திருத்தச் சட்டம் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் தேவையில்லாதது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அது தேவையாக இருந்தாலும் அதனை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கொண்டு வந்தமையால் எங்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் முழு நாட்டுக்கும் ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக ரில்வின் சில்வா குறிப்பிடுவது, தமிழ் மக்களுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். முழு நாட்டிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, முழு நாட்டையும் ஒரே விதமாக ஆள முற்படும் போது தமிழ் மக்களின் அடையாளம் சிதையும் நிலை ஏற்படும். அதன்மூலம் பெரும்பான்மையினருடன் சிறுபான்மையினரை உள்ளடக்குவதற்கு முயற்சிக்கின்றார்களா என தெரியவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் இருக்கும் இடங்களில் சிங்களவர்களை குடியேற்றி ஐக்கியத்தை உருவாக்கி தமிழர்களின் அடையாளத்தை இல்லாமலாக்குவதே இவ்வாறான நடவடிக்கையின் பின்னணியாக கருத வேண்டியுள்ளது.
இந்தியா சர்வதேச ரீதியாக கொண்டு வந்த ஒரு சட்டத்தை தான்தோன்றித்தனமாக இலங்கை அரசாங்கம் மாற்ற முடியாது. வட, கிழக்கு இணைப்பை இல்லாமலாக்குவதற்கு இந்த ஜே.வி.பியே முன்னின்று செயற்பட்டது.
13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்குவது தமிழர்களுக்கு நன்மை பயக்குமென கூறுவதானால், தமிழர்களுக்கு சமஷ்டி முறையை வழங்குவதே ஏற்புடையதாகும். 13 ஆவது திருத்தச் சட்டம் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதே எங்களுக்கு பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
நான் வட மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது முதல் வருடத்தில் 12 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிய போதும் 1650 மில்லியன் நிதியே வழங்கப்பட்டது. எங்களை எல்லா வழியிலும் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் அமைந்துள்ளது. அரசாங்கத்தினுடைய முகவராக செயற்படும் ஆளுநரிடையே நிதி தொடர்பான அதிகாரங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல குறைபாடுகள் இருக்கும் நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குப் பதிலாக அவர்கள் எதை கொண்டு வர போகிறார்கள் என்பதே முக்கியமானதாகும். அவ்வாறு கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டமும் இந்தியாவுடன் கலந்துரையாடியே மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் அனுசரணையை புறந்தள்ளி தங்களது விருப்பத்துக்கேற்ற வகையில் செயற்படுவது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பதிலாக தமிழர்களுக்கு எவ்வாறான தீர்வை வழங்கப் போகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதன் மூலமே இந்தியாவுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமலாக்கி தாங்கள் விரும்பும் அரசியல் முறைமையை தந்தால், மோசமான நிலையை தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
![]()