தேசிய பட்டியல் ஆசனங்கள் பகிரப்படுவது இவ்வாறுதான்!

2024 பொதுத் தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான, குறித்த அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருமாறு அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி இன்று (17) தனது கட்சியின் தேசியப் பட்டியலை அறிவிக்க உள்ளது.

மேலும் இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசிய பட்டியலிலிருந்து 05 பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ள நிலையில், அதற்காக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி 02 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளதுடன், அந்த பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

கொழும்பு மால் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் வைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ள நிலையில், அதற்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பான நாமல் ராஜபக்ஷவை நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது.

இம்முறை புதிய கட்சியாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட சர்வஜன அதிகாரம் ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரையும் வென்றுள்ளது.

கட்சியின் தேசிய செயற்குழு நாளை கூடி தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் தலா ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி கிடைத்துள்ள நிலையில், தனது தேசியப் பட்டியல் உறுப்பினர் யார் என்பதை நாளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அறிவிக்க உள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *