முச்சந்தி
இத்தாலியில் ஜி7 – மாநாடு : முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள். உக்ரேன் போருக்கு மேலும் நிதியுதவி!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

மேற்குலக நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியளிப்பதில் அந்த நாடுகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய சொத்துக்கள் முடக்கம்:
இதனை நிவிர்த்தி செய்ய தத்தமது
நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நீண்ட காலமாகவே கூறிவந்தனர்.
நீண்டகாலமாக ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா செய்துள்ள முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தங்கள் மீதே தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது திருட்டுச் செயலுக்கு சமம் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சொத்துகளை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். அது, அந்த நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஆயினும், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு போரில் உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க ஜி7 தலைவர்கள் தற்போது இணங்கியுள்ளனர்.
இத்தாலியில் ஜி7 மாநாடு :
இந்த நிலையில் ஜி 7 நாடுகளினது தலைவர்கள் பங்கேற்கும் ஐம்பதாவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள பசானோ நகரில் ஆரம்பமானது.
உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 மாநாடு இத்தாலியில்
வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
ஜி7 கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் மாநாட்டினை
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமை தாங்கினார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர்ரிஷி சுனக், ஜேர்மனி பிரதமர் ஓலஃப் ஷால்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகி யோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
அத்துடன் ஜி7 அமைப்பின் சிறப்பு உறுப்பினராகத் திகழும் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயின், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷெல் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி, துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்களும் போப்பாண்டவர் பிரான்சிஸூம் கலந்து கொண்டனர்.
ஐ.நா. பொதுச் செயலர்அன்டோனியோ குட்டெரெஸ், உலக வங்கி தலைவர், சர்வதேச நிதியத் தலைவர் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
ஜூன் 15 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் காசா போர், உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ரஷ்ய வங்கியின் 200 பில்லியன் யூரோ முடக்கம்:
உக்ரைன் மீது ரஷ்யா அதன் போரை தொடங்கியதிலிருந்து ரஷ்ய மத்திய வங்கியின் 200 பில்லியன் யூரோ சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்ய மத்திய வங்கி சொத்துக்களில் €200 பில்லியனுக்கும்
அசையாமல் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையின் பிறகு தடுத்துவைக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய தகவல்கள் பல வெளியாகின.
உக்ரைனில் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈட்டை ரஷ்யா செலுத்துவதை உறுதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதிபூண்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக ரஷ்யாவின் முடக்கப்பட்ட மற்றும் அசையாத சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வந்தது.
ரஷ்ய சொத்துகளின் இலாபம் :
ஐரோப்பாவிலும் , அமெரிக்காவிலும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு 50 பில்லியன் டொலர் கடனுதவி அளிக்க இந்த ஜி7 மாநாட்டின் முதல் நாளில் உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அதன் நான்கு பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.
ரஷ்ய மத்திய வங்கியின் பணம் ஏறத்தாழ 280 பில்லியன் டாலருக்கு மேலாக மேற்குலக நாடுகளில் உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது படையெடுத்ததால் அவை முடக்கப்பட்டுள்ளதகாவும் அமெரிக்க அரசு தெரிவித்தது.
இச் சொத்துகளில் பெரும்பாலானவை ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் உறுப்பு நாடுகள் சமீபத்தில் இந்த பணத்திற்கு வருகிற வட்டியை உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க அனுமதி வழங்கியுள்ளன.
இன்னும் சில மாதங்களில் இந்த கடன் உக்ரைனுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. வட்டிப் பணம் மட்டுமில்லாத ரஷ்யாவின் முழு சொத்துக்களையும் உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க அமெரிக்கா கோரியுள்ளது.
உக்ரேனிய போரின் திசை மாறுமா ?
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தனது ராணுவத்தை பலப்படுத்திக்கொள்ளவும் உள்கட்டமைப்பை சீராக்கவும் இந்த பொருளாதார உதவி அளிக்கப்படவுள்ளது. ஆயினும் இத்தகைய உதவிகள் போரின் திசையை எவ்வழியில் மாறும் என்பதை கூற முடியாது.
உக்ரைனுக்கு ஆதாயமாகும் ரஷ்ய சொத்துகளை வழங்க ஜி7 நாடுகளின் தலைமை முடிவு எடுத்தாலும், ஐரோப்பாவில் பல நாடுகளில் உதவியை நிறுத்த மக்கள் கோரியுள்ளனர். நீண்டு செல்லும் இந்த யுத்தத்தால் மேற்குலக நாடுகளில் உள்ள ஆயுத வியாபாரிகளே இலாபம் அடைகின்றனர் என்ற பாரிய குற்றச்சாட்டும் உள்ளது.
ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து 50 பில்லியன் டாலரை உக்ரைனுக்கு உடனடியாக வழங்கினால் போரில் தாங்கள் நின்று பிடிக்கலாம் எனவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது. ஆயினும் மேற்குலகின் போருக்கான பணம் உக்ரேனிய தலைமைகளால் பல நாடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன என்ற தகவல்களும் கசிந்துள்ளன.
![]()