முச்சந்தி
ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தீவிர வலதுசாரிகள் வெற்றி! பிரான்ஸில் இமானுவேல் மேக்ரான் ஆளும் கட்சியும் தோல்வி!! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் சமீபத்தில்
நடந்து முடிந்தது. இத்தேர்தலின் தோல்வி காரணமாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் பிரான்சிலும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான ஆளுங்கட்சி ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
பிரான்சில் அவரது மறுமலர்ச்சி கட்சி சுமார் 15 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததுள்ளது.
கடந்த வாரம் ஞாயிறன்று (9/6/24)முடிவடைந்த ஐரோப்பிய ஒன்றிய (European Union) நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் பல இடங்களில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இதில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டுள்ளார் என்றே தெரிய வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்தமுள்ள 27 நாடுகளில், கடந்த 2019 தேர்தலை விடவும் தீவிர வலதுசாரிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக தற்போது கூறப்படுகிறது.
குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகள் முதலிடத்தை தக்கவைக்க, ஜேர்மனியின் AFD இரண்டாமிடத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பாவின் தீவிர வலதுசாரி கட்சிகள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
நெதர்லாந்திலும் தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே, தீவிர வலதுசாரிகளின் வெற்றி ஆபத்தை நோக்கி என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் தீவிர வலதுசாரி அமைப்புகளான ID மற்றும் ECR ஒன்றிணைந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய அமைப்பாக மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ECR அமைப்பை சேர்ந்த கட்சியே தற்போது இத்தாலியில் ஆட்சியில் உள்ளது. இத்தாலிய தீவிர வலதுசாரி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி தேர்தலில் முதலிடம் பிடித்துள்ளது.
இனி தீவிர வலதுசாரிகளின் செல்வாக்கு அதிகமாக இருந்தாலும்
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சலா வான் லெயன் (Ursula von der Leyen) மேலும் 5 ஆண்டுகளுக்கு அதே பொறுப்பில் நீடிப்பார் என்றே தெரிய வந்துள்ளது.
மொத்தம் 360 மில்லியன் தகுதியான வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு 51 சதவீதம் என்றே கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவென்றும் கூறப்படுகிறது.
27 நாடுகளின் ஐரோப்பிய ஒன்றியம்:
1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன.
ஐரோப்பிய ஒன்றியம் (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும்.
ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
யூரோ பொது நாணயம்:
பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது.
அத்துடன் 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் “நோட்டோ” (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா:
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் இந்த தோல்வியை அடுத்து பிரான்சிலும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரான்ஸ், பெல்ஜியம் உள்பட 27 நாடுகள் கலந்து கொண்டன. இது இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-வது மிகப்பெரிய நாடாளுமன்ற தேர்தல் ஆகும். எனவே இந்த தேர்தல் அங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தேர்தலில் பெல்ஜியம் நாட்டின் ஆளுங்கட்சியான பிளெமிஷ் தாராளவாத – ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதில் அந்த கட்சி வெறும் 5.8 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். எனினும் தேர்தலில் மிக மோசமாக தோல்வியை தழுவியதால் இதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக அவர் கூறினார்.
மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்தார். அதன்படி பெல்ஜியம் மன்னர் பிலிப்பை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். அவர் ஒப்புதல் அளித்தவுடன் பிரதமர் அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகுவார் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் இம்மானுவேல் மேக்ரான் ஆளும் கட்சி தோல்வி:
அதேபோல் பிரான்சிலும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான ஆளுங்கட்சி ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அவரது மறுமலர்ச்சி கட்சி சுமார் 15 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தது.
இதனால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இந்த மாத இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தநிலையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்த முடிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் உண்மையே.
![]()