முச்சந்தி
‘ஸ்ரெப்ரெனிகா’ இனப்படுகொலை மீதான ஐ.நா. தீர்மானம் : போஸ்னியாவில் உருவாகிய ஸ்ர்ப்ஸ்கா -Srpska குடியரசு! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(1995 ஆம் ஆண்டு ஸ்ரெப்ரினிகாவில் நடந்த இனப்படுகொலையின் நினைவாக ஜூலை 11 ஆம் தேதியை சர்வதேச தினமாக பிரகடனப்படுத்த
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் எதிர்பார்க்கப்படுகிறது)
முன்னாள் யூகோஸ்லாவியா மக்களுக்கு அவர்களின் சமத்துவ கொள்கைகள் கொண்டு வந்த அரசியலை சமாளிக்க முடியாமல் தற்போது இந்த பால்கன் (Balkan Countries) நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.
தவறான ஆபத்தான இனவாத அடித்தளத்தை நம்பியிருக்கும் பால்கன் நாட்டின் தலைமைகளால் தொடர்ந்தும் குரோதமும், விரோதமும் தீவிரம் பெற்று வருகிறது.
1990களின் நடுப்பகுதியில் உலகை உலுக்கிய ‘ஸ்ரெப்ரெனிகா’ இனப்படுகொலையை அங்கீகரிப்பது தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் தீர்மானம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இவ்வருட ஏப்ரல் மாதம் ஸ்ரெப்ரினிகா இனப்படுகொலையை (Srebrenica genocide) நினைவுகூரும் ஐ.நா தீர்மானத்தை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டதற்கு எதிராக செர்பியா அரசும், ஸ்ர்ப்ஸ்கா குடியரசுத் தலைவர்களும் கடும் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அத்துடன் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை நினைவுகூரும் ஐ.நா தீர்மானத்திற்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள் செர்பியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்துள்ளன.
அத்துடன் தண்டனை பெற்ற போர்க் குற்றவாளியான முன்னாள் செர்பிய ஜெனரல் ரட்கோ மலாடிக்கை ஆதரித்தும் மக்கள் கோஷமிட்டுள்ளனர்.
ஐநா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு போஸ்னியா – செர்பியாவுடன் பாரிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ர்ப்ஸ்கா குடியரசு அங்கீகரிகாரம்:
ஸ்ர்ப்ஸ்கா குடியரசுயானது (Republic of Srpska) 1992 இல் போஸ்னியப் போரின் தொடக்கத்தில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் வாழும் செர்பியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிராந்தியமாகும்.
ஆயினும் இதுவரை ஐநாவால் அங்கீகாரமற்ற நாடாக உள்ளது. 1990களின் ஆரம்பத்தில்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா கூட்டமைப்பிலிருந்து
வெளியேற்றப்பட்ட செர்பியர்களின் வருகையால் ‘ஸ்ர்ப்ஸ்கா குடியரசு’ இதுவரை முழுமையான தேச உரிமை அற்று உள்ளது.
1995 ஆம் ஆண்டில் பால்கன் போரில் ‘டேட்டன் ஒப்பந்தத்தை’ தொடர்ந்து, ஸ்ர்ப்ஸ்கா குடியரசு போஸ்னியா – ஹெர்சகோவினாவிற்குள் ஒரு சுயாட்சி் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது.
இன்றய போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் செர்பிய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஸ்ர்ப்ஸ்காவிலேயே வாழ்கின்றனர்.
ஸ்ர்ப்ஸ்கா குடியரசு ஒரு பாராளுமன்ற சுயாட்சி அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. தேசிய சட்டமன்றம் நிறுவனத்திற்குள் ஆளும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
ஸ்ர்ப்ஸ்கா குடியரசு 64 நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அதன் அரசியலமைப்பின் படி, ஸ்ர்ப்ஸ்கா குடியரசு அதன் சொந்தத் தலைவர், 83 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ர்ப்ஸ்கா குடியரசில் தேசிய சட்டமன்றம், நிர்வாக அரசாங்கம், காவல்துறை, நீதிமன்ற அமைப்பு, சுங்கச் சேவை, அஞ்சல் சேவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சுயாட்சி அரசியலமைப்பு:
ஸ்ர்ப்ஸ்கா குடியரசு அரசியலமைப்பு ரீதியாக சரஜேவோவை ஸ்ர்ப்ஸ்காவின் தலைநகராகக் குறிப்பிடுகிறது என்றாலும், வடமேற்கு நகரமான பஞ்ச லூகா பாராளுமன்றம் உட்பட பெரும்பாலான அரசாங்க நிறுவனங்களின் தலைமையகமாகும். எனவே இது நடைமுறை தலைநகராகும்.
பால்கன் போருக்குப் பிறகு, ஸ்ர்ப்ஸ்கா குடியரசு சில காலம் தனது இராணுவத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் ஆகஸ்ட் 2005இல் ஸ்ர்ப்ஸ்காவின் இராணுவத்தின் கட்டுப்பாட்டை மாநில அளவிலான காவல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.
அத்துடன் ஸ்ர்ப்ஸ்கா குடியரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இராணுவத்தை ஜனவரி 1, 2006 க்குள் அகற்றவும் ஒப்புதல் அளித்தது. மேற்குலகின் ஆதிக்க மனப்பான்மையில் நேட்டோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் அமைதிக்கான கூட்டாண்மை திட்டத்திற்கு முன்நிபந்தனையாக உள்ளது.
1995 ஸ்ரெப்ரினிகா இன படுகொலை:
1995 ஆம் ஆண்டு ஸ்ரெப்ரினிகாவில் நடந்த இனப்படுகொலையின் நினைவாக ஜூலை 11 ஆம் தேதியை சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு செர்பிய தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vucic) இதனை எதிர்த்து கடைசி தருணம் வரை போராடுவேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெர்மனி மற்றும் ருவாண்டாவால் தொடங்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, வடக்கு மாசிடோனியா, சிலி, அயர்லாந்து மற்றும் பல நாடுகளால் இணைந்து அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டில், ஹேக்கில் உள்ள முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICTY) ஜூலை 1995 இல் ஸ்ரெப்ரெனிகாவில் செர்பியப் படைகளால் செய்யப்பட்ட குற்றங்கள் இனப்படுகொலை என்று தீர்ப்பளித்தது. சர்வதேச நீதிமன்றம் (ICJ) இந்தத் தீர்ப்பை 2007 இல் உறுதி செய்தது.
போஸ்னிய முஸ்லிம் படுகொலை.
பால்கன் போரில் 7,000 முதல் 8,000 போஸ்னிய முஸ்லிம் கைதிகள் கொல்லப்பட்டது இனப்படுகொலை என்பதை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி தீர்ப்பாயம் நிறுவியது.
2015இல், ஐக்கிய இராச்சியம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் நினைவாக ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதனை ரஷ்யாவால் வீட்டோ செய்யப்பட்டு, அதை ஐநா ஏற்றுக்கொள்வதைத் தடுத்தது.
ஐநா தீர்மானம் என்ன சொல்கிறது?
ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு தண்டனை பெற்றவர்களின் செயல்களை கடுமையாக கண்டிக்கிறது என அத்தீர்மானம் தெரிவிக்கிறது.
ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவரும், ஸ்ரெப்ரெனிகா நினைவு மையத்தின் கண்காணிப்பாளருமான அசிர் ஒஸ்மானோவிக், கடந்த மாதம் ஒரு உரையில் இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
போரின் போது ஸ்ரெப்ரெனிகாவில் சிறுவயதில் தனது கொடுமையான அனுபவத்தை விவரித்த அவர், “எங்கள் போராட்டம், துரதிர்ஷ்டவசமாக, இன்னும் வெகு தொலைவில் உள்ளது. நாம் இரக்கமற்ற இனப்படுகொலை மறுப்பு, வரலாற்று திருத்தம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வன்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறோம்.
ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை ஒரு உலகளாவிய சோகமாக சர்வதேச அங்கீகாரம், இந்த கொடூரத்தை்
தடுக்க உதவும் மற்றும் உலகளாவிய விழிப்புணர்வு மூலம், உலகில் வேறு எந்த சமூகமும், இக்கோரங்களை பகிர்ந்து கொள்ள வராது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரினார்.
செர்பிய மறுப்பு நிலை :
ஸ்ர்ப்ஸ்கா குடியரசு இன் தலைவரும், Srebrenica இனப்படுகொலையின் வழக்கமான மறுப்பாளருமான Milorad Dodik, செர்பிய மக்களை அடிமை மயமாக்கும் இலக்கைக் கொண்ட போஸ்னிய அரசியல்வாதிகள் மற்றும் மேற்குலகில் இருந்து அவர்களின் ஆதரவாளர்களின் ஆத்திரமூட்டல்களை உள்ளடக்கியதாக தீர்மானம் உள்ளது என்றார்.
இனப்படுகொலை நடக்கவில்லை என்று செர்பியர்கள் கூறுகிறார்கள். நாங்கள் எந்த தீர்மானங்களையும் ஏற்கவில்லை. அது பற்றிய எந்த ஊகமும் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச இனப்படுகொலை வழக்குகள்:
கடந்த காலத்தில் பல சர்வதேச இனப்படுகொலை வழக்குகள் நடந்துள்ளன.குறிப்பாக 2019 இல், ரோஹிங்கியாவுக்கு எதிரான இனப்படுகொலைக்காக காம்பியா மியான்மர் மீது வழக்கு தொடர்ந்தது.
2023 இறுதியில் தென்னாப்பிரிக்கா அரசு பாலஸ்தீன காசா தொடர்பான இனப்படுகொலைக்காக இஸ்ரேலுக்கு எதிராக ஒரு சட்ட வழக்கைத் தொடங்கியதும் அறிந்ததே.
![]()