இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு நியூயோர்க்கில் பாதுகாப்பு உச்சம்!
நியூயோர்க்கில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண ஆரம்ப சுற்று போட்டிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எய்சன்ஹோவர் பார்க் அரங்கில் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் உளவுத் தகவல்கள் அடிப்படையில் தற்போதைய சூழலில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எய்சன்ஹோவர் பார்க் அரங்கில் எதிர்வரும் ஜூன் 3 தொடக்கம் 12 ஆம் திகதி வரை எட்டு உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி அதிக அவதானத்தை பெற்றுள்ளது.
இந்த போட்டிகளை சீரான வகையில் நடத்துவதற்கு பல மாதங்களாக சட்ட அமுலாக்கல் பிரிவுடன் இணைந்து பணியாற்றுவதாக நியூயோர்க் மாநில ஆளுநர் கத்தி ஹோசுல் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் முழுமையான ஸ்கிரீனிங் நடைமுறை, சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை உயர்த்துவதற்கு நியூயோர்க் பொலிஸாருக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன்’ என்று அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த அச்சுறுத்தல் குறித்து எந்த நம்பகரமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதும், நியூயோர்க் மைதானம் உட்பட தொடர் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்க நேரப்படி எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
![]()