காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல்!

காசாவின் எகிப்துடனான மூலோபாயம் மிக்க இடைவழி நிலப்பகுதி ஒன்றை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல் நேற்று (30) தூர தெற்கு நகரான ரபா மீது கடுமையான பீரங்கி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியிலும் காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபா மீது இஸ்ரேல் இராணுவம் இந்த மாத ஆரம்பத்தில் படையெடுப்பை தொடங்கியது.
கடந்த ஒரு சில நாட்களாக எகிப்து எல்லையை ஒட்டிய அந்த நகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு அங்கு அடைக்கலம் பெற்றிருக்கும் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எகிப்து–காசா எல்லையை ஒட்டிய 14 கிலோமீற்றர் நீளமான பிலடெல்பி இடைவழி நிலத்தை கைப்பற்றியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. குறுகலான எல்லை பகுதியின் ‘செயல்பாட்டு கட்டுப்பாட்டை’ இஸ்ரேல் கைப்பற்றியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி குறிப்பிட்டுள்ளார். இங்கு சுமார் 20 சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
‘பிலடெல்பி இடைவழி நிலப்பகுதி ஹமாஸுக்கான ஒட்சிசனாக செயற்படுகிறது. இது காசாவுக்கான ஆயுதங்களை கடத்தும் இடமாகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது’ என்று ஹகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இங்கு கடத்தல் சுரங்கப்பாதைகள் இயங்குவதை எகிப்து மறுத்துள்ளது. ‘பலஸ்தீன நகரமான ரபா மீதான நடவடிக்கையைத் தொடர்வதையும், அரசியல் நோக்கங்களுக்காக போரை நீடிப்பதையும் நியாயப்படுத்த இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகிறது’ என்று எகிப்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அந்நாட்டு அரசுடன் தொடர்புபட்ட அல் கஹேர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த பிலடெல்பி இடைவெழி நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே 1979 இல் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கையை மீறுவதாக இருக்கக் கூடும் என்றும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு குறித்து எகிப்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் வெளியிடவில்லை.
பீஜிங் சென்றிருக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, முற்றுகை காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வலியுறுத்தியதோடு, பலஸ்தீனர்கள் தமது சொந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் எந்த ஒரு முயற்சியையும் எதிர்ப்பதாக, எகிப்தின் நீண்ட கால கொள்கையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
காசாவில் தெற்கு முனையில் உள்ள எகிப்துடனான எல்லை, இஸ்ரேலின் நேரடி கட்டுப்பாடு இல்லாத காசாவின் ஒரே நில எல்லையாகவே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. தீர்மானம்
மத்திய மற்றும் மேற்கு ரபாவில் மோதல் இடம்பெற்று வருவதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே 7 ஆம் திகதி ரபா மீதான படையெடுப்பை ஆரம்பித்த இஸ்ரேல் ஆரம்பத்தில் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றியதோடு அந்த நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கட்டடங்களை அழித்து வருவதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த புதனன்று ராபவுக்கு டாங்கிகளை அனுப்பி சுற்றிவளைப்புகளை நடத்திய இஸ்ரேல், கடந்த செவ்வாயன்று அந்த நகரின் மையப் பகுதிக்கு முதல் முறை முன்னேறி இருந்தது. ரபா மீதான தாக்குதலை உடன் நிறுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலேயே இஸ்ரேல் அங்கு படையெடுப்பை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் ரபாவில் அடைக்கலம் பெற்றுள்ள பலஸ்தீனர்கள் தமது உடைமைகளை சுமந்தபடி மீண்டும் ஒருமுறை வெளியேறி வருகின்றனர். ரபா தாக்குதலுக்கு முன் அங்கு 1.4 மில்லியன் மக்கள் இருந்த நிலையில் அது தொடக்கம் ஒரு மில்லியன் பேர் வரை வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரபா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் முற்றுகையில் உள்ள காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் மூன்றில் இரண்டு பங்கு குறைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
‘காசாவுக்குள் நுழையும் உணவு மற்றும் ஏனைய உதவிகளின் அளவு, ஏற்கனவே உயர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை, மே 7 முதல் அது மேலும் சுருங்கிவிட்டது’ என்று ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
‘ரபா எல்லைக்கடவை மூடப்பட்டு, கெரெம் ஷலோம் எல்லைக் கடவையில் இருந்து பாதுகாப்பாக மற்றும் தொடர்ச்சியாக பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை மற்றும் ஏனைய வாயில்களில் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்களே இடம்பெறுவதன் காரணமாக உதவி விநியோகங்கள் குறைந்துள்ளன’ என்றும் அது சுட்டிக்காட்டியது. ரபாவுக்கு அருகில் அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதலில் தமது இரு துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
காசா நகரின் தெற்கு பகுதியான செய்தூனில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்று வருவதோடு கறும்புகை எழுந்து வருவதாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவின் மத்திய பகுதியில் கடந்த 16 நாட்களாக முன்னேறி வரும் இஸ்ரேலிய படை தற்போது ஜபலியா அகதி முகாம், ஷெய்க் சயித் மற்றும் பெயித் லஹியா பகுதிகளை கட்டுப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா நகரின் டால் அல் ஹவா பகுதியில் இஸ்ரேலின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் நேற்று மூவரை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீதியிலேயே இவர்கள் சுடப்பட்டிருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் சகூத் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்ததாக வபா கூறியது.
கடந்த எட்டு மாதங்களாக நீடித்துவரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் ‘அனைத்துத் தரப்புகளும் மதிக்கக்கூடிய போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கக் கோரும் ஐ.நா நகல் தீர்மானம் ஒன்றை அல்ஜீரியா கொண்டுவந்தபோதும், அது பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்புக்கு செல்வதில் உறுதியற்ற நிலை நீடித்து வருகிறது.
கடந்த புதனன்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், ரபா தொடர்பில் வலுவான அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு பிரான்ஸ், அல்ஜீரியாவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி முடங்கி இருப்பதோடு, ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முடியாதவரை பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
![]()