வாகனங்களை மோதித் தள்ளி தப்ப முயன்ற கார் ஓட்டுநர் கைது!
வாகனங்களை மோதித் தள்ளி காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த காருக்குப் பின்னால் இருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இக்காட்சி பதிவானது.
அட்மிரல்ட்டி சாலைக்கும் மார்சிலிங் லேனுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் சிவப்பு போக்குவரத்து விளக்கில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன.
அவற்றில் இருண்ட நிற மிட்சுபிஷி காரும் ஒன்று.
அப்போது சாம்பல் நிற டீ-சட்டை அணிந்த ஆடவர் ஒருவர் அங்கு ஓடி வந்து அவ்விடத்தைவிட்டு நகர வேண்டாம் என்று அங்கிருந்த வாகன ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டார்.
அங்கிருந்த இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் அவர் சொன்னபடி செய்தனர்.
போக்குவரத்து விளக்கு பச்சை நிறுத்துக்கு மாறிய பிறகும் அவை அங்கேயே இருந்தன.
இதைப் பார்த்த அந்த மிட்சுபிஷி கார் ஓட்டுநர் தமது வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்தினார். பிறகு அந்த இரு லாரிகளுக்கும் இடையில் இருந்த இடைவெளி வழியாகச் செல்ல முயன்றார்.
ஆனால் அவருக்குத் தடையாக அந்த சாம்பல் நிற டீ-சட்டை ஆடவர் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிக்க அந்த மிட்சுபிஷி கார் அந்த லாரிகள் மீது மோதியது. ஆனால் அவற்றைக் கடந்து செல்ல முடியவில்லை.
அப்போது காவல்துறை அதிகாரிகள் அவ்விடத்தை அடைந்தனர்.
அவர்கள் விரைந்துச் சென்று அந்த மிட்சுபிஷி கார் ஓட்டுநரின் சன்னல் கண்ணாடியை உடைக்க முயன்றனர்.
காரை நிறுத்தாமல் அந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்ப முயன்றார்.
அப்போது வலது தடத்தில் இருந்த வாகனம் மீது அவர் மோதினார்.
கார் ஓட்டுநரின் சன்னலைக் காவல்துறை அதிகாரிகள் ஒருவழியாக உடைக்க, அந்த சாம்பல் நிற டீ-சட்டை ஆடவர் ஓட்டுநரைப் பிடித்து இழுத்தார்.
காரிலிருந்து வெளியே இழுக்கப்பட்ட அந்த மிட்சுபிஷி கார் ஓட்டுநரைக் காவல்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே,அந்த சாம்பல் நிற டீ-சட்டை ஆடவர் ஏ ஸ்டார் மோட்டோர்ஸ் கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிபவர் என்று நம்பப்படுகிறது.
விதிமுறைகளை மீறாதபோதிலும் கார் தொடர்பான அபராதம் பலமுறை விதிக்கப்படுவதாகவும் காரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் சென்றது தொடர்பாக காவல்துறை தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் தமது வாடிக்கையாளர் தம்முடன் பகிர்ந்துகொண்டதாக அந்த சாம்பல் நிற டீ-சட்டை ஆடவர் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தமது வாடிக்கையாளரின் கார் எண்ணைக் கொண்ட அந்த மிட்சுபிஷி காரைப் பார்த்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், மே 28ஆம் தேதியன்று வீடு நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்த காரைத் தற்செயலாகப் பார்த்ததாக அவர் கூறினார்.
அதைப் பின்தொடர முடிவெடுத்தார்.
“காரை நிறுத்தும்படி அந்த கார் ஓட்டுநரிடம் கூறினேன். காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த அளவுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை,” என்றார் அந்த ஆடவர்.
![]()