முச்சந்தி
ஜோர்ஜிய அரசின் வெளிநாட்டு முகவர் சட்டம் : தாமதமடையும் ஐரோப்பிய ஒன்றிய இணைவு ? … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில், பாராளுமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்த ‘வெளிநாட்டு முகவர் சட்ட’ மசோதாவைச் சுற்றியுள்ள சர்ச்சை பாரியளவில் எழுந்துள்ளது. கருங்கடல் (Black Sea) நாட்டிற்கு ஒரு முக்கியமான ஜனநாயகப் பரீட்சையாக இச்சட்டம் கருதப்படுகிறது.
‘வெளிநாட்டு முகவர்’ மசோதா:
ஜோர்ஜியா நாடாளுமன்றம் ‘வெளிநாட்டு முகவர்’ ( On the transparency of foreign influence – law on foreign agents ) மசோதாவை நிறைவேற்றியதால் பெருமளவு மக்களின் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.
எதேச்சாதிகாரம் மற்றும் ரஷ்ய உத்வேகம் என விவரிக்கப்படும் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி அங்கீகரிக்கப்பட்டதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜோர்ஜிய எதிர்ப்பாளர்கள் சர்ச்சைக்குரிய “வெளிநாட்டு முகவர் ” மசோதாவுக்கு எதிராக பாரிய பேரணிகளை நடத்தியுள்ளனர்.
நாட்டில் பரவலான தொடர் அமைதியின்மை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், “வெளிநாட்டு முகவர்கள்” மசோதாவிற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜோர்ஜியாவில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர்.
ஊடகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் நிதியில் 20 சதவீதத்திற்கு மேல் வெளிநாட்டில் இருந்து பெற்றால், “ஒரு வெளிநாட்டு சக்தியின் நலன்களைப் பின்பற்றுவதாக” பதிவு செய்ய வேண்டும் என்று இந்த மசோதா கோருகிறது.
ஆயினும் ஜோர்ஜிய அரசின் மசோதாவை எதிர்ப்பவர்கள் தலைநகர் திபிலிசியில் சர்ச்சைக்குரிய ‘வெளிநாட்டு முகவர்’ மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து பாரிய எதிர்ப்பு பேரணிகளை தொடர்ந்தும் நடாத்தி வருகின்றனர்.
கிரெம்ளினின் அரசியல் எதிரிகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ரஷ்யாவில் இதேபோன்ற சட்டத்தால் இங்கும் இது செல்வாக்கு பெற்றதாக பலரால் பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாயன்று, மசோதாவின் மூன்றாவது மற்றும் இறுதி வாக்கெடுப்பின் போது ஜோர்ஜிய அரசியல்வாதிகள் 84க்கு 30 ஆதரவாக வாக்களித்தனர்.
தலைநகர் திபிலிசியின் மையத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தெருவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் கலக தடுப்பு பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் ஜோர்ஜிய ட்ரீம் கட்சியின் ( Georgian Dream -GD – party ) உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோதிக்கொண்டதால் பாராளமன்ற அவைக்குள் கூட கைகலப்பு ஏற்பட்டது.
திபிலிசி பாராளுமன்றில் கைகலப்பு:
திபிலிசியில் (Tbilisi) பாராளுமன்ற அமர்வின் போது சண்டையிடும் ஜோர்ஜிய அரசியல்வாதிகளை பல ஊடகங்கள் வெளிக்காட்டியுள்ளன.
இந்த வரைவு அடுத்ததாக ஜனாதிபதி சலோமி ஜோராபிச்விலிக்கு நோக்கி செல்கிறது. அவர் அதை வீட்டோ செய்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது முடிவை ஜோர்ஜியன் ட்ரீம் மற்றும் அதன் கூட்டாளிகளால் கட்டுப்படுத்தப்படும் பாராளுமன்றத்தில் மற்றொரு வாக்கெடுப்பு மூலம் மீற சாத்தியம் உண்டு.
சமீப ஆண்டுகளில் ரஷ்யாவுடன் நெருக்கமாக முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவின் இந்த நகர்வின் சின்னமாக இந்த மசோதா இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ரஷ்ய ஆதரவு சட்டம் வேண்டாம்” என்று முழக்கமிட்டு, வாக்கெடுப்புக்கு முன்னதாக சுமார் 2,000 இளம் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே கூடினர். சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக செய்தி பரவிய பின்னர் பல ஆயிரக்கணக்கானோர் பேரணியில் சேர்ந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் மத்திய திபிலிசியில் ஒரு முக்கிய சாலை சந்திப்பில் போக்குவரத்தைத் தடுத்தனர். பொலிஸ் உத்தரவை மீறியதற்காக பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய இணைவு:
27 நாடுகளின் ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர ஜோர்ஜியாவின் நீண்டகால முயற்சியுடன் இந்த சட்டம் பொருந்தாதது என்று ஐரோப்பிய கூட்டமைப்பு ( EU) கூறியுள்ளது.
கடந்த ஆண்டு, ஜோர்ஜியாவிற்கு உத்தியோகபூர்வ ஐரோப்பிய ஒன்றிய வேட்புமனு வழங்கப்பட்டது. மேலும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், பேச்சுக்களை முறையாகத் தொடங்குவது குறித்து டிசம்பரில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஜோர்ஜியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செயலர் ஜிம் ஓ பிரையன், மேற்கத்திய தராதரங்களுக்கு இணங்க சட்டம் கொண்டு வரப்படாவிட்டால், அமைதியானவர்களுக்கு எதிராக வன்முறை நடந்தால், அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதித் தடைகளை சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக விதிக்கலாம் என்றார்.
ஜோர்ஜியாவிற்கு அமெரிக்க உதவி:
ஜோர்ஜியாவிற்கு அமெரிக்காவால் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட சுமார் $390 மில்லியன் வழங்கப்பட இருந்தது. நாம் இப்போது ஒரு எதிரியாக கருதப்பட்டால், ஒரு பங்காளியாக இல்லாமல் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஜோர்ஜியன் ட்ரீம் கட்சி எதிர்ப்பாளர்களை ஆளும் அரசு வன்முறை கும்பல்களாக சித்தரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் உறுதியாக இருப்பதாக வலியுறுத்தியது. மேலும் இந்த மசோதா தன்னார்வ தொண்டு நிறுவன நிதியின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
முன்னாள் சோவியத் குடியரசான கருங்கடல் நாடான ஜோர்ஜியாவிற்கு ஒரு முக்கியமான ஜனநாயகப் பரீட்சையாகக் கருதப்படும் பாராளுமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்த மசோதாவைச் சுற்றியுள்ள சர்ச்சை பாரியளவில் எழுந்துள்ளது. இதன் விளைவு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள ஜோர்ஜியாவின் திட்டம் தாமதமாகலாம் என்றே கருதப்படுகிறது.
![]()