சூரியகாந்த புயலால் ஏற்பட்ட வெடிப்பை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா – L1
ஆதித்யா எல்-1 (Aditya-L1) விண்கலமானது சூரிய வெடிப்பை புகைப்படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ (ISRO) தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. துாரம், 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆதித்யா எல்-1
இதற்கமைய, இந்த ஆண்டு ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 10 மற்றும் 12-ம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இதே பகுதியில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய புயலின் காரணமாக வழிகாட்டு அமைப்பான I.P.S சேவை மற்றும் பல செயற்கைக்கோள் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த முறையும் அதே இடத்தில் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பதா என்று சோதனை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
![]()