நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்க்க முடியாது – டிலான் பெரேரா

பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் சால்வை அணிந்து சபைக்கு வருகை தந்தேன்.அப்போது ஒருசிலர் என்னை பார்த்து ‘டிலான் சிங்கள தம்பியா’ என்று குறிப்பிட்டார்கள்.கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசி போது’ டிலான் கொடியா’ என்றும் ஒருசிலர் என்னை விமர்சித்தார்கள்.

பலஸ்தீனர்கள் எதிர்கொண்டுள்ள அவல நிலையை சிங்களம்,கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் என்ற மத கோணத்தில் இருந்துக்கொண்டு பார்க்க கூடாது.மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்.பலஸ்தீனர்களுக்கு எதிராக போர் தொடுக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக உலகளாவிய மட்டத்தில் தற்போது எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ளன.இந்த எதிர்ப்புக்கள் நிச்சயம் வெற்றி பெறும்.

பயங்கரவாதி பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் இதுவரை 34 ஆயிரத்து 183 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,77 ஆயிரத்து 804 பேர் படுகாயமடைந்துள்ளனர்.தாக்குதல்களினால் காஸா பகுதியில் 20 நிமிடத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது..

பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் மரணங்கள் மிகுதியாகியுள்ளன.62 சதவீத மனித குடியிறுப்புக்கள் முழுமையாகவும்,பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் அகதி முகாம்கள் மீதே தாக்குதல்களை நடத்துகின்றன.ஆகவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்த்து வேறு வார்த்தைகள் ஏதும் கிடையாது.

உலக நாடுகளின் சமாதானத்துக்காகவே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சவால் விடுக்கிறார்.உலகத்துக்கு ஜனநாயகத்தை கற்பிக்கும் அமெரிக்கா பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறது.ஆகவே உலக நாடுகளின் அமைதியை கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *