மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்க முடியாது – பொன்னாவெளி சம்பவம் தொடர்பில் சமத்துவக் கட்சி கண்டனம்!
தாங்கள் காலம் காலம் வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பாதிக்கப்பட்டு தங்களின்
இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்களுக்கும் பிரதேசத்திற்கும் ஆபத்தை
ஏற்படுத்தும் முதலீட்டு முயற்சிகளை தங்களது பிரதேசத்திற்குள்
அனுமதிக்காதீர்கள் என்ற பொன்னாவெளி மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஒரு
போதும் நிராகரிக்க முடியாது, அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு
முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை சமத்துவக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
என அக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.
சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பொன்னாவெளியில் நேற்று (05.04.2024) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக
அப்பிரதேசத்தை ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முற்றுமுழுதாக
பாதிக்கப்படும், 100 மீற்றருக்கு மேல் ஆழத்தில் மேற்கொள்ளப்படவுள்ள
சுன்னக்கல் அகழ்வு காரணமாக அந்த பிரதேசம் முழுவதும் உவராக மாறிவிடும்
இதனால் காலம் காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் தங்களின் சொந்த
நிலத்தை விட்டு வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகும் எனவே
தங்களது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு
நடவடிக்கையினை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என அம் மக்கள்
தெரிவிப்பதில் எவ்வித தவறும் இல்லை.
அம் மக்கள் இன்றைக்கு 270 நாட்களை கடந்து அமைதி வழியில் தங்களது நிலத்தை
பாதுகாக்க போராடி வருகின்றார்கள் எனவே அவர்களின் நியாயமான போராட்டத்தை
மதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெ தவிர வன்முறைகளை துண்டிவிடும்
வகையில் வெளி பிரதேசங்களிலிருந்து மக்களை அழைத்துச் சென்று
இனத்துக்குள்ளே மோதவிட்டு அதில் தங்களின் சுயலாபங்களை
நிறைவேற்றிக்கொள்ளும் மிக மோசமான நடவடிக்கைகளை மக்களோடு நின்று சமத்துவக்
கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் பொன்னாவெளி மக்களோடு நாம் தொடர்ந்தும் நிற்போம் அவர்களின்
நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை குரல் கொடுப்போம் எனவும்
சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.
![]()