இந்தியா

எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா — சீனா மீண்டும் பேச்சு

புதுடில்லி எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது, எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தொடர்ந்து பேசுவது என, இந்தியா – சீனா உயரதிகாரிகளின் நிலையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதைத் தவிர, 2020ல், கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதில் மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரு நாட்டு கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன், 29வது கூட்டம், சீனாவின் பீஜிங்கில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், நம் வெளியுறவுத் துறையின் கிழக்கு ஆசியப் பிரிவு இணைச் செயலர் கவுரங்கலால் தாஸ், சீனாவின் வெளியுறவுத் துறையின் எல்லை மற்றும் கடல் விவகாரங்கள் துறை டைரக்டர் ஜெனரல் ஹாங்க் லியாங்க் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

எல்லையில் அமைதி நிலவுவதற்கு, படைகளை விலக்கி கொள்வது, எல்லைப் பிரச்னைகளுக்கு சுமுகமாக தீர்வு காண்பது அவசியம். இரு தரப்பும் தொடர்ந்து, துாதரக மற்றும் ராணுவ நிலையில் பேச்சு நடத்தி, விரைவில் தீர்வு காண்பதற்கான வழிகளை உருவாக்குவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *