கொரானா மருந்தும் , எழுத்தாளனும் , காவல்துறையும்….சிறுகதை : சுப்ரபாரதிமணியன்

நீங்கள்தான் சுப்ரமணியம் என்பவரோ
ஆமாம் உங்க அப்பா பெயர் பரமசிவனோ
இல்லை ஐயா பழனிசாமி
பக்தி பூர்வமான குடும்பமோ
அப்படியெல்லாம் இல்லை பரம்பரையாய் வந்த பெயர்கள்.. பழைய தலைமுறை பெயர்கள்.. வயதாகி விட்டதல்லவா பழைய பெயர்களுடன் உறவை கொண்டிருக்கிறோம்
உங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன என்று தெரியுமா
சுப்ரமணியம் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். அவரின் சட்டை காலர்நுனியைத் தொட்டார்.
காவல் துறை அதிகாரி உட்கார்ந்திருந்த மேசை அழுக்குப்பட்டு இருப்பதை கவனித்தார். அதன் வலது நுனியில் வலது கை வைத்திருந்தார் .
கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக பல தகவல்கள். முகநூலில் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள்
நான் போடவில்லை. பலர் போட்டிருக்கிறார்கள்
என்ன போட்டிருக்கிறார்கள் என்று தெரியுமா.
எனக்கு முகநூல் கணக்கு இல்லை. கணக்கு இருப்பதாக சொல்லும் நண்பர்கள் சொன்னார்கள்
கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக சொன்னவர்களின் கதையெல்லாம் தெரியுமா
ஐம்பது வருடங்களுக்கு மேலாக இருமலுக்கு மருந்து தயாரித்து லாபம் கண்டு பெருமளவில் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் நமக்கராம் நிறுவனத்தின் முக்கிய பங்காளி ஒருவர் மருந்து கண்டுபிடித்து அதை தானே பரிசோதித்து இறந்துவிட்டார். இறந்தவரை பிரேதப் பரிசோதனை செய்தபோது அவருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் எலி பூனை குரங்கு என்று பரிசோதனை செய்யாமல் நேரடியாகவே அவருக்கே மருந்து கொடுத்து அவர் பரிசோதனை செய்து கொண்டார் கைலாசம் என்ற சித்த வைத்தியர் ஆங்கில மருத்துவர்களை திட்டி நிறைய வீடியோ பதிவுகளை போட்டார்.
என் நாட்டு மருத்துவத்தில் கொரானா தடுப்பு மருந்து இருக்கிறது . ஆங்கில மருத்துவர்களே உங்களால் கண்டுபிடிக்க முடியுமா. நான் கண்டுபிடித்துவிட்டேன் இந்த கொரானா மருந்து நோய் தொற்றை முழுமையாக நிறுத்தி விடும் என்று ஆவேசமாக அவரின் முகநூலில் பல வீடியோக்களைப் போட்டார். அவரை காவல்துறை கைது செய்தது. ஆங்கில மருத்துவத் துறையை சார்ந்தவர்களும் வேறு மருத்துவ பிரிவு மருத்துவர்களும் அவரின் மருந்து கண்டுபிடிப்பு போலியானது பொய்யானது என்று சொல்லி புகார் அளிக்க இயற்கை வைத்தியர் கைலாசம் கைது செய்யப்பட்டிருந்தார்
அவர் கைது செய்யப்பட்டபின் அவரின் இயற்கை மருத்துவம் சார்ந்த மருத்துவமனைக்கு எந்த அனுமதியும் அங்கீகாரமும் இல்லாதது தெரியவந்தது இது இப்போது இரண்டாவது பெரிய குற்றம் ஆகி விட்டது. தினம்தோறும் செய்தித்தாள்களில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பற்றி ஏதாவது செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன .
இத்தாலியில் கண்டுபிடித்து ஆகிவிட்டது என்றார்கள் .அமெரிக்காவில் வர இருக்கும் அதற்கான மாத்திரை இந்திய மதிப்பில் 18,000 ரூபாய் ஆகிறது என்றார்கள் ஜெர்மனியில் பல ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தொலைக்காட்சி செய்திகள் சொல்லின.
இந்தியாவில் இருக்கிற தனியார் மருந்து கம்பெனிகள் மத்திய அரசிடம் இது பற்றிய ஆய்வறிக்கை கொடுத்து அந்த மருந்துகளை குரங்குகளுக்கு தருவதற்கு அனுமதி கேட்டு இருப்பதாக செய்திகள் வந்தன .ஆனால் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை .இப்படி தடுப்பு மருந்து கண்டு பிடிக்கிற வரைக்கும் சாவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதுதான் சுப்பிரமணியனுக்கு பயமாக இருந்தது
உங்கள் பெயர் சுப்பிரமணியம் என்பது ..
ஆமாம் ஐயா
ஆனால் புகார் அளித்தவர்கள் உங்கள் பெயரை வேறு விதமாக எழுதி இருக்கிறார்களே
ஆமாம் அது புனைப்பெயர் ஐயா. நான் ஒரு எழுத்தாளன்
புனைப் பெயரா ..போலி பெயர் இல்லையே .கைலாசம் போல போலி இல்லையே.
நான் உட்காரலாமா
ஐயா உட்காருங்கள்.. நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிவிட்டீர்கள் .உட்கார நாற்காலி கொடுக்காமல் இருந்தால் அது மனித உரிமை பிரச்சனையாகிவிடும் எதற்கு சிக்கல்….உட்காருங்கள் ஒரு தேநீர் கொண்டு வரச் சொல்கிறேன் அதையும் குடியுங்கள். எப்படி உங்களுக்கு கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது
சுப்பிரமணியம் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார்
சுப்பிரமணியம் ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தார் .அவர் பிரம்மச்சாரி என்பதால் அவர் தனியே தான் எப்போதும் காணப்படுவார். பொழுது போவதற்காக அந்த மாடியிலேயே தொட்டிச் செடிகள், பிளாஸ்டிக் பைகளில் செடிகள் மண் பரப்பி காய்கறி, கீரை என்ற ரீதியில் வளர்த்துவந்தார்.
அவ்வப்போது ஏதாவது கரைசலை தெளித்து பூச்சிகளை ஒதுக்கிவிடுவார் .பழத் தோல்கள், சாப்பாட்டு கழிவுகளை அரைத்து மருந்து போல அடிப்பார். அவருக்கு தேவையான தக்காளி காய்கறி கீரைகளை அந்த மாடி வீட்டு தோட்டம் கொடுத்துக் கொண்டிருந்தது .அது பற்றி பத்திரிக்கைகளில் துணுக்குகள் கூட வந்தன. இப்படி மாடிவீட்டுத்தோட்டம் போட ஆதர்சம் 36 வயது படத்தினிலே ஜோதிகாதான் என்று ஒரு பத்திரிக்கை அவர் சொல்லாத்தை வேறு எழுதியது. அவர்,36 வயது படம் பார்க்கவில்லை .அதிர்ந்து போய் விட்டார்.
ஜோதிகா யார் , அந்தப்படத்தில் அவரின் கதாபாத்திரம் என்ன சொல்கிறது என்று பக்கத்து வீட்டில் இருந்த கதிர் என்ற அடிப்படியான பனியன் கம்பனி வேலைகளில் ஒன்றான அடுக்கிக் கட்டும் வேலையைச் செய்யும் பையனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
சூரியா மனைவி சார் அவங்க.
முன்பெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் துணியை காய போடுவதற்காக அவருடைய மாடியை சுலபமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்காரர் நகரின் வேறோரு பகுதியில் குடியிருக்க கீழே இருந்த மூன்று வாடகைக்கார்களும் மாடியில் துணி காயப் போட தாராளமாய் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் .
மாடி வீட்டு தோட்டம் கொஞ்சம் வளர்ச்சி அடைந்த போது மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வீட்டுக்காரரிடம் சொல்லி மாடிக்கு ஏறும் பகுதியில் ஒரு கேட் போட்டு விட்டார் .இரும்பு கேட் போட்ட பின்னால் முன்பு போல் பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் மாடிக்கு வந்து துணி காயப் போடுவது நின்றுவிட்டது .அவர்கள் ஏகதேசம் அவரை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள் .காரணம் பக்கத்து வீடுகளில் விசாலமான மாடிகள் இல்லை துணி காயப் போடுவதற்கான சரியான வசதியும் இல்லை .
கொரானா காலம் வந்த பிறகு சின்னப் பையன்களும் கல்லூரி மாணவர்களும் என்று இருந்த ஒரு கும்பல் மாடிக்கு வந்து உட்கார்ந்து மணிக்கணக்காக கைபேசியில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இரவில் மாடியில் விளக்கு எதுவும் போடாத போதும் இருட்டிலேயே உட்கார்ந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இப்படி இரவில் கைபேசியை பார்ப்பதில் உண்டாகும் தீமைகள் பற்றி சுப்பிரமணியன் பல சமயங்களில் அவர் சொல்லிவிட்டார் .அவர்கள் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள் குறைந்த காலத்தில் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்ததால் காற்று மாசு வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழிற்சாலைகளும் இயங்குவது இல்லை. எனவே நல்ல காற்று மாலை நேரங்களில் அபூர்வமாக மாடியில் இருந்தால் கிடைக்கும் அவரும் ஒரு நாற்காலியை போட்டு அங்கு காட்சி அளிப்பார்.
பக்கத்துவீட்டு இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் மாடியில் வந்து காற்றை அனுபவித்து கைபேசியில் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். இரவில் விளக்கு போடாத போதும் அவர்கள் உட்கார்ந்து கைபேசியில் ஏதாவது பார்த்துக் கொண்டே இருந்தார்கள் இரவு நேரத்தில் இப்படி நெருக்கமாக கைபேசி பார்ப்பது கண்ணை பாதித்துவிடும் .பிறகு கொரானா நோய்த்தொற்று சுலபமாக பாதித்துவிடும் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார். இரண்டு தினங்களுக்கு பின்னால் நெருக்கமாக உட்காரும் ஏழு எட்டு இளைஞர்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு காண ஆரம்பித்தார்கள் .
சட்டென வானத்தில் பட்டங்கள் பறக்க ஆரம்பித்தன .சுப்பிரமணியம் தினசரி செய்தித்தாள் வாங்குபவர் என்பதால் அவரிடம் பழைய செய்தித்தாள்கள் வாங்கி, வாங்கிய செய்தித்தாள்களில் பட்டங்கள் செய்து வானில் பறக்க விட்டார்கள் .காற்றும் அதற்கு ஒத்துழைத்தது .
அவர்கள் கையில் பட்டம் விடுவதற்காக நூல் மாஞ்சாவாக இருந்து விடக்கூடாது என்று கவலைப்பட்டு ஓடிப் பார்ப்பார் .அவை சாதாரண நூலாக இருந்ததில் அவருக்கு ஆறுதல் . ஆனால் கொரானா சாவு பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டிருந்தன .அந்த மாவட்டம் கூட அப்படித்தான் சிவப்பு மாவட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட தொற்றுநோய் கொண்ட நோயாளிகளால் நிரம்பியது .அதற்குப் பின்னாலும் அந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் இடைவெளியை அதிகரிக்கவில்லை. நெருக்கமாக இருந்தார்கள்.
இரவுகளில் கைபேசியில் எதையாவது பார்த்துப் பொழுது போக்குவதும் காற்றை அனுபவிப்பதும் அவர்களுக்கு ஆசுவாசம் தந்ததுஆனால் முகக்கவசம் கூடப் போடாமல் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று சுப்பிரமணியன் கவலைப்பட ஆரம்பித்தார் ஒரு முறை சொல்லியும் பார்த்தார் .
பகல் முழுக்க ஏதாவது மரத்தடியில் அந்த வீதியில் அந்த ஏழு எட்டு பேர் இருப்பதும் மாலைக்கு பின்னால் அவரின் மாடியில் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்களை அவர் சுலபமாக துரத்தி விட முடியும் என்று தோன்றவில்லை .
சென்ற மாதத்தில் அவரின் தொலைக்காட்சியில் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள அவர்களைத்தான் அணுகினார் . புதிய தொலைக்காட்சி ஹோம் தியேட்டர் உடன் வாங்கி போட்டிருந்தார். மோடம் கிடைப்பதற்கு ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியதாகி விட்டது பக்கத்திலிருக்கும் கைபேசி கடைகளில் இதற்கான மோடம் பற்றிக் கேட்டு அலுத்துவிட்டார்.ஒருநாள் நகரத்துக்கு சென்று ஜியோ ஸ்டோரில் பணம் கட்டி மோடம் வாங்கி வந்துவிட்டார். ஆனால் அதை ” காண்பிகர் “ செய்தால் தவறாக வந்தது .அந்தப் பகுதியிலிருக்கும் மூன்று தொலைக்காட்சிப் பெட்டிகளை பழுதுபார்க்கும் நபர்களிடம் சென்று அவர் தன் குறையை சொன்னார் .
அவர்கள் எல்லாம் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை .திரும்பத் திரும்ப தொலைபேசி செய்வது அவர்கள் முன்னால் போய் நிற்பது இதெல்லாம் அவருக்கு சிரமமாக இருந்தது .ஒருவர் வந்து மோடத்தை இணைத்து இவ்வளவுதான் என்னால் முடியும் என்று இரநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு போய்விட்டார் .அதற்குப்பின்னால் ஒரு இலக்கிய நண்பரிடம் சொல்லி ஒரு தொழில்நுட்ப வல்லுநர் அலுவலகம் சென்று பார்த்தார். அவரும் பல முறை தொலைபேசி செய்தபோது வருவதாக சொன்னார் .வேறு ஒருவரை அனுப்புவதாக சொன்னார் .ஆனால் வரவே இல்லை . இலக்கியநண்பர்களே இப்படித்தான் என்று அலுத்துக் கொண்டார்.
அப்போதுதான் பக்கத்து வீட்டு இளைஞர் குருமூர்த்தி இடம் என்ன படிப்பு படிக்கிறீர்கள் என்று கேட்டார், அவர் கணினி சார்ந்த படிப்பு , புராஜக்ட் சமர்பித்து விட்டாயிற்று என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது .என் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் மோடத்தை இணைப்பு தந்து பயன்படுத்துவதற்கு தாங்கள் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார் .அவரும் இரண்டு நாட்கள் அடுத்தடுத்து அவர் பின்னால் சென்றார்..
ஒரு நாள் மாலை வருகின்றபோது நான்கு கல்லூரி மாணவர்களும் கூட வந்தார்கள் .வெகு சீக்கிரத்தில் பிரைம் வீடியோக்கான கட்டமைப்பை செய்து முடித்தார்கள். ஹாட்ஸ்டார் கிடைக்கும் என்றார்கள் .நெட்பிளிக்ஸ் ஏதோ சர்வர் பிரச்சனை .ஆகவே பின்னால் பார்க்கலாம் என்றார்கள். அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது இளைஞர்களுக்கு நொறுக்குத்தீனிகளும் பிஸ்கட்டும் கொடுத்து மகிழ்வித்தார்
அடுத்த நாள் வந்த போது மறுபடியும் நெட்லிளிக்சில் முயன்றார்கள். ஆனால் சர்வர் ஏதோ பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே இருந்தது பரவாயில்லை இப்போதைக்கு பிரைம் விடியோ போதும் என்றார் அவரிடம் நூற்றுக்கணக்கான திரைப்பட குறுந்தகடுகள் குவிந்து கிடந்தன .ஏகதேசம் அவை பார்த்தவை தான் எங்கு போனாலும் புத்தகங்களை வாங்குவது கூட குறந்து போக சமீப ஆண்டுகளில் திரைப்பட குறுந்தகடுகளை வாங்குவது சுலபமாகி விட்டது .
அதுவும் திருவனந்தபுரம் செல்கிறபோது நகரத்தில் எங்குமே பிராண்டட் ஒரிஜினல் குறுந்தகடுகள் தவிர வேறு கிடைக்காது .ஆனால் பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற பீமபள்ளி விமானநிலைய பகுதிக்கு சென்றால் இருபது ரூபாய்க்கு எல்லா வெளிநாட்டுப்படங்களும் இந்தியப் படங்களும் கிடைத்தன. பத்து ரூபாய்க்கு நீல படங்கள் கிடைத்தன. நீலப்படங்களில் குழந்தைகளுடன் பிராணிகளுடன் ஆப்பிரிக்க பெண்களுடன் எது வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கடைக்காரர்கள் கேட்பார்.
அவர் ஒரே மாதிரி இருக்கு வேண்டாமென்று தவிர்த்து விடுவார். வேற மாதிரி செய்யறது எல்லாம் இருக்கு .எடுத்துட்டு போங்க பத்து ரூபாய்தான் என்பார்கள்..ஆனால் அவர் அந்த பழக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று ஒருவகை கட்டுப்பாட்டில்தான் இருந்தார் .டவுன்லோட் செய்கிற விஷயத்தில் அவருக்கு பொறுமையில்லை பென் டிரைவர் இல் படங்களை சில நண்பர்களிடம் கேட்டு வாங்கிப் பார்த்து இருக்கிறார்
ஆனால் அதையெல்லாம் விட பிரைம்வீடியோ போதும் என்று ஆகிவிட்டது. படம் பார்ப்பதற்காக சில நண்பர்கள் கோவையிலிருந்து திரைப்பட விழாவுக்கு செல்கிற போது அவரையும் அழைத்து இருக்கிறார்கள் .ஆனால் அவர் அதெல்லாம் பெரிய செலவு என்று விட்டு விட்டார் நமக்கு வரும் உள்ளூர் அரசாங்கத்தின் ஓய்வு ஓய்வூதியத்தில் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதுதான் அவருடைய எண்ணம் ஹோம் தியேட்டர் ஒன்றுதான் அவருடைய ரசனைக்கும் செலவுக்கும் ஒத்துவரும் என்று முடிவுசெய்து போட்டிருந்தார்.
அந்த தொலைக்காட்சிப் பெட்டியின் உள் வடிவமைப்பில் அந்த இளைஞர்கள் உதவியதால் அதன் பின் உரிமை எடுத்துக் கொண்டு அவர்கள் மாடிப்பகுதியை மாலை நேரங்களில் சுலபமாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதனால் அவர் கடுமையாக நடந்து கொள்ள இயலவில்லை. அதற்கிடையில் வங்கியில் பணம் செலுத்த,, போன் பில் கட்ட என சில செயலிகளை ஏற்படுத்தித் தந்தார்கள். கைபேசியில்.இது சார்ந்து ஏதாவது பிரசினை வந்தால் மறுபடியும் அவர்களைத்தான அணுக வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் கடுமையாக அவரால் நடந்து கொள்ள இயலவில்லை.
குருமூர்த்தி பக்கத்து மாடியில் காற்றோட்டமாக இருக்கிறது என்று இரவுகளில் தன் நண்பருடன் நெருக்கமாக படுத்து கொள்வதை சற்று தாமதமாகத்தான் சுப்பிரமணியன் கண்டுபிடித்தார் . அவர்கள் பயன்படுத்தும் போர்வைகள் ஒரு குவியலாக கிடக்கும் வெயிலில் காயும். இரவில் அவற்றை எடுத்து படுக்கையாகவும் மேல் போட்டுக்கொள்ளவும் பயன்படுத்தினர் என்பது அந்தக் குவியலின் படலத்திலிருந்து தெரிந்தது .இது தொடர்ந்து கொண்டிருப்பதை அவர் வெகு தாமதமாகத்தான் தெரிந்துகொண்டார் .
ஒரு நாள் அவரின் மாடி பகுதி சுற்றுச்சுவர் அருகே சற்று வெயில் அடித்த நேரத்தில் அந்த ஏழு எட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள் சுப்பிரமணியன் அவர்கள் மீது கரிசனம் கொள்பவர் போல அங்கு எதற்கு வெயிலில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என் வீட்டு பகுதிமுன் கூரை இருக்கிறது அதனால் அதன் கீழ் உட்காரலாம் என்றார் .குருமூர்த்தியின் வீட்டு மாடி சாதாரணமான சிமெண்ட் தரை ஆகியிருந்தது .
அவன் மாலை நேரங்களில் தூங்க சவுகரியம் செய்யப்படும் வகையில் தண்ணீர் தெளிப்பான் .அதிகமாக தண்ணீர் தெளிக்க வேண்டாம். காரணம் அதீதத்தண்ணீர் உள்ளே புகுந்து அந்தக்காங்கிரிட்ப் பகுதிகளை பலவீனமாக்கும் .நான் இருக்கும் பகுதியில் இதன்மேல் கற்களை பதித்து இருக்கிறார்களே அதனால் அந்தப்பகுதியில் சூடு குறைவாக இருக்கும் என்று சொல்லியிருந்தார்.
ஒருநாள் காலையில் கதவைத்திறந்த சுப்பிரமணியன் அதிர்ந்துபோய் இருந்தார் அவரின் வீட்டு கதவுக்கு முன்னால் இருந்த கூரையின் கீழ் இருந்த பகுதியில் ஆறேழு பேர் மூங்கில்களை வரிசையாக அடுக்கி அதேபோல முக்காடிட்டு படுத்துக் கொண்டிருந்தார்கள் .அங்கும் இங்கும் நடந்து எரிச்சலைக் காட்டிக் கொண்டிருந்தார் சுப்பிரமணியம் அவர்கள் வெளிச்சம் வராத அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல் போர்வைக்குள் மறைந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்தார்கள் கதவைச் சாத்தி அறைக்குள் போய் கணினியில் இரண்டு இணையதளங்களை பார்த்துவிட்டு வந்த போது வெளிச்சம் கூடியிருந்தது. ஒவ்வொருவராக இறங்கி போய் விட்டார்கள்
குருமூர்த்தி வீட்டு மாடிக்கும் சுப்பிரமணியன் மாடி பகுதிக்கும் இடையில் முக்கால் அளவுக்கு ஒரு சுவர் இருந்தது. அந்தப் பகுதியிலிருந்து அவர்கள் இந்தப் பகுதிக்கு வருவதற்கு குருமூர்த்தி வீட்டு மாடிப் படிகளைப் பயன்படுத்தாமல் சுவரை ஏறி குதித்து வந்தார்கள் இதுவும் சுப்பிரமணியத்தை உறுத்திக் கொண்டிருந்தது.ஒருநாள் அந்த குழுவில் இருந்த பள்ளியில் படிக்கிற ஒருவனை அழைத்து சுவர் ஏறி குதித்து வரக்கூடாது. நீங்கள் எதற்கும் படிகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார் .அதன் பின்னால் சுவர் தாண்டுவது நின்றுவிட்டது .
இப்போது புதிதாய் அவரின் கதவு எதிரிலேயே எல்லோரும் கொரானா காலத்திலும் ஒன்றாகப் படுத்துக் கொண்டிருப்பது சுப்பிரமணியத்துக்கு எரிச்சலாக இருந்தது இந்தமுறையும் அந்தப் பள்ளி மாணவனை கூப்பிட்டார் சுப்பிரமணியம். அந்த குழுவில் இருந்தவர்களில் அவன் ஒருவன் தான் பள்ளி மாணவன். இளையவன். மற்றவர்கள் கல்லூரி மாணவர்கள் ,பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போகிறவர்கள் .
ஆனால் கணினியில் தேர்ச்சி பெற்றவர்களாக எல்லாரும் இருந்தார்கள் அல்லது கைபேசியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்லலாம் .இளையவனைக் கூப்பிடு இந்த நோய்த்தொற்று காலத்திலும் இப்படி நெருக்கமாக வரிசையாகப் படுத்துக் கொண்டிருப்பது நன்றாக இல்லை பயமாக இருக்கிறது என்று சொன்னார் .அதன் பின்னால் அவரின் மாடிப் பகுதியில் அந்த இளைஞர்கள் கூட்டம் நடத்தவில்லை குருமூர்த்தியின் வீட்டு மாடியில் மாலைகளில் சட்டென பட்டம் விடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஒரு நாள் ஒரு பெரிய பட்டம் ஒன்று சுப்ரமணியன் மாடித்தோட்ட தோட்டத்தில் வந்து விழுந்தது இந்தமுறை குருமூர்த்தி அந்த சுவரை தாண்டி இந்த பகுதிக்கு வந்து அந்தப் படத்தை எடுப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தான் . அது வாஸ்து செடியைச் சுற்றிக்கிடந்தது. அது எபோதும் இரண்டு அல்லது மூன்று பூக்களுடன் அதிக பட்சம் இருக்கும் .மற்றவை உதிர்ந்து விடும். ஏன் வாஸ்து செடி என்று பெயர் வந்த்து என்று அவருக்குத் தெரியவில்லை. சுப்பிரமணியன் அதை பார்த்துக்கொண்டு ஏதாவது செடி பட்டம் பட்டு சேதம் ஆகி இருக்கிறதா என்று கவனிக்க ஆரம்பித்தார் .
குருமூர்த்தி விழுந்துகிடந்த பட்டத்தினை மெதுவாக விடுவித்துக் கொண்டு மறுபடியும் சுவரேறி குதித்து அவர் வீட்டு மாடிக்கு சென்றான். படுக்க வேண்டாம் என்று சொன்னது சுவர் குதித்து தாண்டி வருவதை கண்டித்து போன்றவை எல்லாம் சேர்ந்து அவர்களை அவரின் மாடி பகுதிக்கு வர விடாமல் செய்தது .
ஆனால் மாலை நேரங்களில் குருமூர்த்தி வீட்டு மாடி வட்டமிடும் பட்டங்களால் நிறைந்து விட்டது குருமூர்த்திக்கு ஒரு தங்கை உண்டு .அவள் பள்ளியில் படித்து வந்தாள் அவள் பெற்றோருடன் அவ்வப்போது மாடியில் ஏதாவது பகுதியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள் .அவர்கள் மாடிக்கு வருவது குறைந்துவிட்டது .பொட்ட பிள்ளையை வைத்து இந்த பசங்க மாடியில் பண்ற கலாட்டாவை பாரு என்று யாரும் சப்தமிட்டு கூட சொல்லி இருந்தார்கள் .ஆனால் ஆரவாரக் கூச்சலுடன் மாலை நேரத்தில் பட்டங்கள் வானில் உயரப் பறந்தன .
சரி எழுத்தாளரே உங்கள பத்தி ஏன் இப்படி போட்டு இருக்காங்க ஏதோ கரோனா பத்திக் கண்டுப்பிடிக்க பரிசோதனை எல்லாம் பண்றீங்க போல
அப்படி ஏதும் சுப்பிரமணியன் செய்யவில்லை .
அவர் வீட்டு மேசையில் பலரின் பார்வையில் தென்படும் பலவிதமான கரைசல்கள் பலருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன .காலைநேரம் டான்ஸ் மருந்தில் பைபர் பவுடர் ஒன்றை சுடுதண்ணீரில் போட்டு கலக்கி குடிப்பார். அது ஒருவகை மஞ்சள் நிறமாக இருக்கும் பிறகு நோய் தொற்று வராமல் இருக்க கல்லுப்பு, எலுமிச்சை தோல், வேப்பம் இலை மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு நீரை கொதிக்க வைத்து அந்த ஆவியை பிடிப்பார் .அது வெகுவாக ஆறின பிறகு செடிக்கு கிருமிநாசினியாக பயன்படுத்துவார்.
அவரைத்தவிர அப்புறம் சென்று ஒரு பொடி போட்டு கலக்கி கண்ணாடி டம்ளரில் வைத்திருப்பார் அப்ரஸ் என்ற பொடியைப் பயன்படுத்தினார். உடம்பை சுத்தமாக்கும் என்பதால் அதையும் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தார். காலை உணவு தயாரிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை .எனவே சில ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் ஹெர்பாலைஃப் பொடி கொழுப்பு நீக்கப்பட்ட பால் உடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து இரண்டு டம்ளர் குடித்து விடுவார் .அது நாள் 5 மணி நேரத்திற்கு பசியை நன்கு தாங்கும் .உடம்பு சில ஆண்டுகளாக சீராக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் இந்தக் கரைசில்கள் தான் பலருக்கு கண்ணில் தட்டுப் பட்டிருக்கிறது .
அதெல்லாம் சாப்பாட்டு பொருட்கள்.. .ரசாயனக் கரைசல் ..என்னமோ என்று பலருக்குச் சந்தேகம் வந்துடுச்சு ..
ச்.வேற ஏதாவது காரணம் இருக்கா
இது தொற்று காலம் .இந்த காலத்துல மாடியில எல்லாரும் ஒண்ணா பக்கம் பக்கமாக தூங்காதீங்க .மாஸ்க் போடாம இருக்காதீங்க அப்படின்ன்னு கண்டிஷன் போட்டன்.இந்த காய்ச்சல் காலம் முடிகிற வரைக்கும் துணி காயப்போடக்கூட மேல யாரும் வராதிங்க .கொண்டு வந்து காய போடாதீங்க அப்படின்னு சொன்னேன் .அது அந்த பசங்களுக்கும் வாடகைக்கு இருக்கிறவங்களுக்கும் சிரமங்களை கொடுத்துவிட்டது. அவங்கதான் இதை இப்படிக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் .
நீங்க நீராவி பிடிக்கிறீங்க. கரைசல்களா சாப்பிடறீஙக.அதுதா உங்கள பத்தி இப்படி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க .எல்லா ஆவிகளையும் புடிக்குமா .ஆவிகள் விசயத்திலெ உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
முகத்திற்கு பிடிக்கிற நீராவியில் நம்பிக்கை இருக்கு. மத்த ஆவியிலே நம்பிக்கை இல்லைங்க
வேற
ஆவி பிடிப்பது, நிறைய சுடுதண்ணீர் குடிப்பது, மூக்கில் தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்வது, கபசுரநீர் குடிப்பது என்று கொரானாவிலைருந்து என்னைப் பாதுகாத்து வருகிறேன்
சரி நீங்க புனைப்பெயரில் எழுதறீங்க . அது ஆவியில்லையே
அது நல்ல ஆத்மாக்கள் ஆவி. யாருக்கு இடைஞ்சல் பண்ணாது
ஆமா எழுதறவங்க யாரையும் கணக்கிலெ யாரும் எடுத்துக்கரதில்லெ. என்ன . கொரானா காலத்துல டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்து பண்ற கொடுமைக்கு மத்தியில எந்த வேறக்கொடுமையையும் பெருசில்ல …சரி அது பத்தி எல்லாம் நீங்க எழுதுங்க
எழுதலாம். ஏதாச்சும் அனுபவம் ரீதியா எழுதினா நல்லா இருக்கும் .அதற்கு நிறைய பிளக்ஸ் பேனர் எழுதறவங்களும் தட்டிகட்டறவங்களும் கூட இருக்காங்க
நீங்க அதெல்லாம் எழுத மாட்டீங்களா ஆன்மீகம்தான் எழுதுவீங்களா
ஆன்மிக கூட நாம பொதுவா சொல்ற மாதிரியான மத விஷயங்கள் இருக்காது அது வேற மாதிரி ஆன்மீக, மனிதனும் மனிதனும் ஒண்ணா இருக்கறது. ஆன்மீக விஷயங்கள் மண்ணோடு நெருக்கமா இருக்கிறது .அம்மாவோட பாசமா இருக்கிறது .அதோட அன்பா இருக்கிறது. இந்த ஆன்மீக தான் நான் பேசுவேன்.
சரி சரி ஓகே . வேற ஆன்மாக்களும் எங்களை தொந்தரவு பண்ணாமல் இருந்தால் சரி .மறுபடியும் யாராச்சும் இது மாதிரி எல்லாம் எழுதாமெ இருக்கட்டும் .
அவங்க பேஸ்புக்ல இப்படி எழுதினா அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்
அது சரிதான் ஆனாலும் கலர் கலரா கரைசல் ஆவி அப்படின்னு இருக்கிறதுதான் உங்க மேல சந்தேகத்தை கொண்டு வந்துடுச்சு போல ..அதுவேற இந்த தொற்று காலத்துல நீங்கள் சேவ் பண்ணாம தலைமுடி வெட்டாம ஒரு மாதிரி இருக்கீங்க அது கூட நிறைய பேத்துக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கும். நீங்க தொற்றுநோய் ஆவியான ஆள் மாதிரிதா இருக்கீங்க. தலை முடியஎ மொதல்லெ வெட்டுங்க
சலூன்க மூடிக் கெடக்கே.
வெட்டி உட பொண்டாட்டியோ சகோதரிகளோ இல்லையா
காவல்துறை அதிகாரி நாற்காலியை நகர்த்தி எழுந்து தொப்பியை மறுபடியும் மாற்றிக்கொண்டார் . தொற்று காலத்தில் அந்தக் குழுவை மிரட்டியது, விலக்கியது தான் இப்படி ஒரு பொய் செய்தியை பரப்ப விட்டதுபோல் சுப்பிரமணியத்துக்கு தோன்றியது .
வீடு திரும்பிய போது அந்த இளைஞர் குழு எதிர்வீட்டிலிருந்த குறுகலான நிழல் கொடுத்த வேப்பமரத்தடியில் கூடியிருந்தார்கள் .ஒன்றாக இருப்பதுதான் நட்பின் அடையாளம் என்பதை காட்டிக் கொள்வது போல் இப்படித்தான் பெரும்பாலும் காணப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் ஏதாவது தொற்று ஏற்படாமல் இருக்கவேண்டும்.ஏற்பட்டால் இந்த வீதியின் பகுதியை லாக் டவுன் செய்து சீல் வைத்து விட்டால் சிரமமாகிவிடும். சிரமத்தில் இருந்து ஏதாவது ஆவி தன்னை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டே மாடியை ஏறியபோது இளைஞர் கூட்டத்தின் பலத்த ஆரவாரச் சத்தம் அவரது காதுகளை நிறைத்தது
அவர்கள் விட்டப் பட்டங்கள் ஏதாவது செடிகளின் மத்தியில் அகப்பட்டு விட்டதா என்று அவசரமாய் அவரின் கண்கள் துழாவ ஆரம்பித்தன
![]()