நடுகைக்காரி! ….. 59 ….. ஏலையா க.முருகதாசன்.

சுப்பையா அடுப்படிக்குள்ளிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.புஸ்பகலா ஞானத்தின் தாயுடன் முற்றத்தில் வந்து நின்று கொண்டாள்.
அவள் ஏன் மீண்டும் விறாந்தையிலுள்ள கதிரையில் வந்து உட்காரமால் முற்றத்தில் தாயுடன் நிற்கிறாள் என்பதை ஞானத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை.
முற்றத்தில் தாயின் அருகில் நின்ற புஸ்பகலா மாமி நான் ஒரு விசயம் சொல்லப் போகிறன் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ தெரியாது ஆனால் நான் என் மனதில் உள்ளதைச் சொல்கிறன் என்றவள் நான் எங்கடை கல்லூரிக்குப் பக்கத்திலிருக்கும் மங்களேஸ்வரிக்கு காய்ச்சல் பார்க்கப் போகப் போறன் என்று பொய் சொல்லி அம்மாவிட்டை கொர்லிக்ஸ் போத்தல் வாங்கிக் கொண்டு ஞானத்தைப் பார்க்க வந்தனான் என்று தயங்கியவள் சில விநாடிகள் பொறுத்து மெதுவாக பதட்டத்துடன் நான் ஞானத்தை விரும்பிறன்..என்று நிறுத்த,ஞானமும் புஸ்பகலாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகினமோ என்ற ஐமிச்சத்துடன் இருந்தது மட்டுமல்ல,புஸ்பகலாவின் அழகைப் பார்த்து இந்தப் பிள்ளை எங்களுக்கு மருமகளாக வந்தால் நல்லாயிருக்குமே என்று புஸ்பகலாவை கண்ட நேரத்திலேயே நினைச்ச ஞானத்தின் தாய்க்கு,புஸ்பகலா சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும்,அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நெற்றியைச் சுருக்கி வியப்புடன் பார்ப்பது போல நடித்தாள்.
தான் சொன்னதைக் கேட்டு பூரிப்பான முகபாவனையைக் காட்டாது நெற்றியைச் சுருக்கி வியப்புடன் பார்த்ததைப் பார்த்த புஸ்பகலா ஒருவேளை நான் சொன்னது பிடிக்கவில்லையோ என்ரை அப்பா அம்மாவுக்கு காதலென்றாலே பிடிக்காது அது போல ஞானத்தின் அம்மாவுக்கும் பிடிக்கவில்லையோ என்று பயப்பட்டவள் சொல்லாமல் விட்டிருக்கலாமே என்று யோசித்தாள்.
ஞானத்தின் மீது தான் வைச்சிருக்கும் காதலைக் காட்டுவதற்காக உங்களுக்கு ஏலாமலிருந்தால் உள்ளை போய்ப் படுங்கோவன் என்று ஞானத்தைப் பார்த்து புஸ்பகலா சொன்னதைக் கேட்ட ஞானத்தின் தாய் மற்றப் பக்கம் திரும்பி மெதுவாக புன்னகைத்தாள்.
ஞானத்தின் வீட்டுக்கு வந்து இவ்வளவு நேரமாகியும் அடுத்த காணிக்குள் இருந்த வெற்றிலைத் தோட்டத்தைக் கவனிக்காமலிருந்த புஸ்பகலா முற்றத்தில் நின்றபடியே கிழக்குப் பக்க காணிக்குள் இருந்த வெற்றிலைத் தோட்டத்தைக் கண்டவள்,அது உங்கடை தோட்டமா என்று புஸ்பகலா ஞானத்தின் தாயைக் கேட்க அது எங்கடைதான் என அவள் பதில் சொல்கிறாள்.
அப்பாவும் அம்மாவும் நல்லாய் வெற்றிலை பாக்குப் போடுவினம்,நானும் அவைக்குத் தெரியாமல் வெற்றிலை பாக்குப் போடுவன் என்ரைசிவந்த நாக்கை ; அம்மா பார்த்துவிட்டால் படிக்கிற பிள்ளையள் வெற்றிலை பாக்குப் போட்டால் நாக்குத் தடித்துவிடும் பாடங்களை சரியாக உச்சரித்து வாசிக்க முடியாது என்று சொல்லுவார், அம்மாவுக்கு வெற்றிலையைப் பிடுங்கிக்
கொண்டு போய்க் கொடுத்தனென்றால் சந்தோசப்படுவார் என்று சொல்லிக் கொண்டே வெற்றிலைத் தோட்டத்தை நோக்கிப் போனவளை இப்ப உன்ரை நிலைமையிலை வெற்றிலைத் தோட்டத்துக்குள்ளை போகக்கூடாது என்று ஞானத்தின் தாய் தடுக்க ஏன் மாமி நான் போகக்கூடாது என்று புஸ்பகலா கேட்க நீ சுகமில்லாமல் இருக்கிறாய், பொம்பிளையள் இந்த நாட்களிலை வெற்றிலைத் தோட்டத்திற்கு போகக்கூடாது அதுதான் காரணம் என்றவள்,வெற்றிலையை பிடுங்கிறது என்று சொல்றேலை ஆயிறது இல்லாட்டில் கிள்ளுறது என்றுதான் சொல்றது என்கிறாள்.
பிடுங்கிறது என்றால் இஞ்சைபார் இதிலை ஒரு குப்பைமேனிப் பூண்டு இருக்குதல்லே இதை வேரோடு இழுக்கிறதை பிடுங்கிறது என்று சொல்வார்கள்.
வெற்றிலைத் தோட்டத்துக்குள்ளை புஸ்பகலா போவதை தாயார் ஏன் தடுத்தவர் என்பதை அதுதான் அவள் திரும்பவும் விறாந்தைக் கதிரையில் வந்திருக்காமல் விட்டதற்கு அவளுக்கு அது நடந்திருக்கு என்று யோசித்த ஞானம் அவளைக் கூர்ந்து பார்க்க,அவள் வெட்கத்துடன் தலை குனிகிறாள்.
அதைக் கண்டும் கவனிக்காதது மாதிரி பார்க்கிறாள் ஞானத்தின் தாய்.வெற்றிலைத் தோட்டத்துக்குள் போன ஞானத்தின் தாய் கையளவு மாற்று வெற்றிலையை கிள்ளிக் கொண்டு வந்து ஒரு பேப்பரில் சுற்றிக் குடுக்கிறாள்.
ஞானத்தின் தகப்பனும் சாப்பிட்டு முடிச்சதும் முற்றத்து வாளித் தண்ணீரில் கோப்பையைக் கழுவுp வாயையும் கொப்பளித்துவிட்டு கோப்பையை அடுப்படிக்குள் கொண்டு போய் வைக்கிறார்.
கக்கூசைத் தேடிப் போன புஸ்பகலா தனது மனைவியை அவசரமாகக் கூப்பிட்டதும்,மனைவியும் என்ன ஏதோ என்று அடுப்படியைவிட்டு எழுந்து போனதும் பிறகு அறைக்குப் போய் திரும்பிக் கக்கூசடிக்குப் போனதையும் கவனித்த ஞானத்தின் தந்தை என்ன நடந்திருக்கும் என்பதையும் முற்றத்தில் தனது மனைவி புஸ்பகலாவுடன் நின்ற போது கோப்பையைக் அவர் கழுவும் போது ஞானத்தின் தாய் அவருக்கு கண்ணாலும் தலையையாட்டியும் உணர்த்தி விடுகிறாள்.
தனபாலசிங்கத்தைப் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க அவனும் வந்துவிடுகிறான்.சரி போவமா என்று புஸ்பகலாவைப் பார்த்துக் கேட்க அவளும் ஓம் என்பது போல தலையையாட்டுகிறாள்.
இருவரும் போவதற்கு ஆயத்தமாகையில்,சிங்கம் பிள்ளை பின்னேர வகுப்புகளுக்கு வரமாட்டாள்.கொலிஜ் வரையும் உன்னோடு வருவாள் பிறகு வீட்டை போய்விடுவாள்,ஏன் என்று கேட்காதை,கொக்கா சில நேரம் திடீரென்ற பள்ளிக்கூடம் போகமல் நிற்பதுண்டுதானே,அதுதான் புரிஞ்சு கொண்டால் சரி என்று தாய் சொல்ல தனபாலசிங்கம் புஸ்பகலாவின் சூழ்நிலையைப் புரிஞ்ச கொள்கிறான்.
ஞானத்தின் அருகில் சென்ற புஸ்பகலா போய்ப் படுத்து றெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் அப்பதான் காய்ச்சல் மாறி நாளைக்கு கொலிஜ்யுக்கு வரமுடியும் என்று அவனுக்குச் சொல்கிறாள்.
மாமி போட்டு வாறன் மாமாவுக்குச் சொல்லுங்கோ என்று சொல்லிக் கொண்டே புஸ்பகலா சைக்கிளில் ஏறி உட்கார,அவளருகில் வந்து மெதுவாக பெடலை உழக்கு சீற்றிலை இறுக்கமாய் உட்காராதை,கொலிஜ்யுக்கு அங்காலை போனதும் சைக்கிளை உருட்டிக் கொண்டு போ அதுதான் நல்லது ஏன் நான் சொல்றன் என்று விளங்குதா என்று கேட்க,ஓம் மாமி விளங்குது படாமல் இருக்கத்தானே என சொல்லிவிட்டு சைக்கிளை விழக்கத் தொடங்கினாள்.
புஸ்பகலா மெதுவாக ஓடுவது ஏன் என்பதை புரிஞ்சு கொண்ட தனபாலசிங்கம் அவளுக்குப் பின்னால் அவனும் மெதுவாக சைக்கிளை விழக்கிக் கொண்டு போனான்.
தனபாலசிங்கமும் புஸ்பகலாவும் முற்றத்தைவிட்டுப் போகும் வரை காத்திருந்த ஞானம் அறைக்குள்ளை போயப் படுக்கிறான்.
ஞானத்தின் வீட்டு விறாந்தை டானா வடிவிலானது.தகப்பன் சுப்பையா மத்தியானம் சாப்பிட்டபின் வடக்குப்புற விறாந்தையில் தலைமாடு சுவரோடிருக்கத்தக்கதாக பாயை விரிச்சு தலைகணியை இடுப்புக்கும் தோளுக்கும் மிண்டு குடுத்து சவரோடு சாய்ஞ்சு இருந்தபடி சுருட்டுப் புகைத்துவிட்டுத்தான் பிறகு தலைகணியை கிடப்பில் வைச்சு ஒரு மணித்தியாலம் உடம்பு அசதி போக நித்திரை கொள்வார்.அன்றும் அவர் அப்படித்தான் படுத்து நித்திரை கொள்ளத் தொடங்கினார்.
கோலிஜ்யடி வந்ததும் சரி சிங்கம் நான் வாறன் என்னோடை வந்ததற்கு தாங்ஸ் நீலலோஜினி சிலநேரம் நான் உன்னோடை ஞானத்தின்ரை வீட்டுக்க வந்தவளா என்று கேட்பாள் நீ அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று சொல் என்று சொல்ல,நீ பயப்படாதை நீ என்னுடைய நண்பனின் ஆள் உன்னைக் காட்டிக் குடுக்கமாட்டன் பயப்படாமல் போ கவனமாகப் போ என்று சொல்லிக் கொண்டே தனபாலசிங்கம் கொலிஜ்யுக்குள் போகிறான்.
கயிற்றுக் கொடியில் ஈர உடுப்புக்களைக் காயவிட்டுக் கொண்டிருந்த புஸ்பகலாவின் தாய் மகள் சைக்கிளை உருட்டிக் கொண்டு கொலிஜ்யிலிருந்து நேரத்தோடு வருவதைக் கண்டதும் என்ன நடந்திருக்கும் என யோசித்தவாறு அவள் தன்னருகில் வரும்வரை காத்திருக்கிறாள்.
(தொடரும்)
![]()