கட்டுரைகள்
சர்வதேச உறவுகளில் மாற்றம் ? இந்தியா இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவு : ரஷ்யாவின் சுதந்திர பாலஸ்தீன தீர்வு!

(இந்தியாவின் ஆதரவு முன்பு பாலஸ்தீனத்துக்கு, இப்போது இஸ்ரேலுக்கு மாறிய நிலைப்பாடும்,
இந்த மோதலுக்கான தீர்வு சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவது தான் எனும் ரஷ்யா கூறியுள்ளமை சர்வதேச உறவுகளின் மாற்றமாக கருதலாம்)
மத்திய கிழக்கின் இரும்புக் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருந்த இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று கடுமையான தாக்குதலை நடத்தியது. காசா பகுதியிலிருந்து தொடுக்கப்பட்ட தாக்குதலால் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
காசா திறந்தவெளி சிறைச்சாலை:
இதனையடுத்து பாரியளவல் போர் சூழல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்திருக்கின்றன. குறிப்பாக, பாலஸ்தீனத்துக்கு சீனா, ஈரான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், கத்தார், தென்னாப்பிரிக்கா, லெபனான் போன்ற நாடுகளும்,
இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, உக்ரைன், பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன.
1948 முதல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. தற்போது மிக மிக சிறிய அளவில் உள்ள நிலப்பரப்பில் தான் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலப்பரப்பு சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட இந்த துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
இந்த இடத்தை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் பாலஸ்தீனிய போராளிகள் இதனை தடுத்து வருகின்றனர். எனவே இந்த துண்டு நிலத்தை இஸ்ரேல் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது. இதற்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் இந்த அமைப்புகள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தன என்பதே வரலாற்று உண்மை.
இந்தியா இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவு!
கடந்த வாரம் போர் தொடங்கிய போதே இந்தியப் பிரதமர் மோடி, இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று இஸ்ரேலுக்கு தனத ஆதரவை தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி, தற்போதைய கடினமான இந்தத் தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்துவருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாகக் கண்டிக்கிறது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பாலஸ்தீன நிலைப்பாடு:
பாலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரிக்கும் வரலாற்று பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவு அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக நீண்ட காலம் இருந்தது.
1974 ஆம் ஆண்டில், யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பை (PLO) பாலஸ்தீன மக்களின் ஒரே மற்றும் சட்டபூர்வமான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக இந்தியா இருந்தது.
அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் யாசர் அராபத்துக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.
1988இல், பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. 1996 ஆம் ஆண்டில், இந்தியா தனது பிரதிநிதி அலுவலகத்தை காஸாவில் திறந்தது. 2003 அக்டோபரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தை இந்தியாவும் ஆதரித்தது. இது இஸ்ரேல் பிரிவினைச் சுவரைக் கட்டும் முடிவை எதிர்த்தது.
2011 இல், பாலஸ்தீனத்தை யுனெஸ்கோவின் முழு உறுப்பினராக்குவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. 2012 ஆம் ஆண்டில், ஐ.நா.வில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் பாலஸ்தீனத்தை “உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக” மாற்ற வேண்டும் என்ற ஐ.நா பொதுச் சபை தீர்மானத்தை பிறநாடுகளுடன் இணைந்து இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்தது. 2015 செப்டம்பரில், ஐநா வளாகத்தில் பாலஸ்தீனக் கொடியை நிறுவ இந்தியாவும் ஆதரவளித்தது.
இந்திரா காந்தி – யாசர் அராபத் நல்உறவு:
சர்வதேச மற்றும் இருதரப்பு அளவிலான வலுவான அரசியல் ஆதரவைத் தவிர, பாலஸ்தீனியர்களுக்கு பல்வேறு வகையான பொருளாதார உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவராக இருந்த யாசர் அராபத்துக்கும் இடையே நல்லுறவு தொடர்ந்தது.
காஸா நகரில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் ஜவஹர்லால் நேரு நூலகம் மற்றும் காஸாவின் டெய்ர் அல்-பலாவில் உள்ள பாலஸ்தீன தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மகாத்மா காந்தி நூலகம் உள்ளிட்ட மாணவர் செயல்பாடு மையங்களை உருவாக்க இந்திய அரசு உதவியுள்ளது. இவை தவிர பாலஸ்தீனர்களுக்கு பல திட்டங்களை உருவாக்கவும் இந்தியா உதவி வந்தது.
பிப்ரவரி 2018 இல், பாலஸ்தீன பகுதிக்கு நரேந்திர மோடி சென்றார். அப்போது, பாலஸ்தீன நிர்வாக அதிபர் மஹ்மூத் அப்பாஸ், மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன’ விருதை வழங்கினார்.
கடந்த ஆண்டு, பாலஸ்தீனர்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தின் போது, பிரதமர் மோடி ஒரு செய்தியை வெளியிட்டார். இதில் பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் நிலையான ஆதரவை பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவும் பாலஸ்தீனமும் நட்புறவு கொண்ட நாடுகளாக வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பாலஸ்தீன மக்கள் சுயசார்பு மற்றும் கண்ணியத்துடன் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைப் பெறுவதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவளித்து வருகிறோம். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், இதன் மூலம் அவர்கள் ஒரு விரிவான மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தீர்வைக் காண்பார்கள் என்றும் நம்புகிறோம் என பிரதமர் மோடி கூறினார்.
இஸ்ரேலுக்கு இந்திய ஆதரவு :
இந்திய சுதந்திரக் காலம் தொட்டே, இந்தியாவின் ஆதரவு என்பது பாலஸ்தீனத்துக்குத்தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக,
1948-ல் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்த நாடு இந்தியா. அதேபோல, முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தி என அனைத்து இந்தியப் பிரதமர்களும் பாலஸ்தீனத்தையே ஆதரித்துவந்தனர்.
1981-ம் ஆண்டு `Solidarity with the Palestine people’ என்ற வாசகத்துடன் இந்திய – பாலஸ்தீனக் கொடிகள் மற்றும் மக்கள் இடம்பெற்றிருக்கும் தபால்தலையையும் இந்தியா வெளியிட்டு பாலஸ்தீனுக்குத் தனது தார்மிக ஆதரவை இந்தியா வழங்கியது. தற்போதைய போர்ச் சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை பாலஸ்தீனத்துக்கு வழங்கியிருக்கிறது.
பாஜக, மோடி அரசின் நிலைப்பாடு மாற்றம் :
2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றிபெற்று பிரதமராக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இஸ்ரேல் – பாலஸ்தீன நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றிருக்காத நிலையில், 2017-ம் ஆண்டு முதன்முறையாக அந்த நாட்டுக்குச் சென்று பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்ற பெயரையும் பெற்றார். அதேபோல, தற்போதைய போர்ச் சூழலிலும் இஸ்ரேலுக்கே தனது முழு ஆதரவையும் அளித்திருக்கிறார்.
வலதுசாரி – இடதுசாரி, அமெரிக்கா – ரஷ்யா’ என உலக நாடுகள் இரண்டு தரப்பாக அணிவகுத்தபோதே இந்தியா அணி சேராக் கொள்கையுடன் இரண்டு தரப்புக்கும் இல்லாமல் நடுநிலை வகித்தது. இரண்டு தரப்பு நாடுகளிடமும் நட்புறவைப் பேணிவந்தது. அனைத்துச் சூழலிலும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகத் தன்னை இருத்திக்கொள்வதிலேயே குறியாக இருந்துவந்தது. இந்த நிலையில், 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டில் சிறிது மாற்றங்கள் தென்படத் தொடங்கின.
ஆசியப் பெருங்கண்டத்தில் ஓங்கிவரும் சீனாவின் அபரிமிதமான அதிகார மற்றும் பொருளாதார வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டுமன்றி அமெரிக்க மேற்குலக நாடுகளுக்கும் சவாலாக அமைந்தன. ஆசிய கண்டத்தையும் தாண்டி, ஆபிரிக்க – ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது பட்டுப்பாதைக் கனவை சீனா விரிவுபடுத்திச் செல்வதும் பெரும் தலைவலியாக இந்தியாவிற்கு அமைந்து வந்தது.
அமெரிக்க சார்பு நிலைப்பாட்டில் இந்தியா ?
சீனா தொடர்ச்சியாக இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் அத்துமீறி நுழைவது, ஆக்கிரமிப்பு – கட்டுமானங்களை மேற்கொள்வது, இந்திய ராணுவத்தினரோடு மோதலில் ஈடுபடுவது அதிகரித்தபடி சென்றமையால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்தது.
பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக AUKUS எனும் கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் ஏற்படுத்திக் கொண்டது. பா.ஜ.க ஆட்சியின் போதும் இந்தியா நடுநிலையான நாடாக இருந்து வருகிறது என்றாலும்கூட, மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு சூழல்களில் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டையே எடுத்துவருகிறது.
அதற்கேற்ப, அமெரிக்கா தோள் கொடுக்கும் இஸ்ரேல் நாட்டுடனும் இந்தியா தனது உறவை மேம்படுத்திவருகிறது. தற்போதைய போர்ச் சூழலில் சீனா, பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறது. ரஷ்யாவும் இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கத் தலையீட்டைக் குறிப்பிட்டு மூன்றாவது நாடு நுழைகிறது என எச்சரித்திருக்கிறது. வழக்கம்போல அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. இந்தியாவும் வழக்கமான தனது நடுநிலை, சமாதானம், போர் நிறுத்தம் என்ற வார்த்தைகளைவிட்டு இஸ்ரேலுக்கே தனது ஆதரவு என வெளிப்படையாகப் பேசியிருக்கிறது.
இஸ்ரேல், இஸ்லாமியர்களுக்கு எதிரானதா ?
இஸ்ரேல், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற பிம்பம் பாரியளவில் உருவாகியிருக்கிறது. பா.ஜ.க-வும் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் அரசியலைச் செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பா.ஜ.க ஆதரவாளர்கள் இஸ்ரேலை விரும்புகின்றனர்.
இந்தியாவில் இஸ்ரேலுக்கு ஆதரவு என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வால்தான் ஏற்படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்துக்கு ஆதரவு எனும் பேரில் தீவிரவாதத்துக்கு துணைபோகிறது என பா.ஜ.க குற்றம் சாட்டிவருகிறது.
இஸ்ரேலில் இன்று என்ன நடக்கிறதோ, அதைத் தான் 2004-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே (UPA அரசாங்கத்தின் பதவிக்காலம்) இந்தியா சந்தித்தது என்று பா.ஜ.க கூறியுள்ளது.
இஸ்ரேல்–பாலஸ்தீன் மோதலுக்கான தீர்வை சொல்லும் ரஷ்யா!
சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவதுதான் தீர்வு என ரஷ்ய அதிபர் புட்டின் கூறியுள்ளார். இந்த மோதலில் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை முவுக்கு கொண்டு வர வேண்டும் என புட்டின் கூறியுள்ளார்
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகளும் முயன்று வருகின்றன. ஆனால் மோதலை தீவிரப்படுத்தும் விதமாக அமெரிக்கா, தனது போர் இரு கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. பிரிட்டனும் தனது போர் கப்பலை அனுப்ப முயல்கிறது. இவை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அதே வேளை துருக்கி தனது போர் கப்பலை காசா நோக்கி திருப்பி விட்டிருக்கிறது. ரஷ்யாவும் தனது பங்குக்கு துருக்கிக்கு தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது.
ஒரு வேளை அமெரிக்காவோ அல்லது நேட்டோ படைகளோ இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கினால், ஈரான், துருக்கி, ரஷ்யா மற்றும் இதர அரபு நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சண்டையில் குதிக்கும் எனும் ஊகங்களும் உள்ளன.
இந்நிலமை பாரிய போரையே இழுத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே உலகின் மற்றய நாடுகள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா இந்த பிரச்னைக்கு தீர்வு காண சில தீர்வுகளை கூறியுள்ளது.
சுதந்திர பாலஸ்தீனம் தான் தீர்வு:
காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (CIS) உச்சி மாநாட்டில் பேசிய புட்டின், பாலஸ்தீனிய-இஸ்ரேல் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ரஷ்யா முன்மொழிகிறது என்று கூறியுள்ளார். அமைதியான வழிகளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. ஆனால் அதேநேரம் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்பது, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவதன் மூலமாகதான் அமையும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்னெவே சீனாவும் சுதந்திர பாலஸ்தீனம்தான் தீர்வு என்று கூறியிருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் இதையே வலியுறுத்தி உள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் போரில், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. கூடவே, இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் அனுப்பிவருகிறது அமெரிக்கா. இவ்வாறு, அமெரிக்கா இஸ்ரேல் பக்கம் நிற்பதால், ரஷ்யாவும் அதன் நட்பு நாடான சீனாவும் பாலஸ்தீனத்தை
ஆதரிக்கின்றன.
சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்:
இதற்கிடையில் சிரியா, ஈரான் அதிபர்கள்,ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகின் அனைத்து சுதந்திர மக்களும், இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சிரியாவில், அதன் தலைநகர் டமாஸ்கஸ் (Damascus), அலெப்போ (Aleppo) ஆகிய இரண்டு விமான நிலையங்களில் இஸ்ரேல் 13/10/23 ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில், விமானங்கள் தரையிறங்கும் ஓடுபாதைகள் பெரும் சேதமடைந்ததால், அனைத்து விமான சேவைகளும் தடைப்பட்டன. இவ்வாறிருக்க, சிரியாவின் விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது சர்வதேச சட்டமீறல் என ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது.
பாலஸ்தீன ஆதரவாக ரஷ்யா:
காசா மீது இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சிரியா மீதும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் தற்போது ரஷ்ய விமானப்படையின் போர் விமானங்கள் பல சிரியாவின் லடாகியா விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில் ரஷ்யா தனது போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில், இஸ்ரேலின் விமானப்படை டமாஸ்கஸ், அலெப்போ சர்வதேச விமான நிலையங்களின் ஓடுபாதைகளை சேதப்படுத்தி இருக்கின்றன. இதனால் அவற்றின் சேவைகளை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
பாலஸ்தீன – இஸ்ரேல் மோதலின் நிலைமை தீவிரமாக அதிகரித்துவரும் சூழலில், இஸ்ரேலின் இத்தகைய பலவந்தமான நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது, பிராந்தியம் முழுவதும் ஆயுதமேந்தத் தூண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
லெபனானின் மீதும் இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியுள்ளது. அதாவது லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நியாயம் கற்பித்திருக்கிறது.
இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. இஸ்ரேல் செய்வது முழுமையான இறையான்மை மீறல் என்றும் இது போன்று செய்வது போரின் தீவிரத்தை இரட்டிப்பாக்கும், இஸ்ரேல் தனது நிலை தெரிந்து நடக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்திருந்தார்.
பாலஸ்தீனத்திற்கு செச்சினியா படைகள்:
பாலஸ்தீனத்திற்கு உதவ செச்சினியாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் படை அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார். கதிரோவைட்ஸ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை இராணுவ படையாகும்.
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதேபோல மேற்கு நாடுகள், போராளிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும். இந்த போரில் நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம். நாங்கள் இந்த போருக்கு எதிராக இருக்கிறோம். இது மற்ற மோதல்களைப் போலல்லாமல் மேலும் மேலும் அதிகரிக்கலாம். மத்திய கிழக்கில் ஒழுங்கை மீட்டெடுக்க அமைதி காக்கும் படையாக செச்சென் பிரிவுகளை நிலைநிறுத்த தயாராக இருக்கிறோம் என்று செச்சினியா படையின் தலைவரான ரம்ஜான் கதிரோவ் கூறியுள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்காவின் போர் கப்பல் USS Gerald R Ford தற்போது காசாவுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த போரில் அமெரிக்க படை, இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து ஈரானுக்கு ஆயுத உதவிகளை செய்யும்.
தற்போது ரஷ்யாவின் துணை இராணுவ படைகளில் ஒன்றான செச்செனிய படைகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அவசியமெனில் பாலஸ்தீனத்தில் சண்டை செய்வோம் என அறிவித்துள்ளதுள்ளனர்.
ஏற்கெனவே ஈரான் இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் அதை மறுத்திருக்கிறது. மட்டுமல்லாது ஏதாவது ஒரு குண்டு கூட ஈரான் பக்கம் திரும்பினால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்தது. இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில்
அரபு நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதால் மற்றய
நாடுகள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
![]()