“ஸ்ரீ சுக்கில பிடாரி அம்மன்” …. சிறுகதை …. சங்கீதா.

அது ஒரு மழைக்கால இரவுப் பொழுது.பருவ மழை ஊரையே குளிரூட்டி கொண்டிருந்தது.கருமை என்ற சொல்லை அச்சு எடுத்தார் போல் உதித்தது அந்த கரிய இருள்.அந்த ஊரில் கம்பீரமாய் தோற்றமளிக்கும் பல வகை மரங்களும், பச்சை போர்வையினை போர்த்திய வயல்வெளிகளும், ஆங்காங்கே ஆனந்தமாய் கேட்கும் பறவைகளின் கீச்சொலிகளும் ரம்மியமாக இருந்தது.
நேர்மையையும் கடமையையும் மட்டுமே கொண்டு நெடுநெடுவென உயர்ந்திருந்த முனியன் மழையையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பழைய கம்பளி ஒன்றை போர்த்திக்கொண்டு தான் எப்பொழுதும் வைத்திருக்கும் தடியோடு நடந்தான் குளத்தை நோக்கி….
குளங்களில் அக்குளம் சற்று பெரியகுளம்,பெயரும் அதுவே. மழைக்காலங்களில் முழுவதும் நிரம்பிவிடும் பெரிய கரையை உடைய அக்குளம் எந்த நேரமும் உடைத்துக் கொள்ளும் அபாயம் உடையது. அவ்வாறு உடைய நேர்ந்தால் தாழ்வாக இருக்கும் நான்கைந்து கிராமங்களை அழித்துவிடும் நிலை உள்ளது. கரை உடையாமல் காவல் காக்கும் தொழிலை தான் செய்து வருகிறான் அந்தகுளங்களில் ஊர் கருப்பையா அம்பலத்தால் நியமிக்கப்பட்ட முனியன்.
அன்றும் வழக்கம்போல் கரையில் நின்று கொண்டும், குளத்தின் அழகை ரசித்துக்கொண்டும்,இருளை பற்றிய துளி பயமும் இன்றியும்அன்றும் காவல் புரிந்து கொண்டு நின்றான்.
எத்தகைய வீரமிக்க ஆண் மகனையும் ஒரே வீச்சில் வீழ்த்தி விடும் ஆற்றல் உள்ளவன் முனியன். பத்து பேரை கூட ஒரே ஆளாய் நின்று எதிர்த்து வெற்றி பெறும் உடலமைப்பினை பெற்றவன். அத்தகைய முனியனே சற்று பயமுற்று, நேரமாக ஆக வெளிச்சம் பெரியதாகி ஒரு
கும்பல் கரையை நோக்கி வருவதைக் கண்டு தன் கையில் தடியை எடுத்துக்கொண்டு அந்தக் கூட்டத்தை எதிர்க்க தயாரானான். அருகில் வந்தவுடன் தான் தெரிந்தது,அந்தக் கூட்டத்தில் சில பெண்கள் துணையோடு தெய்வாம்சம் பொருந்திய தோற்றம் கொண்ட ஒரு பெண் தன் கையில் தீப்பந்தங்களை ஏந்தி நீந்தி வருவதை கண்டான். மேலும் அவர்களுடன் கரிய நிறம் பொருந்திய வீரமிக்க ஆண் மகன் ஒருவனும் இருந்தான்.அருகில் அவர்கள் வர வர முனியனுக்கு சற்று பயம் வந்து வேர்க்கத் தொடங்கி தடுமாறினான். ஏனெனில் அவர்கள் தோற்றம் அப்படி! கழுத்திலும் காதிலும் ஜொலிக்கும் விலை உயர்ந்த ஆபரணங்களுடனும், பட்டு ஆடைகளுடனும் விண்ணுலக தேவதைகள் இறங்கி வருவதைப் போன்ற முக தேஜஸ் பொருந்திய ஒளியுடனும் தெய்வங்கள் போன்று காட்சியளித்தனர்.
அதிலும் அவர்களை தலைமை ஏற்று நடத்தி வந்த பெண் மட்டும் அதிக ஒளி பொருந்திய மூக்குத்தியினையும் பால் போன்ற நிலவினை ஒத்த முகத்தினையும் கொண்டு,அந்த சிவலோக பார்வதியே மண்ணுலகில் இறங்கி வந்ததைப் போன்று
தெய்வீக காட்சி அளித்தார். இந்த அதிசயங்களை எல்லாம் பார்த்து மிரண்டு போயிருந்த முனியனிடம் அந்தப் பெண் பேசத் தொடங்கினார்.”தம்பி நாங்கள் கீழ்நாட்டு மலைப்பகுதியில் இருந்து வருகிறோம். நாங்கள் வெகுதூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.உன் ஊர் அம்பலக்காரரை அழைத்துக் கொண்டு வருகிறாயா,அவரை நாங்கள் சந்தித்து விட்டு செல்ல வேண்டும்” என்றார்.
தன் இரண்டு கைகளையும் எடுத்து கும்பிட்டுக் கொண்டே முனியன் கூறினான், “கும்பிடுகிறேன் தாயே நீங்கள் எல்லாம் யார்னே தெரியல ஆ….னா…. பார்த்தா கடவுளாட்டம் இருக்கீங்க.. மன்னிச்சிருங்கம்மா, இந்தக் கரையை காவல் காக்கச் சொல்லி எனக்கு உத்தரவு. நான் சென்று விட்டால் கரையைக் காக்க ஆளில்லை தாயே. நான் செல்ல மாட்டேன் தாயே” என்றான். இந்த பதிலை கேட்ட அந்தப் பெண் “நீ சென்று அழைத்து வரும் வரை இக்கரை உடையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். அதைக்கேட்ட துணுக்குற்ற முனியனோ, அம்மா இந்தக்கரை உடைஞ்சிருச்சுன்னா இங்குள்ள கிராமங்கள் அனைத்தும் அழிஞ்சிரும். என்னோட உயிரே போனாலும் சரி,காவல் காக்கிறதை மட்டும் விட்டு விட்டு போக மாட்டேன்” என்றான்.
‘தனது கடமையில் வானளவு உயர்ந்த நல்லவனாய் இருக்கிறானே’என்றெண்ணிய அந்தப் பெண், சற்றே புன்னகைத்தவாறு” நீ வரும்வரை கரை உடையாமல் காவல் காப்பது எனது கடமை. நீ வந்தவுடன் தான் நான் செல்வேன். இது சத்தியம். சென்று விரைவாக வா” என்றார். சத்தியத்தைக் கேட்ட முனியனும் நம்பிக்கையோடு சென்றான் ஊர் அம்பலத்தின் வீட்டை நோக்கி!
நட்ட நடு ஜாமத்தில் வந்து எழுப்பிய முனியனை மிகுந்த தூக்க கலக்கத்துடனும், சற்றே வியப்புடனும் காரணத்தை வினவினார் அம்பலம். முனியன், “ஐயா நம்ம பெரிய குளத்து கரையில தகதகன்னு தெய்வீக கலை பொருந்திய பெண்களுடன்,
அம்மன் மாதிரி முகத்தோற்றம் பொருந்திய பெண்ணும், ஒரு ஆண் காவலனும் வந்திருக்கிறார்கள். அவங்க எல்லோரும் மலை நாட்டவங்களாம். உங்களை பார்த்து பேசிட்டு தான் போகனுமாம். அதுதான் ஐயா, அவங்களை குளத்துக்கு காவல் வச்சிட்டு உங்களை கூப்பிட வந்தேன்” என்றான் கள்ளம் கபடம் மற்றும் அந்த முகத்துடன்.
அதைக் கேட்டு அம்பலத்திற்கு முனியன் மேல் சந்தேகம் வரவில்லை. ஏனெனில் முனியன் மற்றவரைப் போல் பொய் சொல்பவன் அல்ல.தானுண்டு தன் வேலையுண்டு என்று மக்கள் தொண்டில் சிறந்து இருப்பவன். இது நாள் வரை முனியன் அம்பலத்தின் பேச்சை மீறியதில்லை. அம்பலமும் அப்படித்தான்.அந்த ஊரின் ஒட்டுமொத்த மக்களின் அன்பையும் பெற்றவர்.அம்பலம் என்ற கௌரவம் பார்க்காமல் ஊர் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபடும் நல்ல மனிதர்.
முனியன் சொன்னதை மீண்டும் மீண்டும் கேட்ட அம்பலத்திற்கு கை கால் ஓடவில்லை. ‘நிச்சயம் வந்திருப்பவர்கள் ஏதோ சக்தி படைத்தவர்கள் தான்.அவர்களால் நம்மூருக்கு நன்மையே என பலமுறை சிந்தித்தவாறு’ஏதோ ஒரு ஒளி பிறக்க உறுதியுடனும் தெளிவுடன் முனியனிடம் கூறினார், “சரி முனியா காவல் காத்துட்டு பசியோடு வந்திருப்ப, பொறு, சாப்பிட்டுப் போகலாம்!” என்றவாறு வேலையாளை அதட்டினார் அம்பலம். முனியனும் மனதில் குழப்பத்துடன் அம்பலத்தின் வாக்கை மீற முடியாமல் “சரி ஐயா” என்றான். அம்பலம் வேலையாளிடம் “டேய் கந்தா, நல்ல கறி ஆடா புடிச்சு வெட்டி சோறு ஆக்குற வேலைய பாருங்கடா” என்ற அம்பலத்தின் குரலுக்கு வேலை தடபுடலாக நடந்து முடிந்தது.
அம்பலம் தன் கையாலேயே முனியனுக்கு பரிமாறினார். தலை வாழை இலையில் சோற்றை விட கறியை மூன்று பங்காய் வைத்து இதுவரை தான் முனியனிடம் காட்டிய பாசத்தையும், முனியன் தன்னிடம் காட்டிய விசுவாசத்தையும் கலந்து கலந்து பரிமாறினார் கனத்த மனத்துடன் அம்பலம்.
முனியனும் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் அம்பலம் சொல்லச் சொல்ல வயிறு முட்ட சாப்பிட்டான். பிறகு அம்பலம் குதிரையிலும், முனியன் அருகில் நடந்தும் சென்றனர் குளத்தை நோக்கி!
சிறிது தூரம் வந்ததும் குளக்கரையை பார்த்தார் அம்பலம். என்ன அதிசயம்! குளக்கரையில் ஜோதி பிழம்புகளாய் பளபளக்கும் வெளிச்சத்தில் தெய்வாம்சம் பொருந்திய பெண், அம்மனைப் போன்ற முகத்துடனும், மற்ற பெண்களும் தேவதை போன்று நிற்பதை கண்டு ‘அவர்கள் உண்மையான தெய்வங்கள் தான் என்ற மன உறுதியுடன், முனியன் கரைக்கு சென்றால்தானே அவர்கள் சென்று விடுவார்கள். இனி முனியன் கரைக்கு செல்ல போவதில்லை. சத்தியத்தை காப்பாற்றிக் கொண்டு நிற்கும் அந்த தெய்வங்களும் எங்கும் செல்லப் போவதில்லை. நம் ஊரிலேயே இருந்து மக்களையும் காக்கட்டும்’.. என்ற ஆண்டாண்டாகிப் போன அந்த ஊரின் வரலாற்றை மாற்றப்போகும் அந்த முடிவை கட்டளையாய் விடுத்தார் அம்பலம். தனது இடைவாரில் இருந்த சுண்ணாம்பு டப்பாவை கீழே தூக்கிப் போட்டார். முனியனிடம் “முனியா, என் சுண்ணாம்பு டப்பா கீழே விழுந்துருச்சு.அதைத் தேடி எடுத்துக் கொடு” என்றார். முனியனும் வேகமாய் இருளில் டப்பாவை தேடத் தொடங்கினான்.
குனிந்தவன் கழுத்தில் விழுந்தது அறிவாள் வெட்டு. முண்டம் துடிதுடிக்க இறந்தான், காவலை மட்டுமே கடமையாய் கொண்ட அந்த காவல்கார முனியன். முண்டம் துடிதுடித்து அடங்கியது. தலை சென்று விழுந்தது குளத்தின் தென்கரையில், அந்தோ! பரிதாபம்! கடைமைக்காய் உயிரை விட்ட முனியன்! ஊரின் நலனுக்காய் உயிரை எடுத்த அம்பலம்! தன் எதிரே நீதிமான் ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்து அம்பலத்தின் விம்மி வெடித்துக்
கொண்டிருந்த மனது, உறங்கிப் போன ஊர் மக்களுக்கு தெரியாது, அந்த நடுநிசியில்!
பொழுதும் விடிந்தது. முனியனையும் அம்பலத்தையும் எதிர்பார்த்து விடியும் வரை காத்திருந்த அந்தப் பெண்ணும், மற்ற பெண்களும் கற்சிலையானார்கள், குளக்கரையில் சத்தியத்தை காப்பதற்காக!
பிற்காலத்தில் முனியன் தலை விழுந்த இடத்தில் ஊர் மக்களால் கோவில் கட்டப்பட்டு நடு ஜாமத்தில் ஆட்டுக்கடா வெட்டி பூஜை நடைபெற்று வருகிறது. முனியன் இன்றும் ஊரை காத்துக் கொண்டும், அதன் வழியே கடந்து செல்வோருக்கெல்லாம் வழிகாட்டியாகவும் விளங்குகிறார் முனியன் என்ற பெயருடைய கடுங்காவல் தெய்வம்..
கற்சிலையான அந்தப் பெண் வத்தனாக்குறிச்சி கிராமத்தின் கடவுள் “ஸ்ரீ சுக்கில பிடாரி அம்மன்.” அவருடன் வந்தவர்கள் 21 கன்னிமார்கள் மற்றும் “கருப்பர்” ஆவார்.
அத்தகைய பெருமை வாய்ந்த குளத்தில் கற்சிலையாய் இன்றும் சத்தியத்தை காத்துக் கொண்டிருக்கிறார் “ஸ்ரீ சுக்கில பிடாரி அம்மன்.”
அத்தகைய பெருமைமிக்க குளம் தான் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, திருமலைராயபுரம் அஞ்சல், வத்தனாக்குறிச்சி கிராமத்தின் பெரிய குளம்! அந்த காவல் தெய்வம் தான் “ஸ்ரீ கடுங்காவல் தெய்வம்!” அந்த ஊரை காத்துக்கொண்டிருக்கும் சத்திய தெய்வம்தான் “ஸ்ரீ சுக்கில பிடாரி அம்மன்!”
![]()
சுக்கிலபிடாரி சிறுகதையின் எழுத்து நடை சிறப்பு. மேலும் கிராமத்து சூழலியலை கண்முன்னே நிறுத்திய எழுத்தாளர் சங்கீதா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்
ஸ்ரீ சுக்கில பிடாரி அம்மன் – கதை. வாசிக்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. “முனியனுக்கு பாசத்தையும் விஸ்வாசத்தையும் கலந்து உணவு பரிமாறினார்” என்பது அருமை. எழுத்தாளருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.