“துயிலி” … சிறுகதை – 37 …. அண்டனூர் சுரா.

ஓர் ஆசை மனதிற்குள் வித்தென விழுந்து முளைக்கையில் கிளைகள் அதனை அடைய கொடிபோல படரத் தொடங்கிவிடுகின்றன. பானுவின் ஆசை அப்படியானதுதான்.
நைட்டியை இனி ஒரு நாளும் உடுத்த மாட்டேனெனச் சபதமெடுத்து இருந்தவள் பானு. அவளது மகள் கட்டாயத்தின் பேரில்தான் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அதை உடுத்தத் தொடங்கியிருந்தாள். அவள் உடுத்திய கொஞ்ச நாட்களுக்குள் பாக்கெட் வைத்த நைட்டி மீது அவளுக்கு ஆசை வந்துவிட்டது. அந்த ஆசையை அவள் அவளோடு வைத்துக்கொள்ளவில்லை. எப்பொழுதெல்லாம் அவளுக்கு அலைபேசி அழைப்பு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் பாக்கெட் வைத்த நைட்டி மீதான ஆசையை எரிச்சலாகக் காட்டத் தொடங்கினாள்.
பானுவின் கணவர் ராஜாங்கத்திற்கு நைட்டி என்கிற ஆடை ஒவ்வாமையாக இருந்தது. அவர் பானுவைத் திருமணம் செய்துகொண்டு வந்த மறு வாரமே சொல்லிவிட்டிருந்தார், “ நம்ம குடும்பத்துக்கு நைட்டி ஆகாதென்று.” இதை அவர் கனிந்தும் கடிந்தும் சொல்லிவிட்டிருந்தார். அவள் ஆசையாகப் பிறந்த வீட்டிலிருந்து கொண்டுவந்த நைட்டிகளை நீண்ட நாட்கள் ட்ரெங்க் பெட்டியிலிலே வைத்திருந்து, பிறகு அதை எடுத்து கிழித்து, கைப்பிடித் துணிக்குப் பயன்படுத்தி, அதிலேயே கண்ணீரையும் சிந்திக்கொண்டாள்.
அவள் நைட்டி என்கிற ஆடை வரத் தொடங்கிய காலத்தில்,அது வானத்தில் திரளும் மேக ஆடையாக இருந்ததில்லை. எப்பொழுதாவது வானத்தில் தோன்றும் வானவில் அளவிலேயே இருந்தது. நைட்டியைப் பெண்களே பரிந்துபழிக்கும் காலம் அது. நைட்டி போட்டிருக்கிற பெண்களிடம், “ உள்ளே போட்டிருக்கீயா, சும்மாதானா?” எனக் கேட்டு சிரிக்கும் அளவினதாக அந்த ஆடை இருந்தது.
ராஜாங்கம், மனைவி பானுவிடம் நைட்டி நீ உடுத்தக்கூடாது, எனத் தடை விதித்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவள் திருமணம் செய்துகொண்டு வந்த மூன்றாம் நாள், கணவனுக்கு அவள் உணவு பரிமாறினாள். குனிந்து பரிமாறியவளை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தார். காணக் கூடாத ஒன்றைக் கண்டுவிட்டவராக எழுந்துவிட்டார்.
“ஏன் என்னாச்சு?” பானு கணவனின் கையைப் பிடித்தவளாய் கேட்டாள்.
“முதல்ல நைட்டிய கலட்டி தூக்கி எறிஞ்சிட்டு சேலையக் கட்டிக்கிட்டு வா”
அவரது குரலில் கோபம், விரக்தி, எரிச்சல் என சகலமும் இருந்தது. கூடவே அவளது மாமியார் தேங்காய் உடைப்பதைப் போல உடைத்துக் கவிழ்த்தாள். “இதெல்லாம் ஒரு உடுப்புனு உடுத்திக்கிட்டு திரியுறே. நல்லாவா இருக்கு?”
பானுக்கு அழுகை வந்தது. கையில் வைத்திருந்த கரண்டியை நின்றபடியே சோற்றுப் பாத்திரத்தில் போட்டவள், பீரோ இருந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டவள், நீண்ட நேரம் கழித்தே அவள் வெளியே வந்தாள். கண்கள் கண்ணீரில் கரைந்து, சிவந்திருந்தன. இப்படியாகத்தான் அவள் நைட்டியைத் துறந்திருந்தாள்.
இது அவள் திருமணம் செய்துகொண்ட இரண்டாம் வாரத்தில் நடந்தது.
இதேபோன்று இன்னொரு நிகழ்வு அவளது வாழ்வில் நடந்தது. இது சமீபத்தில். அன்றைய தினம் உலக பெண்கள் தினம். சிறப்பு பட்டிமன்றம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. முழுக்கவே பெண்கள் பங்குபெற்ற பட்டிமன்றம் அது. ஒரு பெண் பேசினார். “பெண்களுக்கேன் மார்பகம் படைக்கப்பட்டிருக்கிறது, தெரியுமா?” நடுவர் எடுத்துக்கொடுத்தார், “ஏன்?” “ஏன்னா, செல்போன அங்கே வச்சிக்கிர.”
அரங்கம் கைகொட்டலும் சிரிப்புச் சத்தமுமாக இருந்ததைத் தொலைக்காட்சி அத்தனை பேரையும் மொத்தமாக விழுங்கிக் காட்டியது.
இதெல்லாம் ஒரு நகைச்சுவையா, இதற்கேன் சிரிக்கிறார்கள்? பானு உதட்டைச் சுழித்தாள். ராஜாங்கம் பானுவின் பக்கமாகத் திரும்பி கேட்டார். “ ஆமா, நீ செல்போன எங்கே வச்சிக்குவே?”
அவளது கைக்குச் செல்போன் வந்ததே கொஞ்ச நாட்களுக்கு முன்புதான். மகன் கல்லூரிக்குப் போகத் தொடங்கிய காலத்திற்குப் பிறகு. நான்காம் தலைமுறை செல்போன் புரட்சி அவளது கைக்கும் ஒரு செல்போனைக் கொடுத்திருந்தது. மகன் வாங்கிக் கொடுத்த செல்போன் அது.
“ஏன் நீங்க பார்த்ததில்லையா?” என்றவள் அவளது கையை நைட்டிக்குள் நுழைத்து, ஜாக்கெட்டுக்குள்ளிருந்த கருப்பு சவுக்காரம் போன்ற செல்போனை எடுத்து அவரிடம் காட்டினார். அவரது முகம் குழைந்து, உதடுகள் வெம்பின.
“ஏன்?”
“இனிமே செல்போன அங்கே வைக்காதே.”
சொன்னதோடில்லாமல் முகத்தை உம்மென்று வேறு வைத்துக்கொண்டார்.
பானுவுக்கு நாசித் துளைகள் விடைத்தன. கையிலிருந்த செல்போனைத் தூரத்தில் எறிந்தாள். “எனக்கு செல்போனே வேணாம். பொறக்கும்போது இதென்ன என் கூடவேவா பொறந்துச்சு” என்றவள் உக்கிர கோபத்துடன் குந்தியிருந்தாள். நைட்டியை உதறி அவளால் நீண்ட காலம் வாழ முடிந்ததைப் போல செல்போனை உதறி அவளால் வாழ முடியவில்லை. இப்போதுதான் அவளுக்கு பாக்கெட் வைத்த நைட்டி தேவைப்பட்டிருந்தது.
நைட்டி, அவளுக்குப் பிடித்தமான உடை மட்டுமல்ல, ஆடையாகவும் இருந்தது. உடுத்துவது உடை. அணிவது ஆடை. அவளுக்கிருந்த கொஞ்ச அறிவில் இரண்டையும் அவள் அப்படியாக வேறுபடுத்திப் பார்த்திருந்தாள். நைட்டியை அவள் அணிந்திருந்தாள் எனச் சொல்வதைக் காட்டிலும் நைட்டி அவளை அணிந்திருந்தது எனச் சொல்வதே சரியாக இருக்கும். நைட்டி, அவள் பத்தாம் வகுப்பு படிக்கையில் அவளது கிராமத்தில் அறிமுகமான
உடை. பள்ளிக்குச் சென்று வீடு திரும்பியதும் அவளது முதல் வேலை நைட்டியை எடுத்து மாட்டிக்கொள்வதுதான். அதை மாட்டிய பிறகே ஆடைகளைக் களைவாள். இந்த நைட்டியைப் பள்ளி சீருடையாக அறிவித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்குமென அப்போதைக்கு அவள் நினைத்துப் பார்த்திருக்கிறாள். அதற்கு ஒரு நாளும் வாய்ப்பில்லை என்று நினைத்தவள், பிறகு அதை மறுதலித்து ஏன் வாய்ப்பில்லை. இரவுப் பள்ளிக்கூடம் தொடங்கினால் பள்ளிச்சீருடை நைட்டியாகவே இருக்கும் என்பது அவளது அன்றைய காலக் கணிப்பாக இருந்தது. கொரோனா காலத்திற்குப் பிறகு, இரவு நேர பள்ளிக்கூடங்களால் அவளது கனவு நிகழ்ந்தேறியதில் கொள்ளை மகிழ்ச்சி அவளுக்கு.
அவள் பிறந்தகத்தில் பருவப் பெண்ணாக இருக்கையில் மாதம் ஒரு நைட்டி எடுத்துவிடுகிறவளாக இருந்தாள். சைக்கிளில், பைக்கில் துணி விற்று வரும் துணிக்கடைக்காரர்கள் வண்டியை ஓட்டிவந்து பானுமதி வீட்டில்தான் நிறுத்துவார்கள்.
“பானு புது டிசைன்ல நைட்டி வந்திருக்கு.”
“அப்பா வீட்ல இல்லண்ணே. கையில பணமும் இல்லே” என்பாள் பானு.
“நைட்டியக் காட்டுறேன். பிடிச்சிருக்கானு பாரு. பிடிச்சிருந்தா வாங்கிக்கோ. ஓங்கிட்ட யாரு பணம் கேட்டா. அடுத்த முறை வர்றப்ப கொடு. ஒன் பேர்ல எழுதிக்கிறேன்.”
பானு அவளது வீட்டு வாசலில் நின்றபடி அவள் வயதையொத்த தெருப் பெண்களைக் கூவி அழைப்பாள். துணிக்கடைக்காரர்கள் பானு வீட்டில் கடை விரிப்பதற்குக் காரணம், இதுதான். முற்பிறவியில் இவள் கரைந்துண்ணும் காக்கையாக இருந்திருப்பாள் போலும். அவள் அழைத்தால் யாரும் வந்துவிடுவார்கள். சற்றுநேரத்தில் வண்டியைச் சுற்றி பெண்கள் கூடிக்கொள்வார்கள். உள்ளாடை, தாவணி, பாவாடை எனப் பலரும் அவர்களுக்குத் தேவையானதைப் பொறுக்க, பானு நைட்டியை எடுத்து விரித்து, தன் மீது போர்த்திப் பார்ப்பாள். அந்தத் தெருவில் சுகந்தி என்றொரு சிறுமி இருந்தாள். அவள் உள்ளங்கை அளவு கண்ணாடியை எடுத்து பானுமதிக்குக் காட்டுவாள். நைட்டியை நெஞ்சோடு போர்த்துக்கொண்டு அந்தக் கண்ணாடியின் வழியே தன் அழகிற்குப் பதிலாக நைட்டியின் அழகைப் பார்த்து ரசிப்பாள். நைட்டியின் அழகு அவளைக் கூட்டிப் பெருக்கிக் காட்டும்.
வட்டக்கழுத்து, பட்டிக்கழுத்து, வில் கழுத்து, ப கழுத்து, என எல்லா வகை நைட்டிகளும் அவளிடம் இருந்தன. நெஞ்சிடத்தில் விதவிதமான தையல் வேலைப்பாடுகளை அவள் பெரிதும் விரும்புகிறவளாக இருந்தாள். அவளது வீட்டில் ஒன்றுக்கு இரண்டு மாடுகள் இருந்தன. மாட்டின் கழுத்துத் தாடையைத் தடவிக் கொடுப்பதைப் போலதான் நைட்டியின் நெஞ்சிடத்து அலங்காரத்தை அவள் தடவிக்கொண்டும் நீவிக்கொண்டும் இருப்பாள். அவள் யாரிடம் பேசினாலும் அவளது உள்ளங்கை நைட்டியின் நெஞ்சிடத்து அலங்காரத்தை மேல்நோக்கி நீவிவிட்டபடியே இருக்கும். இது அவளுக்கே உரித்தான ஒரு பழக்கமாகி, பிறகு அவளுக்கான தனித்துவம் ஆனது.
பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டாள் பானு. அவளுக்குப் பின்னே பிறந்த இரண்டு தம்பிகளைப் படிக்கவைக்க இவள் படிப்பை அப்படியாக நிறுத்தவேண்டியிருந்தது.
படிப்பை இந்தளவில் நிறுத்தியது வீட்டு வேலைகள் பார்க்கத்தான், என்று பானு முதலில் நினைத்தாள். ஒரு நாள் அவளை அழைத்துப்போய் அவளது அப்பா ஜெராக்ஸ் கடையில் வேலைக்குச் சேர்த்துவிடுகையில்தான் அவளுக்குத் தெரிய வந்தது, படிப்பின் இடை நிறுத்தலுக்கான காரணம்.
ஜெராக்ஸ் கடையில் அவளுக்கு அவ்வளவாக வேலை இல்லை. அக்கடை, கடைக்காரரின் சொந்தக் கட்டடம் என்பதால் வாடகை மீதோ, ஒரு நாள் வருமானம் மீதோ அவர் கவலை இல்லாமல் இருந்தார். ஒரு நாளைக்குப் பத்துப் பேர் என்கிற அளவில் அக்கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்துசெல்வதாக இருந்தார்கள்.
அந்த ஜெராக்ஸ் கடைக்கு நேர் எதிர்ப்புறம் ஒரு ஜவுளிக்கடை இருந்தது. அக்கடையின் வெளியில் ஒரு பொம்மை சேலை உடுத்தி நிற்க வைக்கப்பட்டிருந்தது. நைட்டிகள் தோரணம் போல தொங்கிக் கிடந்தன. அதையே பார்த்தபடி இருந்தாள் பானு. தொங்கும் நைட்டியை ஒவ்வொன்றாக எடுத்து மனக்கண் வழியே உடுத்திக் கொள்வாள். அவள் கடையில் வேலை பார்த்த ஒரு மாத காலத்தில் எப்பொழுதெல்லாம் ஜெராக்ஸ் எடுக்க வாடிக்கையாளர்கள் வருவார்கள், எப்பொழுது கடை வெறிச்சோடும், என்பதை அவள் ஓரளவு கணித்திருந்தாள். மற்ற நேரங்களில் அவள் கடையைத் திறந்துவைத்துவிட்டு, அவளது கடைக்கும் எதிர்ப்புறமிருந்த அந்த ஜவுளிக்கடைக்கு ஓடிப்போய், அங்கு வேலை பார்க்கும் அவள் வயதையொத்த பெண்களுடன் கதை பேசுகிறவளாக இருந்தாள். கடையிலிருக்கும் நைட்டியை எடுத்துக் காட்டச்சொல்லி அவளுக்குப் பிடித்த நைட்டியை உடுத்திக்கொண்டு அவளது உயர கண்ணாடியில் பார்த்து ரசிக்கவும் பூரிக்கவும் செய்வாள்.
ஒரு நாள் அப்படியாக நைட்டியை உடுத்திப் பார்க்கையில் கடைக்குக் கடையின் உரிமையாளர் வந்துநின்றதும் பானு என உரக்க அழைத்ததும் கேட்டது. நைட்டியை வேகமாகக் கழட்டப் பார்த்தாள். அவளது வேகத்திற்கு நைட்டி உடம்பிலிருந்து அவிழ மறுத்தது. கைகளை உதறிக்கொண்டு நைட்டியோடு அவளது கடைக்கு ஓடினாள்.
கடையின் உரிமையாளர் பானுவை மேலும் கீழும் பார்த்தார். அவள் உடுத்தி நின்ற நைட்டி அவரது கண்களை உறுத்தியது. ” நைட்டியோடதான் கடைக்கு வந்தீயா?” கடைக்காரரின் கேள்வியில் கோபத்தின் நெடி தூக்கலாக இருந்தது.
“இல்ல சார், அந்தக் கடையில இப்ப எடுத்தது. கலட்டிருறேன் ” என்றவள் குனிந்து நைட்டியைக் கீழிருந்து மேல் நோக்கி தூக்கினாள்.
கடைக்காரரின் கோபம் இரட்டிப்பானது. ” இந்தாம்மா, என்ன வேலை செய்றே. ஒனக்கு அறிவுகிறிவு இருக்கா, இல்லையா?”
“உள்ளே தாவணி உடுத்திருக்கேன் சார்.”
“அதுக்கு இப்படித்தான் எல்லாரும் பார்க்க நைட்டியை உருவுவியா?”
பானுவுக்கு அழுகை வந்தது. ஒரு முறை அவளைக் கோபத்தோடு வெறிக்கப் பார்த்த கடைக்காரர், கடையின் கதவை இழுத்துப் பூட்டினார். கடையின் தூசி அவளது முகத்தில் அறைந்தது.
“இனி நீ கடைக்கு வரவேணாம் ” என்றவர் சட்டைப் பைக்குள் கையை விட்டு, ஐநூறு ரூபாய்த் தாளைக்கொடுத்து, “நீ கிளம்பு” என்றார்.
பானு கண்களைக் கசக்கிக்கொண்டு நின்றாள். கடைக்காரர் அதற்கும் மேல் அந்த இடத்தில் நின்றிருக்கவில்லை. அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கேயிருந்து கிளம்பினார். இப்படியே வீட்டுக்குப் பேருந்து ஏறிவிடலாமென நினைத்தாள், பானு. ஜவுளிக்கடை பெண்கள் வாசலில் நின்றபடி அவளைப் பார்த்து நின்றது தெரிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்ட அவள், எதிர்புறமிருந்த ஜவுளிக்கடைக்கு நடந்தாள்.
“என்னாச்சு கடைக்கு உன்னெ வர வேண்டாமுனுட்டாரா?”
அவள் கண்களைக் கசக்கினாள்.
“இந்தக் கடையிலே வேலைக்குச் சேர்ந்துக்கிறியா?”
பானு இந்தக் கேள்விகளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இம்,..” எனத் தலையாட்டியவள், நைட்டியோட வேலைக்கு வரலாமா?” கேட்டாள். கடையில் வேலை பார்த்த அத்தனை பெண்களும் அவளைப் புதிர்போல பார்த்தார்கள். பிறகு ஒன்றுபோலச் சிரித்தார்கள். எதற்குச் சிரிக்கிறார்கள், எனச் சற்றுநேரம் திகைத்து நின்ற பானு, பிறகு அவர்களுடன் சேர்ந்து இவளும் சிரித்தாள்.
![]()
“நைட்டி ராத்திரி போட்டுக்கிற ட்ரெஸ்.”
“நான் பகல்லயும் இதைத்தான் போட்டுக்குவேன்.”
“பகல்ல போட்டுக்கலாம். அதுக்காக இதைப் போட்டுக்கிட்டு கடை வேலைக்கு வரக் கூடாது”
“வந்தா என்னவாம்?”
“இப்ப அதுதானே நடந்துச்சு.”
பானு, அவளிடமிருந்த ஐநூறு ரூபாயைத் தாளை நீட்டி, ” இந்த நைட்டிக்கு எடுத்துக்கோங்க ” என்றாள் .
நைட்டிக்கு நூறு ரூபாய் எடுத்துக்கொண்டு, மீதத்தை அவளது கையில் கொடுத்தார்கள்.
“நைட்டியைக் கழட்டிக்கொடு. மடிச்சுத் தாறேன்” என்றார் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவர்.
“வேணாம். போட்டுக்கிறேன்” என்ற பானு இமைகளை அத்தனை வேகமாக அடித்துக்கொண்டு மனதிற்குள் பூசித்தாள்.
“நைட்டியைப் போட்டுக்கிட்டு போனா பஸ்காரங்க ஏத்த மாட்டாங்க” கடைப் பெண்கள் சொன்னது அவளது நினைவுக்கு வந்தது. அவள் நடந்தே வீட்டுக்குப் போக நினைத்தாள். நடந்துபோகக்கூடிய தூரம்தான் அவளது வீடு. நைட்டியோடு நடந்தாள். அவளோடு சேர்ந்து நைட்டியும் நடந்தது.
அவளது திருமண நாளன்று, பெண் தோழியாக நின்ற அவளது அத்தை மகளிடம் கேட்டாள், “புதுப்பெண்ணு நைட்டில தாலி கட்டிக்கலாமா?” என்று. தோழி அவளது தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்து, “ உனக்கு மொதப் புருசன் இந்த நைட்டிதான்டி” என்றவள்,
அவளது காதிற்குள் அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக, “ மொத ராத்திரிக்கு நைட்டி சரியான உடுப்படி…” என்றாள். பானு வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
புகுந்த வீட்டுக்குச் சீதனமாக அவள் கொண்டு வந்த பொருட்களில் நைட்டியை உயர்வாக நினைத்தாள். அவள் வாக்கப்பட்டு வந்த கிராமத்தில் நைட்டியை யாரும் அவ்வளவாக உடுத்திருக்கவில்லை. எல்லாருடைய பார்வையையும் தன் பக்கமாகத் திருப்ப இந்த நைட்டி போதும், என்று நினைத்தாள். அவள் நினைத்ததைப்போல நைட்டியை அவளால் புகுந்த வீட்டில் உடுத்த முடியவில்லை என்பதை நினைக்கையில் தன் மீதும் இந்த நைட்டி மீதும் பொறாமை கொண்ட யாரோ செய்வினை செய்துவிட்டதாக நினைத்து மனதிற்குள் பொங்கி, தாழ்ந்தாள்.
நைட்டி அவளது வீட்டுக்காரர் ராஜாங்கத்திற்கு மட்டுமல்ல, அவளது மாமியாருக்கும்கூட பிடிக்காத ஆடையாகவே இருந்தது. நைட்டி குறித்து அவள் நவநாகரிக ஆடையில் ஒன்றென்றோ பெண்களுக்கு ஏற்ற உடையென்றோ விவாதம் செய்ய விரும்பவில்லை. கணவனுக்குப் பிடிக்காத ஒன்றை நான் ஏன் உடுத்த வேண்டும் என்கிற தன்மையோடு அவள் அந்த ஆடையைத் தலை மூழ்கியிருந்தாள்.
ராஜாங்கம் அவளைப் பெண் பார்க்கச் செல்கையில் அவள் நைட்டியோடு இருந்ததையும் நைட்டியோடு தண்ணீர், டீ கொண்டுவந்து கொடுத்ததையும் அவ்வப்போது நினைத்துப் பார்த்துக்கொள்வாள். அப்போது, அவரிடம் கல்யாணத்திற்குப் பிறகு நான் நைட்டிதான் உடுத்துவேனென நிபந்தனை விதித்திருக்கலாமோ, என மனதிற்குள் அசைபோட்டுக்கொள்வாள்.
இது நடந்து எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. இப்போது அவளுக்கு ஒரு மகன், மகள். மகன் கல்லூரியிலும் மகள் பள்ளியிலும் படிக்கிறார்கள். மகள் பள்ளி முடித்து வீடு வந்ததும் அவள் தேடும் ஆடை நைட்டியாக இருப்பதைப் பார்க்கையில் பானுவுக்கு அவளது பள்ளிக் கால நினைவுகள் நினைவிலாடும். மகள் உடுத்தும் விதமான நைட்டிகளைப் பார்க்கையில் பானுவுக்குள் நைட்டி என்கிற விதை மனத்தரையில் விழுந்து முளைக்கத் தொடங்கியது.
தீபாவளிப் பண்டிகை வந்தது. புத்தாடை எடுக்கச் செல்கையில் அவளுக்குப் பிடித்தமான ரகத்தில் நைட்டிகள் எடுத்துக்கொண்ட மகள், அதே ரகத்தில் அம்மாவுக்கும் எடுத்தாள்.
நைட்டிகளைப் பார்த்த ராஜாங்கம், நைட்டியை நைட்டுதான் உடுத்திக்கணும். மனைவிக்கு மட்டும் விசேசமாக உத்தரவிட்டார். முதலில் அப்படியாக உடுத்தியவள், பிறகு முழு நேர உடையானது.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவளுக்கு புதியதொரு ஆசை துளிர்விட்டது. இனி எடுக்கும் நைட்டிகள் பாக்கெட் வைத்த நைட்டிகளாக எடுக்க வேண்டுமென்று. அப்படியாக அவள் நினைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது, செல்போன்.
செல்போனும் தொட்டில் குழந்தையும் ஒன்று. எப்பொழுது விழிக்கும், எப்பொழுது அழும் என்று தெரியாததாக இருந்தது. சமையற்கட்டில் சமைக்கும்போது படுக்கையறையில் செல்போன் ரீங்கரிக்கும். சமையலறையில் செல்போனை வைத்துக்கொண்டு வாசலுக்குச்
சென்றால் சமையற்கட்டில் குக்கர் சத்தத்தோடு சேர்ந்து விசிலடிக்கும். வீட்டில் அவளுக்கென்று ஒரு செல்போன் இருந்ததே தவிர அவுட்கோயிங் எல்லா நாளும் இருப்பதில்லை. ரீங்காரமிடுகையில் செல்போனை எடுத்து பேசிவிட வேண்டும். இல்லையேல் மறுஅழைப்பு வரும் வரைக்கும் கையிலேயே வைத்திருக்க வேண்டிவரும். இதற்காகத்தான் அவள் பாக்கெட் வைத்த நைட்டியாக எடுத்துக்கொள்ள நினைத்தாள்.
ஒரு நாள் கடைக்குச் சென்ற பானு, ஒரு பாக்கெட் வைத்த நைட்டியை எடுத்துவந்தாள். அதை உடுத்திப் பார்க்கவேண்டிய மகிழ்ச்சியில் தவழ்ந்தாள். கணவரே பணம் கொடுத்து பாக்கெட் வைத்த நைட்டிகளாக வாங்கிக்கொள்ளச் சொன்னதை நினைத்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவள் ஆசைப்பட்டு வாங்கிய நைட்டியை மறுநாள் காலையில் குளித்து உடுத்திக்கொண்டு கண்ணாடியின் முன்பு நின்று தன்னோடு சேர்த்து நைட்டியையும் ரசித்தாள்.
மகன் கல்லூரிக்கு வேகமாகக் கிளம்பிக்கொண்டிருந்தான். மகளும்கூடதான். ராஜாங்கம் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறவர். அவர் கிளம்பி காலை சிற்றுண்டிக்காகக் காத்திருந்தார். மூன்று பேருக்கும் காலை உணவு செய்துகொடுத்தாகவேண்டிய அவசரகதியில் பானு இருந்தாள்.
“அம்மா, லேட்டாச்சு ” குரல் கொடுத்தான் மகன்.
“எனக்கும்மா ” கூடவே கூவினாள் மகள்.
“இன்னும் என்ன பானு செய்றே?” மிரட்டல் சத்தமாகக் கொடுத்தார் ராஜாங்கம்.
பானு சமையல் அறைக்குள் நுழைந்துவிட்டால் அவளுக்கு நூறு கைகள் முளைத்துக்கொள்ளும். சற்றே நேரத்திற்குள் சமையல் முடித்து, இட்லி, காரச் சட்டினி, தேங்காய் சட்டினி, சாம்பார்களை வரிசையாக அடுக்கிவிடுவாள்.
இப்போது அவளது கவனம் சமையல் மீது இல்லை. உடுத்தியிருக்கும் புதிய நைட்டி மீதும் அதிலுள்ள பாக்கெட் மீதும் இருந்தது.
அவளது செல்போனை அவசரமாகத் தேடினாள். ஒரு கையை நைட்டி பாக்கெட்டிற்குள் திணித்துக்கொண்டு மறுகையால் செல்போனைத் தேடினாள். அவள் தேடும் அவசரத்திற்கு அவளது செல்போன் கிடைத்திடவில்லை.
“அம்மா டிபன் ரெடியா?” மகள் குரல் கொடுத்தாள்.
“இதோ வந்திட்டேன்டிம்மா ” என்றவளாய் சமையற்கட்டுக்குள் ஓடிய பானு, இட்லி ஊற்றுவதில், சட்டினி தயாரிப்பதில் மும்முரம் காட்டினாள். அவளது நினைப்பெல்லாம் அவளது செல்போன் மீதே இருந்தது. இந்நேரத்தில் என் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தால் நல்லாருக்குமே, எடுத்து பேசிவிட்டு, அதைப் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமே, என நினைத்தாள். அவளது இரு காதுகளும் அலைபேசியின் ரீங்கார ஒலியை எதிர்நோக்கி இருந்தன.
மகளை அழைத்தாள் பானு, ” என்னோட போனைக் காணோம். மிஸ்டு கால் கொடடி” என்றாள். மகள் அத்தனை வேகமாக கிளம்பிக்கொண்டு, அப்பாவின் செல்போனை வாங்கி
அம்மாவின் செல்போனுக்குக் கால் பண்ணினாள். தொடர்புக்கொள்ளும் வாடிக்கையாளர் ரீச்சார்ஜ் செய்யாததால் இன்கம்மிங் ரத்து செய்யப்பட்டுள்ளது, எனச் சொன்னதை அம்மாவிடம் உரக்கச் சொன்னாள்.
பானுக்கு ‘ச்சீ’ என இருந்தது. அவளது கவனமெல்லாம் செல்போன் மீதே இருந்தது. அந்தக் கவனத்தினூடே காலைச் சமையலை முடித்து அவர்கள் முன் இட்டலி, சாம்பார், சட்டினி வைத்தவள், ஒரு கையை நைட்டி பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு செல்போனைத் தேடலானாள்.
மகன் சத்தம் கொடுத்தான். ” எங்கேம்மா சட்டினி சாம்பாருக்குக் கரண்டி?”
அவள் செல்போனைத் தேடிக்கொண்டிருந்த நினைப்பில், அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன் காணோம், என்றாள். சற்றுநேரம் தேடிய பிறகுதான் அவளுக்கு நினைவு வந்தது. சட்டினி, சாம்பார் பாத்திரத்தில் கரண்டிகள் போடாதது. அவள் வேகமாக சமையற்கட்டுக்கு ஓடிவந்தாள். மகன் கையில் கரண்டிகளோடு நின்றான். ” கரண்டி இங்கேருக்கு. நீ எங்கேம்மா தேடுற?” என்றவன், சாம்பாருக்கு ஒன்று சட்னிக்கு ஒன்றென இரண்டு கரண்டிகளை எடுத்துக்கொண்டவன், மீதம் அவன் கையிலிருந்த ஒரு கரண்டியை அவளது நைட்டி பாக்கெட்டிற்குள் திணித்தான்.
பானுவின் கண்கள் பொங்கத் தொடங்கின.
![]()