கதைகள்

“உறியடி” ….. சிறுகதை ….. சோலச்சி.

  கொத்தனார் வேலை பார்க்கும் குமரேசனைத்தான் லெட்சுமி திருமணம் செய்திருந்தாள். வீட்டு வேலைகளைப் பார்ப்பதும் குழந்தைகளை கவனிப்பதுமாக இருந்த லெட்சுமிக்கு ஒரு நாள் பேரிடி விழுந்தது. இரவு வெளிச்த்துக்காக கட்டடத்திற்கு இழுக்கப்பட்டிருந்த மின்சார ஒயரில் ஒட்டுப்போட்டு முறுக்கிவிட்டிருந்த கம்பியானது மாடிப்படி வழியாக முதல் மாடியில் கட்டப்பட்டிருந்தது. ராத்திரி வேலை என்பதால் ஒயரில் ஒட்டுப் போட்டிருந்த இடத்தில் செருப்பு போடாத காலால் கவனக்குறைவாக குமரேசன் மிதித்துவிட்டார். அடுத்த நொடியே மின்சாரம் தாக்கி மேலிருந்து தூக்கி வீசப்பட்டார். பதினைந்து அடி உயரத்தில் இருந்து விழுந்த குமரேசன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். அப்போதிருந்து குடும்ப பாரம் முழுவதும் லெட்சுமி தலையில் விழுந்தது.

நானும் வேலைக்கி வர்றேங்க என்று எத்தனையோ முறை குமரேசனிடம் கெஞ்சியிருக்கிறாள். நான் சம்பாதிக்கிறது போதும். நீ வீட்ல இருந்து நம்ம புள்ளைகளையும் என்னயவும் கவனுச்சுக்கிட்டா போதும். உங்க வீட்ல நீ பட்ட கஷ்டம் பத்தாதா.. என்று குமரேசன் சொன்ன சொல்லை நினைத்து நினைத்து பல இரவுகள் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறாள்.

புகுந்த வீட்டிலும் வழியில்லை. பொறந்த வீட்டிலும் வழியில்லை. தன்னைத்தானே நொந்துகொள்ளத்தான் முடிந்தது. இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டே சித்தாள் வேலைக்குச் சென்றாள்.

புருசன்காரன் இருக்க வரைக்கும் ஒருநா பொழுது வேலைவெட்டிக்கி வந்ததில்ல… திடுதிப்புனு வேலைக்கி வர்றாளே இவளுக்கு இந்தமாறி வேலை பார்க்கத் தெரியுமா…? குழந்தை குட்டிகளையும் அள்ளிக்கிட்டு வர்றாளே இவளால ஒழுங்காகத்தான் வேலை பார்க்க முடியுமா என்று பலரும் ஒதுக்கி வெறுத்தபோதும் குமரேசன் வேலை பார்த்த தங்கவேல் மேஸ்திரி மட்டும் இரக்கப்பட்டு வேலையில் சேர்த்துக் கொண்டார்.

அதையும் ஒருசிலர் கண்ணும் காதும் வைத்து பொடி வச்சு பேச ஆரம்பித்தனர். போற போக்கில் கத்திக்கொண்டே போகும் ஆத்து வெள்ளம் போல் சத்தமாகவே பேசினர். காதுகளை

பொத்திக்கொண்டாலும் படபடவென துடிக்கும் பாழாய்போன மனசை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள். எத்தன நாளைக்கித்தான் பொறுத்துக்கிட்டே போறது… எதுத்து நிக்கிறதுக்கு மனசுல தெம்பு இல்ல. பிள்ளைகள கரை சேக்கனும்னா வேற வழியத் தேடித்தான் ஆகனும். அதனால தங்கவேல் மேஸ்திரியிடம் வேலை பார்க்காமல் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செந்தாழை என்கிற ஊருக்கு வந்து சேர்ந்தாள். அங்கு ஓர் குடிசை வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினாள்.

அழகப்பெருமாள் செந்தாழை ஆரம்பப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். செல்வி முதல்வகுப்பில் சேர்ந்திருந்தாள். அப்பா இல்லையே என்கிற ஏக்கம் வராத அளவுக்கு பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து பத்திரமாக பார்த்துக்கொண்டாள்.

”சாமி…. சீக்கிரமா நமக்குனு குடி இருக்க ஒரு எடத்த வாங்கி அதுல ஒரு குடிசை போட்டுக்கிட்டாச்சும் நிம்மதியா இருக்கனும்யா. அதுக்காகத்தான் சீட்டு பணம் கட்டிக்கிட்டு வர்ரேன். இன்னும் ஏழெட்டு மாசத்துல அந்தப் பணம் முழுசா கெடச்சுரும். பத்தும்பத்தாததுக்கு கடன கப்பிய வாங்கியாவது எடத்த வாங்கி சின்னதா ஒரு குடிசைய போட்டுக்கிட்டு அங்கிட்டு போயிரனும்யா. இந்தக் குடிசைக்கி மாசமாசம் எழுநுறு ரூவா எவ தெண்டமா கட்டுறது. வாடக கொடுக்குற காசுக்கு நா..பெத்த புள்ளைக வயிறார சாப்புடலாம். நாள்தோறும் இரவில் தூங்கும் போதெல்லாம் தன் குழந்தைகளிடம் சொல்லுவதை வழக்கமாவே கொண்டிருந்தாள்.

சொந்த வீடு ஆசையில், “அம்மா நல்லா… பெரிய வீடா கட்டும்மா” என்று அழகப்பெருமாளும் “வீட்டுக்குள் ஜாலியா சைக்கிள் ஓட்டுவேனே..” என்று செல்வியும் தனது மழலைச் சொற்களை உதிர்த்து வந்தனர்.

காலையில் ஏழு மணிக்கெல்லாம் சமச்சு வச்சுட்டு நால்ரோடுக்குச் சென்றுவிடுவாள். அங்கிருந்துதான் வேலைக்கு டாட்டாஏசி வண்டியில் அழைத்துக்கொண்டுச் செல்வார்கள். லெட்சுமியின் குழந்தைகள் அவர்களாகவே குளித்து துணிமாத்திக்கொண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக் கூடத்திற்கு சென்றுவிடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை மட்டும் வேலைக்கும் செல்வதை தவிர்த்து தன் குழந்தைகளோடு பொழுதைக் கழித்து வந்தாள்.

குமரேசனுடன் வாழ்ந்த கொஞ்ச காலமும் அவள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தாள். ஞாயிற்றுக் கிழமையானால்

போதும் அதிகாலையிலேயே கோவில்பட்டிக்கு கிளம்பிச் சென்று கறி எடுத்து வந்து விடுவார். குமரேசனுக்கு மாட்டுக்கறி என்றால் அவ்வளவு பிரியம்.

”ஏங்க ஞாயித்துக்கிழம ஆனாக்க நம்ம ஊரு ஆம்பளங்க ரொம்ப பேரு தண்ணி அடிக்கிறாங்களே. நீங்க அடிக்க மாட்டீகளா” தன் கீழ் உதட்டை கடித்தவாறு லெட்சுமி கேட்கும் போதெல்லாம் ”உன்னோட கண்ண கால் நிமிசம் பாத்தாலே ஏறுற போதையில உள்ள சுகம் இருக்கே… அத அப்படியே உன்ன அணச்சாதான் உனக்கே புரியும்.. இதவிட வேற போதை எனக்கு வேணுமா..” என்று சொல்லிக்கொண்டே அவளோடு ஊடல் கொண்ட காலங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வந்து அவளைப் பாடாய்படுத்தியது.

எப்போதாவது பக்கத்து வீட்டு வெள்ளைச்சாமி அண்ணன், கறி எடுக்க கோவில்பட்டிக்குச் சென்றால் அவரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச் சொல்லுவாள். ஆனால் கறி வாங்கி வருவதற்கு அவருக்கு தண்ணி அடிக்க பணம் கொடுத்தால்தான் வாங்கி வருவார். நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கறிக்காக அவருக்கு தண்ணி அடிக்க காசு கொடுக்கனுமா என்று பல நேரம் வெள்ளைச்சாமியிடம் கறி வாங்கி வரச்சொல்வதையே விட்டுவிடுவாள்.

வீடு தேடி வரும் மீன் நண்டுகளை மறக்காமல் வாங்கி சமைத்து விடுவாள். கோவில்பட்டி கறி என்றால் அப்பாவைப் போல் அழகப்பெருமாளுக்கும் அவ்வளவு ஆசை. கோவில்பட்டியில் இளங்கன்னுக்குட்டி கறிதான் போடுவார்கள். மிச்சரைப்போல் சுவையாக இருக்கும் என்பதால் ருசித்து தின்பான். அதனால் செலவுகளை பொருட்படுத்தாமல் மாதம் ஒருமுறை ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோவில்பட்டிக்குச் சென்று கறி வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

”புருசன் இல்லாததால ஆம்பளைங்கள எல்லாம் வளச்சு தன் முந்தானைக்குள்ள போட்டுக்கிட்டா”

”புருசன் இருக்கவளே இந்த சந்துள போயி அந்த சந்துள திரும்பி வந்தர்றா…. இவ புருசன் இல்லாதவ எப்புடியோ போயிட்டுப் போறா பாவம்…”

”அண்ணா நொண்ணானு வெள்ளச்சாமிய சொல்றா அவன் குடும்பம் என்னக்கி நாசமாப் போகப்போவுதோ. இந்தக் காலத்துல கிண்டலும் கேலியுமா பேசுறவங்கள கூட நம்பிரலாம். ஆனா இந்த

மாறி மொறவச்சு சொல்றவள்கள மட்டும் சாமானியத்துல நம்பிறக் கூடாது….”

”ரெண்டு பேரு சம்பாரிச்சே குடும்பத்த ஓட்ட முடியல. இவ ஒருத்தி சம்பாதிச்சு எப்புடி ஓட்டுறா. புருசன் செத்ததும் அப்புடி இப்புடி திரிஞ்சுருப்பா அதான் அங்க வச்சுக்காம ஊருக்காரனுக வெரட்டி விட்ருக்கானுக….”

”பயங்கர வித்தகாரியால இருக்கா. நல்ல துணிமணி கட்டாட்டியும் எப்புடியோ எப்பேர்பட்ட ஆளயும் மயக்கிப் புடுறாளே. வீட்ட வாடகைக்கி விட்ட குருசாமி அண்ணன மயக்கி, அந்த எடத்த பட்டாகிட்டா போட்டாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல….”

”உல வாய மூடுனாலும் ஊர் வாய மூட முடியுமா…” புருசன் இல்லாததால் பலரும் பலவிதமாக பேசத் தொடங்கி இருந்தார்கள்.

அடுத்தவர்களின் பேச்சுகளை உள்வாங்கி அசை போட ஆரம்பித்தால் உள்ள பொழப்பும் போயிடும் என்று எதையும் கண்டு கொள்வதே இல்லை. புருசன் இல்லாதவளுக்கு இது என்ன புதுசா. என்னய தப்பா பேசுறவங்களுக்கு கூட இந்த மாதிரி நிலைமை வந்துறக்கூடாது என்று எண்ணி கடந்து போனாள்.

லெட்சுமியை மறுமணம் செய்து கொள்ள தன்னோடு வேலை செய்யும் கொத்தனார் முனியசாமி வற்புறுத்தி கேட்டபோதெல்லாம் மறுத்துவிட்டாள். தனது அந்தரங்க ஆசைகளையெல்லாம் தன்னுள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டாள். நம்ம சொகத்தப் பாத்தோம்னா புள்ளைங்க கெதி என்னாவுறதாம்….

“உன்னோட நெழலு மட்டும் கெடச்சா போதும். அந்த சொகத்துலயே காலத்த ஓட்டிருவேன். இந்த ரெண்டு புள்ளைக போதும். நாம நாலு பேரும் சந்தோசமா இருப்போம். முடிவச் சொல்லுனு..” கேட்டுகேட்டு சோர்ந்து போனதுதான் மிச்சம். இனி எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது வயசும் இளமையும் சொன்னா சொன்ன எடத்துல நிக்குமா. காலமும் நேரம் கட்டிப்போட்டாலும் நிக்காது. கொத்தனார் முனியசாமி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வேறு ஊருக்கே சென்றுவிட்டார். ஒரே இடத்தில் வேலை பார்த்தால் ஊரோட கண்ணும் வாயும் உறங்குமா…?

பல நேரங்களில் காமக் கழுகுகள் தனது வீட்டுக் கதவு வரை வந்து தட்டும். அவள் அந்த வட்டத்திற்குள் எட்டிப் பார்ப்பதே இல்லை. கழுத்தில் ஒரு கவரிங் செயின் மட்டுமே அணிந்திருப்பாள். அதுவும் கருத்துப் போய் இருந்தது.

சீவி சிரிச்சு நல்ல துணிமணி கட்ட வேண்டியதுதானேனு யாராவது சொன்னால் “அட…இன்னமே நாம சிரிக்கிறது ஒன்னுதான் கொறையா கெடக்கு. புள்ளைக மொகத்தப் பாத்தா பத்தாதா…” என்று தட்டிக்கழித்து விடுவாள்.

பட்டகாலிலே படும். கெட்ட குடியே கெடும் என்பது அவளுக்குத்தான் பொருத்தமாக இருந்தது. மூன்றாவது மாடிக்கு சாந்துச்சட்டியில் செங்கலை அடுக்கி தலையில் தூக்கிக் கொண்டு செல்லும்போதுதான் சாளரம் கட்டிய மரத்தில் செங்கல் மோதி படிக்கட்டில் மடார்னு விழுந்தாள். அவள் மீது செங்கலும் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தடுமாறி விழுந்ததில் இரண்டு காலுமே முறிந்து விட்டது. அவளை டாட்டாஏசி வண்டியில் தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். என்ன ஏதுனு கூட பார்க்காமல் மாவுக் கட்டை மட்டும் போட்டு விட்டு தலையில் லேசாக மருந்து வைத்து கட்டினார்கள்.

அஞ்சாறுநாள் அரசு மருத்துவமனையிலேயே தங்கி வைத்தியம் பார்த்தாள்.

”இங்கேருமா…. இங்க வைத்தியம் செய்யனும்னு நெனச்ச… ஓம் புள்ளைக ரெண்டும் நடுத்தெருவுக்கு வந்துரு வாங்க. பச்சப் புள்ளைக என்ன பாவம் பண்ணுச்சுக. அரசாங்க ஆசுபத்திரில எந்த வசதியும் கெடையாது. வெறும் மாவுக் கட்டையே போட்டு ஏழு வருசம் படுக்க வச்சுருவாங்க. ஏம்புட்டு ஆசுபத்திரிக்கு வந்துரு. சீக்கிரமா கொணப்படுத்தியர்றேன். …” டாக்டர் சீனிவாசனின் பேச்சை அவளோடு வேலை பார்க்கும் சோலையம்மாள் ஆமோதித்தாள்.

”எதும் சொல்லாம ஒத்துக்கடி. எத்தன நாளக்கிதான் இங்க படுத்துக் கெடப்ப. அங்க வச்சு பாத்தா கொஞ்சம் சரியானதும் ஆட்டோவுல போக வர இருக்கலாம். அதுவரைக்கிம் புள்ளைகள நா பாத்துக்கிறேன்டி” சோலையம்மாள் பேச்சை உள்வாங்கியவள், சம்பாதிச்ச காசுபணம் எல்லாம் வீணாப் போகப்போகுதே. வாயக் கட்டி வயித்தகட்டி சம்பாதிச்சது. எல்லாம் தல விதினு நொந்து கொண்டாள்.

காசு போனா சம்பாதிச்சர்லாம். உசுரு போனா ஓம் புள்ளைக எங்கடி போகுங்க. சோலையம்மாள் நச்சரித்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாக, சீனிவாசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கையில் வைத்திருந்த பணமும் சீட்டு கட்டிய பணமும் நோட்டு நோட்டாக கரைந்து கொண்டிருந்தது.

லெட்சுமியின் வளர்ப்பில் சொகுசாய் இருந்த அவளின் குழந்தைகள் சோலையம்மாளின் கட்டுக்குள் வளர்ந்தார்கள். ”புருசன் இல்லாதவ பாவம் என்ன பண்ணுவா பச்சப் புள்ளய வச்சிக்கிட்டு ” என்று அவளோடு வேலை பார்த்தவர்கள் சில நாட்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.

அழகப்பெருமாளும் செல்வியும் மெலிந்து போயிருந்தார்கள். ”அந்த சிறுக்கி ரெண்டு புள்ளய வச்சுருக்கோமேனு கண்ணும் கருத்துமா இருந்துருந்தா இப்புடி நடந்துருக்குமா. நமக்கும் மூனு புள்ளைக இருக்கு. எவ்வளதான் வடிச்சுக் கொட்டுறது. போனா போகுதுனு சனியங்களுக்கு சோறு போட்டா அந்த சனி நம்ம தலையில ஏறி ஆடுது….” வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தாள் சோலையம்மாள். பிஞ்சுக் குழந்தைகள் என்ன செய்வார்கள். எதுவும் வாய் பேசாமல் திருதிருவென மட்டுமே விழித்தனர்.

சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் மருத்துவமனையில் கரைந்து போயிருந்தது. இருந்த காசுக்கு வைத்தியம் பார்த்தாச்சு. கால்கள் சரிவர நடக்க முடியவில்லை. மருத்துவமனையில் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

”பணம் இருந்தா இங்கே இரும்மா. இல்லனா கெளம்பிரு. டாக்டரு என்ன தர்ம ஆசுபத்திரியா கட்டி வச்சுருக்காரு” நர்ஸ் ஒவ்வொருமுறையும் சளித்துக் கொண்டாள்.

சோலையம்மாளும் நான்கைந்து நாட்களாக மருத்துவமனைக்கு செல்லவே இல்லை. அதுவரை பக்கத்து படுக்கையில் இருந்தவர்கள் லெட்சுமிக்கு சோறு கொடுத்தார்கள். கையில் பணமும் இல்லை… யாரும் வந்து பார்க்கவும் இல்லை. பிள்ளைகள் என்ன ஆனார்களோ தெரியலயே என்று அவர்களைப் பற்றிய நெனப்பும் வாட்டி எடுத்தது.

பொழுது விடியும் முன்னரே மருத்துவமனையில் கொடுத்த ஊன்றுகோலின் துணையோடு வெளியேறி கெந்தி கெந்தி ஊருக்கு நடந்தே செல்ல ஆரம்பித்தாள். அவள் கண்களில் அழகப்பெருமாளும் செல்வியுமே வந்து போனார்கள்.

”நா படிக்கும்போது லீவு நாள்லயும் பள்ளிக்கூடத்துல சோறு போட்டாக. என்ன பண்றது ஏம்புட்டு சூழ்நில அஞ்சாங் கிளாசுக்கு மேல படிக்க முடியல…” லெட்சுமி சொன்னதை நினைத்துப் பார்த்தான் அழகப்பெருமாள். ”இப்பவும் லீவு நாள்ல சோறு போட்டா நல்லாருக்கும்ல” அவன் கண்கள் கலங்கின.

பள்ளிக்கூடம் விடுமுறைநாளாக இருந்தது. அழகப்பெருமாள் செல்வியைக் கூட்டிக்கொண்டு சோலையம்மாள் வீட்டைவிட்டு வெளியேறினான். ”கண்டதுக்கெல்லாம் வடிச்சுப் போட என் தலைவிதியா….” இருவரும் செல்வதை காணாதது போல் இருந்தாள் சோலையம்மாள்.

தன் தங்கையை கையில் பிடித்துக்கொண்டு தோளில் ஒரு பழைய துண்டை போட்டுக்கொண்டு லெட்சுமியைப் பார்க்க நடந்தே மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஓர் ஊரில் மாரியம்மன் கோயிலில் திருவிழா என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சூரியன் உச்சி வானை தொட நெருங்கிக்கொண்டு இருந்தது. செல்வியின் கண்கள் பசியால் சொருகிக் கொண்டு இருந்தது. திருவிழா என்றால் எப்படியும் சோறு ஆக்கி போடுவார்கள் என்று லெட்சுமி சொல்லியிருக்கிறாள். ஆனால் ஒருமுறை கூட அழைத்துச் சென்றதில்லை. கட்டடத்தில் வேலை பார்க்கும்போது அங்கு கொடுத்த பொங்கலை வாழை இலையில் வைத்து துணியால் கட்டிக்கொண்டு வந்தது அவன் நினைவுக்கு வந்தது.

செல்வியை கோயில் பக்கத்தில் இருந்த வேப்பமரம் தூரில் உட்கார வைத்தான். கோயில் வாசலில் நேற்று பொதுமக்கள் வைத்த பொங்கலின் அடையாளமாக கற்களை வரிசையாக முக்கோண வடிவத்தில் வைத்திருந்த சின்னச்சின்ன அடுப்புகள் இருந்தன.

கோயில் அருகிலுள்ள பெரிய பொட்டலில் இரண்டு பெரிய சவுக்கு மரங்களை ஊன்றி இரண்டு பக்கமும் கயிரால் கட்டிய பானை ஒன்றும் நடுவில் தொங்கிக் கொண்டு இருந்தது. எதுக்கு பானையை கட்டித் தொங்கப் போட்டுருக்காங்க. விளையாடப் போறாங்களோ என்று எண்ணிக்கொண்டான். அப்போது கோயில் வாசலில் ஒருவர் உடைத்த தேங்காய் ஒன்று உடைந்து தெறித்தது. அதை எடுக்க சிறுவர்கள் முண்டியடித்துக் கொண்டுச் சென்றனர். அழகப்பெருமாளும் ஓடினான். அவனுக்காகவே வந்ததுபோல் ஒரு தேங்காய் சில் தெறித்து அவனை நோக்கி வந்தது.

செல்வியிடம் தேங்காய் சில்லைக் கொடுத்தான். ”பாப்பா இங்கயே இரு. எங்கிட்டாச்சும் சோறு போட்டா இந்தத் துணில கட்டிக்கிட்டு வந்தர்றேன். சாப்புட்டுட்டு அம்மாவ பாக்கப் போவோம்….” சொல்லிவிட்டு வெரசா நடந்தான்.

அவனது உடை கிழிந்தும் அழுக்காகவும் இருந்தது. ஏதேனும் உணவு கிடைக்குமா என்று கோயிலைச் சுற்றி வட்டமடித்தான். உணவுக்கான சூழ்நிலையே தென்படவில்லை. கோயில் இருக்கும் தெருவில் அங்குமிங்குமாக சென்று கொண்டிருந்தான். அவனது கண்கள் குழி விழுந்து கருப்பாகியிருந்தது. ஒழுங்காக குளித்து எண்ணெய் தேய்க்காமல் அவனது கால்களிலும் கைகளிலும் நீண்டநாள் புழுதி ஒட்டியிருந்தது. எண்ணெய் முகம் காணாத தலைமுடியில் தூசிகள் அடைக்கலம் புகுந்திருந்தன.

அவன் வீடுகள் அருகில் செல்வதற்கும் யாருடனும் பேசுவதற்கும் பயந்தவனாக இருந்தான். கோயிலையும் கோயில் இருக்கும் தெருவையும் பலமுறை சுத்தியும் எந்தப் பக்கமும் சோறு ஆக்கிப் போடுவதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை. மக்கள் கூட்டம் மட்டுமே அதிகமாக இருந்தது. மிட்டாய்க் கடைகளும் மிக்சர் கடைகளும் வளையல் கடைகளும் நிறைந்து இருந்தன. பசி மயக்கம் மிட்டாய்க் கடைகளைப் பார்த்ததும் எச்சில் ஒழுகும் என எதிர்பார்த்து நாக்கைச் சப்பினான். எச்சில் ஊறாமல் நாக்கு வறண்டு இருந்தது. கோபுரம்கோபுரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிட்டாய்க் கடைகளை வெறிக்கவெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.

”ஒருவேளை ஊருக்குள் சோறு ஆக்கிப் போடுவார்களோ” எண்ண ஓட்டம் அப்படியாக இருந்தது. கோயிலிலிருந்து தூரமாய் இருந்த தெருக்களுக்குள் நுழைந்தான். ஒரு தெருவை மட்டுமே நான்கைந்து முறைக்கு மேல் சுற்றியிருப்பான்.

“டேய் யாருடா…. நீ… எந்த ஊரு…. புதுசா இருக்க. ஓம்புட்டு நடயும் பாக்குற பார்வையும் சரியா இல்லயே… இந்தா நில்லுதா வர்ரேன்…” சத்தமாய் கத்திக்கொண்டே கீழே கெடந்த குச்சியை பெண் ஒருத்தி எடுத்ததும் டவுசர் கழண்டுவிடாமல் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமெடுத்தான்.

அவன் தோளில் போட்டிருந்த கந்தைத்துண்டின் நுனிப்பகுதி ஒன்று காற்றில் வேகமாய் ஆடியது. அவனது ஓட்டம் அடுத்தத் தெருவில்தான் நின்றது. எல்லோரும் புத்தாடை அணிந்து மிடுக்காக காணப்பட்டார்கள். அவன் தயங்கித்தயங்கியே அங்குமிங்கும் இந்தத் தெருவிலும் நடக்க ஆரம்பித்தான்.

அவன் இப்படியெல்லாம் ஒருநாளும் வந்தது கிடையாது. யாரிடமும் அவன் எதும் கேட்டது கூட கிடையாது. ஒருமுறை சோலையம்மாள் நறுக்கிக் கொடுத்த ஆப்பிளை தின்று கொண்டே வீட்டுக்கு போனபோது லெட்சுமி அடிஅடியென்று அடித்துவிட்டாள். அடுத்த வீட்டுக்கு போனதாலதானே இரக்கப்பட்டு கொடுத்தாங்க.

இனிமேல் போவியா… யாரும் கொடுத்தா வாங்குவியா… ம்… வாய் பாக்குற பழக்கம் இன்னக்கி உளளதுதானே நாளைக்கும் வரும்…” என்று சொல்லிச் சொல்லியே அடித்ததிலிருந்து அவன் யார் எது கொடுத்தாலும் வாங்குவதே இல்லை. ஆசைப்பட்டு யாரிடமும் எதையும் கேட்பதும் இல்லை. ஆசைப்பட்டதை லெட்சுமியே வாங்கிக் கொடுத்து வந்திருந்தாள்.

அவனால் பொறுமை காக்க முடியவில்லை. பசி கண்ணைக் கட்டியது. செல்வியை தனியே விட்டுவிட்டு வந்து வெகு நேரமாகியிருந்தது. அவள் நிச்சயம் பசியால் மயங்கியிருப்பாள் என்று உணர்ந்து கொண்டான். செல்வியின் பசி தனது பசியை மறக்கடித்தது. சோறு கிடைக்கும் என எதிர்பார்த்து வந்தது எந்தத் தெருவிலும் நடக்கவில்லை.

தனக்குள் ஒருவிதமான துணிவை வரவழைத்துக் கொண்டான். கண்களைத் தேய்த்து பசி மயக்கம் தெளிந்தான். கோயிலில் ஒலிப்பெருக்கியின் சத்தம் எல்லோர் காதுகளுக்குள்ளும் சென்று நாட்டியமாடியது. அந்தத் தெருவில் எதிரே இருந்த ஓட்டு வீடு ஒன்று திறந்து கிடந்தது. ஒன்றிரண்டு கோழிகள் வாசலில் திரிந்தன. வாசலுக்குச் சென்றான். அந்த வீட்டுக்காரி அப்போதுதான் கொல்லைப்புற வாசலுக்கு சென்றிருந்தாள். அவள் இவனை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. வேறு யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.

வேகமாக உள்ளே சென்றான். எதிரே இருந்த அறைக்குள் நுழைந்தான். சோத்துச்சட்டியிலிருந்து குண்டான் கிண்ணத்தில் கரண்டியால் சோற்றை அள்ளிப்போட்டான். பருப்பு குழம்பு வாசனை மூக்கைச் சுண்டி இழுத்தது. குழம்பையும் அதில் ஊற்றினான். சட்டியில் சோறு கொண்டு செல்வதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக தோளில் கிடந்த துண்டில் கட்டினான். இதுபோன்று அவன் நடந்து கொண்டதே இல்லை. முகம் வேர்த்துப் போயிருந்தாலும் சோறைப் பார்த்ததும் இமைகள் துள்ளிக் குதித்தன. குண்டான் சட்டியை தூக்கிக் கொண்டு ஓடியபோது வீட்டுக்குள் கிடந்த கிழிந்த சாக்குப்பையில் கால் இடறி தொப்பென கீழே விழுந்தான்.

டாமார் என்ற சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்த சகுந்தலா கொல்லைப்புறத்திலிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தாள். விழுந்ததை அள்ளிக்கொண்டு வாசலுக்கு ஓடி வந்தான். சகுந்தலாவின் அலறல் சத்தம் கேட்டு எதிர் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் ஓடி வந்தனர். இளைஞன் ஒருவனின் கைகளுக்குள்

வசமாக சிக்கிக் கொண்டான் அழகப்பெருமாள். எப்படியாவது சட்டியில் எடுத்ததைக் கொண்டு சென்று செல்வியின் பசியைப் போக்க வேண்டும் என இளைஞனிடமிருந்து விசும்பினான். அவனால் நகரக்கூட முடியவில்லை. அந்த இளைஞன் வலது கையால் அழகப்பெருமாளின் முகத்தில் ஓங்கி அறைந்தான்.

கையில் வைத்திருந்த சோத்துச் சட்டி தெறித்து கீழே விழுந்தது. சோற்றுப்பருக்கைகள் சிதறிக் கிடந்தன. “சோறு……சோறு….சோறு…..” அழகப்பெருமாள் கத்திக் கொண்டே இருந்தான். அதற்குள் அய்ந்தாறு பேர் சேர்ந்து அவனை அடித்து துவைத்து எடுத்து விட்டார்கள். தலையிலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாய் வடிந்து கொண்டிருந்தது. அவனது கைகள் பின்னால் பிணைத்து அவன் வைத்திருந்த கந்தைத் துண்டால் கட்டப்பட்டிருந்தது.

“அட… இந்தப் பய முழிச்ச முழியே சரியில்ல. நா ஒரு அதட்டுப் போட்டேன். தப்புச்சு வந்தவன் இங்க மாட்டிக்கிட்டானா….. சின்னப்பயலுவள ஒளவு பாக்க விட்டுட்டு பெரிய மனுசங்க கூட்டத்துக்குள்ள புகுந்து களவாங்க வந்துருப்பானுக. இன்னும் ஒதச்சு கேளுங்க. எத்தன பேரு வந்தானுகனு. இந்த வயசுலயே திருட்டுப் புத்தியா. வாயிலயே ஒதைங்க…” சத்தமாக சொல்லிக் கொண்டு இருந்தாள் சுப்பம்மாள்.

அழகப்பெருமாளின் வருகையை எதிர்பார்த்து அந்த இடத்தை விட்டு அகலாமல் காத்துக்கொண்டு இருந்தாள் செல்வி. செல்வியின் நாக்கு வறண்டு போனது. தண்ணீர் குடிக்கச் செல்லவும் மறுத்துவிட்டாள். அண்ணன் வந்தால் தேடுவானே என்ற எண்ணம் அவளை எங்கும் நகர விடாமல் தடுத்தது. வானத்து சூரியன் மேற்கு நோக்கி சாய்ந்து கொண்டு இருந்தது. லெட்சுமியும் மெதுவாக நடந்து வந்துகொண்டே இருந்தாள்.

“அட என்னங்க நீங்க வேற. இந்த மாறிப் பயலுகள சும்மா விடக் கூடாதுங்க. இவனுகளுக்குப் பின்னால பெரிய கும்பலே இருந்தாலும் இருக்கும். ஆளப் பாத்த ஒடனதான் சோத்துச் சட்டிய தூக்குற மாறி நடிச்சுருக்கான். நா பாக்கலனா பணம் காசல அள்ளிக்கிட்டுப் போயிருப்பான். இவனக் கொன்னு தொங்க விட்டாதான் அவன் கூட வந்தவனுக பயப்படுவானுக. போன வாரம் இவன மாறியே வந்த ஒரு பயலும் ரெண்டு மூனு பேரும் சேலப்பட்டில ஒரு புள்ளய தூக்கும் போது அந்தப் புள்ள கத்தவும் ஓடிட்டானுக. இல்லன்னா அந்தப் புள்ளையோட கதி என்னாயிருக்கும்…” சகுந்தலா சொன்னதைக் கேட்டு..

”உண்மையச் சொல்லுடா. இல்ல இங்கேயே கொன்னு பொதச்சுருவோம்…” என்று சொல்லிக்கொண்டே சிலர் அழகப்பெருமாளை மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டு இருந்தனர். தங்களது வீரத்தை அழகப்பெருமாளிடம் காட்டிக்கொண்டு இருந்தனர்.

பசி மயக்கமும் அடிவாங்கிய சோர்வும் வாட்டி வதைக்க செல்வி…செல்வி… என கத்தனும் போலிருந்தாலும் வலி மிகுதியால் வாய் திறக்க முடியவில்லை. உதடுகள் மெல்லமெல்ல அசைந்தது. புகை மண்டியதுபோல் கண்கள் மூடிக் கிடந்தன.

கோயிலில் உறியடி திருவிழாவுக்கான ஆயத்தப்பணிகள் ஆரம்பமாகியிருந்தன. கைகளை தட்டியும் உரக்க கத்தியும் பலரும் ஆரவாரம் செய்தனர். ஒருவர் கண்களை துணியால் கட்டிக்கொண்டு கோயிலின் முன்னால் கையில் தடியுடன் பானையை உடைக்கச் சென்று கொண்டு இருந்தார்.

ப வடிவ ஊன்றுகோலை ஊன்றி மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் லெட்சுமி. சந்தன அலங்காரத்தில் மாலை அணிந்து கோயிலினுள் காட்சி தந்துகொண்டிருந்தாள் மாரியம்மன்.

 

 

***********

Loading

2 Comments

  1. லக்ஷ்மி கிட்ட செல்வம் இல்ல,
    சந்தன அலங்காரத்தில் இருக்கும் அம்மனிடம் அநீதி கண்டு கோவம் இல்லை,
    அழகம்பெருமாளிடம் எதிர்த்து போராட
    சக்தி இல்லை.
    இது கதை என்றாலும் என் மனம் கதையை விட்டு கடந்து போகவில்லை.

  2. உறியடி – சிறுகதை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும், அன்றாடம் சந்திக்கும இன்னல்களையும் உணரும்படி அமைந்துள்ளது. புதுக்கோட்டை
    திரு.சோலச்சி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *