“விளம்பரதாரர் நிகழ்ச்சி” …. சிறுகதை – 36… அண்டனூர் சுரா.

“கல்பனா, இப்ப நீ கிழி, கிழி, கிழினு கிழிச்சிட்டே” என்றவாறு கைக்கொட்டிக்கொண்டே வந்தாள் தொகுப்பாளினி. தன் ஆடை கிழிந்துவிட்டதோ, என்று கல்பனா அத்தனை வேகமாக ஆடையைச் சுற்றிமுற்றும் பார்த்தாள். நல்லவேளை அவளது ஆடைகள் எதுவும்
கிழிந்திருக்கவில்லை.
“கல்பனா”
“எஸ் மேம்?“
“உனக்கு இவ்ளோ எனர்ஜிக் எங்கேயிருந்து கிடைச்சது”
“ஆடியன்ஸ் கைத்தட்டலும், உங்க பாராட்டுதலும்தான் மேம்”
“கிழிச்சிட்டே”
கல்பனாவிற்கு மீண்டும் தலை சுற்றியது. ‘கிழிச்சிட்டே’ என்பது பாராட்டுச் சொல்லா? இல்லை தனது கிராமத்தில் சொல்வதைப்போல ஏசலா? அவளால் அனுமானிக்க முடியவில்லை.
“கல்பனா, உன்னுடைய ட்ரெஸ் ரொம்ப கியூட்டாருக்கு”
“தேங்க்யூ மேம்”
“யார் செலக்சன்?”
“பக்கத்து வீட்டுல ஒரு பாப்பா பிப்த் படிக்கிறாள். அவளுடைய ட்ரெஸ் மேம். உங்க ட்ரெஸும் சூப்பர் மேம்”
“தேங்யூடா, தேங்கியூ”
“உங்க மகளுடையதா மேம்?”
“நோ, நோ. நான் சிக்ஸ்த் படிக்கிறப்ப எடுத்தது”
அரங்கத்தில் ஆக்ரோசமாக கைத்தட்டல், விசில் எழுந்தன.
“கல்பனா நிகழ்ச்சிக்கு வருவோம். நீ என்ன படிக்கிறே?”
“லெவன்த். மேத்ஸ் குரூப் மேம்”
“டென்த்ல எவ்ளோ மார்க்?”
“அதெல்லாம் வேண்டாம் மேம்”
“பரவாயில்ல சொல்லு”
“டு நாட் பைவ் மேம்”
“கவர்மெனட் ஸ்கூல்ல படிச்சிருக்கே?”
“எஸ் மேம்”
“எந்த ஸ்கூல்?”
“கவர்மென்ட் கேல்ஸ் ஹயர் செகன்ட்டரி ஸ்கூல் மேம்”
“மார்க் போதுமா?”
“போதும் மேம்”
“எப்படி போதுமுனு சொல்றே?”
“அதிக மார்க் எடுத்தால் அடுத்தவங்களுக்கும் கீழே வேலை பாரக்கணும். ஜஸ்ட் பாஸ்னா பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம் மேம்”
“வெரி குட் கல்பனா, இதை எப்படி சொல்றே?”
“நீங்க இன்னைக்கு ஒரு நிகழ்ச்சி நடத்துக்கிட்டு இருக்கீங்கனா அதுக்கு காரணம் உங்க படிப்பு இல்லைங்களே மேம்”
“குட் கல்பனா. தமிழ் சினிமா டயலாக் மாதிரி கியூட்டா பேசுறே. தமிழ் பிலிம்ஸ் ரொம்ப விரும்பி பார்ப்பியோ?”
“எஸ் மேம்”
“எது மாதிரி படங்கள் விரும்பி பார்ப்பே?”
“ஹிட் டான்ஸ் படங்களா விரும்பி பார்ப்பேன் மேம்”
“உனக்கு யாரோடு டான்ஸ்ஸெல்லாம் ரொம்ப பிடிக்கும்?”
“பிரபு தேவா, லாரன்ஸ், ரித்திக் ரோசன், விஜய்”
“உனக்கு பிடித்த ஹீரோயின்?”
“கரினா கபூர், பிரியங்க சோப்ரா”
“தமிழ்ல?”
“சிம்ரன், ஜோதிகா மேம்”
“ஏன் அவங்கள பிடிக்குது?”
“அவங்க டான்ஸ் ஆடுறப்போ பாடி மூவ்மென்ட் நல்லாயிருக்கும் மேம்”
“உனக்கு பிடிச்ச பாட்டு?”
“மன்மதராசா”
“பழைய பாட்டுல?”
“சித்தாடை கட்டிக்கிட்டு….”
“வண்ணக்கிளி படம்?”
“எஸ் மேம்”
“அந்த பாட்டு உனக்கு தெரியுமா?”
“கொஞ்சம் தெரியும் மேம்”
“பாடிக்காட்டு பார்க்கலாம்”
“வேண்டாமுனு நினைக்கிறேன் மேம்”
“பரவாயில்ல பாடு. சப்போஸ் உன் வாய்ஸ் நல்லாயிருந்தால் சூப்பர் சிங்கர்ஸ்ல சேர்ந்துக்கலாம்”
“ஆடியன்ஸ் விரும்பிக் கேட்குறாங்க அவங்களுக்காக பாடுறேன் மேம்.
சித்தாடைக்கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு, மத்தாப்பு சுந்தரவொருத்தி மயிலாக வந்தாளாம். அத்தானை பார்த்து அசந்து போயி நின்னாளாம்”
“வெரிகுட் கல்பனா. உன் வாய்ஸ்ஸ விட டான்ஸ் ஸ்டெப் சூப்ப ”
“தேங்யூ மேம்”
“உன்னுடைய கோச்சர் யார்?”
“சிந்துஜா ”
“அவங்க டான்ஸ் மாஸ்ட்டரா?”
“அவள் என் ஓன் எல்டர் சிஸ்டர் மேம்”
“வாவ். வெரிகுட். வெரிகுட்”
“அவள்தான் உனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தாளா?”
“இல்ல மேம். அவள் ஆடுயதை பார்த்து கத்துக்கிட்டேன் மேம்”
“நல்ல ஆடுவாளா?”
“எந்த பாட்டுக்கு ஆடினாலும் அதே மாதிரி ட்ரெஸ் உடுத்திக்கிட்டு ஆடுவாள்”
“நிறைய ட்ரெஸ் வச்சிருப்பாளோ?”
“அதெல்லாம் கிடையாது மேம். என் ட்ரெஸ், அம்மா , அப்பா , அண்ணன் எல்லாம் ட்ரெஸும் அவள் ட்ரெஸ்தான்”
“நல்லா படிப்பாளா?”
“டென்த்ல ப்போர் எய்ட்டி வைவ். ஸ்கூல் பஸ்ட்”
“டுவல்த்ல?”
“தவ்ஸன்ட் அன்ட் கன்டர்ட்”
“பி.இ , எம்.பி.பி.எஸ் கிடைச்சிருக்குமே”
“டுவல்த்ல ஆர்ட்ஸ் குரூப் மேம்”
“டென்த்ல அவ்ளோ மார்க் எடுத்திட்டு டுவல்த்ல ஏன் ஆர்ட்ஸ் எடுக்கணும்?”
“கலெக்டர் ஆகணுமுனா காமர்ஸ் எடுத்து படிக்கிறதுதான் ஈசினு சொல்லிட்டாள்”
“ம். பிறகு?”
“அவளுடைய கவனம் டான்ஸ் பக்கம் திரும்பிருச்சி”
“வாவ்!”
“எஸ் மேம். உங்க நிகழ்ச்சிகளையே விரும்பிப் பார்த்தாள். எங்க அப்பாவுக்கு அவள் நடவடிக்கை கொஞ்சமும் பிடிக்கல. அவருக்கு முன் அவள் பூமியைக் குலுங்கும் மூதேவி“
“அம்மாவுக்கு?”
“பத்ரகாளி”
“அவளுக்கு?”
“டான்ஸ்தான் பிரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாம்”
“நைஸ். கேட்கவே நல்லாருக்கு”
“சிந்துஜா வந்திருக்காங்களா?”
“வரலை மேம்”
“ஏன்? ”
“வரமுடியாது மேம்”
“ஏன்?”
“அவள் இறந்திட்டாள் மேம்”
“கடவுளே! என்ன சொல்றே கல்பனா?”
“எஸ் மேம்”
“எப்ப இறந்தாள்?”
“இரண்டு வருசத்துக்கும் முன்னாடி மேம்”
“எப்படி?”
“தற்கொலை பண்ணிக்கிட்டாள்”
“எதனாலே?!”
“அவளுடைய டான்ஸே அவளை கொண்ணுடுச்சு மேம்”
“எப்படி?”
“ஆர்ட்ஸ் காலேஜ்ல பிகாம் படிச்சிக்கிட்டிருந்தாள். காலேஜ்ல கல்ச்சிரல் புரோக்கிராம்னா அவளுடைய டான்ஸ் இல்லாமல் இருக்காது. கல்லூரியில் ஆடி கைத்தட்டு வாங்கியவள் அதைத் தாண்டி போக ஆசைப்பட்டாள் மேம்.”
“எப்படி?”
“அவள் தோழிகளோட சேர்ந்து கல்லூரி கலக்கல்னு ஒரு குரூப் பார்ம் பண்ணினாள்”
“பிறகு?”
“பக்கத்து டவுன் கோயில் திருவிழாவுக்கு டான்ஸ் புரோக்கிராம் பண்ணப்போனாள். புரோக்கிராம் முடிஞ்சதும்….”
“முடிஞ்சதும்?”
“ஊர்ப் பசங்க மேடையில் ஏறி அக்காவைத் தூக்கிட்டாங்க”
கொஞ்ச நேரம் அரங்கத்தில் நிசப்தம் நிலவியது.
“போலீஸ்?”
“ஒரு போலீஸ்காரங்களால வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது.”
“பிறகு?”
“வீட்டுக்கு வந்ததும் தற்கொலை பண்ணிக்கிட்டாள் மேம்”
![]()
சற்றுநேரம் அரங்கம் அமைதியாக இருந்தது. நடுவர்கள் கண்களைப் பொத்திக்கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
“கல்பனா, அவளுடைய கனவு என்னவாக இருந்தது?”
“உங்க நிகழ்ச்சியில டான்ஸ் ஆடி உலகளவில் பிரபலமாகணுமுனு நினைச்சிருந்தாள் மேம்”
“உன்னுடைய கனவு?”
“அவளுடைய கனவை நிறைவேற்றணும் மேம்”
“குட் கல்பனா, குட்”
“தேங்யூ மேம்”
“இப்ப பைனல்ல நீ பண்ணுன பெர்ப்பாமன்ஸ் பற்றி எப்படி ப்பீல் பண்றே?”
“நல்லா பண்ணிருக்கேன் மேம்”
“நல்லானா?”
“பஸ்ட் பிரைஸ் வாங்குமளவிற்கு பண்ணிருக்கேன் மேம் ”
“சப்போஸ் பஸ்ட் ப்ளேஸ் வராமல் போனால்? ”
“சுயர் மேம், வருவேன்”
“ஒரு வேளை வராமல் போனால்?”
“வாய்ப்பே இல்ல மேம். கண்டிப்பா வின் பண்ணுவேன்”
“மூனு ஜட்ஸ்களும் ஒரே மாதிரி மார்க் கொடுத்திருக்கணுமே”
“எஸ் மேம்”
“கொடுத்திருப்பாங்களா?”
“கொடுத்திருப்பாங்க மேம்”
“இந்த இறுதிப் போட்டியில வின் பண்ணினால் பிரைஸ் எவ்ளோ தெரியுமா?”
“தெரியும் மேம்”
“எவ்ளோ?”
“டென் லாக்ஸ். பத்து லெட்சம் மேம்”
“பத்து லட்சத்துக்கு எத்தனை ஜீரோ டக்குனு சொல்லு பார்க்கலாம்”
“சிக்ஸ் ஜீரோஸ் மேம்”
“வாவ்! குட்”
“தேங்க்யூ மேம்”
“பஸ்ட் பிரைஸ் யாருனு தெரியுமா?”
“யார் மேம்?”
“யாராக இருக்கும்?”
“நான்தான் மேம்?”
“குட், நீயே தான்”
அரங்கத்தில் கைத்தட்டலும் விசில் சத்தமும் எழுந்து, அடங்க நீண்ட நேரம் பிடித்தது. சாக்லெட்டுகள் குவியலாக அவள் மீது கொட்டின.
“கல்பனா”
“எஸ் மேம்”
“இந்த நேரம் உனக்கு எப்படி இருக்கு?”
“சொர்க்கத்தில என் அக்காக் கூட இருக்கிற மாதிரி இருக்கு மேம்”
“அப்படிதான் உன் முகமும் காட்டுது”
“எஸ் மேம். மகிழ்ச்சியின் உச்சத்திலே இருக்கேன் மேம்”
“கல்பனா, அடுத்து ஒரு முக்கியமான கேள்வி.”
“கேளுங்க மேம்”
“இந்த பத்து லட்சத்தை என்ன செய்யப்போறே?”
“உங்களுக்கிட்டேயே கொடுக்கலாமென இருக்கேன் மேம்.”
“அப்படியா? ” நடுவர் வாயைப் பிளந்தார்.
“எஸ் மேம்”
“ஏன், எனக்குத் திருப்பித்தாரே?”
“அவ்ளோ பணத்தையும் நீங்களே வச்சிக்கிருங்க மேம். வச்சிக்கிட்டு எங்களைக் கவர்ச்சிப் பொருளா சித்தரிக்காமல், மரியாதையோட கொஞ்சம் வாழ விடுங்க மேம். ப்ளீஸ் மேம் ப்ளீஸ்” குலுங்கினாள் கல்பனா.
![]()