வசப்படுத்தல்,வசப்படுதல்! …. ஏலையா க.முருகதாசன்.

வசப்படுத்தலும் வசப்படுதலும் இருப்பக்க நாணயம் போன்றது.வசப்படுத்தலுக்கு வசப்படும் மனம் வேண்டும்.வசப்படுத்தல் என்பதும் வசப்படுதல் என்பதையும் ஆழ்ந்து சிந்திக்கும் போது அவை ஏன் ஒருவரை ஆக்கிரமிக்கின்றது என்பதற்குப் பல காரணங்கள் இருப்பதை அறிய முடிகின்றது.
ஓன்றின் மீதான அக்கறை,ஒன்றின் மீதான விருப்பம் அந்த ஒன்று ஏற்படுத்துகின்ற வசப்படுத்தல் தன்மையைப் பொறுத்தே வசப்படுதல் அமைகின்றது. ஒருவருடைய அறிவும் மனமும் ஒன்றின் மீது எவ்வளவு வசப்படுகின்றது என்பதைப் பொறுத்தே வசப்படுத்தலின் விட்டகலா ஆழம் அமைகின்றது.
உறிஞ்சுகின்ற ஒரு ஸ்பொன்ஜாக ஒருவருடைய அறிவின் தன்மையப் பொறுத்தே ஒவ்வொரு விடயங்களும் அவரவரால் உள்வாங்கப்படுகின்றது.
வசப்படுத்தலும் வசப்படுதலும் நன்மைக்கம் தீமைக்கும் பயன்படுகின்றது.இது உளவியல் சார்ந்தது.
இன்றைய உலகின் மனிதர்களோடு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டன.
முன்பு காதுவழிக் கதைகள் என வசப்படுதல் வசப்படுத்தலுக்கான ஊடகங்களாக செயல்பட்டவை காலப் போக்கில் பத்திரிகைகள் ,வானொலிகள்,தொலைக்காட்சிகள் என பரிணாமம் பெற்றன.அதன்பிறகு மின்னஞ்சல் வழித் தொடர்புகள்,சமூக வலைத்தளங்களான இணையத்தளங்கள்,முகநூல்,வட்ஸ்அப்,இன்ஸ்டகிராம்,ரிக் ராக் என்பன மக்களின் எண்ணங்களை ஆசைகளை தம்மகத்தே இழுத்துக் கொண்டன.
கதை சொல்லல் அல்லது கதை காவுதல் என்பது ஒருவருக்குத் தேவைப்படும் உதவியை இனனொருவருக்கு அல்லது பலருக்குத் தெரியப்படுத்துதலில் ஆரம்பித்து நலன் விசாரித்தல் வரை வளர்ந்தது.
மனிதர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்ற எல்லாவகைக் குணங்களுக்குள் மற்றவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் பேசுகின்ற குணங்கள் பெருகப் பெருக அவை பற்றி பகிரங்கமாகவும் இரகசியமாகவும் மனிதர்கள் பேசத் தொடங்கினர்,அதன் ருசியைச் சிலாகித்தும் மகிழ்ந்தனர்.
கதை சொல்பவராகவும் கதை காவுகிறவராகவும் இருக்கும் ஒருவர் தமக்கு விருப்பமில்லாத ஒருவரைப் பற்றி மற்றையவர்கள் ஆர்வத்துடன் கேட்க வைக்க வேண்டுமென்பதற்காக கேட்பவரை வசப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இயல்பாக மனிதர்களுக்கு இருக்கும் மற்றவர்களைப் பற்றி அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை அறிய வேண்டும் என்ற குணத்துக்கு தீனி போடுவதற்கு கவர்ச்சிகரமாக இல்லாததை எல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லி விடுகிறார்கள்.சொல்பவர்களின் சொல்லாளுமைக்குள் கேட்பவர்கள் வசப்பட்டுவிடுவார்கள்.
அவர்களின் ஆழ்மனதோடு உறவாடி அவர்களின் மேலோட்டமான உணர்வுகள் தொடங்கி எண்ணிறந்த தட்டுகளாக உள்ள அந்தரங்க உணர்வுகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றனர் இத்தகைய கதை காவுவோர்.
கடிதத்தின் மூலம் பரிமாறப்பட்ட பரிவர்த்தனைகள் யாவும் மின்னியல் தொழில்நுட்பம் காரணமாக மின்னஞ்சல் வழியாக மிக வேகமாக சென்றடையத் தொடங்கின.
அதன் பின்னர் ஊடக முறையில் ஒரு பெரும் புரட்சியே நடந்தது.அச்சுக்கலையின் மூலம் பத்திரிகைகள் செய்திகளைக் கொண்டு செல்லும் வாகனமாக மாறியது.
செய்திகள் மீது நாட்டம் கொள்ளாத மனிதகுலம் தொடர்ச்சியாக அலையலையாக வந்த செய்திகள் அவர்களை ஆக்கிரமிக்கத் தொடங்க செய்திகளை அறியும் ஆவலுக்கு அவர்கள் அடிமையாகினர்.
இந்த அடிமைத்தனம் இசைவாக்கமாக மாறியது.அச்சுக்கலையின் பரிணாமக் கிளைகளாக பத்திரிகையோடு நின்றுவிடாது சஞ்சிகைகள் எனப் பெருகத் தொடங்கின.பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வௌ;வேறு வடிவங்கள் பெற்றன,மக்களைக் கவர்வதற்காக அவை அழகுபடுத்தப்பட்டன.
அறிதல் என்ற தேடலின் காரணமாக தேனீக்கள் தேனுக்காக மலர்களை நாடிச் செல்வது போல பத்திரிகைகள்,சஞ்சிகைகளை தேடி நாடிச் சென்று வாசிக்கத் தொடங்கினர்.
ஏவ்வித இலாப நோக்கமுமின்றி செய்திகளைக் காவி வந்த பத்திரிகைகள் காலப் போக்கில் வணிகமயமாக்படுதலுக்கு உள்ளாகிய போது வாசகர்களை அதிகரிக்கச் செய்வதற்கான வசப்படுத்தலையும் பத்திரிகைகள் சஞ்சிகைகளை வெளியிடுவதற்கான கட்டமைப்புக்குள் முக்கிய திட்டமாக தீர்மானிக்கப்பட்டன.
வசப்படுதலிலும் வசப்படுத்தலிலும் சமூகத்திற்கு தீமையளிக்கும் விடயங்களும் அடங்கும்.
ஆர்வம் அறிவின் தேடல் என்ற பொதுநோக்கினை அக்கு வேறு ஆணிவேராக ஆராயும் போது அதாவது அதனை இன்னும் இன்னுமாய் இந்தப் பூமி தொடங்கி நாம் காணும் பொருட்களின் தோற்றம் பொருட்கலங்களின் கூட்டமே என்ற இயற்பியல் விஞ்ஞானக் கோட்பாட்டுக்கமைய ஆராயப் புகுனினும் வப்படுதலும் வசப்படுத்தலுமே காரணம் என்பதை நிராகரிக்க இயலாது.
அதற்கமையவே எல்லாத் தளங்களிலும் வசப்படுதலும் வசப்படுத்தடுத்தலும் இடம்பெறுகின்றது.
எவ்வாறு செவிவழிக் கதை கேட்டல் செய்திகளை செவிமடுத்தல் போன்றவை இடம்பெறுகையில் கதை கேட்டல் மூலமும் செவிமடுத்தல் மூலமும் மனிதர்கள் அவற்றினை அறிய வசப்பட்டதுடன் சொல்பவரின்: ஆளுமையின் வசப்படுத்தலுக்குள்ளும் அமிழ்ந்துவிடுகிறார்கள்.
அது போன்றுதான் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மீதான நாட்டம் வசப்படுதலாக மாறி வசப்படுத்தலுக்கு உட்படுகின்றனர்.
மேலே சுட்டியது போல வணிகநிலையை நோக்கி பத்திரிகைகள் சஞ்சிகைகள் அடியெடுத்து வைத்துப் பயணப்படுகையில் வணிக நிகழ்ச்சிநிரலில் வசப்படுத்தல் ஒரு முக்கிய அம்சமாகின்றது.
அதற்கமையவே பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவரும் விடயதானங்கள் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு பத்திரிகை நிறுவனமும்,சஞ்சிகை நிறுவனமும் மற்றைய பத்திரிகைளுடனும் சஞ்சிகைகளுடனும் தத்தமது ஊடகங்களை ஓப்பிட்டுப் பார்த்து தமது ஊடகத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.ஒன்றுக்கொன்று போட்டியும் போடுகின்றன.
தனது ஊடகத்தில் கவனம் செலுத்தும் ஒவ்வொரு வாசகனையும் எவ்வாறு கவரலாம் என்பது ஊடகத்துறை அறிஞர்களால்,ஆய்வாளர்களால்,தந்திரவியல் அறிஞர்களால் ஒன்றுகூடி ஆராயப்படுகின்றது.
ஓவ்வொரு வாசகனும் ஒவ்வொரு நுகர்வியல்பு உள்ளவனாக இருப்பான்.அதற்கூடாகவே கலந்துரையாடல் செய்யப்பட்டுப் தமது ஊடகங்களில் எவையெவை இடம்பெற வேண்டுமென தீர்மானிக்கிறார்கள்.
ஒரு பத்திரிகையில் பலதரப்பட்ட செய்திகள் இடம்பெறுகின்றன.அரசியல், சமூகம்,இலக்கியம்,திரைப்படங்கள் பற்றியவை,நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்டவை,சமையல் சம்பந்தப்பட்டவை,காதல் சம்பந்தப்பட்டவை,காமம் சம்பந்தப்பட்டவை,நவீன விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவை என இன்னும் பல விடயங்கள் இடம்பெறுகின்றன.
இவை யாவும் தனித்தனியாக ஒரு பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ இடம்பெறினும் ஒவ்வொரு தளங்களினதும் பரப்பளவு வரையறுக்க முடியாதவையே.
ஓவ்வொரு கூறுகளினதும் அவற்றின் உள்ளீடுகளும் அந்த உள்ளீடுகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களும் வாசிப்பவர்களுக்கு தாம் இதுவரை அறிந்திர விடயத்தைக் கொடுக்க வேண்டும்,சொல்லாடலின் கவர்ச்சி சொல்லப்படும் முறை இரும்பைக் காந்தம் இழுப்பது போல இழுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கபடுகின்றது.
வாசகனின் மூளையிலும் இதயத்திலும் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தி வாசகனை வசப்படுத்த வேண்டும் என்பதற்கமையவே ஊடக நிறுவனங்கள் தமது பாத்திரிகை சஞ்சிகைகளை வெளியிடுகின்றன.
![]()