கதைகள்

“ஊழியம்” ….. சிறுகதை – 35 ….. அண்டனூர் சுரா.

அவளது புலனம் வாசகம்கூட அதுவாகவே இருந்தது, ‘ஊழியம் செய்’ என்று. அவளது புதிய செல்போனில் முதலில் வைத்த வாசகம் அது. அதன் பிறகு எத்தனையோ முகப்புப் படங்களை அவள் மாற்றிவிட்டாள். அந்த ஒரு வாசகம் மட்டும் மாறாது இருந்தது. நான் பல முறை அவளிடம் சொல்லியும் கேட்டும் பார்த்துவிட்டேன். அவளது இரத்த உறவினர்கள் என் தொடர்புக்கு வந்து, அந்த வாசகம் குறித்து கேட்கச் செய்தார்கள். சிலர், அவள் இன்னும் அப்படியாகத்தான் இருக்கிறாளா, கல்யாணத்திற்குப் பிறகும் மாறவில்லையா, எனக் கேட்டார்கள். அவள் யார் வாய்க்கும் செவி சாய்ப்பதாக இல்லை.

அந்த செல்போன் கூட அவளாகவே வாங்கிக் கொண்டதுதான். அதை வாங்கிய விசயத்தில் அவள் மீது எனக்கு வருத்தம் உண்டு. அவள் என்னிடம் கேட்காமல் தனியே செல்போன் வாங்கிக்கொண்டதற்கு என் தன்மானம் இடம் கொடுப்பதாக இல்லை. ஒரு வேளை அவள் வாய்திறந்து, எனக்கு செல்போன் வேணுமெனக் கேட்டிருந்தால், நான் வாங்கிக் கொடுத்திருப்பேனோ என்னவோ? என் மனக்குரலைத் தெரிந்துகொண்டேதான் அவள், அவளாகக் கடைக்குச் சென்று செல்போன் வாங்கி வந்திருந்தாள். ஆண்ட்ராய்டு போன். நல்ல விலை வேறு. இதற்கு ஏது பணம்? நான் கேட்க நினைத்த தருணத்தில் அவள் சொன்னாள், “அப்பா கடைசியா பார்க்க வந்தப்ப, கைச்செலவுக்குக் கொடுத்துவிட்டுபோன பணத்தில வாங்கினேன்.” இதை அவள் சாதாரணமாகச் சொல்லி எச்சில் விழுங்கவில்லை. இந்தச் சொல்லலில் ஒரு துடுக்குத் தனமும் துள்ளாட்டமும் இருந்தது.

இப்போது பிரச்சனை அந்த செல்போனோ, அதை என் அனுமதியில்லாமல் வாங்கியதோ அல்ல. அதிலுள்ள வாசகம்தான். “ ஊழியம் செய்.” அவள் திருமணம் செய்துகொண்டு எனக்கு மனைவியான நாள் முதல் எதில் எழுதினாலும் முதல் வாசகமாக இதை எழுதாமல் அவள் எதையும் எழுதுவதில்லை. அவள் பள்ளி, கல்லூரியில் படிக்கையில் தேர்வுத்தாளில் இதை எழுதிய பிறகுதான் பதிலை எழுதியிருப்பாள் போலும்! ஒரு வேளை அந்த போனை நான் வாங்கிக் கொடுத்து இந்த வாசகத்தை வைக்காதே, எனச் சொல்லியிருந்தால் கேட்டிருப்பாளா என்பது சந்தேகம்தான்!

நேற்றைக்கு ரகு என்னுடன் தொடர்புகொண்டு பேசினான். ரகு நெருங்கிய நண்பனாக இருந்து மைத்துனன் ஆனவன். ஒரு முறையில் அவனுக்கு இவள் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள். அவன் மூலமாகத்தான் இந்த வரன் எனக்கு வாய்த்தது. உனக்கேற்ற பெண். மிக நல்லவள். நல்ல குடும்பத்தவள். நிறைய செய்முறை செய்வார்கள். பெரிய கை,..என என்னவெல்லாமோ சொல்லி, என்னைப் பெண் பார்க்க அழைத்துச் சென்றான். பிறகு அவனே ஒரு நாள் சொன்னான். பூமிகாவுக்கு சட்டுப்புட்டெனத் திருமணம் செய்ததற்குக் காரணம் ஊழியம் செய், என்கிற வாசகம்தான், என்று.

வீட்டு நிலைப்படியில், பூஜை அறையில், முகம் பார்க்கும் கண்ணாடி,..என எல்லா இடங்களிலும் இந்த வாசகத்தை எழுதி வைத்திருக்கிறாள். இவளை இப்படியே விடுத்தால் கிறித்தவத்திற்கு மாறி, மதத்திற்குத் தொண்டூழியம் பார்க்கச் சென்றுவிடுவாளெனப் பயந்து, அவளுக்கான கல்யாண ஏற்பாட்டில் இறங்கியிருக்கிறார்கள். அவளை நான் பெண் பார்க்கச் செல்கையில் முக்கால் கன்னியாஸ்திரீயாகத் தெரிந்தாள். அவளது கழுத்தில் ஒரு பாசியோ, கறுப்புக் கயிறோ தொங்கியிருக்கவில்லை. காது, மூக்கில் ஒரு பொட்டு நகையில்லை. கிராமத்தில் இப்படியான ஒரு பெண்ணைப் பார்க்க எனக்கு எட்டாம் அதிசயமாகத் தெரிந்தாள்.

“இலையுதிர்கால மரம் அழகாகக் காட்சியளிக்கிறதென்றால், வசந்த காலத்தில் அதே மரம் பேரழகாகக் காட்சியளிக்கும்”, எங்கேயோ, எப்பொழுதோ வாசித்த வரிகள் என் நினைவுக்கு வந்தன. நகையற்று மூளியாக இருந்த அவளது முகத்தில் வசந்தகால முகம் ஒளிந்து மறைந்து ஒளிர்வதாக இருந்தது.

பார்த்தவுடன் பிடிக்கும் முகமாக அவள் இருந்தாள். ஒரு பெண்ணுக்கான நாணமோ, பயிர்ப்போ அவளிடம் மருந்துக்கும் இல்லை. அதுவொரு பெரிய குறையும் அல்ல, எனச் சொல்லும் முகமாக அவள் இருந்தாள். எளிமையான உடையும் கச்சிதமான தையலில் வெறிக்காத நிறமாக உடுத்தியிருந்தாள்.

அவளைப் பிடித்திருக்கிறது என நான் சொல்வதற்கு முன்பாகவே, என்னைப் பிடிப்பதாக ரகுவிடம் அவள் சொல்லியிருந்தாள். அவளை ஏன் பிடித்திருக்கிறது, எனச் சொல்வதற்கு அவளிடம் நூறு இலட்சணங்கள் இருந்தன. என்னை அவளுக்குப் பிடித்ததன் காரணம்தான் எனக்குத் துலங்காமல் இருந்தது.

கல்யாணம் அறவே வேண்டாம், எனச் சொல்லிக் கொண்டிருந்தவள் கல்யாணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டதை அவளது குடும்பத்தார்கள் வியப்போடு பார்த்திருக்கிறார்கள். பையன் அரசு வேலையில் இருக்கிறான். அரைக் காசுனாலும் அரசாங்க காசு,..என்பதாகச் சொல்லி, அவளது மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

பெண் பார்த்துவிட்டு வந்த மூன்றாம் நாள் ரகு என்னை அழைத்தான். ஓர் உணவகத்தில் வைத்து, எதையோ சொல்ல வந்து எதை எதையோ சொன்னான். பூமிகா நல்ல பெண். அவள் சர்ச்சுக்கு ஊழியம் பார்க்கச் சென்றுவிடுவாளென்றே இத்தனை வேகமாக இந்த கல்யாணத்தைப் பேசி முடித்தோம். இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிப்பாளென்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. உன் தோற்றம் அவளது மனதை மாற்றிவிட்டது. எல்லாருக்கும் பிடித்த பையனாக நீ இருந்துவிட்டாய், எனச் சொல்லிக்கொண்டு வந்தவன், கல்யாணத்திற்கு முன்பு உங்களுக்குத் தெரிவிக்கும்படியாக ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அதைச் சொல்லத்தான் உன்னை அழைத்திருக்கிறேன், என்றான். இலையில் மறுசோறு வைத்தவரிடம் “ போதும்” என்றவாறு ரகுவின் முகத்தைப் பார்த்தேன். போதும், என்பதைத் தனக்கும் என்பதாக அவன் எடுத்துக்கொண்டான்.

எங்கள் இருவருக்குமிடையில் சற்றே அமைதி நிலவியது. பந்தியில் பரிமாறும் எதையும் சாப்பிட முடிவதைப்போல, சாப்பிட்டுக் கொண்டே எதையும் கேட்க முடிவதில்லை. சாதத்தில் ஊற்றிய ரசம், உடைப்பெடுத்துக்கொண்டு, நரம்பு வழியே ஓடியது. ரசத்தைச் சோறு கொண்டு மறித்து, ரசத்தோடு சோற்றைப் பிசைந்தேன். என் வயிறு சேர்ந்து பிசைந்தது. நான் இலையின் ஒரு மூலையிலிருந்த ஊறுகாயை ஆட்காட்டி விரலால் வழித்து, அதை நாக்கில் வைப்பதா, உதறுவதா, என யோசித்தவனாய் அவனைப் பார்த்தேன்.

ரகு, ஒன்றும் பேசாதவனாய் குனிந்த தலை நிமிராது வேறு வழியில்லாமல் சோற்றைப் பிசைவதும், சாப்பிடுவதுமாக இருந்தான். அவனது பார்வை எனது பக்கம் திரும்பும்படியாகக் கேட்டேன், “என்ன, கல்யாணத்துக்குப் பிறகு தனியே வீடு எடுத்து தங்கணுமா?” இதைக் கேட்ட நான் அவனது முகம் கோணாமலிருக்க அவனைப் பார்த்துச் சிரித்துவைத்தேன். அவன், சோற்றை இன்னும் கூழாகப் பிசைந்தவனாய், ” அதெல்லாம் இல்ல. வயசானவங்களுக்கு ஊழியம் செய்றதுனா அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலெ மாமனார், மாமியார கை விட்டுற மாட்டாள். கடைசி வரைக்கும் கூடவே வச்சிக்குவாள். அதப்பத்தி கவலப்பட வேண்டியதில்ல ” என்றான்.

“பின்னே, தாலி கட்டிக்க மாட்டேனு சொல்றாளா?”

ரகு இலையிலிருந்து கையை எடுத்து வெறுங்கையைப் பிசைந்தான். அவன் பிசைவதைப் பார்க்கையில் அவன் சொல்ல வந்ததை நான் சரியாகச் சொல்லிவிட்டதாக எனக்குத் தோன்றியது. ரகு சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ” பூமிகா அப்படியாகச் சொன்னவள்தான். சித்தி அதைப் பேசி சரி செய்திட்டாள். தாலி கட்டிக்கிற சம்மதிச்சிட்டாள் ” என்றவன் அதிசயித்துச் சிரித்தான்.

“பிறகென்ன?” என்றவனாய் இலையை மூடினேன். நான் மூடியதைப் பார்த்து அவனும் மூடினான். நான் அத்தனை அவசரப்பட்டு இலையை மூடியிருக்க வேண்டியதில்லை. அவன் மோருக்குக் கொஞ்சம் சாதம் வாங்கி, கூட ஓரிரு வாய் சாப்பிடும் வரைக்கும் நான் காத்திருந்திருக்க வேண்டும் என நினைத்தவனாய், அவனது முகத்தைத் துருவிப் பார்த்தேன்.

“சொல்றேனு தப்பா எடுத்துக்காதே ” என்ற ரகு இருக்கையிலிருந்து மெல்ல எழுந்து, கைகழுவுமிடத்தில் என் காதுக்குள் ஒரு காதிற்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னான். “ ஒண்ணுமில்ல, குழந்த உடனே பெத்துக்கிற மாட்டேனு கண்டிசன் போடுறா.”

என்னையும் அறியாமல் எனக்குப் பெருமூச்சு வெடித்தது. சிரிப்பு வேறு வந்தது. “ ஏனாம்?” என்றேன். அருகில் தொங்கிய காகிதக் கத்தையிலிருந்து ஒரு துண்டு காகிதத்தை உருவி, கையைத் துடைத்தவனாய், “ ஒரு வேள கல்யாண வாழ்க்க பிடிக்கலனா, மனமொத்து ரெண்டு பேரும் பிரியுறப்ப குழந்தெ ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாதுனு நெனைக்கிறாள்” என்றான். இதை அவன்தான் சொன்னான் என்றாலும் அவனது குரலும் தொனிப்பும் மாறியிருந்தது.

எனக்கு சிரிப்பும் நாசி வெடிக்கப் பெருமூச்சும் ஒரு சேர வந்தன. நானும்கூட அதைத்தான் நினைத்திருந்தேன். கல்யாணம் வேண்டாம், எனச் சொல்லிக்கொண்டிருந்தவள்

எதை வைத்து கல்யாணத்திற்கு சட்டென ஒப்புக்கொண்டாள், என்று. ஒரு வேளை அவளுக்கு விருப்பமில்லாமல், அவளது பெற்றோருக்காகச் சம்மதம் தெரிவித்தால், எதிர்காலம் என்னாகுமென்று என்னை நான் எச்சரித்துக்கொண்டேன்.

ஒருவேளை இருவருக்கும் மனம் ஒத்துப்போகாது, குழந்தை பிறந்து, இல்லற வாழ்க்கை பிடிக்காமல் போய் பிரிய நேரிட்டால், குழந்தை என்னாவது? கல்யாணத்திற்குப் பிறகு, குறைந்தது ஓராண்டுக்கு குழந்தை பாக்கியத்தைத் தள்ளிப்போட வேண்டும் என நான் நினைத்ததை ரகு தன் வாயால் அவளது குரலாகச் சொன்னதை வைத்து ஆயாசமாகப் பெருமூச்சு வெடித்தேன்.

அவள் திருமணம் செய்துகொண்ட நாட்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறையேனும் கர்த்தரை அழைப்பதாக இருந்தாள். ஒரு நாள் அவளிடம் தன் கஷ்டத்தைச் சொல்கையில், எல்லாத்தையும் அவர் பார்த்துக்கொள்வார், என்றாள். அவளது வாயை அடைக்க, நான் மாரியம்மாவை அழைத்தேன். அவள் கவனம் என் பக்கமாகத் திரும்பியது. “ யார் அவ ?” என்றாள். “ யாரைக் கேட்கிறே?” என்றேன்.

“இப்ப யார் பெயரையோ சொன்னீங்களே?”

“நம்ம குலதெய்வம்.”

அவளது முகம் சற்றே இறுக்கம் கண்டது. அதன் பிறகு அவள் கர்த்தரை அழைக்காது, என் வழிக்கு வந்திருந்தாள். இப்படியாக, ஒவ்வொன்றாக மாற்ற முடிந்த என்னால் அவளது புலன முகப்பில், தொடக்கத்தில் வைத்த ஊழியம் செய், என்கிற வாசகத்தை மாற்ற முடியவில்லை.

செல்போன் என்னிடம் கேட்காமல், அவளாகவே சென்று வாங்கிவந்த கோபம் வருத்தமாக நெஞ்சுக்குள் அடைகாத்திருந்தது. அவளது உறவினர்களிடம் பேசுகையில், “ இது என்னோட போன். அப்பா குடுத்திட்டுப் போன பணத்தில வாங்கியது” எனச் சொல்வதாக இருந்தாள். அப்பொழுதெல்லாம் அவள் மீது எனக்குக் கோபம் வரவே செய்தது. நாசி மேட்டில் ஏறி உட்கார்ந்துகொண்ட கோபத்தை அவள் மீது காட்டலாமென்றே நினைப்பேன். திருமணத்திற்கு முன்பு இவள் சொன்னதாக ரகு சொன்ன நிபந்தனை என் நினைவுக்கு வந்து என்னை எச்சரித்தது.

“நானே வாங்கித்தரலாமெனதே நெனச்சேன். அதுக்குள்ள நீனா வாங்கிக்கிட்டே ” என்றேன்.

பூமிகா உதடுகள் விலகச் சிரித்தவள், “வாங்கித் தந்திருப்பீங்கதே. அப்பா நினைவா இருக்கட்டுமேயென நானே வாங்கிக்கிட்டே” என்றாள்.

அப்பா கொடுத்த பணத்தில் வாங்கியதாகவே இருக்கட்டும். அப்பா வாங்கிக் கொடுத்தாங்க, எனச் சொன்னால் நன்றாக இருக்குமே, என மனதிற்குள் நினைத்ததை நெஞ்சுக்குள் மூடி மறைக்காமல் வெளிப்படச் சொன்னேன். அவளது முகம் சட்டென சுண்டியது. ” அப்ப, என்னைப் பொய் சொல்லச் சொல்றீங்களா?” என்றவள், முகத்தை அத்தனை

உக்கிரமாகக் காட்டினாள். பதிலுக்கு நானும் காட்டினால் என்னாகும், என யோசித்தவனாய் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

அவளது செல்போனுக்கு சிம்கார்டு வாங்கிக்கொடுக்க வேணுமென்றே இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டேன். “நீங்க சிம்கார்டு வாங்கிக் கொடுக்கும் வரைக்கும் இதை நான் உபயோகிக்கப்போறதில்ல” என்றாள். இதை அவள் கெஞ்சும் தொனியில் சொல்லியிருந்தாள். அவள் மீது எனக்கு இரக்கம் வந்தது. சிம் கார்டு வாங்கி, நானே அவளது போனில் செருகிக் கொடுத்தேன். புலனம் ஒன்றுக்காக இந்தச் செல்போனை வாங்கியவளாக, எங்கள் திருமணப் போட்டோவை முகப்புப் படமாக வைத்துக்கொண்டு பூமிகா நந்தக்குமார் என அவளது பெயரோடு என் பெயரையும் சேர்த்து வைத்துக்கொண்டாள். அதன் கீழ்தான் ஊழியம் செய், என்கிற வாசகத்தைச் சேர்த்திருந்தாள்.

ஊழியம் செய் என்கிற வாசகம், என்னைக் கலவரப்படுத்துவதாக இருந்தது. நான் தினமும் அலுவலகத்திற்குக் கிளம்புகையில், ஊழியத்தைச் சரியாச் செய்யுங்க, எனச் சொல்லி வழி அனுப்புவதாக இருந்தாள். வாங்கும் ஊதியத்திற்கு வஞ்சகமில்லாமல் ஊழியம் செய்ய வேண்டும் என்றாள். அவளது அக்கா மகன், அண்ணன் மகள்களிடம் அலைபேசி வழியே உரையாடுகையில், எனக்குக் கேட்கும்படியாக ஊழியம் செய்யுங்கள், வாங்கும் ஊதியம் குடும்பத்திற்கு ஒட்டும்படியாகச் செய்யுங்கள், எனச் சொல்லி வந்தாள்.

பணியை, வேலையைத்தான் அவள் ஊழியம் என்பதாகச் சொன்னாள். ஊழியம் என்பதைப் பணி என்றும், ஊதியத்தைச் சம்பளம் என்றும் சொல்லும்படியாக அவளிடம் கேட்டுக்கொண்டேன். பணி என்பது வேறு, ஊழியம் என்பது வேறென வேர்ச்சொல் தேடி பொருள் விளக்கினாள். அவளது அகராதியின் படி பணி என்பது கடன் அல்லது கடமை. ஊழியம் என்பது வாய்ப்பு. கடமை செய்ய வருகிறவன் தன் கடமையைக் கடனுக்குச் செய்துவிட்டு போகலாம். செய்யாமலும் போகலாம். ஊழியம் செய்ய வருகிறவன் அதைச் செய்தே ஆக வேண்டும், என்பதாகச் சொல்லி இரண்டு சொற்களுக்கும் தெளிவுரை தந்தாள்.

ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு உறவினர் திருமணத்திற்கு அவளை அழைத்துச் சென்றேன். நாங்கள் வீட்டை விட்டுக் கிளம்புகையில், பள்ளி நேரம் தொடங்கியிருந்தது. பள்ளிக்கூடத்தைக் கடந்துதான் வெளியே சென்றாக வேண்டும். பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்துவது, சாலையில் சென்ற எங்களுக்குக் கேட்டது. பூமிகாவிடம் கேட்டேன். “ ஆசிரியர் பாடம் நடத்துகிறாரே இது பணியா, ஊழியமா?”. “இதிலே என்ன சந்தேகம், பணிதான்” என்றாள். எனக்கு அவள் சொல்லும் பணிக்கும், ஊழியத்திற்கும் பொருள் விளங்கவில்லை. அவள் சொல்லும் ஊழியம் என்னவாக இருக்குமென மனதிற்குள் அசைபோட்டவனாய் வாகனத்தை ஓட்டினேன்.

வாகனம் இரண்டொரு திருப்பம் கடந்து செல்கையில், நூறு நாள் வேலை நடந்துகொண்டிருந்தது. சாலையில் பலர் புற்களைச் செதுக்கவும், குழி தோண்டவும், மரக்கன்றுகளை நடவும் இருந்தார்கள். சிலர் மரத்தடி நிழலில் அமர்ந்து கதை பேசுவதாக இருந்தார்கள். அவர்களைக் காட்டி கேட்டேன். இவர்களில் யாரெல்லாம் பணி செய்கிறார்கள்.

யாரெல்லாம் ஊழியம் பார்க்கிறார்கள், என்று. அவள் வாகனத்தில் அமர்ந்தபடியே வேலை தளத்தைப் பார்த்தாள்.

எல்லாரும் பணியைத்தான் செய்றாங்க, என்றாள். மரத்தடியில் உட்கார்ந்திருப்பவர்கள்கூட பணியைத்தான் செய்கிறார்களா, எனக் கேட்டேன். உங்கள் பார்வையில் புல்லைச் செதுக்குபவர்களும் குழி தோண்டுபவர்களும் பணி செய்பவர்களைப் போலவும், மரத்தடி நிழலில் கதைபேசி உட்கார்ந்திருப்பவர்கள் பணி செய்யாதவர் போலவும் தெரியக்கூடலாம். மரத்தடியில் அமர்ந்திருப்பவர்கள் குழி வெட்டி,புல் செதுக்கி சற்றே ஓய்வு எடுப்பவர்களாகவும், இப்பொழுது குழி வெட்டுகிறவர்கள் இவ்வளவு நேரம் பணி செய்யாமல் இருந்துவிட்டு, இப்பொழுது வேண்டா வெறுப்போடு பணியைச் செய்கிறவர்களாக இருக்கலாம் என்றவள், வலது பக்கக் கண்ணாடி வழியே என் முகத்தைப் பார்த்தாள். அவள் சொன்ன விளக்கம் எனக்குப் பொருள் மயக்கம் தந்தது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு கேட்டேன்,“ இவர்கள்ல யாரெல்லாம் ஊழியம் செய்றவங்க?” என்று. பின்னால் அமர்ந்திருந்தவள் பின் பக்கமாகத் திரும்பி, “இவர்கள்ல யாரும் ஊழியம் பார்க்கப் போறதில்ல” என்றாள்.

எனக்குச் சிரிப்பு வந்தது. எனது குலுங்கல் சிரிப்பில் நான் ஓட்டிக்கொண்டிருந்த வாகனம் சேர்ந்து குலுங்கியது.

“ஏன் சிரிக்கிறீங்க?”, எனக் கேட்டாள். “பின்னே சிரிக்காமல் என்ன செய்வார்களாம்?” என்றேன். நான் பாதியோடு விட்ட சிரிப்பை, அவள் விட்ட இடத்திலிருந்து மீட்டாள்.

“உங்களுக்கொண்ணு தெரியுமா, குழந்தைய ஒரு தாய் பெற்றெடுப்பது அவளது கடன். அதை வளர்த்தெடுப்பது ஊழியம்.”

“நீ சொல்வதைப் பார்த்தா குழந்தையைப் பெற்றெடுப்பவள விடவும், அதை வளர்த்தெடுப்பவள் உயர்ந்தவள், எனச் சொல்வாய் போலிருக்கிறதே” என்றேன்.

“ஆமாம், அதிலென்ன சந்தேகம். குழந்தைய யாரும் பெற்றுவிடலாம். எல்லாராலும் வளர்த்திட முடியாது” என்றாள்.

வாகனத்தை சற்றே நிறுத்தினேன். பின் பக்கமாகத் திரும்பி அவளது முகத்தைப் பார்த்தேன். “பெத்த தாயைவிட வளர்க்கும் தாய் எந்த வகையில பெரியவள்?” உரத்த குரலில் கேட்டேன்.

“எந்த வகையில் சிறியவள்?” எனப் பதிலுக்குக் கேட்டாள்.

“குழந்தையைப் பெத்தெடுப்பது எவ்வளவு வலியானது தெரியுமா?”

“என்னைக் கேட்டால் குழந்தையைப் பெத்தெடுப்பதைக் காட்டிலும் வளர்த்தெடுப்பதுதான் கஷ்டம் என்பேன்” என்றாள்.

“எப்படி?”

“ஆமாம். குழந்தை இல்லாதவளுக்கு ஒரு கவலை. இருப்பவளுக்கு ஆயிரத்தெட்டு கவலை.”

அவளை நான் வெறிக்கப் பார்த்தேன். “சுத்தி வளைச்சுப் பேசாதே. நேரா விசயத்துக்கு வா. குழந்தையைப் பெத்தெடுக்கும் தாயை விடவும் அதை வளர்த்தெடுக்கும் தாய் எந்த வகையில் உசந்தவள்?”

அவள் சற்றே பெருமூச்சு வாங்கி, “பெத்த தாய் குழந்தையை வளர்ப்பதற்கு தான் பெத்த குழந்தை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதே குழந்தையைப் பெத்தெடுக்காத ஒரு தாய் வளர்ப்பதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்? மனிதாபிமானம்தான். இந்த உலகில் பெரியது அது ஒன்றுதான். ஒரு தாய் குழந்தையைப் பெத்தெடுப்பது அவளோட கடன். அதே நேரம் அதேக் குழந்தையை வேறொருவர் வளர்த்தெடுப்பது ஊழியம்”, என்றாள்.

அதற்கு மேல் அவளிடம் நான் பேச்சுக்கொடுக்கவில்லை. என் கடன் வாகனத்தை இயக்குவதே என வேகத்தை முடுக்கினேன்.

திருமணம் முடிந்து நேரத்தோடு வீடு திரும்பினோம். நூறு நாள் வேலை. ஆட்கள் திட்டுத் திட்டாக மரத்தடி நிழலில் அமர்ந்தும், படுத்தும் கதை பேசுவதாக இருந்தார்கள். ஆண்கள் சிலர் வட்டமாக அமர்ந்து கீழே துண்டை விரித்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். மீ்ண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கினேன்.

“ஊழியம் செய்ய வந்த இடத்தில் சீட்டாடுகிறார்களே? ” என்றேன். ஊழியம் என்கிற சொல் மூலமாக அவளைக் கோபமூட்ட வேண்டும் என்பதற்காக அப்படியாகக் கேட்டேன். அவள் எனது முதுகில் கையை வைத்து அழுத்தியவளாய், “இது ஊழியம் அல்ல, வேலை” எனச் சொன்னாள். “இதில பணி என்பது எது?”, எனக் கேட்டேன். “வேலை நேரம் முடிஞ்சதும் இன்னும் சற்று நேரத்தில வேலை ஆட்களிடம் கையெழுத்து, ரேகை வாங்குவாங்களே அதுதான் பணி” என்றாள். “அப்படினா ஊழியம் இங்கே நடக்கவே இல்லையா?”, எனக் கேட்டேன். அவள் ஓரரவமில்லாமல் அத்தனை அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

வாகனம் இரண்டொரு திருப்பம் தாண்டி பள்ளி வளாகத்தை நெருங்கியது. மாணவர்கள் மதிய உணவுக்காகத் தட்டுடன் வெளியே வந்தார்கள். ஒரு பக்கம் பள்ளி. மறுபக்கம் தண்ணீர்த்தொட்டி. இரண்டுக்கும் இடையில் வண்டித்தடம். அதில்தான் நான் வாகனத்தை ஓட்ட வேண்டும். சின்னஞ்சிறு குழந்தைகள் படிக்கும் தொடக்கப் பள்ளி அது. எந்நேரத்திலும் பாதையின் குறுக்கே அவர்கள் ஓடி வரக் கூடலாம். வாகனத்தை சற்றே நிறுத்தி மரத்து நிழலில் ஆசுவாசமானேன். குழந்தை பெற்றெடுக்க விரும்பாத எந்தவொரு பெண்ணும் அழகான குழந்தையைப் பார்க்கையில்,அவளையும் அறியாமல் தாயாகி விடுவாள், என்கிற வாசகத்துடன்கூடிய நண்பர் வைத்த திருமண வாழ்த்து என் நினைவுக்கு வந்தது.

சிட்டுச்சிட்டான குழந்தைகள். ஆண் குழந்தைகள் அழகா, பெண் குழந்தைகள் அழகா எனப் பிரித்தறிய முடியாத அளவிற்கு ஒரே மாதிரியான சீருடைக் குழந்தைகள். நான் வாகனத்தில் அமர்ந்தபடியே கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களைப் பார்த்தவாறு இருந்தேன். மாணவர்கள் வரிசையாக நின்று தட்டையும் கையையும் கழுவி தண்ணீரைத் தட்டுக்கும் மேலாக எறிந்து புறந்தட்டால் அடிப்பதாக இருந்தார்கள். தண்ணீர் மிடற்றுத் துளிகளாகச் சுற்றிலும் தெறித்து, எங்கள் மீது சொட்டின. ஒரு ரெட்டைச்சடை குழந்தை தட்டு நிறைய

தண்ணீரை அள்ளி, அதில் கையை அலம்பிக்கொண்டு எங்கேயோ சென்றாள். பள்ளி வளாகத்திற்கும் சற்று தூரத்தில் ஒரு மரக்கூண்டு இருந்தது. கூண்டுக்குளிலிருந்த ஒரு மரக்கன்று ஆடு கடித்து பட்டும் படாமலும் இருந்தது. அந்த மரக்கன்றுக்கு ஒரு தட்டுத் தண்ணீரை ஊற்றினாள். நான் அந்த சிறுமியின் செயலைப் பார்த்தேன். பூமிகாவும் அவளைத்தான் பார்த்தவளாக இருந்தாள்.

“ஏங்க, அதோ அந்தக் குழந்தைக்கு என்ன வயசிருக்கும் ?” எனக்கேட்டாள்.

அவளது உருவத்தை அளந்த நான் ” ஆறு இருக்கும். ஒன்னாம் வகுப்பு படிப்பாள்” என்றேன்.

“இந்த மரக்கன்னு யார் நட்டதா இருக்கும்?”

“யார் நட்டதோ, நிச்சயம் அவள் நட்டிருக்க வாய்ப்பில்ல.”

“அந்த மரக்கன்னோட பேருகூட அவளுக்குத் தெரியுமோ என்னவோ. இத்தனை குழந்தைங்க இருக்க இவள் ஏன் இந்த மரக்கன்னுக்குத் தண்ணீ ஊத்துறாள்?”.

” ஆமாம், ஏன் ஊத்துறாள்?” அவளிடமே கேட்டேன்.

என் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அந்தச் சிறுமியைக் கண்கொண்டு பார்ப்பதாக இருந்தாள்.

“இதுதான் ஊழியமோ?” என்றேன்.

நீண்ட நேரம் அந்தக் குழந்தையைப் பார்த்திருந்தவள், “ நமக்குப் பிறக்கும் குழந்தை இவளாட்டம் பிறக்கணும்” என்றாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *