கதைகள்

“சாணி” ….. சிறுகதை ….. சோலச்சி.

பூம்பொழில்நகர் ஏழாம் வீதியில் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் பவல்ராஜ், ஆவடி ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில்தான் பணியாற்றி வருகிறார்.

”கீழ் வீடுனா துணி தொவச்சு காயப்போட, அக்கம்பக்கம் பேச்சாட்டுக்கு சொகமா இருக்கும். ஏதாவதுனா மாடிலருந்து ஏழுதடவ ஏறிஎறங்குறாப்புல இருக்கு. அவசர ஆத்துரத்துக்கு ஏதாச்சும் வாங்கனும்னா போதும் போதும்னு ஆய்டுது. காசுபணம் இருந்து என்ன பண்ண. கலங்கமற பொழங்குறாப்புல வீடு இருக்கா. சமயக்கட்டுக்கிட்டயே கக்கூசு. எந்த இஞ்சினியருக்குத்தான் இப்புடியொரு யோசனை வந்துச்சோ”

”எங்க ஊர்ல தோட்டம் தொறவுனு எல்லாமே அதுஅதுபாட்டுக்கு தனியா இருக்கும். இங்க இப்புடி குருவிக்கூட்ல தொங்குற மாறி இருக்கு” கோமதி அடிக்கடி புலம்புவதைக் கேட்டு எப்போதும்போல் வாயை திறக்காமல் உதட்டைப் பிதுக்கி சிரித்துக் கொள்வார் பவல்ராஜ்.

”கோமதி கத்துவதிலும் நியாயம் இருக்கு. பசங்கள பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வர்றது.., துணி தொவச்சு காயப்போடுறத.., காய்கறி வாங்குறதுனு….. எல்லா வேலையும் அவதான் செய்யிறா…. இதுல சரண்யா வேற. சும்மாச் சும்மா அக்கா… இங்க வாயேன். அக்கா… இங்க வாயேனு கூப்புட்டு நச்சரிக்கும். அவளும் எத்தன தடவதான் மாடிலருந்து ஏறி இறங்குவா. நம்மதான் மிசின்ல வேல பாக்றோம்னா. அவ என்ன மிசினா” தனக்குள் பலநேரங்களில் நினைத்து வருத்தப்படுவார் பவல்ராஜ்.

”என்னங்க… சுகன்யா அக்கா.. அந்த வீட்டக் காலி பண்ணப் போறாங்களாம். கோயில்பதாகைல எடம் ஒன்னு வாங்கி சின்னதா வீடு ஒன்னு கட்டிக்கிட்டு இருந்தாங்கள்ள… வீட்டு வேலதான் முடிஞ்சுருச்சாமே.. எப்புடியும் இந்த மாசத்துல காலி பண்ணி போய்டுவாங்கனு நெனைக்கிறேன். ஒங்க யூனியன்காரககிட்ட சொல்லி அந்த வீட்ட நமக்கு கேக்கச் சொல்லுங்களே. கீழ்

வீடுங்குறதால தனி வீடுமாறியே இருக்கும்ங்க…” கோமதியின் பேச்சில் ஏக்கமும் எதிர்பார்ப்பும் கலந்திருப்பதை அவரால் உணர முடிந்தது.

வீட்டைக் கழுவிவிட்டபிறகு மேலிருந்து மாடிப்படியையும் கழுவி விட்டிருந்தாள் கோமதி. கீழ்வீட்டில் குடியிருக்கும் சித்ரா கூப்பிடவும் வேகமாய் இறங்கினாள் கவிப்பிரியா. எதிர்பாராதவிதமாய் வலது கால் பெருவிரல் வழுக்கி கீழே விழுந்தவளின் சில்லி மூக்கு உடைந்து இரத்தம் ஒழுகியது. அடிபட்ட வலியைவிட இரத்தம் வழிந்ததைப் பார்த்துதான் கவிப்பிரியா அதிகமாகவே கத்தி அழ ஆரம்பித்தாள்.

”இதே கீழ்வீடா இருந்திருந்தா இப்புடியெல்லாம் நடக்குமா. புள்ளைங்க சின்னஞ்சிறுசா இருக்கவும்தானே கீழ்வீடு வேணும்னு கேக்குறேன்…” மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள் கோமதி.

மகள் கவிப்பிரியா நான்காவதும் மகன் ஆனந்த் இரண்டாவதும் மத்திய அரசுப் பள்ளியான விஜேந்தர் சீனியர் செகண்டரி பள்ளியில்தான் படித்து வருகிறார்கள்.

நான்கு பக்கமும் வாகனங்கள் செல்லும் நெரிசல் மிகுந்த சாலையில் தன் பிள்ளைகளை ஸ்கூட்டியில் கொண்டுபோய் பள்ளியில் விட்டுவிட்டு வருகிறாள் கோமதி. சாலையின் எதிர்ப் பக்கம் கடப்பதென்பது விசப்பரிச்சைதான்.

எட்டாம்வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் இந்தச் சாலையை கடக்க கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாக இருக்கும் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றுகொண்டு இருந்தான். எதிர்பாராத விதமாக மினிலாரி ஒன்று அவன்மீது மோதி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறந்து போனான்.

மாணவனை இழந்த பெற்றோரும் உறவினர்களும் சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நசுங்கிக் கிடந்த தன் மகனை அள்ளி மடியில் போட்டுக்கொண்டு கதறிய தாயின் கண்ணீரும் மகனின் இரத்தமும் சாலையெங்கும் வழிந்தோடியது. காவலர்கள் யாரையுமே தன் அருகில் நெருங்கவிடவில்லை அந்தத்தாய். ஆம்புலன்ஸ் வெகுநேரமாய் சாலையில் நின்றுகொண்டே இருந்தது. வழக்கத்திற்கு மாறான நெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். கண்ணீருடன் சென்ற அந்தத் தாயின் நிலையைப் பார்த்தவர்கள் அவ்வளவு சீக்கிரம் இயல்புநிலைக்கு திரும்ப மாட்டார்கள்.

அந்த மாணவனின் இறப்புக்குப் பின்னர்தான் நான்குபக்க சாலையின் நாலா பக்கமும் வேகத்தடை அமைத்தனர். போக்குவரத்து சிக்னலும் நிறுவினர். போக்குவரத்து காவலர் ஒருவரையும் நியமித்தார்கள். சிலமாதங்கள் சீராக சென்றுகொண்டிருந்தது. பழைய குருடி கதவ திறடி…ன்ன கதையா அவரும் தற்போது எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

”இந்த எடத்துல போட்ட சிக்னலும் என்னைக்காச்சும் மினுக்மினுக்குனு எரியுது. எதுக்கு எரியுது…. என்னத்துக்கு எரியுதுனே அதுக்கும் தெரியல… இன்னொருக்கா யாராவது அடிபட்டுச் செத்தாதான் குயாமுயானு ஓடிவருவானுக போல. எங்கிட்டுருந்து எந்த வண்டிய எவன் ஓட்டி வருவானோ தெரிய மாட்டேங்குது. வேகத்தடை போட்டதே வேகத்த கொறைக்கனும்னுதான். பைக்ல போறவனுக என்னடானா வேகத்தடைக்கு ஓரத்துலயே பாத வச்சு விருட்டுவிருட்டுனு பறக்குறானுக. அப்புடி வேகமா போயி என்னத்த வெலை பேசி வாங்கப் போறானுக. பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டு போறதும் ஒன்னு.. வெசம்பாம்பு நெறஞ்ச கொளத்த நீந்துறதும் ஒன்னு…”

”தையல் மிசுனுல மிதுச்சு நாலுகாசு நான் சம்பாரிக்கிறது வீட்டுக்கு ஒதவுதுல. இதே கீழ்வீடா இருந்தா இன்னும் நாலு பேரு வந்து போவாங்கள்ள. மேல இருக்கவும்தானே ஏற இறங்க சங்கடப்பட்டு துணி கொண்டுக்கிட்டு வரமாட்டேங்கிறாங்க. கீழ போயி எத்தன மொறதான் வாங்க கொடுக்கப் போறது. ஸ்கூல் பக்கமா எடத்த வாங்கி வீடு கட்டுனா சம்பளத்துல புடிக்கிற வாடக காசு மிச்சமாகும்ல. அந்தக் காச லோனுக்கு கட்டலாம்ல….” தனிமையில் இருக்கும்போது கோமதியின் புலம்பல் எப்போதுமே இதுவாகத்தான் இருக்கும்.

கடைவீதிக்கு சென்றிருந்தபோது எதேச்சையாக தென்பட்ட தனது சூப்பர்வைசர் மாரிமுத்துவிடம் தன்மனைவியை அறிமுகம் செய்து வைத்தார் பவல்ராஜ். மாரிமுத்தும் தனது மனைவியுடன் வந்திருந்தார். மாரிமுத்து மனைவியும் அதே நிறுவனத்தில்தான் பணியாற்றி வருகிறார் என்பதை ஏற்கனவே பவல்ராஜ் கோமதியிடம் சொல்லியிருந்தார்.

எதார்த்தமான நலம் விசாரிப்புக்குப் பிறகு ”நீங்க என்னம்மா பண்றீங்க” என்றார் மாரிமுத்து.

”வீட்ல சும்மாதான் இருக்காங்க…” என்று பவல்ராஜ் சொன்னதுதான் தாமதம்…..

”நீங்களே சொல்லுங்க சார். காலயில அஞ்சு மணிக்கு எந்திருச்சு மதியத்துக்கும் சோறு ஆக்கி கொழம்பு வச்சு. கூட்டோ பொறியலோ அதுவும் செஞ்சு.., காலயில சாப்ட டிபன் செஞ்சு, அதுக்குத் தனியா சாம்பார் சட்னி செஞ்சு, இவுக எந்திரிச்சதும் ஒருத்தருக்கு காபி.. டீனு தனித்தனியா போட்டுக்கொடுத்து, வீடுவாச கூட்டி.. புள்ளைகள குளிப்பாட்டி… சோறு ஊட்டி… ,அப்பறம் எல்லாருக்கும் டப்பாவுல சாப்பாடு கட்டி, புள்ளைகள ஸ்கூல்ல விட்டுட்டு திரும்புனதும் வீடுவாச கூட்டி பத்து பாத்திரம் கழுவி துணி தொவச்சு நாங்க சாப்ட எப்டியும் பன்னெண்டாகுது…” நீளமாய் அடுக்கிக்கொண்டே போனவள் பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“என்ன…இது… இப்ப என்ன கேட்டுப்புட்டோம்… இல்ல பவல்ராஜ்தான் ஏதும் தப்பா சொன்னாரா…இந்தம்மா அவுங்கபாட்டுக்கு அடுக்கிக்கிட்டே போறாங்களே..னு சற்றே திணறினார் மாரிமுத்து.

”மத்தியாணத்துலதான் ஆளுங்க கொடுத்த துணிமணிய கொஞ்சம் தைக்கிறது. அப்புறம் புள்ளைகள கூட்டி வரணும், அதுக்குள்ள சாயந்தரம் அவனுக திங்கிறதுக்கு ஏதாச்சும் செஞ்சு வைக்கனும். கடையிலேயே தீனி வாங்கிக் கொடுத்தா ஒடம்பு என்னத்துக்கு ஆகுறது. அப்பறம் பசங்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக்கிட்டே ராத்திரிக்கு அவுக அவுகளுக்கு ஏத்தமாறி சமச்சு கொடுக்கணும். இதுல ஏம் மயனுக்கு கத சொன்னாதான் தூங்குவான். அப்பறம் இவுக மொகம் சுளிக்காம வேற நடந்துக்கிட்டு, ராத்திரி நா படுக்க எப்புடியும் மணி பன்னெண்ட தொட்டுரும். அரகொறயா தூங்கி அஞ்சு மணிக்கே எந்திரிக்கணும். ஒரு மனுசி ஒரு நாளக்கி எத்தன வேலதான்சார் பாக்க முடியும். பொசுக்குனு சும்மாதான் இருக்கானு எல்லாருமே சொல்லிப்புடுறாக” என்று படபடத்தாள் கோமதி.

 

”ஏங்க நமக்கு ஒங்க அம்மாவும் வேலக்காரி ரஞ்சிதாவும் இல்லேன்னா நம்ம கதி அதோகதிதான் …..” மாரிமுத்து மனைவி சொன்னபோது ம்…னு வாய்திறக்காமல் முகத்தை விரித்து தலையை ஆட்டினார்.

”உங்க வீட்டம்மா கிராமத்துகாரங்குறதால படபடனு சொல்லிட்டாங்க. எங்க வீட்ல படிச்சுட்டு ஒங்க வீட்டம்மா மாதிரி எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சாங்கதான். எத்தன காலத்துக்குத்தான் படிச்சுட்டு வீட்லயே கெடக்கனும்னுதான் எக்ஸாம் எழுதச் சொல்லி நம்ம ஆபிஸ்லயே கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா சேத்துவிட்டுட்டேன். ரெண்டு பேரு சம்பாதிச்சாதானே

பொழப்பும் ஓட்ட முடியுது….” மாரிமுத்து சொன்னதை விழிகளை உயர்த்தி கேட்டுக்கொண்டு இருந்தார் பவல்ராஜ்.

”எவ்ளோ சம்பாரிச்சும் ஒத்தக் காசு கையில தங்க மாட்டேங்கிது. பென்சன் கேட்டு எத்தனயோ வருசமா போராடிக்கிட்டு இருக்கோம். ஆளுறவனுக, காதுலயே வாங்க மாட்றானுக. வயசான காலத்துல பணம் இருந்தாதானே பெத்த புள்ளைகளே கவனிப்பானுக. ம்… இப்புடி பேசிக்கிட்டே போயிடலாம். அது இருக்கட்டும், ஒருநாளக்கி குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வாங்களே. கோட்ரச காலி பண்ணிட்டேன் தெரியும்ல. சரசுவதி நகர்லதான் வீடு வாங்கிருக்கேன். வரும்போது போன் பண்ணிட்டு வாங்க…..” மாரிமுத்து தன் மனைவியுடன் கிளம்பியபோது தனக்கான வீட்டைத் தனக்குள் தேடிக்கொண்டு இருந்தாள் கோமதி.

எல்லாரும் சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புடினா நாம எப்போ சொந்த வீட்டுக்குப் போறது. சொந்தமா வீடு கட்டி தோட்டம்தொரவு வச்சுக்கிட்டு கோழி.. குஞ்சுனு வளக்கனும். சாணிக்கரச்சு வாசல் தெளிச்சு கோலம் பொட்டு எப்ப அழகுபடுத்துறது…. யோசனையோடு வீட்டுக்குச் சென்றாள் கோமதி.

விராலிமலை அருகில் உள்ள ராஜாபட்டிதான் கோமதியின் சொந்த ஊர். வீட்டுக்கு மூத்தவளான கோமதி, தன் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். வாசலைக் கூட்டி சாணம் தெளித்து கோலம் போடுவதும் சமையல் செய்வதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

அவள் போடும் கோலத்தை மறுநாள் கோலம் போடும்வரை யாரும் அழிக்காமல் பார்த்துக்கொள்வாள். வாசலில் நடந்து செல்பவர்கள் தனது கோலத்தை நின்று பார்த்துவிட்டு நகரும்போது ஏதோ ஒரு நாட்டின் மகாராணியைப்போல் தன்னை நினைத்துக் கொள்வாள். பலரும் மாவுக்கல்லில் அரைத்த கோலமாவில் கோலம் போடும்போது கோமதி மட்டும் அரிசிமாவில்தான் கோலம் போடுவாள். எறும்புகள் அரிசிமாவினை இழுத்துச் செல்லும் அழகைப் பார்த்து பார்த்து ரசிப்பாள் கோமதி.

தொடர்ந்து அடைமழை பெய்யும்போது வானத்தை திட்டித் தீர்த்துவிடுவாள். இப்புடி நசநசனு பேஞ்சுக்கிட்டே இருந்தா வாச தெருவுல எப்புடி நடக்குறதாம். தொழி மாறி கெடந்தா எப்புடி கோலம் போடுறதாம்…. முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள்.

மார்கழி மாதம் அதிகாலையில் மூடுபனி பெய்யும்போது அருகில் இருப்பவர்கள்கூட தெரியமாட்டார்கள். அந்தப் பனிப் பொழுதிலும் கோமதியின் கண்களுக்கு மட்டும் பூமி பளிச்சென்று தெரியும்.

“மார்கழி மாதங்களில் சாணியை உருண்டையாக பிடித்து கோலத்தின் நடுவில் வைத்து அதில் பரங்கிப்பூவை கோமதி சொருகிய பிறகுதான் சூரியனே தூக்கம்முழிச்சு எட்டிப் பார்க்கும்”

தாய்வீட்டில் தன் போக்கிற்கு வாழ்ந்து வந்த கோமதிக்கு பவல்ராஜின் சொந்த ஊரான சொக்கம்பட்டியில் அதே வசதிகள் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாலும் அது நீடிக்கவில்லை.

”ரெண்டு கொழந்தைக பொறந்தும் எத்தன நாளக்கிதான் மாசத்துக்கு ஒருதடவ நானூறு கிலோ மீட்டரு வந்துவந்து போவாரு. அவருக்கும் அலைச்சல்தானே. பேசாம டவுன்ல போயி அவருகூடவே தங்கிட்டா செலவும் மிச்சம். அலைச்சல் இல்லாம இருக்கும்ல. எத்தன நாளக்கிதான் அவரும் தனியா சமச்சு சாப்புடுவாரு. இந்த வயசுலதான் ஒழுங்கா எல்லாத்தையும் சாப்ட முடியும்…” ஊரிலிருந்து பவல்ராஜ் வந்தபோது கோமதியும் கிளம்பிவிட்டாள்.

கோமதியின் மாமியார் பானுமதியோ “டவுன்ல ஒருத்தர் மொகத்த ஒருத்தர் பாக்காம வீட்டுக்குள்ளயே அடஞ்சு அடக்கோழி மாறி என்னால கெடக்க முடியாதுப்பா. வயவாய்க்காலுக்கு போனோமா. மாடுகன்ன மேச்சம்மானு இருக்கனும். நம்ம ஊரு ஊரணிதண்ணிய அள்ளிக் குடிச்சே கொஞ்ச காலத்த ஓட்டிருவேன். வேல வெட்டிக்கினு போன காலு அங்க வந்து என்ன பண்ணும். அப்பப்ப வந்து பேரப்புள்ளைகள கண்ணுல காட்டிப்புட்டு போங்க. சொந்தமா வீடு கட்டி எப்போ குடியிருக்கீங்களோ அப்ப சொல்லுங்க நா வர்றேன்….” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டாள்.

”சொந்த வீடு என்றால் நம்ம விருப்பத்துக்கு வச்சுக்கலாம். அத்தையும் வந்துருவாங்க. அவுங்க மட்டும் எதுக்கு தனியா செரமப்படணும். புள்ளைகளுக்கும் அவுக கூடவே இருந்தா நல்லாருக்கும்ல. எங்க அப்பத்தாகிட்ட நாங்க கத கேட்டோம். ஏம் புள்ளக அவுக அப்பத்தாகிட்ட கத கேக்கட்டுமே….” கோமதியின் நினைவலைகள் இப்படியாக இருந்தது.

கோமதியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பவல்ராஜின் எண்ணமாக இருந்தது. இருந்தபோதும் ”விக்கிற வெலவாசில இருக்குற வரைக்கும் கோட்ரசுலயே இருந்துட்டு ரிட்டயர் ஆகும்போது சொந்த ஊர் பக்கம் போய்டலாம். எதுக்கு

கடன வாங்கி காலத்துக்குக்கும் கஸ்டப்படணும்” என்றும் மனசு அலைபாய்ந்தது.

”ஓவர்டைம் கொடுத்தா சம்பளம் கொஞ்சூண்டு கூட கிடைக்கும். ஆட்சிக்கு வந்தவனுக என்னடானா கெவுர்மண்டு கம்பெனிய பூரா தனியாருக்கு வித்துப்புட்டானுக. வாங்குனவனுக ஓவர்டைம்மையும் கட் பண்ணிட்டாங்க. இருந்தா இரு… இல்லன்னா ஓடிருங்குறானுக. அம்மாவுக்கு மாசமாசம் செலவுக்கு அனுப்புற பணத்த விட ஊருக்கு ஒருதடவ போய்வர்ற செலவுதான் அதிகம் ….” வரவு செலவு கணக்குகளை போட்டுப் பார்த்துவிட்டுதான் வாயையும் கையையும் இறுக்கிப்புடுச்சுக்கிட்டு வங்கியில் லோன் போட்டிருந்தார் பவல்ராஜ்.

எவ்ளோ ஆசையோடு வந்துருப்பா. என்னய நம்பி வந்தவளுக்கு இது கூட செஞ்சு தரலன்னா அப்பறம் என்னத்துக்கு புருசனா இருக்கேன்… என தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டே கால் கிரவுண்ட் இடத்திற்கு ஆசைப்பட்ட கோமதிக்கு அரைகிரவுண்ட் இடம் வாங்கினார். டவுனுக்குள்ள இடம் வாங்குறதுங்கிறது குதிரைக்கு கொம்பு முளைக்கிறதுமாறி. அதுலயும் வீட்டக் கட்டுறதுன்னா விழிபிதுங்கி வெளியே வந்துரும். அந்தளவுக்கு விலைவாசி உச்சத்துல இருக்கு.

விரலுக்கேத்த வீக்கம்ங்கிற மாதிரி நாலஞ்சு பேரு கலங்கமற தங்குற மாதிரி ரெண்டு மூனு அறை வச்சு தங்களுக்கான வீட்டை கட்டி எழுப்பினர்.

“வீடுங்குறது வாழ்றதுக்குத்தான். காசுபணம் இருக்குங்குறதுக்காக மண்டபம் மாதிரி கட்டி போட்டுட்டு கொழுப்பெடுத்து அலையுறானுக. இவனுக இப்புடி கட்டுறதுனாலதான் மண்ணுக்கும் கல்லுக்கும் தட்டுப்பாடு வந்து விலைவாசி ஏறுனதே… ஆத்துமணலுல கட்டுனது போயி… இப்ப எம்சாண்டு….பிசாண்டுனு அப்பறம் அந்தக்கல்லு இந்தக்கல்லுனு என்னன்னமோ வந்துருச்சு…” என்று கோமதி புலம்பினாலும் அவள் ஆசைப்படி ஒரு வீடு கட்டப்பட்டுவிட்டது.

பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக இருந்தது. வண்டிவாசிக்குப் பயந்து உசுரக் கையில புடுச்சுக்கிட்டுத்தானே நடக்க வேண்டியிருக்கு. வீட்ல நாலு பேரு இருக்கானுகன்னா அத்தன பேருக்கும் சின்ன வண்டி பெரிய வண்டினு வாங்கி வீட்ல இடத்த நெறச்சு வக்கிறது மட்டும் இல்ல… ரோட்டுல யாரும் நடக்க முடியாதமாறி பண்ணிப்புடுறானுக… காசுபணம் இருக்குனு ஆடுறானுகளா.. இல்ல கடனக்கப்பிய வாங்கிக்கிட்டு கவுரவத்துக்கு அலையுறானுகனுந் தெரியல. எது எப்படியோ சொந்தமா வீடு

கட்டுனதுலயும் அதுவும் வண்டிவாசி அந்தப்பக்கம் அவ்வளவா இல்லாததும் கோமதியின் மனசுக்கு நிம்மதியை தந்தது.

தோட்டத்திற்காகவும் பொழங்குவதற்காகவும் முன்புறம் இடம் விடப்பட்டிருந்தது. அரசுக் குடியிருப்பில் இருப்பவர்களிடம் தனது ஆசை நிறைவேறியதைச் சொல்லிச்சொல்லி ஆனந்தமடைந்தாள் கோமதி. வீட்டுக்கடனைப் பற்றி பவல்ராஜ்தான் கவலைப்பட தொடங்கியிருந்தார். பவல்ராஜின் குறிப்பறிந்து கொண்ட கோமதி, வீட்டின் முகப்பில் “இங்கு பெண்களுக்கான ஆடைகள் தைத்து தரப்படும்” அப்டினு விளம்பரப் பலகையை தொங்கவிட்டிருந்தாள்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நாடகங்களைப் பார்த்து தனிவீட்டில் இருப்பவர்கள் பலரும் சாணம் தெளித்து வண்ணப் பொடிகளால் கோலம்போட்டு தங்கள் வீட்டை அழகுபடுத்திக் கொண்டார்கள். இதெல்லாம் செஞ்சு எத்தனையோ வருசமாச்சு. சாணி தெளிச்சு வாச கூட்டுனா நல்லதுனு சொல்றாங்க. இருந்தாலும் வெறுங்கையில தெளிக்க ஒருமாறியா இருக்குதுனு சிலர் கையுறை மாட்டிக்கொண்டும் தெளிப்பதுண்டு.

கிராமத்தில் இருந்ததைப் போல் கடையில் கோலப் பொடிகளை வாங்காமல் அரிசிமாவில் கோலம் போட்டாள் கோமதி. அரிசிமாவில் கோலம் போடுவதே தனி அழகுதான். எறும்புகள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் சிட்டுக்குருவிகளும் கோமதியின் வாசலுக்கு அலையா விருந்தாளியாக வந்து சென்றன.

”என்னங்க வருசம் ரெண்டாகப் போவுது. இந்த வருசமாச்சும் ஊருக்குப் போயி நல்ல யாவாரியாப் பாத்து மாடுகன்னுகள வித்துப்புட்டு ஆலமரத்து நெலத்த பொன்னன் மாமா வீட்ல வாரத்துக்கு விட்டுப்புட்டு வீடுவாசல நல்லா இழுத்துப் பூட்டிப்புட்டு அத்தயவும் கூட்டிட்டு வந்துருங்க” கோமதி சொன்னதும் அன்றிரவே சொக்கம்பட்டிக்கு கிளம்பினார் பவல்ராஜ்.

நிலத்தை வித்துப்புட்டா அப்பறம் வாங்க முடியாது. வாரத்துக்கு விட்டோம்னா வருசத்துக்கு ரெண்டு மூட்டை நெல்லு கிடைக்கும். அதை எதுக்கு விடனும். சும்மா கெடந்தா கருவை மொளச்சுப் போயிரும். நெல்லு கெடந்தா ஊருக்கு போகும்போது அவிச்சு அரச்சுக்கலாம். அதுனாலதான் நிலத்தை விக்க முன்வரல.

இரண்டொரு நாளில் கிராமத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு தன் தாயையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார். பானுமதிக்கு மண்ணையும் மனுசமக்களையும் விட்டுட்டு வர மனசே இல்லையென்றாலும் கடைசி காலத்துல பேரப்புள்ளைங்க கூட

இருக்கோம்ங்கிற நிம்மதி அவளுக்கு ஆறுதலாக இருந்தது. பானுமதியும் பவல்ராஜும் வீட்டுக்கு வரும்போது காலை பத்துமணியாகியிருந்தது.

மருமகள் வாசலில் வரைந்த அழகிய கோலத்தையும் சிறிய தோட்டத்தையும் பார்த்து மகிழ்ந்துபோன பானுமதி ”கிராமத்தப் போலதான் டவுனும் இருக்குது. நாமதான் தப்பா புருஞ்சுக்கிட்டோமோ என பவல்ராஜிடம் சொல்லி ஆச்சரியப்பட்டாள்.

ராத்திரியில் சாப்பிடும்போது ”கோமதி… நம்ம ஊர்ல எண்ணெ ஆட்டிக்கிட்டு இருந்த செட்டியார நக்கல் பண்ணிட்டு கலருகலரா பாக்கெட்டு எண்ணெய வாங்குனவுக எல்லாரும் இப்ப குத்துது கொடையுதுங்கவும் செக்கு எண்ணெய்க்கி வரிசையில நிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ம்… அதுலயும் ரொம்ம பேரு செக்கு எண்ணெனு சொல்லி எதைஎதையோ கலந்து கொள்ளக்காசு லாவம் பாத்துட்டானுக…” பேசிக்கொண்டே குவளையிலிருந்த தண்ணீரைக் குடித்தாள் பானுமதி. தண்ணீரின் சுவை வேறுமாதிரியாக இருந்தது.

“ஏத்தா…. மத்தியாணம் குடிச்ச தண்ணி ஒருமாறியா இருந்துச்சு… இப்ப குடிக்கிறது வேறமாறியா இருக்குது. நம்ம ஊருகாட்டு தண்ணி மாறி இல்லயே…. ம் நம்ம ஊரு தண்ணியவே குடிச்சுட்டு புதுத்தண்ணி குடிக்கவும் நாக்குக்கு ஒலன்டாப்புல இருக்குமோ…” தனக்குத்தானே பேசிக்கொண்டாள் பானுமதி.

“நம்ம ஊரணி தண்ணிய மொடக்கு மொடக்குனு குடிச்சவுக எல்லாரும் டீசண்டா கேணு தண்ணி வாங்கி குடிச்சானுகள்ள… இப்ப என்னமோ ஞானம் வந்த மாறி திரும்பவும் ஊரணி தண்ணிய பாதுகாத்து குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க” தன் மகன் வீட்டிலும் கேண் தண்ணியை வாங்கித்தான் பானையில் வைத்திருக்கின்றார்கள் என்பதை கவனிக்காத பானுமதி சொன்னபோது ஒப்புக்கு சிரித்துக் கொண்டாள் கோமதி.

பொழுது விடியத் தொடங்கியது. சைக்கிளில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தாள் பானுமதி. கூடவே கோமதியும் வழக்கம் போல் எழுந்துவிட்டாள்.

”இருங்க அத்தே… பால்காருதான்.. நா போய் வாங்கிட்டு வர்றேன்” என்று வாசலுக்கு கிளம்பினாள் கோமதி.

”நீ இரும்மா.. நா போய்ட்டு வர்றேன்…” என்று சொல்லி வாசலுக்குச் சென்றாள் பானுமதி.

வாசல் கதவில் இரண்டு துணிப்பை தொங்கியது. இரண்டு துணிப் பைக்குள்ளும் கிடந்த பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள். பால் பாக்கெட்டை கொடுத்துவிட்டு கெட்டியாக இருந்த இன்னொரு பாக்கெட்டைப் பார்த்து இது என்ன என்பது போல கோமதியைப் பார்த்தாள்.

”அத்தே… இந்தப் பாக்கெட்ட எதுக்கு கொண்டு வந்திங்க. இது மாட்டுச்சாணி. கால்கிலோ பாக்கெட்டு முப்பது ரூபா. இருக்குறதுலேயா இதுதான் ஒரிஜினலு….” என்றாள் கோமதி.

சோர்ந்து போன முகத்தோடு சாணி பாக்கெட்டை உற்றுப் பார்த்தாள் பானுமதி. கிராமத்தில் வலுக்கட்டாயமாக விற்ற பசுமாடும் கன்றுக்குட்டியும் திரும்பித்திரும்பி பார்த்துச் சென்ற நினைவுகள் அவளை வாட்டியது.

 

 

——————–*****——————

Loading

2 Comments

  1. சொர்க்கத்தை விடுத்து, நரகத்தில் சொர்க்கத்தை தேடிய கதை தான் இது. சாணில கோலம் போட்டதை படித்தப்ப மகிழ்ச்சி ஆனா பாக்கெட் 30 னு படிச்சப்ப ஒரு நெருடல். நான் ஒரு வீட்டில் பார்த்தேன் செயற்கை சாணி பொடி பாக்கெட். நிறம் மட்டுமே இருக்கும்.

  2. காலையில் சாணிக்கோலம் போடுவது தமிழர் பண்பாடல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *