“நல்லதொரு குடும்பம்” …. சிறுகதை …. சங்கீதா.

தலையில் தோன்றியிருக்கும் வெள்ளி கம்பி போன்ற நரை முடிகளே மாயக்கண்ணனின் வயதை காட்டிக் கொடுத்து விடும் 60 என்று.அவரது மனைவி முத்துலட்சுமி அவரை விட ஐந்து
வயது குறைவானவள்தான்…
அரசாங்கம் ஓய்வு கொடுத்து குறைந்த அளவு பென்ஷனை பெற்றுக் குடும்பத்தை ஓட்டும் மாயக் கண்ணனுக்கு முப்பது வருடம் முன்புதான் பார்த்த 150 ரூபாய் சம்பளத்தில் கூட இதுபோன்ற கஷ்டம் வந்ததில்லை என்று தோன்றிற்று.![]()
தனது பெற்றோருக்கு ஒரே பையனாகவும் இரண்டு சகோதரிகளுடனும் பிறந்த மாயக்கண்ணன் தான் அவர்களுக்கு கடவுள் உலகம் எல்லாமும். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பது மாறி, பிள்ளை சொல் மிக்க எதுவுமில்லை என்றாகும் அளவிற்கு மாயக்கண்ணனின் செயல்பாடுகள் இருக்கும்.
அப்பாவி என்றும் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பேரெடுத்த முருகனுக்கு பேர் சொல்லும் பிள்ளையாய் உயர்ந்திருந்தான் மாயக்கண்ணன். சிறு வயது முதலே படிப்பிலும் சரி, விளையாட்டுலிலும் சரி முதல் தரம் தான். விளையாட்டுக்களில் கபடி, கால்பந்து என தொடங்கி உள்ளூர் கிணற்று நீச்சல் வரை ஊரிலிருக்கும் அதிக வயதுள்ள அத்தனை பெரிய பசங்களையும் முந்தி விடுவான் மாயக்கண்ணன்.
பண்புகள் அனைத்திலும் சரி, கொடுப்பதில் அவன் கர்ணன், நீதியில் தர்மன், ஆட்சியில் ராமன், போதனையில் வசிஷ்டன் என அனைத்து நல்ல கதாபாத்திரங்களையும் கலந்து உருவான ஆயிரத்தில் ஒருவனவன்.ஆம்…. புவியில் இவன் போன்ற பிள்ளைகள் பிறத்தல் அரிது எனும் வகையில் ஏழை குடிசையில் பிறந்தாலும் நல்ல பண்புகளில் மலையாய் உயர்ந்து நின்றான் மாயக்கண்ணன்.
ஏக்கர் கணக்கில் உள்ள நிலங்களுக்கு நடுவில் சிறு சிறு தீவுகளாய் நாலைந்து வயல்கள் மாயக்கண்ணனுக்கு.ஆம்… அவை தான் பெற்றோர் அவனுக்கு சேர்த்து வைத்த சொத்துக்கள்.
அந்த வயல்களில் போதுமான அளவு விவசாயம் செய்வான். அதில் கணிசமாக ஓரளவு வருமானமும் பெறுவான். அதே நேரத்தில் இளமை பருவ தொடக்கம் முதலே தான் உயிராய் நேசித்த தேசியக் கட்சியிலும் முக்கியபப் பொறுப்பை வகித்தான். அந்தக் கட்சியில் இளம் வயதிலேயே அவனது சுறுசுறுப்பு, நேர்மை, முயற்சி, கட்சியின் மீது கொண்ட தொண்டுள்ளத்தால் கட்சியின் பெரிய தலைவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றான். அந்த கட்சியின் மற்ற இளைஞர்கள் பொறாமைப்படும் அளவிற்கு சிறப்பாக செயல்படுவான் மாயக்கண்ணன்.
கனவிலும் பிறருக்கு தீங்கு நினைக்காத மாயக்கண்ணனுக்கு கனக்கச்சிதமாய் மனைவியானவள் முத்துலட்சுமி. முத்துலட்சுமியும் கணவனின் சொற்படி வாழ்க்கை சிறப்பாகவே நடத்தி வந்தாள். கணவனை விட கொடையில் நீண்டவள். தனது வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை இல்லாதவர்களுக்கு கொடுத்து சந்தோஷப்படும் கொடை உள்ளம் கொண்டவள்.
அவர்கள் என்னபடியே இறைவன் கொடுத்த இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் என நிறைவாகவே வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. மாயக்கண்ணன் தான் பிறந்த போது இறந்த தனது சித்தப்பா முத்தையாவின் பெயரை தனது கடைசிப்பிள்ளைக்கு வைத்து அழைத்து சந்தோஷப்பட்டதிலிருந்து அவன் மூதாதையர் மீது கொண்ட பேரன்பு புரியும்.
பிள்ளைகள் நால்வரும் தந்தை சொற்படி நடந்து வகுப்பிலும், சமுதாயத்திலும் நல்ல பெயர் எடுத்துக் கொடுத்தனர். அதற்குக் காரணம் மாயக்கண்ணனின் வாழ்க்கை முறையும் அவன் அவனது பிள்ளைகளுக்கு போதித்த அறிஞர்கள் வரலாறும் தன்னம்பிக்கை கதைகளும் அனுபவக்கதைகளுமே ஆகும். அவ்வாறு வளர்ந்தமையால், அவர்களும் தந்தையைப் போலவே இயல்பாகவே நல்ல பண்புகளோடு முன்னேறினர் வாழ்க்கையில்.
மாயக்கண்ணனுக்கு கலைமகள், மலைமகள் அருளை விட அலைமகளின் அருள் குறைவாகவே இருந்தது எனலாம். ஆம்… வறுமை. வறுமை என்பதை அவன் வைத்திருந்த ஒலி கேட்கும் பழய ரிப்பேரான மிதிவண்டியை வைத்தே கண்டு கொள்ளலாம். மாயக்கண்ணன் அந்த கால பி.யு.சி மற்றும் ஐ.டி.ஐ துறையில் வெற்றி பெற்றாலும் அவனது போதாத காலம் சத்துணவு வாத்தியார் என்ற 150 ரூபாய் சம்பளம் வேலையே நிரந்தரம் ஆயிற்று. அவனைவிட குறைவாக படித்த அவனது நண்பர்களோ வீடு,ஸ்கூட்டர், வண்டி என உயர்ந்திருந்த போதிலும் அவற்றை பெரிய விஷயமாக நினைத்ததில்லை மாயக்கண்ணன். எத்தகைய பிரச்சினைகள் கஷ்டங்கள் வந்தாலும் அமைதியான சிரிப்புடனும் அறிவார்ந்த பதில்களுடனும் வாழ்க்கையில் எதிர்நீச்சலுடன் வாழ்ந்து வந்தான் அவன்.
மாயக்கண்ணன் தனது வறுமையை விரட்ட நெல் வியாபாரமும், புண்ணாக்கு கடை என பல வழிகளில் பாடுபட்டு வந்தும் எந்த பலனுமின்றி பழையபடியே எப்பொழுதும் கைகொடுக்கும் விவசாயத்தையே மேற்கொண்டான். வயலில் உளுந்து, கடலை, கரும்பு, சோளம் என விளைந்தாலும் மகசூல் மிகவும் குறைவுதான். இலாபத்தை நினைக்காமலே விவசாயம் செய்தால் தான் உண்டு. “கணக்கு பார்த்தால் காணி உழக்கு கூட மிஞ்சாது” என்ற பழமொழி மிகச் சரியாகப் பொருந்தும் மாயக்கண்ணனுக்கு..
வயலில் உழைத்தும், கட்சியில் உழைத்தும், அந்த சிறிய அரசாங்க வேலையில் உழைத்தும் எந்தவித அதிகப்படியான வருமானமும் வந்துவிடவில்லை மாயக்கண்ணனுக்கு.
அவ்வளவு கஷ்டங்களிலும் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்கள், திருவிழாக்கள், வீட்டு விழாக்கள் என அனைத்திலும் பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்தும், மனைவி, வயதான பெற்றோர்களையும் கவனித்துக் கொண்டும், இரண்டு அக்காக்களின் சீர்வரிசைகளை சரியாக செய்து கொண்டும், அவர்களது குடும்பங்களை தனது குடும்பமாக என்னை அவர்களது தேவைகள் நிவர்த்தி செய்து கொண்டும்,ஊர்க்கோவில் கணக்கு வழக்குகளைப் பராமரித்துக் கொண்டும், ஊர்ப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நீதிபதியாகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தான் மாயக்கண்ணன்.
பிள்ளைகளை பக்கத்து நகரத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது ஹோட்டல்களில் பிள்ளைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தான் தண்ணீரைக் குடித்துக் கொண்டு சினிமாவிற்குப் பிள்ளைகளை மட்டும் அனுப்பிவிட்டு தான் வெளியே காத்துக் கொண்டும் இருப்பான் மாயக்கண்ணன்.ஏனோ அப்பாக்களின் தியாகம் பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே தெரிவதில்லை.எவ்வாறெல்லாம் பிள்ளைகளை வளர்த்தவன் மாயக்கண்ணன் மேலும் பிள்ளைகளின் படிப்பில் தானும் பயின்று அவர்கள் பெற்ற பட்டங்களை தானும் பெற்று அவர்களது வளர்ச்சியில் தானும் வளர்ந்து ஒப்பற்ற தந்தையாக உயர்ந்து நின்றவன் அவன்.
காலங்கள் உருண்டோடின. பிள்ளைகளும் அறிவும் அழகும் என வளர்ந்து விட்டிருந்தனர். நால்வரும் அரசாங்க வேலைக்குச் சென்றனர். மாயக்கண்ணன் பாதி கனவுகள் நிறைவேறியது.
அடுத்தடுத்து திருமணங்களும் வரிசையாக மாயக்கண்ணன் எதிர்பார்த்தபடியே அவன் பார்த்த வரன்களே…. அனைத்தும்… குழந்தைகளுடன் சிறப்பாக வாழ்ந்தனர் பிள்ளைகள்.
தற்பொழுது கொஞ்ச காலமாகவே மாய கண்ணனுக்கு உள்ளூர அதிக வருத்தம். பிள்ளைகள் குடும்பத்தில் தான் எடுக்கும் முடிவுகளையும், தான் கூறும் கருத்துக்களையும் சிறிதும் ஏற்காமல் தன்னை மதிக்காதது போல் நடந்து கொள்கிறார்களோ என்று கவலை தோன்றியது.தான் நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கிய போது இருந்த நிம்மதி கூட தற்போது இல்லை என்கிற அளவிற்கு வருத்தம் அதிகமாயிற்று. தான் வாழ்ந்த வாழ்க்கை, கஷ்டங்களை பார்த்து தானே பிள்ளைகள் வளர்ந்தார்கள். பின்பு எப்படி இவ்வாறு மனம் மாறுகிறார்கள். தான் இருக்கும்போது இப்படியென்றால், தான் இல்லாத பொழுது பிற்கால சந்ததிகளும், தான் எதிர்பார்த்த எதிர்காலமின்றி வாழ்ந்து விடுவார்களோ? தான் இவ்வளவு காலமும் வாழ்த்த வாழ்க்கை நல்ல பாடங்களை கற்றுத் தரவில்லையா இவர்களுக்கு….
குடும்பத்திற்காகவும் உறவினர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் செய்யும் நன்மைகளையும் செலவுகளையும் கணக்கு கேட்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள் என்றும் வருத்தம்.
தான் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைத்ததே இல்லையே? என் பிள்ளைகள் மட்டும் எப்படி?தேவைக்கேற்ப மட்டும் தானே பணம், சந்தோஷத்திற்காக மட்டும்தானே பணம், தேவைக்கு அதிகமாக சேமிக்க நினைப்பது பேராசையாயிற்றே.. வாழ்க்கை உகந்தது இல்லையே என்றும் கொஞ்சம் நாட்களாக மனதில் உறுத்திக் கொண்டு நின்றனஇந்த விஷயங்கள்.
இவ்வாறுதான் ஒருநாள் மாயக்கண்ணன் ஏதோ ஒரு ஊர் பிரச்சனை பற்றி கூற நான்கு பிள்ளைகளும் ஆளுக்கொரு யோசனையை கூற சிறிது வாக்குவாதமே உண்டாயிற்று. இறுதியில் அனைவரையும் மாயக்கண்ணன் உரக்கப் பேச அனைவரும் கலைந்து சென்றனர்.
மாயக்கண்ணனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. தனது விஷயங்களில் இதுவரை தனது பெற்றோரோ,சகோதரிகளோ ஏன் பஞ்சாயத்துக்களில் பெரிய ஆட்களோ கூட தலையிட்டதில்லை. எதிர்த்தும் பேசியதில்லை.ஏனென்றால் தனது பேச்சில் உண்மையும் உயிர்ப்பும் கலந்திருக்கும். நியாயம் நிறைந்திருக்கும். மாயக்கண்ணன் பல்வேறு விஷயங்களை பலவாறு நினைத்து வருந்திக்கொண்டு வயல் பக்கம் சென்று விட்டார். மாயக்கண்ணனின் மனைவியும் வருத்தமுற்று செல்லும் கணவரையும், தெரியாமல் பேசிவிட்டு செய்வதறியாமல் இருக்கும் பிள்ளைகளையும் நினைத்து கண்ணில் துளியுடன் நின்றார்.![]()
சாப்பிடாமலேயே வயலுக்குச் சென்று விட்டு நீண்ட நேரம் ஆகிய பின்பு வீட்டிற்குள் நுழைய முற்பட்ட மாயக்கண்ணனை வீட்டில் உள்ள அனைவரும் பேசியது அவரை நிறுத்தியது.
வீட்டில் மூத்த பையன் “அப்பாட்ட கணக்கு கேட்டது ரொம்ப தப்பு. அப்பா பணத்தோட அருமையை தெரிஞ்சுக்கத்தான் அப்படி சொன்னேன். அத அப்பா தப்பா புரிஞ்சுகிட்டாங்க. நான் அப்பாகிட்ட வேறு எதுவும் தப்பா கேட்கல” என்று வருத்தம் தெரிந்து குரலுடன் கூறினான்.
இளையவனோ, “எத்தனையோ தான தர்மங்களை பண்ணி கஷ்டப்பட்டு வாழ்ந்து வாழ்ந்த அப்பாவோட பண்புகளை நாமதான் கத்துக்கிட்டு அவங்களைப் போல நடந்துக்கணும்” என்றான்.
சிறிய பெண்ணோ, “நம்ம நான்கு பேரையும் இந்த கிராமத்துல படிக்க வச்சு உயர்த்தியிருக்கிற இருக்கிற நம்ம அப்பாவ நாம மதிச்சு நடந்தாதான் பிற்கால சந்ததிகள் நம்ம அப்பா பேர வச்சு நம்மளையும் மதிப்பாங்க.நம்ம அப்பாவோட வரலாற்றை சொல்லித்தான் நம்ம பிள்ளைகளை வளர்த்து சமுதாயத்தில் பெரிய ஆளாக்கனும் என்றாள்.
இறுதியாக மூத்த பெண்ணோ,”கடவுளை நேரில் பார்க்க முடியாது என்று சொல்லுவாங்க.ஆனால் பார்க்கலாம், அது நம்ம அப்பாதான்.அம்மாவோட அன்புக்கும், அப்பாவோட பண்புக்கும் நாம கட்டுப்பட்டு நம்ம உயர்த்தின அப்பாவுக்கு அவர் வாழ்ந்த மாதிரி வாழ்க்கையில உயர்ந்து காட்டணும்.
எந்தப் பிள்ளையும் பெத்த கடனை அடைச்சத சரித்திரமே இல்லை.அதனால் அப்பாவை பின்பற்றி வாழ்வோம்.இதுதான் நாம் அவருக்கு கொடுக்கிற மரியாதை என்று கூறினாள்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாயக்கண்ணனுக்கு பிள்ளைகளின் மனதை நினைத்து கண்ணில் நீர் வடிந்தது. காலத்திற்கும் தான் பட்ட கஷ்டம் வீணாகவில்லை. கடமைக்கு வளர்க்காமல் கடமையைச் சொல்லி வளர்த்த பிள்ளைகளின் மனதை எண்ணி வியந்தார்.மேலும் தான் தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருத்தமுற்று தனக்காக சாப்பிடாமல் இருக்கும் அனைவரையும் பார்த்து, “சரி… சரி… அனைவருக்கும் சாப்பாடு எடுத்துவை முத்துலட்சுமி”என அதட்டலான குரலுக்கு அனைவரும் தடபுடலாய் வந்து சேர்ந்தனர்.
![]()
உணர்வுகளை கடத்தும் அற்புதமான படைப்பு. வாழ்த்துகள்.
மிக்க நன்றி கவிஞரே
🙏🙏🙏🙏🙏