கட்டுரைகள்

உலகையே தன் உள்ளங்கைக்குள் வைத்திருந்த ஊடக ஜாம்பவான் ரூப்பர்ட் முர்டோக் ! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஊடக ஜாம்பவான் ரூப்பர்ட் முர்டோக் ஃபாக்ஸ் &  நியூஸ் கார்ப் தலைமைப் பதவியில் இருந்து விலகினாலும்அமெரிக்கா மட்டுமல்ல உலகின் ஊடகங்களை கச்சிதமாக கையாண்ட ஆளுமை மிக்கவராகவே புலப்படுகிறார்)
அமெரிக்காவின் ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 92 வயதான ஊடக அதிபர் ரூப்பர்ட் முர்டோக் (Rupert Murdoch) வியாழக்கிழமை (செப்டம்பர் 21) அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க செய்தி மற்றும் ஊடகத் துறை தொழிலதிபர் ரூப்பர்ட் முர்டோக் தனது ஃபாக்ஸ் & நியூஸ் கார்ப் (Fox & News Corp) ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
ஈராக் மீதான ஊடகப் போர்:
ஈராக் மீதான போரினால் நாகரீக உலகத்து மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் ரூப்பர்ட் முர்டோக்கின் ஊடகங்கள் பாரியளவில் பொய்மையான பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோக் வெற்றியடைந்தார்.
ஆனால் போரின் முடிவில் இரசாயன ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஈராக் போரில் கொல்லப்பட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் அப்பாவி மக்கள்.
ஆப்பிரிக்கா, மற்றும் அன்டார்டிகா இரு கண்டங்களைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் அவர் தனது ஊடகங்களை நிறுவி செயல்படுத்தினார். இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், பாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.
ரூப்பர்ட் முர்டோக்கிற்கு உலகம் முழுவதும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் உள்ளன. இந்தியாவின் ஸ்டார் குழுமம், தமிழில் விஜய் தொலைக்காட்சியும் இந்நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும். ரூப்பர்ட் முர்டோக்கின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி அரேபியா இளவரசர் அல்லாவி-பின்-தலால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்கு பிரச்சாரம்;
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி போலிச் செய்திகளுக்கும், வலது சாரி தகவல்களுக்கும் பெயர் பெற்றது. டொனால்ட் ட்ரம்ப் அதிபரானதற்கு இந்த தொலைக்காட்சியின் தவறான செய்திகள் மற்றும் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணம் ஆகும். உலக அளவில் ஃபாக்ஸ் நியூஸ் மாதிரி என்பது இத்தகைய பொய்ச்செய்தி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு வழக்காகும்.
எதேச்சதிகார ஆட்சிகள் தங்கள் சமூகங்களுக்குள் உள்ள தகவல்களின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்குவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் சங்க அறிக்கை குறிப்பிடுகின்றன. இந்தக் கட்டுப்பாடு மற்றம் அதன் தாக்கம், ஜனநாயகங்களுக்கு எதிராக “பிரச்சாரப் போர்களை” நடத்துவதற்கும் அவற்றிற்குள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது
ரூப்பர்ட் முர்டோக் மீது குற்றச்சாட்டு:
ரூப்பர்ட் முர்டோக்கின் ஊடக சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை காவல்துறைக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய
தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.
அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோக்கின் ஊடகங்கள் கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. அரச குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ரூப்பர்ட் முர்டோக் என்றும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
முர்டோக்கின் செய்தித்தாள்கள் பல்வேறு காலகட்டங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையிலும் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும், செய்திகளைத் திரட்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் இலஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.
முர்டோக் மீதான குற்றச்சாட்டுகளின் பின்விளைவுகள் 168 ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ என்ற வாராந்திர இதழை 10-07-2011 முதல் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியது. இங்கிலாந்து காவல்துறை ரூப்பர்ட் முர்டோக் மீது பல குற்றவழக்குகள் பதிவுசெய்தது. வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இன்னமும் நிலுவையில் உள்ளது.
ஊடக தொழில் பின்னணி
ரூப்பர்ட் முர்டோக் 1996 இல் ஃபாக்ஸ் நியூஸை சிஎன்என் நிறுவனத்திற்கு போட்டியாகத் தொடங்கி, இறுதியில் அமெரிக்காவில் முதன்மையான கேபிள் செய்தி சேனலாக ஆக்கினார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, முர்டோக்கின் சொத்து சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் என்று நம்பப்படுகிறது.
தனது ஊடக சாம்ராஜ்யத்தில் ஃபாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நியூயார்க் போஸ்ட் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற ஊடக நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளார். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை பல திருமணங்களில் இருந்து ஆறு குழந்தைகளை கொண்டுள்ளார்.
92 வயதில் 5வது திருமணம்:
92 வயதில் உலகின்புகழ்பெற்ற ஊடக அதிபர் ரூப்பர்ட் முர்டோக் 5வது முறையாக திருமணம் செய்துகொண்டார். அவரது காதலி ஆன் லெஸ்லி ஸ்மித்தை கடந்தாண்டு அவரது திராட்சை தோட்டத்தில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த கலிபோர்னியாவில் அவர்களின் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ரூப்பர்ட் முர்டோக் ஆன் லெஸ்லியுடன் ஒராண்டு டேட்டிங் செய்தபின் திருமணம் செய்தார்.
முர்டோக் திருமணம் செய்த ஆன் லெஸ்லி, 66 வயதானவர். சேன் பிரான்சிஸ்கோவில் முன்னாள் காவல்துறை அதிகாரி. அமெரிக்க பாடகர் மற்றும் ஊடக நிர்வாகி செஸ்டர் ஸ்மித்தின் முன்னாள் மனைவி. முர்டோக் தனது 4வது மனைவியும் மாடலுமான ஜெரி ஹாலை கடந்தாண்டு விவாகரத்து செய்தார். அவருடனான ஆறு ஆண்டு திருமண வாழ்க்கையை கடந்தாண்டு முறித்துக்கொண்டார்.
இவர் முதலில் பாட்டிக்கா புக்கர் என்ற விமான பணிப்பெண்ணை முதலில் திருமணம் செய்திருந்தார். அவரை 1960களிலே விவாகரத்து செய்துவிட்டார். அவரது இரண்டாவது மனைவி அன்னா, பத்திரிக்கை செய்தியாளர், இருவரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தார்கள் ஆனால் 1999ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். வெண்டி டெங்குடனான அவரது மூன்றாவது திருமணம் 2013ல் முடிவடைந்தது.
அவுஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க ஊடக தொழிலதிபர்:
கீத் ரூப்பர்ட் முர்டோக் (Keith Rupert Murdoch) மார்ச் 11, 1931 இல் பிறந்த அவுஸ்திரேலியத் தொழிலதிபர். இவரின் வணிக நிறுவனம் நியூஸ் கார்ப்பரேஷன் உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 2008இல் இவர் 109ஆம் நிலையில் உள்ளார்.
இவரது நியூசு கார்ப்பரேசன் எனும் நிறுவனம், ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம் என இத்தனைக்கும் உரிமையாளரான உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூப்பர்ட் முர்டோக் தற்போது தனது பதவியில் இருந்து விலகுகிறார்.
ஆரம்ப வாழ்க்கையும் – ஊடகத்துறை முன்னேற்றமும்:
ரூப்பர்ட் முர்டோக்கின் பூர்வீகம் இங்கிலாந்து ஆகும். எனினும் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் தனது 21ம் வயதில் அவர் அவுஸ்திரேலியா சென்று அங்கு அவரது தந்தை நடத்தி வந்த செய்தித்தாள் நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார்.
1953ல் அவுஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் கீத் ரூப்பர்ட் முர்டோக், அடுத்த சில ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஊடகத்துறையில் மன்னனாகிறார்.
பின்னர் மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த நியூஸ் ஆப் த வோர்ல்ட் எனும் வாராந்திரச் செய்தி இதழின் பங்குகளை வாங்குவதன் மூலம் 1969-ல் அந்நாளிதழைக் கைப்பற்றினார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ வாராந்திர இதழின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட நாளிதழாக மாற்றினார்.
ரூப்பர்ட் முர்டோக்கின் ஊடகங்கள்:
நியூயார்க் போஸ்ட் (அமெரிக்கா), வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (அமெரிக்கா), சான் அன்டோனியோ எக்ஸ்பிரஸ்-நியூஸ் (அமெரிக்கா), பாக்ஸ் டிவி (அமெரிக்கா), தி சன் (இங்கிலாந்து), நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு (இங்கிலாந்து), அடிலெய்டு நியூஸ் (ஆஸ்திரேலியா), சண்டே டைம்ஸ் (ஆஸ்திரேலியா), தி டெய்லி மிரர் (ஆஸ்திரேலியா), தி ஆஸ்திரேலியன் (ஆஸ்திரேலியா), ஸ்டார் குரூப்ஸ் (இந்தியா) ஆகியன ரூப்பர்ட் முர்டோக்கின் ஊடகங்கள் ஆகும்.
தலைவர் பதவியில் இருந்து ரூப்பர்ட் முர்டோக் ஓய்வு
இவரது மகன் லாச்லான் முர்டோக் ஃபாக்ஸ் &  நியூஸ் கார்ப் இரண்டு நிறுவனங்களின் தலைவராக செயல்படுவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. லாக்லான் ஏற்கனவே ஃபாக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. பிபிசி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
தனது பதவி விலகல் குறித்து ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு குறிப்பில், இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைவராக வரக்கூடிய ஒரு உணர்ச்சிமிக்க, கொள்கை ரீதியான தலைவர் நம்மிடம் இருப்பதை அறிந்து, நான் விலக இது சரியான தருணம் என நினைப்பதாக ரூப்பர்ட் முர்டோக் தெரிவித்துள்ளார்.
உலகையே தன் உள்ளங்கைக்குள் வைத்திருந்த,ஊடக ஜாம்பவான் ரூப்பர்ட் முர்டோக் ஃபாக்ஸ் &  நியூஸ் கார்ப் தலைமைப் பதவியில் இருந்து விலகினாலும், அமெரிக்கா மட்டுமல்ல உலகின் ஊடகங்களை கச்சிதமாக கையாண்ட ஆளுமை மிக்கவராகவே புலப்படுகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *