கதைகள்

“பிஞ்சுவீடு” ….. சிறுகதை – 34 …. அண்டனூர் சுரா.

அம்மா மாட்டுத் தொழுவத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் அவளது முதல் வேலை அதுதான். அவளுக்கு வீடு அளவிற்கு மாட்டுக்கொட்டகை சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு பசு, இரண்டு காளை, ஒரு கன்றுக்குட்டிக்கொண்ட சிறிய தொழுவம் அது. அம்மா வீடு வாசலில்லாமல் கூட இருந்துவிடுவாள். ஆடு மாடுகளில்லாமல் வாழ முடியாது. அம்மாவின் கணக்கில் மாடுகளும் பிள்ளைகள்தான்!

எத்தனை வருடங்களாகப் பார்த்துப் பழகும் முகம் அம்மாவுடையது. அவளது முகத்தில் பாதி அல்லது முக்காலாக எனது முகமிருந்தது. ஆண் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் அப்பா முகமே சொரூபமாக அமையும். அம்மா தன் முகத்தில் பாதிக்குமேல் எனக்குக் கொடுத்திருந்தாள்.

அம்மாவின் முகத்தை நான் துருவிப் பார்த்ததில்லை. அப்படியாகப் பார்த்தால் என் முகத்தையே நான் பார்ப்பதைப் போலிருக்கும் என்பது ஒரு காரணம். எல்லாவற்றுக்கும் நாம் காரணம் கண்டுவிட முடியாது. அம்மாவைப் பிடிக்குமா? பிடிக்கும். ஏன் பிடிக்கும்? இந்தக் கேள்விக்கு எதைக் கொண்டு பதிலாக நிரப்புவது?. அப்படித்தான் அம்மாவின் முகமும்!

அன்றைய தினம் நான் அம்மாவைப் பார்த்தேன். முதுமை அவளைப் பெரும்பகுதி தின்றிருந்தது. புளிச்சைத்தண்டு நாறால் ஆனதைப் போன்றிருந்த கூந்தல். கொசுவம் மாதிரியான முகச்சுருக்கம். மஞ்சப்பை போன்றிருந்தவளைக் காலம் சுருக்குப்பையாக்கியிருந்தது.

அம்மா, மாடுகளை அவிழ்த்து தண்ணீர்க்காட்டி அச்சில் கட்டிவிட்டு, சாணியை அள்ளி கூடையில் வைத்துவிட்டு, தூர்வையால் கொட்டகையைப் பெருக்கிக்கொண்டிருந்தாள். மாடுகளோடு புழங்குகையில் அவளுக்குத் தாய்ப்பாசம் கூடிக்கொள்ளும். இப்பொழுதெல்லாம் அம்மா என்று அதிகம் அழைப்பது மாடுகள்தான்!

எனக்கும் அம்மாவுக்குமிடையில் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் முன்னே மாதிரி அவளிடம் அவ்வளவாக பேசி, சிரிக்க முடிந்ததில்லை. எங்கள் இருவருக்குமிடையில் வெளியில் காட்டமுடியாத ஒரு இறுக்கம் அதுவாகவே வந்து சூழ்ந்துகொண்டது. எவ்வளவு நாட்களாக இந்த இறுக்கம்? கொஞ்ச நாட்களாகத்தான்! எனது திருமணத்திற்குப் பிறகு! காஞ்சனா இந்த வீட்டிற்கு வந்த நாட்களுக்குப் பிறகு என்றும் சொல்லலாம்!

காஞ்சனா வந்ததிலிருந்தே ஒரு செய்தியை அம்மாவிடம் தெரிவிக்கச் சொல்லி அனத்திக்கொண்டிருந்தாள். நான் அதைச் சொல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். என்னை அதற்காக தயார்படுத்தி வந்தாள். நான் சொல்லாமல், அச்சொல்லை மனத்திற்குள் போட்டு உருட்டிக்கொண்டு வந்தேன். அச்சொல் மழைக்குப் பதத்துப் போகாமல் வெயிலுக்குக் காய்ந்துபோகாமல் பக்குவப்படுத்திய விதையைப் போல அப்படியே இருந்தது. இப்பொழுது நான் சொல்லியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தேன். எனது நெருக்கடி என்பது என் மனைவியின் அடுப்படி.

“ அம்மா “

அம்மாவுடன் எதைச் சொன்னாலும் சொல்லுக்கும் பின்னே ம்மா சேர்த்து சொல்வதுண்டு. சாப்பிட்டியாம்மா, எங்கேம்மா போனே, இப்படி! பேச்சைத் தொடங்குவதற்கும் முன்னே அம்மா என்று அழைக்கும் சொற்பசையைப் போல சொல்லும் பிந்தைய அம்மா இருப்பதில்லை, என்பதை அன்றைய தினம் தெரிந்துகொண்டேன்.

அம்மா என்கிற அழைப்பு அவளை தலை நிமிர வைத்தது. இப்படியாக அழைத்து எத்தனை ஆண்டுகளோ ஆகிவிட்டிருந்தன. அம்மா நிமிர்கையில் கூந்தல் முடிகள் நெற்றில் சரிந்து கிடந்தன. அதைப் புறங்கையால் விலக்கி மேலே எடுத்துவிட்டபடி, என்னப்பா எனக் கேட்பதைப் போல பார்த்தாள்.

“ தனியே” என்றேன். தனிக்குடித்தனம் என்பதுதான் அவசரத்தில் தனியே என்று வந்திருந்தது.

“ என்னப்பா சொல்றே?” எனக் கேட்டாள்.

“ நாங்க கொஞ்ச நாளைக்கு வெளியே தங்கிக்கிறட்டுமா?”

அவளிடம் அனுமதி கேட்பதைப் போல நான் கேட்டாலும் அதற்குள் எப்பொழுதோ எடுத்துவிட்ட தீர்க்கமான முடிவு கரைந்து, குலைந்திருப்பது அம்மா ஒன்றும் அறியாதவளல்ல.

அம்மாவின் பெருமூச்சு நெட்டியாக பறிந்தன. இடுப்பிற்கு இரு கைகளையும் கொடுத்து நிமிர்ந்தாள். அப்படியாக நிமிர்ந்தால் அவள் கேள்விக் கேட்கப் போகிறாள் என்று அர்த்தம்.

“நீயும் காஞ்சனாவும் தானா. இல்ல பிள்ளையுமா?“

“ பிள்ள இல்லாமலா, அவனும் தான்”

அம்மாவின் தலை இடுப்போடு சேர்ந்து குனிந்துகொண்டது. எதையோ சொல்லி முணங்கினாள். அவளுக்கு எல்லா உணர்ச்சியும் முதலில் முணங்கலாகவே வரும். நான் அம்மா மீது வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அம்மா தொழுவத்தைக் கூட்டிமுடித்து சாணிக்கூடையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள்.

” கேட்கிறே பதிலைக் காணோம் ”

அம்மா நின்று என்னை ஒரு பார்வைப் பார்த்தாள். சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தது.

“முப்பதைந்து வருஷத்துக்கு முன்னே இந்தக் கூடை இருக்கிற எடத்தில நீ இருந்தே”

 

அம்மா எதையும் நேராகப் பேசமாட்டாள். அவளது பேச்சில் பூடகமிருக்கும். அவள் கூடையுடன் அசைந்து நடந்தாள். கூடை நீள்வாக்கில் அமுங்கி அவளது இடுப்பு ஒரு பக்கமாக கோணி இருந்தன. முன்னே போல அம்மாவால் அத்தனை வேகமாக நடக்க முடிவதில்லை. அவள் நடப்பது அசைவதைப் போலிருந்தது.

“ நான்னா, தூக்கிட்டு போவட்டா”

அவளது நடையின் வேகம் கூடியது.

“ இதையெல்லாம் தூக்கவா உன்ன நான் பெத்தேன்”

அம்மா சொல்வது சரிதான்! ஒரு நாளும் இந்த வேலையைச் செய்ய என்னை அனுமதித்ததில்லை. அதிகபட்சம் மாடுகளுக்குக் கூலமள்ளி போடுவேன். அவ்வளவுதான்! அதையும் அவள் இல்லாத பொழுதே செய்வேன். மாடுகளும் கூட அவளது கையால் கூலம் அள்ளிப் போட்டால்தான் மிச்சம் வைக்காமல் தின்று, அசைபோடும்.

அம்மா சாணியைக் குப்பையில் கொட்டிவிட்டு திரும்பிவந்தாள். கூடையைக் கீழே வைத்து, முந்தானையை உருவி, நெற்றியோடு முகவாய்த் துடைத்து, பெருமூச்சு விட்டாள்.

“ நீ உன் பொண்டாட்டியோட தனிக்குடித்தனம் போனா, ஊரும் வாயும் என்னை என்னடா சொல்லும்”

” என்ன சொல்லும் ?”

” மாமியா மருவளுக்குள்ளே சண்டனு சொல்லாதா”

“ ஊர் சனத்துக்காகவா வாழ முடியும்?“

“ நீ பொண்டாட்டி பேச்சக்கேட்டுக்கிட்டு தனிக்குடித்தனம் போனவனு காலாக் காலத்துக்கும் பேசுவாள்வ”

என் ஆழ்மனதில் சுருக்கென்று ஒரு தையல் விழுந்தது. குடத்தடியில் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த காஞ்சனா வாயை நெளித்து என்னை இளக்காரம் செய்தாள். அம்மாவிடம் நான் பதுங்கிப் பேசுகிறேனாம்! “என்க்கிட்ட வாயடி அடிக்கிறீங்க. உங்க அம்மாக்கிட்ட பம்முறீங்க” காஞ்சனா என்னிடம் சண்டைப் பிடிக்கையில் அதிகம் சொல்லிக்காட்டுவது இதைத்தான்!

காஞ்சனா நானாகப் பார்த்த பொண்ணு. என்னோடு படித்தவள். அவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேனென அம்மாவிடம் சொன்னேன். அம்மா மனதிற்குள் வேறு யாரையோ மனதிற்குள் கூடு கட்டியிருந்தாள். காஞ்சனாவை அம்மா முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு அவள் தான் பிடித்த பிடியிலிருந்து மெல்ல இறங்கிவந்தாள்.

ஒரு நாள் கேட்டாள். “ நகரத்துப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஆகுமாப்பா?”

” ஏன் ஆகாது?”

” தாலிக்கயித்தத் தங்கத்தில கேட்பாங்க. தாலிக்கட்டுன மறுநாளே தனிக் குடித்தனம் போகணுமெனச் சொல்வாங்க. விடிஞ்சா சுடிதாரு, இருட்டினா நைட்டி. தஸ் புஸ்னு இங்கிலீஸ்ல பேச்சு. மாமியார் பிரச்சனைக்குப் புருசன கோர்ட் படில ஏத்துவாங்க. நீ பாத்திருக்கும் பொண்ணு எப்படிப்பா?“

“ காஞ்சனா அப்படியல்லம்மா. அவளோட பூர்வீகம் கிராமம்தான். நல்லப் பொண்ணு”

“ நானும் விசாரிச்சேன். நல்ல பொண்ணு, நல்ல குடும்பமென சொன்னாங்க” என்றவள் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, “கல்யாணத்துக்குப் பிறகு பொண்ணு ஊர்ல இருக்க பழகிக்கிருமில?“

“ இம். சொல்லிட்டேன். சரிணுட்டாள்“

அம்மாவும் நானும் இப்படி பேசிக்கொண்டது நேற்று நடந்தது போலிருக்கிறது.

காஞ்சனா அவசரமாக என்னை வீட்டுக்குள் அழைத்தாள். அவளிடமிருந்த நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று. என்னிடம் சண்டைப் பிடிக்கையில் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்வாள். அவள் அழைக்கும் வேகத்தைக்கொண்டு பார்க்கையில் எவ்வளவு நேரம் சண்டைப் பிடிக்கப்போகிறாள் என்பதை என்னால் ஓரளவு கணிக்க முடிந்தது.

“பேசச்சொன்னா தவளைய முழுங்கிய பாம்பாட்டம் பம்முறீங்க. பெத்த தாய்க்கிட்ட சொல்றதுக்கா இப்படி. நான் உங்கள தனிக் குடித்தனம் போக அனுமதி கேட்கச் சொல்லல. தனி குடித்தனம் போறோமென தகவலத்தான் சொல்லச் சொன்னேன்”. இதுமாதிரியான வசனங்களை அவள் நன்றாகவே பேசுவாள். அவள் பேசுவதோடு கண்களும் பேசின.

காஞ்சனா அமைதியாக இருக்கையில் சுமாராக இருப்பாள். கோபப்படுகையில் அவளது முகத்தின் அழகு கூடிக்கொள்ளும். அவளது முகத்தைப் பார்த்தவனாக இருந்தேன். நெருப்பில் விழுந்த உப்பு, மிளகாயாட்டம் பொரிந்தவள் எல்லாம் என் தலைஎழுத்து என அலுத்துக்கொண்டாள்.

“ என்ன நான் பம்மினேன்?“ கோபமாக கேட்டேன்.

“நீயும் அப்பாவும் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருங்க. நான் கொஞ்ச நாளைக்கு வெளியிலே தங்கிக்கிறேனு பட்டுனு போட்டு உடைக்க வேண்டியது தானே”

இப்போது காஞ்சனாவுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது.

“நீ நினைக்கிற மாதிரி இல்ல காஞ்சனா. நீ அப்பா அம்மாவைப் பிரிஞ்சு இந்த வீட்டுக்கு வந்தது மாதிரி அம்மா அப்பாவைப் பிரிஞ்சு என்னால வரமுடியாது”

காஞ்சனா சட்டிப்பானைகளை உருட்டினாள். கேட்டால் நான் கொண்டுவந்த பானைகளை நான் உருட்டுகிறேன். உங்களுக்கென்ன என்பாள். சட்டிப் பானைகளுக்கு வாயும் இருக்கிறது. அவள் பேச நினைத்ததைப் பானைகள் பேசின. “ நான்தான் கல்யாணத்துக்கு முன்னேயே கேட்டேனே.. நம்மள தனிக்குடித்தனம் வைப்பாங்கலானு? அதுக்கு நீங்க என்னச் சொன்னீங்க?“

“ வைப்பாங்கனு சொன்னேன்”

“ பின்னே ஏன் வைக்கல?“

“ கொஞ்சம் பொருத்துக்கோ காஞ்சனா, போயிடலாம்”

“கொஞ்சம். கொஞ்சம், கொஞ்சம் ” என்றவள் இரண்டு சட்டிகளைக் கொண்டு அடித்தாள்.

கொஞ்சம் என்னே ஒரு சொல்!. இச்சொல்லுக்குள் ஒரு நூற்றாண்டையும் அடைத்துவிடலாம், மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

காஞ்சனா விளக்கிக்கொண்டிருந்த பண்டம் பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு கட்டிலில் சுருண்டாள். அவளது உடம்பு அழுகையில் குலுங்கிக்கொண்டிருந்தது.

அம்மா தூக்குவாளியை எடுத்துப் போய் டீக்கடையில் டீ வாங்கி வந்தாள். அவளுக்கு டீக்கடை டீதான் பிடிக்கும். டீயை ஆற்றிப் பேரனுக்குக் கொடுத்து, எனக்கு ஒரு குவளைக் கொடுத்தாள். காஞ்சனாவுக்குக் கடை டீ பிடிக்காது.

“ காஞ்சனா, டீ குடிக்கிறீயா?” கேட்டு வைத்தேன்.

“ வேணாம்” என இழுத்துச் சொன்னாள்.

நான் டீ குடித்து முடிக்கும் வரைக்கும் அம்மா காத்திருந்தாள். நான் சாப்பிடுகையில், தண்ணீர் குடிக்கையில் எதையும் அவள் சொல்லமாட்டாள். டீயைக் குடித்து குவளையைக் கீழே வைக்கையில் சொன்னாள்,” என்னாலே உங்க சந்தோசம் ஏன் கெடணும். நீங்க தனியா போகணுமென நினைச்சால் போங்க. நானும் அவரும் இந்த வீட்டுல இருந்துக்கிறோம். உங்க சந்தோசம்தான் என் சந்தோசம்.” இதை அம்மா சொல்கையில் அவளது கண்களைப் பார்த்தேன். பறவையாடின. இதற்கும் மேல் என் முன்பு அவள் அமர்ந்திருக்க மாட்டாள், கிளம்பிவிடுவாளென நினைத்தேன். நான் நினைத்தபடியே அவள் விட்டக்கையில் தொங்கிக்கொண்டிருந்த களைவெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள்.

அவள் எதையும் நினைத்து கண் கலங்கும் இடமாக தோட்டமிருந்தது. அப்பாவுக்கு எல்லா நேரமும் தோட்டம்தான். தூங்குவதற்காக மட்டும் வீட்டுக்கு வருவார்.

காஞ்சனா மெல்ல சமாதானமாகி வந்தாள். அம்மா கொடுத்திருந்த அனுமதி அவளது காதினில் விழுந்திருந்தது. இவ்வளவு நேரம் அழுத முகத்தில் புன்னகை பூக்கத்தொடங்கியது.

“ காஞ்சனா, உருப்படிகளை எடுத்து வை” என்றேன். படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள். மொட்டு மலர்வதைப் போல முகம் மலர்ந்தது. அதிலிருந்து ஒரு சொல்லும் வந்து விழுந்தது.

“ இப்பவேவா?“

“ பின்னே ”

அவளுக்கு கைக்கால்கள் ஓடவில்லை. குடத்தடிக்குச் சென்று விளக்காமலிருந்த மீதி பாத்திரங்களை விளக்கி, முகம் கழுவி வீட்டுக்குள் வந்து கண்ணாடியைப் பார்த்தாள். மழை பெய்து ஓய்ந்த வானம் போல அவளது முகமிருந்தது.

தனிக்குடித்தனம் என்றால் வெளியூர் அல்ல. ஊருக்குள் இன்னொரு வீடு இருந்தது. அங்கேதான்! இரண்டு வீடுகளுக்கும் குறுக்கே ஒரு வாரி ஓடிக்கிடந்தது. சாலையைச் சுற்றி வந்தால் ஒரு மைல் தூரம் பிடிக்கும். குறுக்கே சென்றால் கூப்பிடும் தூரம்.

தனிக்குடித்தனம் போகப்போகும் குதூகலத்தில் காஞ்சனா மகனைத் தேடினாள். அவன் வயதையோத்த பையன்களோடு விளையாடிக்கொண்டிருந்தான். விளையாடும் இடத்திற்குச் சென்று அழைத்துவந்தால் தாமதமாகுமென்று இங்கேயிருந்தபடியே கூப்பாடு போட்டாள். “மதன், இங்கே வா. ”

“ போங்கம்மா, நான் மாட்டேன். விளையாண்டுக்கிட்டுருக்கேன்“ அவன் தலையை எடுத்துப் பார்க்காமல் விளையாடியவனாய் சொன்னான்.

“ வாடா, அப்பா கூப்பிடுறாங்க”

“ மாட்டேன். விளையாடிட்டுதான் வருவேன்”

காஞ்சனா வேகமாக மகனை நோக்கி நடந்தாள். அவள் பின்னே நானும் சென்றேன். அவன் மண்ணைக் குவித்து வீடு கட்டிக்கொண்டிருந்தான். அழகு அழகான வீடுகள். சின்ன வயதில் நானும்கூட வீடு கட்டி விளையாடியிருக்கிறேன். இப்படி அழகாக கட்டியதில்லை. மகனின் கற்பனையில் வீடு விஸ்தாரமாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் சுற்றுச்சுவர். பின்பக்கமாகத் திரும்பி இரண்டு கால்களையும் ஒன்றுச் சேர்த்து கால்விரல்களால் போடப்பட்ட ரோடு. ரோடு வீட்டை ஒரு சுற்றுச்சுற்றி வாசலில் வந்து நின்றது.

“மதன், இது என்ன. வீடா?” கேட்டாள் காஞ்சனா.

“அய்யே, இது பங்களா” சொன்னவன் விளையாட்டில் துடிப்பாக இருந்தான். அவளுக்குச் சிரிப்பு உதடுகளில் முட்டியது. மகன் என்னவா பேசுகிறான் என்கிற பூரிப்பு.

பங்களாவிற்கும் அருகில் குச்சி ஊன்றியிருந்தது. அதைப் பார்த்துக் கேட்டாள் “ இது என்ன மரமா?”

“அய்யோ, அது டவர்ம்மா. நாம போன் பேசனுமில்ல, டீவி பார்க்கணுமில்ல. அதுக்குத்தான்” இதைச் சொல்லி அவனது வாய் ஓய்ந்தாலும் அவனது கால்களும் கைகளும் ஓயவில்லை. மண்ணைக் குலைத்து ராட்டியைப் போல தட்டி ஒன்றின் மேல் ஒன்றாக ஏற்றினான்.

பங்களாவிற்கும் அருகில் ஒன்றிரெண்டு தென்னம் கீற்றை வைத்து சிறியதாக கொட்டகை போட்டிருந்தான். “ மதன், நீ என்ன கொத்தனாரா, எஞ்சினியரா?”

” ரெண்டும்தான். ஏன்?”

” கக்கூசைக் கொண்டுப்போய் அவ்ளோ தூரத்தில கட்டிருக்கீயே. அதுக்குக் கேட்டேன்?”

மகன் விளையாட்டிலிருந்து பார்வையை எடுத்து காஞ்சனாவைப் பார்த்தான். “என்னம்மா நீங்க. எல்லாத்தையும் தப்புத்தப்பாகவே சொல்றீங்க”

“ பின்னே என்ன அது?”

“ உங்களுக்கான தனி வீடு. தனியா போகணுமென அப்பாக்கிட்ட நீங்க சண்டை போடுற மாதிரி என்கிட்டே சண்டை போடக்கூடாது பாருங்க. அதுக்குத்தான்.”

காஞ்சனா விக்கித்து நின்றாள். எனக்கும்கூட அப்படித்தான் இருந்தது. அவளது பார்வையில் படாமல் நான் மறைந்துகொண்டேன். பிரக்ஞை தப்பியவளாய் வீடு திரும்பினாள் காஞ்சனா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *