கட்டுரைகள்
ஐரிஷ் பொபி சான்ட்ஸின் உண்ணா விரத போராட்டம்!… அகிம்சையின் உச்சந் தொட்ட தியாக தீபம் திலீபன்!! …. நவீனன்.

வட அயர்லாந்தில் லிஸ்பேர்ன் நகரில் உள்ள சிறையில் உண்ணா நோன்பிருந்து இறந்த அந்த இளம் போராளிக்கு அப்போது வயது 27.
ஐரிஷ் எழுச்சிக்கு அகிம்சை குரல்:
அந்த இளம் போராளியுடன் சேர்ந்து பத்து பேர் இந்த உண்ணா நோன்பில் இணைந்து இறந்தனர். இவரின் இறப்பு ஐ.ஆர்.ஏ அமைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இதன் பின் பலர் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர். அந்த இளம் போராளி யாருமல்ல. அவரே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு
எதிராக போராடிய பொபி சான்ட்ஸ்்!
பொபி சான்ட்சுக்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் ஆதரவாக பலத்த குரலெழுப்பப்பட்டன. இப் போராட்டம் 66 நாட்களில் முடிவுக்கு வந்தது, ஆம் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம்திகதி சுயநினைவற்ற நிலையிலேயே அப்போராளியின் உயிர் பிரிந்தது.
ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, ‘பொபி சான்ட்ஸ்’ (Bobby Sands, மார்ச் 9, 1954 – மே 5, 1981), ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த போராளியும், ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
1981 சிறைச்சாலையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணா நோன்பிருந்த கைதிகளுக்குத் தலைமை வகித்தவர் பொபி சான்ட்ஸ். ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கக்கோரி இவர்கள் தமது உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். இவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் சிறையில் இருந்தவாறே ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழரின் உரிமைகளுக்காக திலீபன்:
அன்று ஐரிஷ் மக்களின் எழுச்சிக்கு அகிம்சை ரீதியில் குரல் கொடுத்தது போல, தமிழரின் உரிமைகளுக்காக,
மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,
சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும், தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக காவல் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும், என்ற ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டம்பர் 15ம் திகதி நல்லைக் கந்தனின் முன்றலில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது இந்திய இலங்கை ஒப்பந்தம். தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை, தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை மிக வேகமாக தொடர்வதற்கு வழி வகுத்தமையால்,
மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையைக் கையில் எடுத்து, அகிம்சையின் அடையாளமாக உலகிற்கு முன் நிமிர்ந்தார் தியாக தீபம் திலீபன்.
ஐரீஸின் திலீபன் பொபி சான்ட்ஸ்
தங்களை அரசியல் கைதிகளாக நடத்தவேண்டும் ,சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பொபிசான்ட்ஸ் அவரது தோழர்கள்
உண்ணாவிரத போராட்டம் நாளுக்கு நாள் நாடு தழுவிய எழுச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகள் மத்தியில் பேச்சு பொருளானது, இந்த நேரத்தில் 1981இல் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே ஐரீஸ் குடியரசு இயக்கம் (Irish Republican Movement ) சார்பில் நின்று தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
பொபி சான்ட்ஸ், அயர்லாந்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த ஒரு ஐரிஸ் சாதாரண போராளி. பிரித்தானியர்களின் அதிகாரத்திற்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ஆயுதரீதியாகவும் போராடிக்கொண்டிருந்த ஐரிஸ் குடியரசு இராணுவத்தில் (IRA) தன்னை இணைத்துக் கொண்ட போது அவருக்கு வயது 18.
ஐரிஷ் விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தவுடனேயே ஏகாதிபத்திய அரசு சிறைப்படுத்தியது.சட்ட விரோதமாக துப்பாக்கி பயன்படுத்தியது,பெருவாரியான ஆயுதங்களை பதுக்கிவைத்தது, வெடிகுண்டு வழக்கு என தொடர்ச்சியாக சிறையிலடைத்தது.
சிறையில் அரசியல் கைதிகள் குற்றவாளிகளை போல நடத்தப்பட்டனர், அவர்களது தார்மீக உரிமைகள் மறுக்கப்பட்டது. மனித உரிமை மீறால்களுக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டனர்.
அதே போன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான பொபிசான்ட்ஸின் போராட்டம்,
தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் அம்மக்களின் அகிம்சா வழி போராட்டங்களை எப்போதுமே கண்டு கொள்ளாது என்பது தான் உலக விதியும் வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொபிசான்ட்ஸின் மரணம் விடுதலைக்காக உலகமெங்கும் போராடி வரும் போராளிகளின் மனநிலையை பிரதிபலிக்கும். எங்கள் மீதான பழிவாங்கல் எங்கள் குழந்தைகளின் சிரிப்பாக இருக்கும் என்ற அவரின் இறுதி வரிகள், அயர்லாந்து மக்கள் அனைவருக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது தங்களுக்கு விருப்பமான சுதந்திரத்தை காண்பார்கள், எழுந்து வரும் சந்திரனை போல என்பதற்கு கட்டியம் கூறியது.
விண்ணிலிருந்து விடுதலையை
பார்ப்பேன்!
மரணத்தின் தறுவாயில், விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற தியாக தீபம் திலீபனின் வார்த்தைகள் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை உத்வேகப்படுத்தியது.
கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடாது. நான் உணர்வு இழந்தபிறகும் வாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது” என்பதை உறுதிப்படுத்தி பன்னிரு நாட்களுக்கு நீராகாரம் இன்றி தனது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்துக்காக உழைப்பேன் என்று கூறிய தியாக தீபம் திலீபன் அணைந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவர் விட்டுச் சென்ற விடுதலை நெருப்பு அணையாமல் தொடர்ந்தும் எரிந்துக் கொண்டு தான் இருக்கிறது.
1987ம் ஆண்டில் திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது தாயகத்தில் இடம்பெறுகிற அரசியல் சூழ்நிலையிலும் அவசியமான மற்றும் முக்கியமான கோரிக்கைகளாக உள்ளன.
வடகிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான நில அபகரிப்பும் மற்றும் இராணுவ மையமாக்குதலும் இன்று வரை இடம் பெற்று கொண்டு வருகிறது. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வழக்கு இன்றி அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
திலீபனின் போராட்டத்தின் முக்கிய காரணிகள் இன்றும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
திலீபனின் போராட்டம் வரலாறு மட்டும் அல்ல, இன்று நடைபெறுகின்ற தாயக நிலவரத்தில் அவசிய தேவையாகவும் அமைகின்றது. தமிழ் மக்களுக்காக போராடிய திலீபனின் விடுதலை நெருப்பு அணையாமல் தொடர்ந்தும் எரிந்துக் கொண்டு தான் இருக்கிறது.
![]()