“இறுக்கம்” ….. சிறுகதை …. சோலச்சி.

அழகிய புல்வெளிகளை ரசித்தபடி தனது காரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார் ஜோசப் பென்சிகர். சாலையின் இருபக்கமும் கிணத்து பாசனம் மூலம் விவசாயம் செய்பவர்களின் வயல்வரப்புகளில் தென்னை மரங்கள் பச்சைத் தாவணி உடுத்தியதாய் தென்னை மட்டைகளை காற்றில் பறக்கவிட்டு வரிசையாக நின்றிருந்தன. காற்றின் அலைகடலில் றெக்கை விரித்து நீந்திச் செல்லும் படகு போல் இருந்தது அவருக்கு.
சில இடங்களில் கள்ளிச் செடிகளும் கிளுவை மரங்களும் நீண்டு வளர்ந்து வயல்களுக்கு வேலியாய் இருந்தன. வேலியின் ஓரங்களிலேயே ஆனாம்பழச் செடிகளும் கொக்குச் சீத்தை கொடிகளும் மண்டிக்கிடந்தன. அதில் களியன் சிட்டுக்குருவிகளும் நாக்கனத்தான் குருவிகளும் விளையாடிக் கொண்டிருந்தன. கரட்டான்கள் தலையைத் தூக்கி சாலையைப் பார்ப்பதும் குருவிகளின் ஒலியை உள்வாங்குவதுமாய் இருந்தன.
வேலியின் சில இடங்களில் சூரப்பத்தை மண்டிக் கிடந்தது. காற்றில் தழுவி மிதந்துகொண்டு இருந்த வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தினார். வயல்காட்டின் வாசத்தை அள்ளிக்கொண்டு வந்த காற்று நாசிக்குள் நுழைந்து கிரங்கடித்தது. கண்களை மூடி மெதுவாய் காற்றை உள்ளிழுத்து மென்று விழுங்கினார். மண் வாசத்தின் சுவையானது பாஞ்சாம் பழத்தை பறித்து சுவைத்தது போல் தித்திப்பாய் இருந்தது. சுவையை அசை போட்டுக்கொண்டே கண்களை திறந்தார்.
சூரப்பத்தையில் கருப்பும் பச்சையுமாக பழங்களும் காய்களும் மீனின் கண்களைப் போல் சிமிட்டி சிமிட்டி வரவேற்றன. நாக்கில் ஊறிய எச்சிலை சப்பினார். இனிப்புடன் லேசாக புளிப்பும் கலந்தே வந்தது. சூரப்பழம் இனிப்பும் புளிப்பும் கலந்ததுதானே… புளிக்காமல் என்ன செய்யும்…? தன்னையே கேள்வியும் கேட்டுக் கொண்டார்.
சிறு குழந்தையைப் போல் ஓடிச் சென்று சூரப்பழத்தைப் பறித்து தின்றார். கொக்கி போன்ற சூர முள் அவரது சட்டையை கொத்தாக கோர்த்துக் கொண்டது. ரொம்ப நாளைக்கு அப்பறம் உன்னைய தொடுறேன்ல… அதான் பாசமா புடுச்சு இழுக்குற…. ம் உனக்கு பாசம்னா என்னனு தெரியுமா..? சொல்லி சிரித்துக்கொண்டார்.
சின்னவனாக இருந்த காலத்தில் பசங்களோடு சேர்ந்து வீடு தங்காமல் ஊர் சுற்றியது நினைவுக்கு வந்தது. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் புத்தக பையை வாசலில் இருந்தே வீட்டுக்குள் தூக்கி எறிந்துவிட்டு சூரப்பத்தை நோக்கி ஓடுவதுதான்… இருட்டும் போதுதான் வீட்டுக்கே வருவது. சூரப்பழத்தை சப்பி தின்றுவிட்டு துப்பிவிட வேண்டும். தட்டுத்தடுமாறி கொட்டையை முழுங்கினால் அவ்வளவுதான்…. எது தின்னாலும் வெளியே வராது அடச்சுக்குரும். சூரக்கொட்டைகள் துவரம்பருப்பு அளவுக்கு இருக்கும். சிலர் வேகவேகமாக திங்கிம்போது கொட்டைகளையும் சேர்த்து தின்னுருவாங்க. காலையில முக்கிக்கிட்டுதான் வெளிக்கிப் போகனும். பசங்க பல பேரு சூரப்பழம் பழுக்குற காலத்துல முக்கிக்கிட்டுதான் வெளிக்கிப் போவானுங்க. சில நேரம் வெளிக்கி வர்றதுக்குள்ள ரத்தமே வந்துரும். அம்மாடி இனிமே சூரப்பழமே திங்கக் கூடாதுடானா நெனச்சுக்குவாங்க. ஆனாலும் ஆசை விடுவதில்லை.
“விழுக்குவிழுக்குனு முழுங்குனா சூரக்கொட்ட சூத்துல மாட்டிக்காம வேற எங்க மாட்டிக்குமாம். ஊருகாட்டு பயலுகளோட சேர்ந்து ஜிங்குஜிங்குனு றெக்க கட்டி ஆடுறது. காக்கா குருவிகதான் தின்னுப்புட்டு கொட்டைய பேளுதுகன்னா. மனுசப் பயலுக நமக்குப் பொருந்துமா…. சங்கு இடிச்சு குடிக்கிறத விட நெலவாகைய இடிச்சுதான் குடிக்கனும். அப்பதான் கொடலுல இருக்க அசடு கசடுக எல்லாம் வழிச்சுக்கிட்டு வரும்..” ஜோசப் பென்சிகரின் அப்பா சொன்னதை அசைபோட்டுக்கொண்டே சூர முள்ளிலிருந்து சட்டையை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இண்ட முள்ளுல மாட்டிக்கிறதும் சூர முள்ளுல மாட்டிக்கிறதும் ஒன்னுதான். கொஞ்சம் தடுமாறினாலும் சட்டையோடு சேர்ந்து சதையையும் பதம் பார்த்துவிடும். அதனால் முள்ளில் குத்திக்காமல் பழத்தைப் பறிப்பதற்கும் ஓர் அனுபவம் வேண்டும். வேகமாக எடுத்தால் சட்டை கிழிந்துவிடும் அல்லது நம்மையும் மீறி காயத்தை
உண்டாக்கிவிடும். சூழ்நிலையை உணர்ந்து பின்னிக்கொண்ட வலையை அறுந்து போகாமல் எடுப்பதுபோல் மெதுவாக அதன் பிடியை விடுவித்தார்.
”இந்த மாதிரி பழம் தின்னு எவ்ளோ நாளாச்சு” தின்று கொண்டே வேலியை நோட்டமிட்டார். அருகில் படர்ந்திருந்த பிரண்டைக் கொடிகள் “என்னைப் பார்க்காமல் போவது நியாயமா….” என்பது போல் பச்சைக் கொழுந்துகளைப் வேலியில் பரவச் செய்து மெல்லிய காற்றில் அசைந்தாடின.
பிரண்டைக் கொழுந்து துவையல் செய்து சாப்பிட்டால் பசியே எடுக்காதவருக்கும் நல்ல பசி எடுக்கும். வயித்துப் புண்ணுக்கு நல்லது. எப்போதும் சாப்புடுறதவிட நாலு வாய் சோறு அதிகமா சாப்புடலாம். உப்பும் காரமும் புளிப்பும் கனக்கச்சிதமா சேர்த்து பிரண்டைக் கனுவுல உள்ள நாரு உரிச்சுட்டு எண்ணெய்விட்டு வதக்கி அம்மில அரச்சு அம்மா கொடுக்கும்போது இன்னும் கொஞ்சம் துவையல் தரமாட்டாங்களா என ஏங்க வைக்கும் அளவுக்கு அதன் ருசியும் மணமும் எச்சில் ஊற வைத்து விடும்.
பிரண்டைக் கொழுந்தைக் கிள்ளிப் பிடிங்கினார். பிடுங்கும்போதே படர்வதற்கு ஏதுவாக அதில் ஒட்டியே வளர்ந்திருக்கும் சீனிக்கொடியை கிள்ளி கீழே போட்டார். ஒரு கைப்பிடி அளவுக்கு கொழுந்து பிரண்டைகளைப் பிடிங்கிக் கொண்டார். நாலஞ்சு பிரண்டைய பிடுங்கி ஒரு கட்டாக கட்டி இருபது ரூவானு டவுனுப்பக்கம் விக்கிறாங்க. அதுவும் முத்தலும் தொத்தலுமா… கிடைக்காத குறைக்கு அதயும் வாங்கித் திங்க வேண்டியிருக்கு. இனிமே வண்டிய எடுத்துக்கிட்டு காடுகரைனு நேரம் கிடைக்கும்போது இப்புடி வந்துறனும்… மனம் ஏதேதோ அசைபோடத் தொடங்கியது.
”ஆசை தீர சூரப்பழமும் தின்னாச்சு. தொவையலுக்கு பிரண்டைக் கொடியும் கிள்ளியாச்சு…. கையில் வைத்திருந்த சூரப்பழத்தை ஒவ்வொன்றாக வாயில் போட்டு சப்பிக்கொண்டே காருக்கு வந்தார்.
பெரிய மூட்டை ஒன்றைக் கட்டி அழுத்திக் கொண்டு வியர்வைத் துளிகளில் நீராடியபடி சைக்கிளில் வந்துகொண்டிருந்தவரிடம் நண்பரின் ஊரான ஓச்சம்பட்டிக்கு எவ்ளோ தூரம் போகனும்னு கேட்கலாமா..? வேணாமா..? என மனக்கணக்கு போட்டார். வெயிலுல வேர்த்து விறுவிறுக்க வர்றவர்கிட்ட கேட்டா சொல்லுவாரா மாட்டாரா என்பதுதான் தயக்கத்திற்கான காரணமாக இருந்தது. என்ன ஆனாலும் சரி… கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.
சைக்கிளில் வந்தவர் காருக்கு அருகில் வந்ததும் நிறுத்திவிட்டு “என்ன சார்… அங்கேருந்தே பாத்துக்கிட்டு வர்றேன்.. என்னம்மோ தயங்கி தயங்கி நிக்கிறிகளே. வண்டி ஏதாச்சும் மக்கரு பண்ணுதா.. வேணுமுன்னா ஊருக்குள்ள போயி வண்டிக்கி பஞ்சரு பாக்குறவுங்கள வரச் சொல்லவா…?” அவர் கேட்டதும், சில விநாடி என்ன சொல்வதென்றே தெரியாமல் அவரை வியக்க பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசப் பென்சிகர்.
டவுனுக்குள்ள விழுந்து கெடந்தா ஒரு பய சீண்ட மாட்டான். ஆபத்துனு கத்துனாக்க சத்தம் போட்டு நிக்கிறதுக்குள்ள கதவ பட்டுபட்டுனு சாத்திக்கிவானுக. உதவி ஒத்தாசைக்கி ஒரு பய நிக்க மாட்டான். மொகத்துக்கு மொகம்தான் கண்ணாடினு சேந்தா சேந்த பக்கமுனு ஆளுபாத்து சேந்துக்குவானுக…. ஏதேதோ யோசனையில் மூழ்கினார்.
“என்னசார்… வேலமெனக்கெட்டு மூட்டையோட நிக்கிறேன். ஏம்மூஞ்சியவே வெறிக்கப் பாத்துக்கிட்டு இருக்கீக..”
“ஒன்னுல்லண்ணே…. ஓச்சம்பட்டிக்கி இப்புடியேதானே போகனும். இன்னும் எவ்ளோ தூரம் போகனும்…
![]()
“நானு அந்தப் பக்கமாதான் போறேன். நாலு மைலு போகனும். அந்த ஊருக்கு முன்னாடிதான் நம்ம ஊரு. நேராவே போங்க. கெழக்கால திரும்புனா திருமயத்துக்குப் போயிரும். மேற்கால திரும்புனா பனையப்பட்டிக்குப் போயிரும். தெக்கால போற ரோட்டுலயே போங்க… ஒங்க வேகத்துக்கு நம்ம குதிரய மிதுச்சு ஓட்டி வர முடியாது….” சிரித்துக்கொண்டே சைக்கிளை மெதுவாக அழுத்திக்கொண்டு கிளம்பினார்.
வழியக்க வந்து உதவி செய்யிற பழக்கம் கிராமத்துல இன்னும் உயிரோட்டமா இருக்கதாலதான் இந்த மண்ணும் மரமும் வாசமா இருக்கு… கிராமத்துல பொறந்த நானு எவ்ளோ மாறிட்டேன். ஆனா இங்க உள்ளவங்க இன்னும் வெள்ளந்தியாதானே இருக்காங்க… யோசனையில் கையிலிருந்த சூரப்பழங்களை தின்றுவாறு காரை ஓட்டிக்கொண்டு சென்றார் ஜோசப் பென்சிகர்.
கொஞ்ச தூர பயணத்திற்கு பிறகு சாலையின் அருகே இருந்த குளத்திற்கு, மேற்கிலிருந்து சிறு ஓடை ஒன்று மழைநீர் வருவதற்காக இருந்தது. அந்த ஓடையானது குழந்தைக்கு தலைமுடியை வெட்டி அழகுபடுத்தியது போல் இருந்தது.
சாலையின் கிழக்குப்பக்கம் இருந்த கண்மாயில் ஒராள் மட்டத்துக்கு அதிகமாகவே தண்ணீர் கிடந்தது. அதில் அய்ந்தாறு கொக்குகள்
மீன்களை வேட்டையாட தவம் இருந்தன. வாட்டமாய் இருந்த அவற்றின் முகம் வேட்டைக்கு எதுவும் சிக்கவில்லை என்பதையே காட்டியது. கண்மாயில் தண்ணீரைப் பார்த்ததும் காரை ஓரமாய் நிறுத்தினார். சிறிது நேரம் சாலையில் நின்றபடி கண்மாயை நோட்டமிட்டார். “எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரு தண்ணிய அள்ளி ஒரு மொடக்கு குடிச்சுட்டு வாடா… உடம்புக்கு ஒன்னும் பண்ணாது….” சின்ன வயசில் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.
“ஊரணி தண்ணியாருந்தா ஒரு மொடக்கு என்ன… வயிறு முட்ட அள்ளிக் குடிச்சுட்டு வரலாம் இது கண்மாய் தண்ணில…. இருந்தாலும் பரவாயில்ல. காலு கைய கழுவிட்டு வந்தாலே சொகமாத்தான் இருக்கும்…..” கண்மாய்க்குள் நடக்க ஆரம்பித்தார்.
”க்கொவ்… க்கொவ்…. க்கொவ்…..” தண்ணீரில் இருந்த கொக்குகள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டன. சிறகுகளை வேகமாய் அடித்துக்கொண்டு இரண்டு கொக்குகள் மட்டும் பறந்து சென்று கரையில் இருந்த நாவல் மரமொன்றில் உட்கார்ந்தன. கொக்குகள் பறப்பதைப் பார்த்து சின்னப்புள்ளையைப் போல் கொக்கு முத்துப் போடு… கொக்கு முத்துப் போடு என இரண்டு கை விரல்களையும் தேய்த்து மகிழ்ச்சியடைந்தார்.
பத்திரப்பதிவு துறையில் சார்பதிவாளராக வேலை கிடைத்த நாள்முதல் நகரவாசியாகவே மாறிப்போயிருந்தார் ஜோசப் பென்சிகர். எப்போதாவது தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வதுண்டு.
“அப்பா எனக்கு இந்த ஊரே புடிக்கலப்பா. எங்கிட்டுப் போனாலும் ஒரே நாத்தமா நாறுது. எந்த தெருவுக்குப் போனாலும் கூட்டமாவே இருக்கு. வெளையாடக் கூட எடமில்ல. பேசாம நம்ம ஊர்லயே வீட்டக் கட்டிக்கிட்டு இருந்துருவோம்பா. கெவுர்மெண்ட்டு ஸ்கூல்லதான்டா நானெல்லாம் படிச்சேனு சொல்லி இங்க சேத்துவிட்டீக. இங்க என்னடானா வெளயாடவே எடமில்ல. வீட்டுக்கு வந்தாலும் தெருவுலதான் வெளையாடனும். ஒரு வெளையாட்டு ஆடுறதுக்குள்ள வண்டிக டர்…ரு…புர்…ருனு வந்துருது…” மகன் செரால்டு சொன்னது இப்போதும் மனசுக்குள்…
“நாமல்லாம் சின்னஞ்சிறுசா இருக்கப்ப.. ஊருகாட்டுலதான் ஓடி ஆடி திருஞ்சோம். லீவு விட்டா போதும் கண்மாய் தண்ணிய உண்டு இல்லனு ஆக்கிப்புடுவோம். எத்தனையோ முறை கண்ணு செவந்து போறவரைக்கும் தண்ணிக்குள்ள ஆட்டம்போட்டுருக்கொம். இதையெல்லாம் நம்ம புள்ளைக ஒருநாளும் செஞ்சது இல்லயே…. துண்டு கொண்டு வந்துருந்தா குளிச்சுப்புட்டு சாவகாசமா போயிருக்கலாம்… அடுத்த முறை வரும்போது எல்லாத்துக்கும்
தயாரா வருவோம்….” கண்மாய் தண்ணீரை நெருங்கிக்கொண்டு இருந்தார் ஜோசப் பென்சிகர். மீதமிருந்த கொக்குகளும் படபடத்து பறந்து சென்று கண்மாயின் இன்னோரு இடத்தில் அமர்ந்தன.
”என்னத்…தம்பி.. வெளிய போனீகளா. குழாச்சட்டையக் கழட்டிப்புட்டு போக வேண்டியதுதானே.. ம்.. சரிசரி… அந்தப்பக்கம் சவதியா கெடக்கும். வளச்சுக்கிட்டு இந்தப்பக்கமா வாங்க…” அழுக்கு படிந்த நாலுமுழ வேட்டி மட்டுமே அணிந்த பெரியவர் ஒருவர் சொல்லிக்கொண்டே கரையிலிருந்து கண்மாய்க்குள் இறங்கினார்.
இந்த வேட்டிய எத்தனதடவ அலசுனாலும் வெளுக்கப் போறதில்ல. இருக்க வரைக்கும் கட்டிப்புட்டு பிஞ்சுபோன காலத்துல கோமணத்துக்கு கிழிச்சுக்க வேண்டியதுதான்… முணுமுணுத்துக்கொண்டே நாலுமுழ வேட்டியை அவிழ்த்து தரையில் வைத்தார். பெரியவர் சொன்னது மாதிரியே குளிக்கிற இடத்துக்கு வந்து சேர்ந்தார் ஜோசப் பென்சிகர்.
கோவணத்தை ஒரு இழுஇழுத்து சரிசெய்து கொண்டே தண்ணீருக்குள் இறங்கினார் பெரியவர். இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கியதும் விருட்டுவிருட்டு என இடது கையால் கால் கழுவிக்கொண்டார்.
என்ன..இந்த பெரியவரு இப்புடி பண்றாருனு நினைக்கத் தோன்றினாலும் அட…இது தண்ணியோட தண்ணியா கலந்து மீனு நண்டு தின்னுரும். கெடதண்ணியாக் கெடந்தாகூட ஏதாச்சும் சொல்லலாம். மடை தெறந்தா அதுபாட்டுக்குப் அரிச்சுக்கிட்டுப் போயிரும். இது என்ன பெரிய தேச குற்றமா..? ஆசுபத்திரி கழிவு, ஒயருகியருனு, பேப்பரு கீப்பருனு கண்ட கழிவுகள கொண்டு வந்து கொட்டி ஊருநாட்டயே கெடுத்துப்புட்டானுக. டவுனுக்குள்ள இருக்க கொளம்குட்டை எல்லாத்தையும் குப்பை மேடா ஆக்கிப்புட்டானுக… நினைக்கவே வேதனையாக இருந்தது.
இடுப்பளவு தண்ணீருக்குள் நின்று கோவணத்தால் முதுகை தேய்த்து நான்கைந்து முறை தண்ணீரில் முக்கிமுக்கி எழுந்தார் பெரியவர். மாம்பழ சூஸைப் போலிருந்த தண்ணீரை அள்ளி வானத்தைப் பார்த்து வாய்க்கொப்பளித்து கீழே துப்பினார்.
”தம்பி … கோமணத்துல இப்புடி முதுக தேக்கிம்போது ஏம்புட்டு வூட்டுக்காரியே தேச்சுவிடுறமாறி இருக்கும். ம்… இப்புடி குளிக்கிற சொகம் ஒங்க டவுனுல கெடைக்குமா..? நாலு செவத்துக்குள்ளயே டப்பாவ வச்சு குளிக்க பழகிக்கிட்டீங்க…” என்று சொன்ன பெரியவரையே பார்த்தார் ஜோசப் பென்சிகர்.
“நானு டவுனுக்காரனு இவருக்கு எப்படி தெரியும்….” என்று யோசிப்பதற்குள் பெரியவர் தொடர்ந்து பேசினார்… ஏந்தம்பி… பிளசருல ரொம்ப தொலைவுலருந்து வர்றீகளோ…”
“ஆமங்கய்யா…. இங்கதான் பக்கத்துல கூட்டாளிய பாக்கப் போகனும்”
“ஒன்னாப் படிச்சிகளோ… இருக்கட்டும்…இருக்கட்டும்” தானாகவே பேசிக் கொண்டார் பெரியவர்.
முகம் கழுவலாம் என்று தண்ணீருக்குள் இறங்கினார் ஜோசப் பென்சிகர்.
”குழாச்சட்ட நனையாம கழட்டி வச்சிட்டு கால கழுவிட்டு போட்டுக்கங்க தம்பி. இங்க எந்தப் பொம்பளைக இருக்காக….க்ககக்ககக்…” என பொக்கவாயைத் திறந்து சத்தமாய் சிரித்த பெரியவரைப் பார்த்து ஜோசப் பென்சிகரும் பதிலுக்கு சிரித்துக் கொண்டார்.
”அய்யா… நா… வெளிய போகல. கம்மாத் தண்ணிய பாக்கவும் ஆசையா இருந்துச்சு. அதான் வந்தேன்” ஜோசப் பென்சிகரின் பேச்சு பெரியவரின் உள்மனசை ஏதோ செய்தது.
”ம்….மண்ணுவாசன ஒங்கள இழுத்துருச்சுனு சொல்லுங்க. இந்த ஊர்ல மொத்தம் ஏழு கம்மாயி இருந்துச்சு. அதுல இப்ப நாலுதான் தப்பிச்சு இருக்குது. வர்ற வழியில பஞ்சாயத்து ஆபிசு கட்டடம் பாத்துருப்பீகளே. அது கூட கம்மாயிலதான் கட்டிருக்கு… ம் காசுக்கார பயலுக பட்டிக்காட்டயும் விட்டு வைக்கல.. கொல்லக்காடு பூரா கல்ல நட்டுப்புட்டானுக.. போற வழில பாப்பீக….” சொல்லிக்கொண்டே கோவணத்தைப் பிழிந்து உதறி மீண்டும் கட்டிக்கொண்டு தண்ணீரை விட்டு வெளியேறினார்.
தவளை ஒன்று தரையிலிருந்து தாவி டொபுக்கென்று தண்ணீருக்குள் குதித்தது. அதைப் பார்த்ததும் ஜோசப் பென்சிகர் முகம் மகிழ்ச்சியில் சிவந்தது. கண்மாயில இந்தக் கரையில முக்குளிச்சு அந்தக் கரைக்கிப் போயிருக்கேன். அதெல்லாம் ஒரு காலம்.. குடுகுடுனு ஒடிருச்சி.. கையால் தண்ணீரை அள்ளி இரைத்தார் ஜோசப் பென்சிகர். மிதந்து கொண்டிருந்த தவளை மீண்டும் முக்குளித்தது. ”வந்த எடத்துல நான்பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கேன். கோவிச்சுக்காதீக தம்பி”
”அப்புடியெல்லாம் இல்லங்கய்யா” பெரியவரை சாந்தப்படுத்தினார்.
”சின்னப் புள்ளயில எங்க ஊரு கம்மாயிலயும் அயிர மீனும் கெண்டமீனும் பரியப் போட்டு அள்ளுவோம். ஊரே கூடி அழிமீனு புடிக்கும்போது காலுல ஏதோ ஒன்னு பெரிசா மாட்டிக்கிட்டு முண்டவும் விராமீனுனு நெனச்சு தண்ணிக்குள்ள கையவிட்டு புடுச்சாக்க அது பெரிய தவள. ஏன்டா மொனத்தவளய புடுச்சு வெளயாடுறதுக்கு இதுதான் நேரமானு எங்க அம்மா கத்தவும் எல்லாரும் என்னய திரும்பிப் பாத்தப்ப என்னோட நமட்டுச் சிரிப்ப நெனச்சா இப்பவும் சிரிப்புதான் வருது” தனக்குள் எண்ணி சிரித்துக் கொண்டார் ஜோசப் பென்சிகர்.
”கண்ணங்கரேருனு இருக்க ஒரு சிலேப்பி ஒரு குடும்பத்துக்கு போதுங்கய்யா. இப்ப தண்ணிய பாக்குறதே அரிதா இருக்கு. எங்க ஊருக் கம்மாயில பெரண்டக் குஞ்சும் தவளையும்தான் கெடக்குது” சொல்லிக்கொண்டே கால் சூவில் ஒட்டியிருந்த சவதியை தண்ணீரில் கழுவினார் ஜோசப் பென்சிகர்.
ம்…க்கும்…….” தொண்டையை இருமி பெரும்மூச்சு விட்டபடி “என்ன எழவுல ஆளுறாங்களோ தெரியல தம்பி. கம்மாக் கரை கெட்டியா இருக்கனும்னுதானே மரம்செடி கொடியெல்லாம் கரையில மண்டிக் கெடக்குது. கம்மாய வெட்டுறோம்னு கரயில இருந்த பனமரத்த பூராவும் வெட்டிப்புட்டானுக. செடிசெத்தக்கிள்ள கெடந்த உடும்பு மொச எல்லாம் எங்கிட்டுப் போச்சுகனே தெரியல. கரயில இருந்த மரத்துகள்ல அவ்ளோ குருவிக அடஞ்சு இருந்துச்சு. அதுக போன தெச தெரியல. கொளத்து மண்ண வெட்டி கடத்துனா. அயிரதான் தங்குமா. இல்ல ஆமதான் தங்குமா. நத்தையும் நண்டும் கொளத்துக்குள்ள தடவுனா அம்புட்டு வரும். நண்டப்புடுச்சு இடிச்சு ரசம் வச்சுக் குடிச்சா, அம்பூட்டுச் சளியும் வெளிய வந்துரும். கம்மாய தூர்வாருறமுனு பெரிய பெரிய வண்டிய விட்டு நோண்டி எல்லாத்தையும் ஓழிச்சுக் கட்டிப்புட்டானுக தம்பி” சொல்லிக்கொண்டே கரையில் ஏறினார் பெரியவர்.
கண்மாய் கரையில் நின்றிருந்த ஒன்றிரண்டு மரங்களும் ஜோசப் பென்சிகரை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தது. வயலுல வரப்பு வெட்டுற மாறி கரையில மரஞ்செடிகொடி இல்லாம எல்லாத்தையும் வெட்டிப்புட்டு அம்மணக்குண்டியாட்டம் நிக்கிற அலங்கோலத்த எப்புடி ரசிக்கிறது..? வர்ற வழியில கம்மாக்கரை பூராவும் பனமரம் இருக்குமுனு சொல்லியிருந்தானே… ஒன்னத்தக் கூட காணோம். தூரந்தொலைவுலதான் ஒன்னுரெண்டு நிக்கிது… சேலையால் மீன்பிடிப்பதுபோல் மனசை துளாவினார் ஜோசப் பென்சிகர்.
நாலு முழ வேட்டியை உதறி கட்டிக்கொண்டு கரையில் ஏறி நீண்ட தூரம் போயிருந்தார் பெரியவர். அவரையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்த ஜோசப் பென்சிகர் ஒட்டுமொத்தமாய் எதையோ இழந்துவிட்டதாக உணர்ந்தார். களை எடுத்த வயல்போல் கண்மாய்க்கரை இருந்ததை எண்ணி நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்த ஜோசப் பென்சிகரை அங்கிருந்த கொக்குகள் மிரட்சியோடு பார்த்துக்கொண்டு இருந்தன.
மாட்டுவண்டி ஒன்று காருக்கு அருகில் வந்துகொண்டிருந்தது. விலகுவதற்கு இடமில்லாமல் ”யாருங்கய்யா காருக்குள்ள. காரக் கொஞ்சம் நவுத்திக்கங்க” கத்திக்கொண்டே இருந்தார் மாட்டுவண்டிக்காரர். சத்தம் கேட்டு கண்மாயிலிருந்து வேகமாய் சென்ற ஜோசப் பென்சிகர் பாலத்தின் ஒரு ஓரமாய் காரை ஓரங்கட்டினார். மாட்டுவண்டி நகர ஆரம்பித்தது. ———–*******———
![]()
கிராமத்து வாழ்க்கையின் மாற்றங்களை எதார்த்தமாகவும், நிஜ வாழ்க்கையின் எதிரொளிப்பாகவும்,மனிதனால் மாறுபடும் இயற்கையின் மன வருத்தத்தையும் மிக அழகாகவும் சொல்கிறது ‘இறுக்கம்’..
மிகச் சிறப்பான இது போன்ற படைப்புகள் வெளிவர வாழ்த்துக்களும்., வணக்கங்களும்🙏🙏🙏