“செல்வியின் செவலை” …. சிறுகதை …. சங்கீதா.

அந்த செவலைக் காளையின் இடது காதில் ஒரு பெரிய மச்சம் இருக்கும். அது அதிர்ஷ்ட மச்சம் ஆகும். செல்விக்கு செவலை என்றால் உயிர். உயர்ந்த திமிலுடனும், வைரம்பாய்ந்த உடலுடனும் போர்வீரன் போன்று தோற்றமளிக்கும் அந்தக் காளை.
பெயருக்கேற்றார்போல் செவலை செம்மண் நிறத்திலும்,ஆங்காங்கே அழகழகான மறைகளைப் பெற்றும், காளைகளில் வீரம் செறிந்ததாகவும், மிடுக்காகவும் காணப்படும்.
கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வீட்டில் செவலையை பராமரிப்பது தான் செல்வியின் வேலை.
செல்வி அதிகாலையிலேயே எழுந்து, வாசலில் சாணம் தெளித்து,கோலம் போட்டு நிமிர்கையில் கிடாப்பிற்குள் உள்ள கோழிகள் கூவதற்கு எட்டிப் பார்க்கும்.செல்வியின் ஓசையில் எழுந்து விடுவான் செவலை.
அதன் பிறகு செல்வி, செவலையின் அருகில் சென்று அதன் முகத்தை இரண்டு மூன்று தடவை தடவி கொடுத்து முதுகில் அன்பாய் தட்டுவாள். அப்பொழுது செவலையின் முகத்தை பார்க்க வேண்டுமே…சந்தோஷத்தின் எல்லையில் நின்று தலையை சிலுப்பும் பொழுது, செவலையின் கழுத்தில் செல்வின் அப்பா சோலைமுத்து கட்டிய மணியின் ஓசை ஊரையே எழுப்பி விடும்.
அதன் பிறகு செவலைக்கு வேண்டிய கடலை புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என பல்வேறு தவிட்டு வகைகளைப் போட்டு செவலையை நன்கு கவனிப்பாள் செல்வி. செவலையும் செல்வியின் அன்புக்குக் கட்டுப்பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பை போன்று வீரத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து செல்விக்கு தாளம் போடும்.
பிறகு செல்வியின் தந்தை சோலை முத்து காளையை குளிப்பாட்டுவார். அதற்கு அலங்காரம் எல்லாம் செல்வி தான். நெற்றியில் குங்குமமும்,உடலில் சந்தன வீச்சுக்களும் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் செண்டிப் பூ மாலையுமென அலங்காரம் முடித்து செவலையின் கயிற்றைப் பிடித்து செல்வியின் கயிற்றைப் பிடித்து செல்வி வலம் வருகையில் ஊரே வேடிக்கைப் பார்க்கும்!
“அப்படி என்ன இந்த காளை மேல உனக்கு இவ்வளவு பாசம்?” என்று அங்கலாய்ப்பர் சிலர்.. “செல்வி, கல்யாணம் ஆகி வேறு இடத்துக்கு போறப்ப கூட உன்கூடசெவலையையும் கூட்டி போயிருவியா என்ன?”என்று கிண்டல் அடிப்பர் சிலர்.அனைவரின் கேள்விகளுக்கும் “ஆமாம்” என்றும் “அப்படியேதான்!” என்றும் பெருமையுடனும் மகிழ்ச்சி பொங்கவும் கூறி வென்றிடுவாள் பேச்சில்…
செல்வியின் வயலில் சோளமும், நெல்லும், தென்னந்தோப்பு என சொல்லக்கூடிய அளவிற்கு ஓரளவு விவசாயம் நடைபெற்றது.சோள வயலில் சோளப் பெயர் ஆளுயர நிற்கும்.பக்கத்திலேயே நெல் வயல் பசுமை புரட்சியை நினைவூட்டும். நீண்டு நெடிதுயர்ந்த தென்னைகளும் வரவேற்பது போன்று வணக்கம் சொல்லும். மதம் கடந்து நம் அனைவரையும் இணைக்கும் நம் நாடு போன்று காற்று இவை அனைத்தையும் பாரபட்சம் இன்றி தடவிச் செல்லும்.
ஊர் எல்லையில் இருக்கும் சோள வயலில் கயிற்றினை இரண்டு மூன்றாக நீளமாக இணைத்து பெரிய கம்பு ஒன்றில் செவலையை கட்டி விட்டாள் செல்வி. ஏக்கமாய் பார்த்த செவலையிடம் செல்வி ஆறுதலுடன், “கல்லூரி முடிந்து வேறு என்ன வேலை? பறந்து ஓடோடி வந்து விடுவேன் உன்னை பார்க்க!” என்று கண்களில் பரிவுடன் அவள் பேசும் மொழி செவலைக்கு மட்டுமே புரியும். ஆதலால் செவலையும் சமாதானத்துடன் செல்வியை வழி அனுப்பும். செல்வி வீட்டிற்கு பறந்தோடி கல்லூரிக்கு மின்னலாய் புறப்பட்டு சென்று விடுவாள். தினமும் இதுதான் செல்வியின் நடைமுறை,நடவடிக்கை எல்லாம்!
‘ஜல்லிக்கட்டு’ என்றால் அதிக மகிழ்ச்சி அந்தப் பகுதி மக்களுக்கு. ஊரே திருவிழா கோலம் பூண்டுவிடும்.ஊர் ஊராய் வண்டிகள் கட்டிக்கொண்டும், கார்கள், லாரிகள், பைக்குகள் என சுற்றுப்பட்டி நகரங்களும் வந்துவிடும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு.மேலும் ஐஸ் வண்டியில் தொடங்கி, தர்பூசணி, சாத்துக்குடி திராட்சை, பலகார கடைகள் என வியாபாரம் களைகட்டும்.மக்கள் வெள்ளம் திரண்டு திருவிழா கோலம் கொள்ளும் அவ்வூர். நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களில் இருந்தும் காளைகள் வரும்.காளைகளை அடக்கும் இளைஞர்களுக்கு பீரோல், செப்புக்குடம், சைக்கிள், பைக்,தங்க நாணயம் என ஏராளமான பரிசுகளும் வழங்கப்படும்.
செல்வியின் செவலையோ ஒவ்வொரு வருடமும் பரிசுகளை வாங்கி குவிக்கும் திறமை உடையது.அத்தகைய சிறப்பு பெற்ற செவலையின் கயிற்றைப் பிடித்து ஊரைச் சுற்றி வருவதில் தான் செல்விக்கு அளவில்லா பெருமை.
செல்விக்கு 21 வயது நடக்கும்பொழுது திருமணம் பற்றிய பேச்சு அடிபட்டது. ஆனால் செல்வி தான் படித்து ஆசிரியை வேலைக்குச் சென்ற பின்பு தான் திருமணம் என்று பிடிவாதமாய் இருந்து கொண்டு ஆசிரியர் பட்டமும் பெற்று பக்கத்து ஊரிலேயே பள்ளி ஆசிரியையாக தனது பணியை செவ்வனே செய்து கொண்டு கொண்டு வந்தாள்.
ஆசிரியப் பணியின் மகத்துவத்தை செல்விக்கு அறிய வைத்தது அவளது தொடக்கக்கல்வி ஆசிரியை திருமதி. சீதாதேவி ஆவார். சீதாதேவி ஆசிரியை செல்வியிடம் சிறுவயதில் “உனது எதிர்கால ஆசை என்ன?” என்று வினவிய
போது, “நான் ஆசிரியை ஆவேன்” என்று கூறியது, இன்றும் செல்விக்கு பசு மரத்தாணி போல் பதிந்த விஷயம்.
வேலையும் கிடைத்தவுடன் செல்வியின் பெற்றோர் தங்களுக்கு தன் பிள்ளையின் சம்பளத்தில் வாழலாம் என்ற எண்ணத்தை விட நல்ல குடும்பத்தில் செல்வியை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. எனவே பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடியதில் அமைந்தான் செல்வராசு.
கல்வியில் ஒரு டிகிரியை மட்டுமே கொண்டு விவசாயத்தில் அனுபவ பி.எச்டியையும் தாண்டி இருப்பவன் செல்வராசு.தனது வயல்களை திறம்பட பராமரிப்பதுடன்,அண்டை அயலாரின் வயல்களுக்கும் இயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து என அதிகமான மகசூலுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்து தொண்டுள்ளம் மிக்கவனாகவும் இருந்து வந்தான்.
அதிக தொலைவில் செல்வராசுவின் ஊர் அமைந்திருப்பினும் செல்வராசுவின் குணங்களைக் கேட்டு உடனே சம்மதித்தார் செல்வியின் தந்தை சோலைமுத்து. ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என செல்வியின் சம்மதத்துடன் நடந்தேறியது திருமணம்.
திருமணத் தேதி குறித்த நாள் முதலே செல்வி மனமுடைந்து காணப்பட்டது செல்விக்கும்,செவலைக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
செவலையிடம் சென்று நிற்கும் போதெல்லாம் செல்வி எதையெதையோ நினைத்துக் கொண்டும், வழிந்தோடும் கண்ணீரை துடைத்துக் கொண்டும் நிற்பாள். இதை பார்த்த செவலையும் வருத்தமாய்க் காணப்படும்.
அதன் பின் திருமணம் முடிந்து செல்வி புகுந்த வீடு செல்லும் முன் செவலைக்கு அருகில் நின்று கொண்டிருக்க, விருந்தினர் அனைவரும் செல்வியைப் பார்த்து “இது என்ன புது கதையா இருக்கு” என்ற விசாரித்துக் கொண்டிருக்க செல்வியின் பெற்றோர் மட்டும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமாதானம் சொல்லிஅனுப்பினர் கணவன் வீட்டிற்கு…
செல்வி சென்று ஆறு மாத காலமும் ஓடிவிட்டது.செவலையோ ஏதோ ஒரு கவலையுடனும், ஏக்கத்துடனும், சரியாக வைக்கோல் புண்ணாக்கு சாப்பிடாமல் நாட்டு மாடுகளைப் போல ஆயிற்று. திமில் மட்டுமே அது பாய்ச்சல் மாடு என்பதை உணர்த்தியது. ஆனால் செல்வி தினமும் போனில் பெற்றோரிடம் செவலையை விசாரித்துக் கொண்டே இருந்தாள்.
வளைகாப்பு முடிந்து ஆண் குழந்தையுடன் காரிலிருந்து வந்திறங்கிய செல்வியைப் பார்த்த செவலைக்கு மகிழ்ச்சி தாளவில்லை.வாசல்புறம்வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டே இருந்தது.செல்வியும் கொல்லைப்புறமும் முதலில் செவலையைத்தான் பார்த்தாள்.
எப்பொழுதும் போல் அருகில் சென்று முகத்தைத் தடவியவுடன் கண்ணீர் துளிர்த்து செவலைக்கு.குழந்தையையும் செல்வியையும் மாறி மாறிப் பார்த்து வேகமாய் தலையை ஆட்டி தனது அன்பை வெளிப்படுத்தியது.
அதன் பிறகு இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் செல்வி கணவன் வீடு சென்ற போது செவலையிடம் பிரியாவிடை கொடுத்து சென்றாள்.செல்வி வீட்டை விட்டு சென்ற பின் செவலையோ மீண்டும் பழைய நிலைக்கு உள்ளானது.செல்வியின் பெற்றோர் அதிகப்படியாக கவனித்தும் செவலை உடல் மெலிந்தே காணப்பட்டது.
![]()
மீண்டும் இரண்டு வருடம் கழித்து செல்வியும் அவளது கணவனும் மற்றுமொரு ஆண் குழந்தையுடனும், நடக்கும் தம்பியுடனும் வீட்டிற்கு வந்தனர்.
செவலைக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.செவலையும் செல்வியின் மூத்த மகன் குமரனைப் பார்த்து தலையாட்டும், விளையாடும்,மகிழ்ச்சியாக இருக்கும்.இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர்.
செல்வின் கணவன் செல்வராசுவும் மாடுகளுடன் பழகியவன்தான்.அதனால் செவலையிடம் இயல்பாகவே பாசத்துடனும்,அதனை நன்கு கவனித்துக் கொள்பவனாகவும் இருந்தான்.
அந்த விடுமுறை காலத்தில் தான் ஜல்லிக்கட்டு அவ்வூரில் நடக்க இருந்தது.எப்பொழுதும் நடைபெறும் பெரியகுள மைதானத்தில் ஏற்பாடுகள் பலமாக இருந்தன.செவலையோ உடல் முழுவதும் சந்தனம்,குங்குமம் என மங்களகரமாக்கப்பட்டு, கழுத்தில் பெரிய ரோஜாமாலையுடனும், பெரிய நெற்றியில் குங்குமப்பொட்டும் இட்டு, காலில் சலங்கையுடனும் காணப்பட்டது.
நன்கு நிமிர்ந்த திமிலுடனும்,உறுதியான உடற்கட்டுடனும், நெற்றியை முழு நிலவைக் கொண்டு நிரப்பியும்,இரு கண்களை ராமனின் வில்லைப் போன்று உறுதியாக வெளிப்படுத்தியும் மாவீரனாக நின்றது செவலை.மேலும் இன்னும் செவலைக்கு அதிகமாக அழகூட்டியது அதன் செறிந்த கொம்புகளில் சுற்றப்பட்டு இருந்த பட்டுத்துண்டு. அதன் கழுத்தில் இருந்த மணி செவலையின் வெற்றியை வீட்டிலேயே அறிவித்தது.
செவலைக்கு அலங்காரங்கள் முடிந்த நிலையில் செல்வியோ அதிக பூரிப்புடன், ஆரத்தி கரைத்து,சூடம் காண்பித்து, திருநீறு குங்குமம் இட்டு அனுப்பி வைத்தாள் ஜல்லிக்கட்டிற்கு…
செவலையை அனுப்பி வைத்துத் திரும்புகையில் ஊருக்குச் சென்றிருந்த செல்வின் கணவன் செல்வராசுவும் வந்து விட்டான். வியர்த்தும் களைத்தும் வந்த கணவனிடம் வேகமாக தட்டில் ஐந்து இட்லிகளை சட்னியுடன் வைத்து
மறுத்து விடுவானோ என்று எண்ணி உடனே சாப்பிடச் சொன்னாள் செல்வி.செல்வராசுவும் வேண்டாமென்று மறுக்க முதலில் நினைத்து பிறகு மனைவியின் முகத்தில் தெரியும் சந்தோஷத்திற்காகவே வேகமாக சாப்பிட்டான்.குழந்தை குமரனுக்கும் இட்லியை ஊட்டிக்கொண்டும், மனைவியிடம் வீட்டு விவசாயம், பெற்றோர்,பயணம் பற்றி பேசிக்கொண்டும் உண்டதில் வயிறும் மனமும் நிறைந்தது அவனுக்கு.பிறகு ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு அவசரமாக கிளம்பி செல்வியிடம் விடைபெற்று சென்றான் செல்வராசு.
ஆண்டாள்புரம் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு ஊர்க்காளைகளும் பேர், பெருமை சொல்லப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.அவ்வாறு காளைகள் சீறிப்பாய்ந்த பொழுது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆரவாரங்களும், கூச்சலும் நிறைந்திருந்தன.
செல்வராசுவிற்கு ஜல்லிக்கட்டு என்றால் உயிர்.சுற்றியுள்ள அனைத்து பகுதி மாட்டு வேடிக்கைகளுக்கும் சென்று விடுவான்.
அத்தகைய ஜல்லிக்கட்டில் ஒரு சில காளைகள் பிடிபடாமல் ஓடி பரிசுகளை வென்றன. ஒரு சில காளைகளோ,பயத்தில் மிரண்டு போய் மீண்டும் வந்த திசையை நோக்கி ஓடி,தானாகவே வீரர்களிடம் மாட்டிக் கொண்டு தோல்வி அடைந்தன.
சில பெரிய காளைகளை வீரர்கள் தொட்டும், கட்டியணைத்தும் திமில்களை அடக்கியும் பரிசுகளை வென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுதுதான் ஆண்டாள்புரம் செல்வியின் செவலைக்காளையின் அறிவிப்பும் வந்தது.அனைவரின் கவனமும் ஈர்க்கும் அளவிற்கு முந்தைய ஆண்டுகளில் பேர் பெற்றிருந்தபடியால் வீரர்களின் போட்டியும் அதிகமாயிற்று.
சுட்டெரிக்கும் வெயிலில் தீப்பிழம்பாய் சீறிப்பாய்ந்த செவலைக் காளையை தொட நினைத்தாலும் பெரிய ஆபத்தே என ஒதுங்கி நின்றனர் வீரர்கள்.
ஆனால் செவலையோ எந்த பயமுமின்றி துள்ளிக் குதித்து,சிறிது தூரம் சென்று நின்றது.திரும்பி அனைவரையும் ஒரு முறை பார்த்தது.பிறகு ஒரு சுற்று சுற்றி தலையை ஒரு சிலுப்பு சிலுப்பியது கண்டு மக்கள் ஒரு கணம் பயந்து உயிர் பெற்று திரும்பினர்.ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் செவலையின் தனி ஸ்டைல் அது.
அனைவரும் வியந்து பார்க்க போர் வீரனைப் போன்று காட்சியளித்து, கூட்டத்தையே மிரளவைத்து,தன்னை யாரும் தொடக்கூட முடியாது என்று சொல்லாமல் செயலில் காட்டி இராஜநடையுடன் வெற்றியைத் தாங்கி சென்றது செவலை.
வெற்றியுடன் வீடு திரும்பிய செவலைக்கு ஆரத்தி எடுத்து நெற்றித் திலகமிட்டாள் செல்வி.எல்லையற்ற மகிழ்ச்சியில் வீடே மகிழ்ந்திருக்க செல்விக்கு பேரிடியாய் அந்த செய்தி வந்தது.ஜல்லிக்கட்டில் கயிற்றின் வெளியே ஓரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற செல்வராசுவை மாடு முட்டியதாகவும் 108 ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரி கொண்டு சென்று விட்டதாகவும் கூற தலைசுற்றி மயங்கி விழுந்தாள் செல்வி..
மயக்கம் தெளிந்து கண்விழித்த போது அனைத்தும் முடிந்திருந்தது.ஆம், மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட செல்வராசுவைக் காப்பாற்ற முடியவில்லை.
செல்வராசுவின் இழப்பு செல்வின் வாழ்க்கையே புரட்டி போட்டது.செல்வராசுவின் பெற்றோர் அடைந்த துக்கத்தை சொல்லிி மாளாது.
செல்வியோ தனது இரு பிள்ளைகளையும் பார்த்து பார்த்து அழுது புலம்பினாள். தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அழுது ஓய்ந்து போனாள்.
துக்கம் நடந்து முடிந்த இந்த பத்து நாட்களிலும் செல்வி ஒரு முறை கூட செவலையை பார்க்கவில்லை.செவலையும் வீட்டின் நிலைமையை புரிந்து கொண்டது.வீட்டையே பார்த்துப் பார்த்து வெறுத்தும் போனது.செவலை செல்வியின் முகத்தைப் பார்த்து,உண்ணாமலும், இளைத்தும் போய், உடல் மெலிந்தும் காணப்பட்டது.
‘அப்பா எங்கே?’ என்று கேட்கும் விவரம் தெரியா மகனிடம் சொல்ல முடியாமலும்,தன்னைப் பார்த்து வருந்தும் பெற்றோரையும் நினைத்து நடைபிணமானாள் செல்வி.
இறுதியாக ஒரு தீர்க்க முடியுடன் தன் கணவனின் கடமைகள் இருந்த இடம் நிரப்பப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வயதான மாமனார் மாமியாருடன் இருக்கப் போவதாகக் கூறிச் சென்றாள் செல்வி.
ஒரு வருடமும் உருண்டோடி விட்டது.ஓரளவு தேறிய நிலையில், வாழ்க்கை என்னும் கடலில் தனியாக கரையேறும் படகாகிவிட்டிருந்தாள் செல்வி. பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் நன்கு கவனித்துக் கொண்டு, துணிச்சலான பெண்ணாய் மாறி வாழ்க்கையை சந்தித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வருடம் கழித்து பெற்றோரை பார்ப்பதற்காக ஊருக்கு வந்தாள் செல்வி.பெற்றோரை நலம் விசாரித்து முகம் கழுவும் சாக்கில் கொல்லைப் பக்கம் இருக்கும் செவலையைப் பார்க்கச் சென்ற செல்வி ஏமாந்து போனாள்.சரி, வயலில் செவலை இருக்கும் என நினைத்துக் கொண்டே பின்வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த செல்வியின் கண்ணில்பட்டன அந்த இரண்டு புகைப்படங்களும், சுவரில் பெரிதாய்!
ஒன்றில் செல்வியின் கணவன் செல்வராசுவும், மற்றொன்றில் செவலையும் மாலைகளை அணிந்து தெய்வங்களாய்க் காட்சியளிக்க செல்வி அதிர்ந்து போனாள்!
கொல்லைப் பக்கம் ஓடி செவலையின் இடத்தைப் பார்த்து விழுந்து தரையைத் தடவி வாய் விட்டு கதறி அழுதாள் செல்வி.
“உன்னைப் போல ஒரு காளைதானே, என்னோட இந்த நிலைமைக்குக் காரணம்னு நெனச்சு, நீயும் என்னை விட்டுட்டுப் போயிட்டியா”என்று செல்வி அழும் குரல்,செல்வி ஆசையாக தினமும் செவலையை அழைத்துச் செல்லும் சோள வயலுக்குக் கேட்டது!…
![]()
செல்வியின் செவலை சிறுகதையானது மிகவும் உருக்கமான படைப்பு. இதுபோன்ற உணர்வுபூர்வமான படைப்புகள் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றிகளும் வணக்கங்களும் கவிஞர் ஐயா 🙏🙏🙏
மிகச்சிறப்பான சிறுகதை Teacher. எதார்த்தம் மீறாமல் அப்படியே. நல்லதொரு காட்சிப்பதிவு…
மிகுந்த நன்றிகளும் வணக்கங்களும் சார்…
🙏🙏🙏